கவிதை என்பது சாந்தமான நிலையில் திரட்டப்படுகிற உணர்வு (Emotion recollected in tranquility) என்று வேர்ட்ஸ்வோர்த் தானும் கோல்ரிட்ஜீம் இணைந்து உருவாக்கிய கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் எழுதினார். அது புகழ் பெற்ற வாசகம். கவிதை உருவாகிற மன நிலைக்கும் அவகாசத்திற்கு பின் அதை எழுதுகிற நிலைக்குமிடையே இடைவெளி இருப்பதால் பல கவிதைகளுக்கும் இந்த வரையறை பொருந்திவிடுகிறது. வேர்ட்ஸ்வோர்த் கவிதைகளுக்கு அது முற்றாகப் பொருந்தும். சங்ககாலக் கவிதைகள் பல சாந்தமானவை. ஆரவாரமற்றவை. இதுவேதான் எல்லாக் கவிதைளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆரவாரமான, ஆக்ரோஷமான மன உணர்வுகள் அடங்கு முன்னரேயே பல கவிதைகள் எழுதப்பட்டு விடுகின்றன. பாரதி, பாரதிதாசன் ஆகியோர் உலக மாண்புகள் பற்றி எழுதிய பல கவிதைகளில் சாந்தம் வௌதப்படுகிறது. அரசியல், சமூகச் சிறுமைகளைக் கண்டு வெகுளும் போது அவர்கள் ஆக்ரோஷமாக அவற்றை முன் வைக்கின்றனர். ஆனால் ஆக்ரோஷம் கூட ஒரு வடிவமைதியுடன் வௌதப்படுவதால் மீண்டும் வேர்ட்ஸ்வோர்த் சொல்வதுதான் சரியோ என்றும் தோன்றுகிறது.
Tranquil என்பதைத் தமிழில் சாந்தம், ஆரவாரமின்மை மற்றும் கலக்கமின்மை என்றும் கூட அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். நமக்கு தெரிந்தவர்கள் இறந்துவிட்டால் நாம் உடனே கலக்கமுற்று விடுகிறோம். இறந்தவர்களுக்கு நாம் உடனடியாக செலுத்துகிற அஞ்சலி கலக்கத்திலிருந்து பிறக்கிறதா தௌதவான மன நிலையிலிருந்து பிறக்கிறதா என்பதை சுலபமாகக் கூறிவிடமுடியாது.
சமீபத்தில்கே.ஆதிமூலம், சுஜாதா ஆகியோரின் இறப்பு பலரை துக்கத்தில் ஆழ்த்தியது. பொதுவாகவே எல்லோரும் இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவார்கள். இது உலக மரபு. 'The good is oft interred with their bones' என்று ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரமான ஆண்டனி மட்டுமே பேசுவான். அது சாகஸம் நிறைந்த பேச்சு.
ஆதிமூலத்திடம் நிறைகள் மட்டுமே இருந்தனவோ என்று அவரிடம் பழகியவர்களின் அனுபவங்கள் நம்மை எண்ண வைக்கின்றன.கிழக்கு கடற்கரைச் சாலையில் இருவரது வீடுகளும் சில கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் என்னையும் ஆதிமூலத்தையும் தூரத்து வீட்டுக்காரர்கள் என்றும் சொல்லலாம். தேர்ட் தியேட்டர் என்னும் ஆங்கில டாகுமெண்டரி படத்தை முடித்தவுடன் அதன் பெயர் அட்டைகளை அவருடைய கையெழுத்தில் எழுதி அதில் சேர்க்கவேண்டும் என்று நினைத்தேன். தமிழ் எழுத்துகளுக்கு சிறப்பான கையெழுத்து வடிவம் கொடுத்த அவர் அதேபோல் ஆங்கில எழுத்துகளையும் எழுதினால் அதுவும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். குறித்த காலத்தில் பதினாலு அட்டைகளில் பெயர்களை எழுதிக் கொடுத்தார். படத்திற்கு அவற்றால் பெருமை விளைந்தது. ஒரு ஆயிரம் ரூபாய் செக்குடன் படம் முடிந்தவுடன் அதைப் போட்டுக் காட்ட அவர் வீடு சென்றேன்.
'நீங்கள் உங்கள் சொந்த பணத்தில் கல்கத்தாவிற்குப் போய் இந்த டாகுமெண்டரியை எடுத்திருக்கிறீர்கள். இது சாதாரணமானவிஷயமல்ல. நான் உங்களிடம் பணம் வாங்க மாட்டேன்' என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
இருப்பிடங்கள் தவிர வேறு ஒரு விஷயத்திலும் எங்களுக்குள் ஒற்றுமை இருத்தது. நாங்கள் இருவருமே டாபர்மேன் நாய்களை வளர்த்தோம். எப்போழுது சந்தித்தாலும் ஏனைய சமாசாரங்களை சுருக்கமாகப் பேசிவிட்டு நாய்களைப் பற்றி மட்டும் விரிவாகப்பேசுவோம். தான் வரைந்த ஓவியங்களை அறையில் அவர் இறைத்து போட்டிருப்பார். அவருடைய நாய் சாமர்த்தியமாக அவற்றின் மேல் படாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்லும். ஏனோ அவரது ஓவியங்களில் அந்த நாய் எங்கேயும் இடம் பெறவில்லை.
நான் சுஜாதாவின் ரசிகனாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் சுஜாதாவை 1976ல் திருச்சிக்கு நானும் எனது நண்பர்களும் ஒரு வாசக சந்திப்பிற்காக அழைத்திருந்தோம். சுஜாதா அப்போதே பிரபலமான எழுத்தாளர் என்பதால் தேவர் ஹாலில் பலரும் பங்கேற்கும் வகையில் அது நடைபெற்றது. மறு நாள் திருச்சி வானொலியில் நாங்கள் அவரைப் பேட்டி கண்டோம். விஞ்ஞானக் கதைகள் பற்றிதான் அவர் அதிகம் பேசினார்.பழகுவதற்கு இனிமையானவராக இருந்தார். சென்னைக்கு குடியேறிய பிறகும் சில சந்தர்ப்பங்களில் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மீடியா ட்ரீம்ஸ் அலுவலகத்திற்கு வருமாறு ஒருமுறை அழைத்தார். என்னால் போக இயலவில்லை. மாற்றுப் படங்களை மிகவும் பரிகசித்து அவர் ஒருமுறை எழுதியதால் அதற்கு எதிர்வினையாக காலச்சுவட்டில் ஒரு பகிரங்கக் கடிதத்தை அவருக்கு எழுதினேன். ஏற்கனவே தமிழில் குற்றுயிராகக் கிடக்கும் மாற்றுப் படங்களைப் பற்றி சுஜாதா போன்று பெரும் வாசக வட்டத்தை எட்டும் எழுத்தாளர் எள்ளி நகையாடினால் அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்குமோ என்பதால் அக்கடிதம் சற்றுக் காரமாகவே இருந்தது. என் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு பதிலளிப்பதுபோல் ஒரு கட்டுரையை ஆனந்த விகடனில் எழுதினார். மாற்றுப் படங்களைப் பற்றியெல்லாம் அக்கறையுடன் தான் எழுதியவற்றை அதில் பட்டியலிட்டிருந்தார். அத்தோடு அந்த விஷயம் முடிந்து போயிற்று.
ஒருவர் இறந்தால் அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு எவ்வளவு பேர்கள் வருகிறார்கள் என்பதை வைத்து அவர் பொருட்படுத்தப்பட்டாரா இல்லையா என்று கணிக்கப்படுகிறது. ஆதிமூலம் சுஜாதா இருவருக்கும் அந்தக் குறையில்லை. ஆனால் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இறந்த போது டைம் பத்திரிகை அவருடைய கல்லறையில் ஆறு பேர்கள் மட்டுமே இருந்தாக எழுதியது. இவ்வளவிற்கும் அவர் உலகம் நன்கு அறியப்பட்ட அறிஞர். எலிசபெத் அரசி அவரை 'இங்கிலாந்தின் வால்டேர்' என்று தன் இரங்கலில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு மாறாக,அநாமதேயமாக வாழ்ந்து மறைந்து போகும் பேற்றினைத் தான் இழந்துவிட்டதாகக் கருதிய சார்த்தின் இறுதி ஊர்வலம் திருவிழாக் கூட்டம் போல் இருந்ததைப் புகைப்படங்களில் காணமுடிந்தது.
பாரதியின் இறுதி ஊர்வலத்தில் இருபது பேர்களுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர் என்று பரலி.சு. நெல்லையப்பர் குறித்திருந்தார். எப்பொழுதுமே பிராமணர்கள் பிரேதத்தை உடனடியாக எரித்துவிடுவார்கள். நள்ளிரவில் இறந்த அவரது உடலுக்கு காலை எட்டு மணிக்கே சிதையூட்டப்பட்டது. அவர் இறந்தது உடனே நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி அன்றைய தினத்தில் பாரதி பலரால் அறியப்பட்ட ஒரு சென்னைப் பிரமுகர்தான். அவரது ஈமச் சடங்குகளில் கலந்து கொள்ளவே மற்றவர்கள் பயப்பட்டார்கள் என்றெல்லாம் கருதுவதற்கும் இடமில்லை. அவரது இறுதிக் காலத்தில் அவர்மீது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடி தளர்ந்துதான் இருந்தது. எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருந்ததேயொழிய மற்றபடி அவர் சுதேசமித்திரனில் பணியாற்றிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்றுகொண்டிருந்தார். ஆனால் பெரிய கூட்டம் இன்றி பாரதியின் உடல் மயானம் சென்றதை மட்டும் தமிழர்களால் இன்று வரை சாதாரணமாக பாவிக்கமுடியவில்லை.
படத்தின் பிற வேலைகள் எல்லாம் முடிந்து கடைசியில் வௌதயீட்டு விழாவின் போது எல்லோருடனும் அதை ஒரு முறை,மொத்தத்தில் எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். படம் இறுதியை நெருங்கியது. 'சுமார் இருபது பேர்கள் மட்டுமே'. அங்கேதிடீரென்று குரல் கம்மியது. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை அந்த 'இருபது' எண்ணிக்கை மிகவும் பாதித்ததை என்னால் உணர முடிந்தது. எத்தனையோ கவனத்துடன் பல டேக்குகளுக்குப் பிறகும் சுரம் குறைந்த குரலில் அது படிக்கப்பட்டிருந்ததை அப்போதே உணர இயலாமல் போனது என்னையும் ரொம்பவே பாதித்தது.
படத்தின் பிற வேலைகள் எல்லாம் முடிந்து கடைசியில் வௌதயீட்டு விழாவின் போது எல்லோருடனும் அதை ஒரு முறை,மொத்தத்தில் எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். படம் இறுதியை நெருங்கியது. 'சுமார் இருபது பேர்கள் மட்டுமே'. அங்கேதிடீரென்று குரல் கம்மியது. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை அந்த 'இருபது' எண்ணிக்கை மிகவும் பாதித்ததை என்னால் உணர முடிந்தது. எத்தனையோ கவனத்துடன் பல டேக்குகளுக்குப் பிறகும் சுரம் குறைந்த குரலில் அது படிக்கப்பட்டிருந்ததை அப்போதே உணர இயலாமல் போனது என்னையும் ரொம்பவே பாதித்தது.
Comments
அன்புடன் அனுஜன்யா