Skip to main content

எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்

எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்



அழகியசிங்கர்



சமீபத்தில் நடந்த ஒரு பெண்ணின் கொடூரமான கொலையிலிருந்து பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.  பெண்களைத் துரத்துவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.  எழுபது வாக்கில் என் உறவினர் பெண்ணை என்னுடன் கல்லூரியில் படித்தப் பையன் துரத்துவான்.  எதாவது கிண்டலாகப் பேசுவான்.  அவனுக்குத்  தெரியாது அந்தப் பெண் எனக்கு உறவினர் என்று. அவனிடம் இதுமாதிரி செய்யாதே என்று சொல்ல நினைத்தேன்.  அதற்குள் அவனுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. மின்சார வண்டியில் அவன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தான். மீனம்பாக்கம் வரை அவன் சென்று கொண்டிருக்கும்போது, அவன் முன் பக்கம் உள்ள பெண்கள் பெட்டியில் இருந்த பெண்களைக் கிண்டல் செய்தபடி தலையை அளவுக்கு அதிகமாக நீட்டியபடி வந்திருக்கிறான்.  மீனம்பாக்கத்தில் ரொம்பவும் குறுகலாக இருந்த மின் கம்பத்தில் அவன் தலை மோதி, சம்பவம் இடத்திலேயே இறந்து விட்டான்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் மேற்கு மாம்பலம் இப்போது இருக்கிற வசதி இல்லாத காலத்தில் தெரு விளக்குகள் பளிச்சென்று எரியாது.  மாலை ஏழு மணிக்கே இருட்டத் தொடங்கி விடும்.  பெண்கள் தனியாக தெருவில் நடப்பதற்கே பயப்படுவார்கள்.  தனியாக நடந்து வரும் பெண்களை இடிப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள்.  

இதுமாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. பெண்களைத் துரத்துவது அல்லது எதாவது காரணம் காட்டி பெண்களை அடைய முயற்சி செயவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

விபரீதமாகப் போகும்போது கொலை செய்யும் அளவிற்குப் போய்விடுவார்கள்.  .  முன்பைவிட இப்போதெல்லாம் இது குறித்துப் பேசும் அளவிற்கு முன்னேறி உள்ளார்கள்.  ஊடகத்தில் இது குறித்து சலசலப்பு ஏற்படுகிறது.  நீதிபதிகள் இதை தனியாகவே ஒரு கேஸôக எடுத்துக்கொண்டு அரசாங்கத்தை விஜாரிக்கிறார்கள்.

இவ்வளவு நடந்தும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்குமா? நடக்கத்தான் நடக்கும்.  பெண்களைத் துரத்தும் ஆண்கள் இருக்கத்தான் இருப்பார்கள். கொஞ்சம் பார்க்க லட்சணமாக இருக்கும் பெண்களுக்கு ஆபத்து எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

இன்றைய காலத்துப் பெண்களும் துணிச்சலானவர்கள்.  ஆண்களின் இந்தத் துரத்தல்களைப் பற்றி கவலைப்படாதவர்கள்.  யாராவது சிலர்தான் ஏமாந்து விடுகிறார்கள்.

என் சீர்காழி வங்கிக் கிளையில் புதியதாக சேர்நத பெண் கேரளாவைச் சேர்ந்தவள்.  பார்க்க லட்சணமாக உயரமாக இருப்பாள்.  வங்கியில் புதிததாக சேர்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள்.  அப்படி பயிற்சி கொடுக்கும் இடத்திலேயே அந்தப் பெண்ணிற்கு பிரச்சினை ஆரம்பித்து விட்டது.  அந்தப் பெண்ணை பயிற்சி எடுத்துக்கொள்ளும் புதியதாக சேரும் ஒரு இளைஞன் துரத்த ஆரம்பித்தான்.  அவனிடமிருந்து தப்பிக்கவே போதும் போதும் என்று ஆகிவிட்டது.  செல்போனில் வெளி ஆட்கள் அடித்தால் எடுக்க மாட்டாள். முக்கியமாக முகநூலில் தொடர்பு கிடையாது.  எப்போது சீர்காழியை விட்டு ஆழப்புழைக்குப் போகப்போகிறோம் என்று தவமாய் இருப்பாள். மேலும் சீர்காழி என்ற இடத்தில் அறை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணி இன்னொரு ùப்ண்மணியுடன் கூட்டாக இருந்தாலும், சுற்றிலும் அவளை நோட்டமிடும் ஆண்களைக் கண்டு அவள் பயப்படாமல் இல்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் வெளியே யாரிடமும் சொல்ல மாட்டாள்.  தைரியமான பெண்.  மிக சாதாரண குடும்பத்தைச் சார்ந்த பெண் அவள். இப்போது அவள் ஊருக்கு திரும்பிப் போய்விட்டாள்.  திருமணம் செய்துகொண்டு பதவி உயர்வும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறாள்.  

சமீபத்தில் என் உறவினருடன் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றோம்.  அவர்கள் டில்லியைச் சேர்ந்தவர்கள்.  டில்லி ரொம்ப மோசமாம். மாலை 7 மணிக்கே தனியாக எந்தப் பெண்ணும் போக முடியாதாம்.  'உங்கள் சென்னை பரவாயில்லை,' என்றார் நண்பர். 

சரி. இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்யும் ஆண்களை எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்.  இது பெரிய கேள்விக்குறி.   
   

Comments