Skip to main content

ஐந்தாவது மாடிக் கட்டிடமும் தீ விபத்தும்


கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1978 ஆம் ஆண்டு, வேலை சேர்வதற்கான உத்தரவை கையில் வைத்துக்கொண்டு அந்தக் கட்டிடத்திற்குள் முதன் முதலாக நுழைகிறேன். நான் செல்ல வேண்டிய இடம் ஐந்தாவது மாடி.

அந்த மாடியில் நுழையும்போது எனக்குள் ஏற்பட்ட சாதாரண படப்படப்பை எளிதில் விளக்க முடியாது. முதன் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் போய்ச் சேரப் போகிறேன். 1975 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டு நிலையில்லாத பல இடங்களில் இருந்து, பின் ஒரு நிரந்தரமான உத்தியோகமாக 1978ஆம் ஆண்டு வங்கி அளித்ததை என்னால் மறக்க முடியாது.
70-80க்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் வங்கியில் பணியில் சேர்க்கப்படுவார்கள். வங்கியில் பணியில் சேரும் ஒருவருக்கு எளிதாக திருமணம் ஆக வாய்ப்பு அதிகம்.
ஐந்தாவது மாடியில் உள்ள பணியாளர் துறையில் நான் நுழையும்போது படபடவென்று தட்டச்சு ஒலி என் காதைப் பிளக்கிறது. ஒவ்வொரு டேபிளிலும் ஒரு தட்டச்சுப் பொறியுடன் ஒவ்வொருவர் அமர்ந்துகொண்டு தட்டச்சுச் செய்து கொண்டிருக்கிறார்கள். இளமையின் குதூகூலம் எல்லார் முகத்திலும் தெரிகிறது. அப்போதுதான் நான் வித்தியாசமான புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாங்கிப் படிக்கிறேன். என் பள்ளிக்கூட நாட்களில் நான் தமிழ்வாணன் ரசிகன். கல்கியின் பொன்னியின் செல்வத்தை எப்படியாவது படித்து முடித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டுபவன். பார்த்திபன் கனவு புத்தகத்தில் வரும் நரபலி சம்பவத்தைப் படித்து பயந்திருக்கிறேன்.
ஐந்தாவது மாடியில் பரத் என்ற ஒரு இளைஞரைச் சந்திக்கிறேன். அவர் லாசராவின் பக்தர். லாசரா எழுதிய எல்லா எழுத்துக்களையும் படிப்பதோடு அல்லாமல் ஒப்பிப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
என்னையும் அந்த மாடியில் ஒரு டேபிள் முன் உட்காரவைத்து ஒரு தட்டச்சுப் பொறியைக் கொடுத்து அவர்கள் சொல்வதை தினம் தினம் அடித்துத் தரச் சொல்வார்கள். நான் ஒரு தட்டச்சராகத்தான் என் அலுவலகப் பணியை ஆரம்பித்தேன். அதுவும் ஐந்தாவது மாடியில்.
அந்த ஐந்தாவது மாடியில் என் வயதையொத்த பல இளைஞர், இளைஞிகளைச் சந்தித்ததேன். தினமும் அலுவலகம் வருவது ஒரு மகிழ்ச்சிகரமான வைபவமாகத் தோன்றும். நாங்கள் சில பேர்கள் 'வீலர் கிளப்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். காலையில் சீக்கிரம் வந்தவுடன், ஐந்தாவது மாடியில் உள்ள மாடிப்படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு சிறிது நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருப்போம். நாங்கள் பேசுவதைப் பார்த்து அந்தப் பகுதிக்குச் செல்லாமல் இருப்பதற்காக கேட்டைப் பூட்டிவிட்டனர்.
ஆனாலும் இளைஞர்களான எங்கள் குதூகூலம் தொடராமலில்லை. நாங்கள் பத்து பதினைந்து பேர்கள் ஒரு கூட்டமாக உணவகத்தில் அமர்ந்துகொண்டு ஜோக்குகளை உதிர்த்தவண்ணம் இருப்போம். பெரும்பாலும் சர்தார்ஜி ஜோக்குகள். என்னால் ஒரு ஜோக்குகூட சொல்லமுடியாது. சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு மாடிப்படியாக ஐந்தாவது மாடிவரை ஏறிவருவோம். அப்படி ஏறிவரும்போது லிப்டை ஒவ்வொரு மாடியிலும் அழுத்தி விடுவோம். லிப்ட் 1, 2, 3, 4, 5....என்று நின்று நின்று வரும். அப்படி வரும்போது லிப்டில் வருவர்களைப் பார்த்து சிரித்தபடி வருவோம். பெண்களாக இருந்தால் இன்னும் இன்னும் அதிக கிண்டல்.

நான் முதன்முதலாக கதைகளை எழுதத் தொடங்கினேன். என் முதல் கதை செருப்பு. வேலைக்கு முயற்சி செய்கிற ஒரு இளைஞனைப் பற்றிய கதை. அதை எந்தப் பத்திரிகையிலும் போட மாட்டார்கள். என் கனவு குமுதம், ஆனந்தவிகடன் மாதிரி பத்திரிகைகளில் என் கதை பிரசுரம் ஆக வேண்டும் என்பது. நான் அப்போதே தீவிரமான எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கியதால், சாதாரண பத்திரிகையில் எழுதும் கதை இயல்பு என்னிடமிருந்து கழன்று விட்டது. அப்போது அசோகமித்திரனின் 'வாழ்விலே ஒரு முறை' என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ந முத்துசாமி, சா கந்தசாமி, காசியபன், நகுலன் என்றெல்லாம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் எனக்கு அறிமுகம். ஆங்கிலத்தில Ayn Rand எழுதிய புத்தகங்களையெல்லாம் படித்துவிட்டு சற்று மண்டைக்கனத்தோடு இருந்ததாக என் நினைப்பு.
பரீக்ஷா ஞாநியின் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஜெயபாரதியின் குடிசை படம் பார்த்துவிட்டு ஜெயபாரதியையே நேரில் பார்த்தது எனக்கு ஆச்சரியமான ஆச்சரியமாக இருக்கும். ஞாநியின் அறந்தை நாராயணன் எழுதிய ஒரு நாடகத்தில் மிகச் சில நிமிஷங்களே வரும் வேலையில்லாத இளைஞனின் பாத்திரத்தில் நடித்துவிட்டு ராத்திரி முழுவதும் தூங்காமல் பட்ட அவஸ்தையை நினைத்து ஞாநியின் நாடகம் நடத்தும் இடத்திற்கே போகவில்லை.
எல்லா சமயங்களிலும் எனக்கு ஆறுதலான விஷயம் என்னுடைய ஐந்தாவது மாடிக் கட்டடித்தில் உள்ள என் வேலை. என் முதல் கதை செருப்பு மலர்த்தும்பி என்ற ஒரு சிற்றேட்டில்தான் வந்தது. இலக்கியத்தில் ஆர்வமுள்ள என் உறவினர் ஒருவர் டெலிபோனில் இன்ஜினியராக பதவியில் சேர்ந்தபிறகு comfortable ஆக ஆரம்பித்த பத்திரிகை. பத்திரிகையின் முழுப் பொறுப்பும் என் உறவினர் கையில் இருந்தது.

இந்த ஐந்தாவது மாடியில்தான் அந்தப் பத்திரிகையின் பிரதிகளை முகம் சுளிக்காமல் படிக்கக் கூடியவர்களாகப் பார்த்து வினியோகிப்பேன். பத்திரிகையைக் கொடுத்துவிட்டு என்கதையைப் படிக்கிறார்களா என்று பார்ப்பேன். ஒருமுறை ஐந்தாவது மாடியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு பெண், என் கதையைப் படித்துவிட்டு, 'செருப்பு நன்றாக இருக்கிறது,' என்றாள் எதிர்பாராதவிதமாக. எனக்கோ ஒன்றும் புரியவில்லை. என் காலில் அணிந்த 'செருப்பை'ப் பார்த்தேன். 'உங்கள் கால் செருப்பைச் சொல்லவில்லை. உங்கள் 'செருப்பு' கதை நன்றாக உள்ளது,' என்றாள். அதைக் கேட்டவுடன் எனக்கு தாங்கமுடியாத சிரிப்பு. என் வீலர் நண்பர்கள் யாரும் நான் படிக்கும் கதைகளை அல்லது மலர்தும்பி மாதிரி சிறுபத்திரிகையைக் கையால் கூட தொட மாட்டார்கள். விதவிதமான டிரஸ்களும், சர்தார்ஜி ஜோக்குகளும், பெண்களும்தான் அவர்கள் பொழுதுபோக்கு. சாதாரண விஷயங்களை அசாதாரணமாகச் சொல்வதும் அவர்களுக்கு கைவந்த கலை. நான் இதுமாதிரி புத்தகங்கள்/பத்திரிகைகளை வைத்துக்கொண்டு அலைவதால் என்னை ஒருவிதமாகவும் பார்க்கத் தொடங்குவார்கள். சிலர் என்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு பேசுவார்கள். இன்னும் சிலர் கிண்டல் செய்வார்கள். பெரும்பாலும் கிண்டல் செய்பவர்கள்தான் அதிகம்.

ஏன் இதெல்லாம் சொல்கிறேன் என்றால் என்னால் அந்த ஐந்தாவது மாடியை மறக்க முடியாது. 80வாக்கில் ஒரு ஒன்றுமில்லாத பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, வீலர்கள் என்ற பெயரில் சேர்ந்திருந்த நாங்கள் பல பகுதிகளுக்குத் தூக்கியெறியப்பட்டோ ம். நானும் ஐந்தாவது மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்டேன் விட்டேன்.

நாங்கள் போனபிறகு கலகலப்பே அந்த ஐந்தாவது மாடியிலிருந்து போய்விட்டதாக நினைப்பேன். 70-80 வாக்கில் இருந்த நிலைமை இன்று அடியோட மாறிவிட்டது. தட்டச்சு இருந்த இடத்தை கணினிகள் பிடித்துக் கொண்டு விட்டன. ஐந்தாவது மாடியில் முன்பு இருந்த நெருக்கமும் இல்லை. பணிபுரிபவர்களும் இல்லை. இன்று வங்கியில் பணிபுரிகிறேன் என்றால் திருமணத்திற்குப் பெண் கொடுப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. சம்பளம் குறைவு. கெடுபிடி அதிகம். பிஎப், சொஸைட்டி என்று லோனுக்காக லோள் லோள் என்று அலைபவர்களே அதிகம்.

என் இன்றைய நிலை முற்றிலும் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. என் வயதையொத்த பலர் வங்கி வெளியிடும் சர்குலரில் பிணமாகத்தான் வருகிறார்கள். வேலைப் பளுவாலும், கெடுபிடியாலும் பலர் வங்கியிலிருந்து கழன்று நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை அந்த ஐந்தாவது மாடியை என்னால் மறக்க முடியாது. சமீபத்தில் ஒருநாள் அந்தச் செய்தி என் காதில் இறங்கி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வங்கியின் ஐந்தாவது மாடி தீக்கிரையாகிவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி. ஒருதடயமும் இல்லாமல் அங்கு உள்ள எல்லாம் சாம்பலாகிவிட்டது. எனக்கு வருத்தமான செய்தி மட்டுமல்ல, பழைய நினைவுகளையும் கட்டிடத்தின் ஐந்தாவது மாடி எரித்துவிட்டதோ என்ற சந்தேகமும் கூட. நான் திரும்பவும் அந்தக் கட்டிடத்தைப் பார்க்க வேண்டுமென்று நினைத்து ஒருநாள் என் கிளை அலுவலகத்திலிருந்து கிளம்பிப் போனேன். வழக்கம்போல அதிகம் விற்காத என் பத்திரிகையை Central Railway Station ல் உள்ள Higginbothams கடையில் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது இரவு மணி அதிகமாகி விட்டது. களைப்பாகவும் இருந்ததால் ஐந்தாவது மாடிக்கட்டிடத்தைப் பார்க்காமலே வீட்டிற்குத் திரும்பி விட்டேன். ஆனால் என் நினைவிலிருந்து ஐந்தாவது மாடிக் கட்டிடத்தை நீக்க முடியாது.


Comments