Skip to main content

நீங்களும் படிக்கலாம் - 47 - 'நாபிக் கமலம்'



அழகியசிங்கர்




வண்ணதாசனின் பல சிறுகதைத் தொகுப்புகளைப் பத்திரம் பண்ணி வைத்திருக்கிறேன்.  'நாபிக் கமலம்' புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்துக்கொண்டு வந்தேன்.
சரி எப்போது படிப்பது? நான் அந்தப் புத்தகத்தை படிக்க நினைத்தபோது மயிலாடுதுறைக்குச் செல்ல நேர்ந்தது.  அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக எனக்குப் பட்டது.  ரயிலில் பகல் வண்டியில் பயணம் செய்ய ரிசர்வ் செய்திருந்தேன்.  மூன்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றேன்.  அதில் ஒரு புத்தகம் நாபிக் கமலம்.  முதலில் அதைத்தான் படிக்க எடுத்தேன்.  படித்தும் முடித்து விட்டேன்.  நான் படித்து முடித்த தேதி 07.02.2019.  இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் இக் கதைகளைப் படித்து முடித்து ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது.  
இந்தத் தருணத்தில் நான் அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  முன்பே அங்கே இரண்டு மாதங்கள் இருப்பதற்கான திட்டம்.  இதோ நானும் மனைவியுடன்  அமெரிக்கா.  
வழக்கம்போல் என் புதல்வர் வசிக்கும் வீட்டில் நான், மோகினி, ஜெகன் சந்தித்துக் கொண்டோம்.
நாங்கள் பேசியதை இங்கு பதிவு செய்கிறேன்
ஜெகன் : அமெரிக்கா எப்படி இருக்கிறது?
அழகியசிங்கர் : குளிர்.  தாங்க முடியவில்லை.
மோகினி : நாம் இருக்கும் இடம் ஒன்றுமில்லை.  ஆனர் மற்ற இடங்கள் எல்லாம் இன்னும் மோசம்.  
அழகியசிங்கர் : ஒப்புக்கொள்கிறேன்.  நான் அமெரிக்கா கிளம்பும் முன் குளிரை நினைத்துப் பயந்து அதிக விலை கொடுத்து மனைவியும் நானும் ஜெர்கின்ஸ் வாங்கிக்கொண்டோம்.
மோகினி : நாபிக் கமலம் புத்தகத்தைப் பற்றி நீங்கள் சென்னையிலேயே எழுதியிருக்கலாமே?
அழகியசிங்கர் : எழுதியிருக்கலாம்.  ஆனால் முடியவில்லை. அமெரிக்கா வருகிற அவசரத்திலிருந்தேன்.  மேலும் விருட்சம் 108வது இதழைக் கொண்டு வரும் முனைப்பிலிருந்தேன்.  
ஜெகன் : ஒரு மாதம் ஆகிவிட்டது.  உங்களுக்கு எல்லாக் கதைகளும் ஞாபகத்தில் இருக்கிறதா?
அழகியசிங்கர் : என் பிரச்சினையே அதுதான்.  ஆனால் இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை  கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கும் என்று தோன்றுகிறது. திரும்பவும் புத்தகத்தைப் பார்த்தவுடன் கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
மோகினி : தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையிலும் அடிக்குறிப்புகள் எழுதி உள்ளீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான்.  அடிக்குறிப்பு எப்போதும் எழுதுவது வழக்கம்.  கதையைப் படித்தோம் என்ற உணர்வு ஏற்படுவதற்குத்தான் அவ்வாறு எழுதுகிறேன்.                                                                                                                      
மோகினி : சிலர் புத்தகத்தில் இப்படிக் கிறுக்குவதை விரும்ப மாட்டார்கள்.
அழகியசிங்கர் : மற்றவர்கள் புத்தகங்கள், லைப்ரரி புத்தகங்கள் படித்தால் கிறுக்க மாட்டேன்.  இது நான் விலை கொடுத்து வாங்கிய புத்தகம்.  கிறுக்குவது என் உரிமை. 
ஜெகன் : ஒரு சிறுகதைத் தொகுப்புப் பற்றி சொல்லும்போது ஒவ்வொரு கதையின் சுருக்கம் குறிப்பிடக்கூடாது  என்று சிலர் கருதுகிறார்களே?
அழகியசிங்கர் : உண்மையில் ஒரு தொகுப்பை எடுத்து முழுவதுமாக அதில் உள்ள கதைகளைப் படிக்கிறார் என்றால் அவரை வரவேற்க வேண்டும்.  மேலும் அவர்கள் எதாவது சொல்ல விரும்பினால் இன்னும் கைத்தட்டி வரவேற்க வேண்டும்.  அப்படி யே அவர் எழுதியதை ஒருவர் படித்து அப் புத்தகத்தை யாராவது புத்தகத்தை வாங்கினால் அவர்களைப் பாராட்ட வேண்டும்.
மோகினி : சரி திரும்பவும் இதில் உள்ள கதைகளுக்கு வருவோம். 
அழகியசிங்கர் : மொத்தம் 13 கதைகள் கொண்ட புத்தகம்இது.  
ஜெகன் : இதில் உள்ள எல்லாக் கதைகளையும் ஒரே மூச்சில் ஒரே நாளில் படிப்பது சரியாக இருக்குமா என்று தெரியிவில்லை.
அழகியசிங்கர் : ஆமாம். ஒரு நாவலைப் படிப்பதுபோல் ஒரே மூச்சில் சிறுகதைகளைப் படித்தால் ரசிக்க முடியாது.
மோகினி : எப்படிச் சொல்கிறீர்கள்.
அழகியசிங்கர் : வண்ணதாசனின் இக் கதைகள் எல்லாம் ஒரே தன்மையுள்ள கதைகள்.  ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் இடைவெளி அதிகமாக வேண்டும்.  13 கதைகளையும் 13 நாட்கள் எடுத்துக்கொண்டு படிக்கலாம்.  ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நாளில் படிக்கலாம்.  அப்படிப் படிக்கும்போது முதல்நாளில் படித்தக் கதையை அடுத்தநாளில் சிறிது ஞாபகப்படித்துக்கொண்டு படிக்கலாம்.
மோகினி : வண்ணதாசனின் கதைகளில் பொதுவான சரடுமூலம் முத்துக்களைக் கோர்ப்பதுபோல் கோர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
ஜெகன் : நாம் அவசர உலகத்தில் இருக்கிறோம்.  உடனே எல்லாவற்றையும் படித்துவிட வேண்டுமென்று துடிக்கிறோம். 
அழகியசிங்கர் : நாவலைத்தான் ஒரே மூச்சாகப் படிக்க வேண்டும். ஒரு சிறுகதையோ ஒரு கவிதையோ அப்படி ஒரே மூச்சாகப் படிக்கக் கூடாது.
மோகினி : சரி, 13 கதைகளில் எது சிறந்த கதை.
அழகியசிங்கர் : இதுதான் தப்பு. 13 கதைகளிலும் இது சிறப்பான கதை, இது சுமாரான கதை என்ற பாகுபாட்டுடன் பார்ப்பது அபத்தமானது.  
ஜெகன் : ஒரு கதையைப் படித்துவிட்டு  ரொம்ப பிரமாதமானது.  அற்புதமானது என்று சொல்வதை சிலர் கிண்டல் செய்கிறார்களே?
அழகியசிங்கர்: சரி, எப்படித்தான் ஒரு சிறுகதையின் சிறப்பை ஒருவர் விவரிக்க முடியும்.
மோகினி : நீங்கள் ஒவ்வொரு கதைக்கும் எழுதி வைத்தக் குறிப்புகளுடன் படிக்க விரும்புகிறேன்.
அழகியசிங்கர் : இதோ குறிப்புகளுடன் ஒவ்வொரு கதையைப் பற்றி நான் குறிப்பிடுவதை இங்கு தருகிறேன்.

      (இன்னும் வரும்)

Comments