Skip to main content

பிரமிளின் மீறல் பேட்டி...




அழகியசிங்கர்


20 ஆண்டுகளுக்கு முன்னால் பிரமிள் ஒரு ஜனவரி மாதம் ஆறாம் தேதி இறந்து விட்டார்.  அதை நினைவுப்படுத்தும் நிகழ்ச்சியாக இலக்கியவீதி இனியவன் üகருத்தில் வாழும் கவிஞர்கள்,ý என்ற தலைப்பில் பிரமிளை ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.  இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.  பிரமிள் படைப்புகளைப் பற்றி பேச கால சுப்பிரமணியன். üஅன்னம் விருது பெற்றவர் கவிஞர் ஸ்ரீநேசன்.
நான் திரும்பவும் என் நூலகத்திலிருந்து பிரமிளை தோண்டி எடுக்க ஆரம்பித்தேன்.  பிரமிள் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் நான் தவித்த தவிப்பைப் பற்றி நினைத்துக்கொண்டேன். வேலூர் பக்கத்தில் உள்ள கரடிக்குடி என்ற கிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் அவருடைய பூத உடலைப் பார்க்கும் வரை  என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. 
அவர் பூத உடலைப் பார்த்தவுடன்  என் படபடப்பு அடங்கிப்போய் சாதாரண நிலைக்கு மாறிவிட்டேன்.  இந்த மாற்றம் எனக்கு இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
மீறல் குழுவினர் பிரமிளுக்கு ஒரு சிறப்பு மலர் கொண்டு வந்தார்கள்.  அந்தக் குழுவினர் பலரை அணுகி பிரமிள் படைப்புகளைப் பற்றி எழுதி கட்டுரை கேட்டார்கள்.  பிரமிள் என்றால் எதற்கு வம்பு என்று நினைத்துக்கொள்வார்கள்.   பலர் எழுதித் தரவில்லை.  அப்போது பிரமிளை அடிக்கடி பார்ப்பேன்.  என்னிடமும் போனபோகிறது என்று, பிரமிள், 'ஒரு கட்டுரை எழுதித் தாருங்கள்,' என்று கேட்டார்.  என்னிடம் அவருக்கு அந்த சமயத்தில் நம்பிக்கை எழவில்லை.  ஆனால் நான் அவர் கவிதைகளைக் குறித்து கட்டுரை எழுதிக்கொடுத்தேன்.  அக் கட்டுரையைப் படித்துவிட்டு எப்போதும் பாராட்டுவார்.  பிரமிளின் சில கருத்துகளுக்கு நான் உடன்படவில்லை.   
திரும்பவும் அவர் கொடுத்த பேட்டி, விமர்சனக் கட்டுரைகள் படிக்கும்போது ஒரு துப்பறியும் நாவல் படிப்பதுபோல் சாகசம் நிரம்பியதாக இருந்தது.  ரஜனி என்ற நடிகர் ஆன்மிக அரசியல் என்று சொல்வதுபோல் பிரமிள ஆன்மிக விமர்சனம் செய்து உள்ளார்.  அவருடைய கவிதைகளில் எனக்குப் பிடித்தப் பகுதி கடைசியாக எழுதிய அதிரடிக் கவிதைகள்தான்.  ஒரே நாளில் 30 கவிதைகள் எழுதினார் என்று கால சுப்பிரமணியன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது. அதிரடிக் கவிதைகள் என்ற பெயரை சுப்பிரமணியன்தான் குறிப்பிட்டிருக்கிறார்.   20 ஆண்டுகள் கழித்து திரும்பவும் பிரமிள ஞாபகப்படுத்தும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பாளர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.

பிரமிள் மீறல் பேட்டியில் எழுதியவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
' 'உண்மையை அடைவதற்கு ஒரே வழி மௌனம்தான்.'
'இனக்குழுவாதப் பார்வை உள்ள ஒருவர், எவ்வளவு பெரிய திறனாளியாக இருந்தாலும், போகப்போக அந்தத் திறனை இந்த இனக்குழுப் பார்வை அரித்து ஓட்டை போட்டுவிடும்.'
'கவிதை இன்டலக்சுவலான அதிர்ச்சியை ஏற்படுத்துகிற ஒரு வெளியீடு.  இன்டலக்சுவலாக மட்டுமல்ல, ஆழ்ந்த தேடல் சமாச்சாரங்களில் கூட ஒரு அதிர்ச்சியைக் கவிதையால் ஏற்படுத்த முடியும்.'
'தமிழ் 'இலக்கிய' எழுத்தாளர்களிடையிலே ஆழமான வாசகர் ஒருவரை இனித்தான் நான் சந்திக்க வேண்டும்.'

Comments