Skip to main content

புத்தக விமர்சனம் .........


புத்தக விமர்சிப்பவர்  : ஜெ.பாஸ்கரன்


மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் -டயான் ப்ரோகோவன்தமிழில்  ஆனந்த் 


மரணம் எல்லோருக்கும் பொதுவானது. திடீரென எதிர்கொள்ளும்போது அது மரணித்தவர்களுக்கு ஓர் அமைதியையும், இன்னும் இருப்பவர்களுக்கு ஒரு மூர்க்கத்தனமான வலியையும் கொடுக்கவல்லது !அது தோற்றுவிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், காலங்களைக் கடந்த மிக நுட்பமான வாழ்க்கை பிம்பங்களும் ஆழ்மனதில் வலியைக் கொடுப்பவை !

ஒரு பனிப்பிரதேசத்தில் தனியாய்க் கணவன் ஜூல்ஸுடன் வசிக்கும் ஆலிஸ், பனி மிகுந்த ஒரு நாள் காலை, காபியின் மணத்துடன் எழுந்து கொள்கிறாள் – ஜூல்ஸ் வழக்கம்போல் காலைச் சிற்றுண்டியையும், காபியையும் தயார் செய்வதன் மணம்தான் அது. படுக்கையறையிலிருந்து வந்து, ஹாலில் சோபாவில் அன்றைய தினசரியுடன் அமர்ந்திருக்கும் கணவன் அருகில் அமர்கிறாள் ஆலிஸ். அசைவுகள் ஏதுமில்லாமல் அமர்ந்திருக்கும் அவரைக் கூப்பிடுகிறாள் – தோளில் கைவைத்த போதுதான் தெரிகிறது ஜூல்ஸ் இறந்து போயிருக்கிறார் என்று !

ஓலமிட்டு அழுது ஊரைக்கூட்டித் தன் துயரத்தினை வெளியிட்டால், உடனே – அலங்கரிக்கப் பட்ட அழகிய பெட்டியில் சில மணி நேரங்களில் ஜூல்ஸை எடுத்துச் சென்றுவிடுவார்கள். மனது ஏற்கவில்லை. இன்னும் ஒரே ஒரு நாள் ஜுல்ஸுடன் வாழ்ந்து விடுவது என்று முடிவு செய்கிறாள். வெளி உலகிலிருந்து மறைப்பதற்கான வழிகளைத் திட்டமிடுகிறாள். அவளது மனப்போராட்டங்களும், துயரங்களும், தினசரி நிகழ்வுகளும் ஜூல்ஸின் உடலைச் சுற்றி நடப்பதுவும், கடந்த கால நினைவுகளும், நிகழ்கால வலிகளும், எதிர்கால வெறுமையும் அவளை வாட்டுகின்றன. அலுவலக நேரத்தில், மகனிடம் இந்தச் செய்தியைச் சொல்வது தவறு என்று அவனிடம் கூட தெரிவிக்க மனம் ஒப்பவில்லை.

கீழ்ப் ப்ளாட்டிலிருந்து சரியாகப் பத்து மணிக்கு ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வரும் ஆடிஸ்டிக் சிறுவன் டேவிட் அன்று சற்று முன்னதாகவே வந்து விட, அவனுடன் ஜூல்ஸுக்கு பதிலாகத் தான் விளையாடுகிறாள். ஆனால் டேவிட் ஜூல்ஸின் மரணத்தை அறிந்து கொள்கிறான் – ஆலிஸின் மனத்தை அறிந்தவன் போல், அது பற்றி ஒன்றும் கூறாமல் – தன் அம்மாவிடம் கூட – மிக இயல்பாக தன்னை நடத்திக் கொள்கிறான். சிற்றுண்டி தயாரிக்க சமையலறையில் ஆலிஸுக்கு உதவுகிறான். அவனது இந்தப் புரிதல், ஆலிஸை மட்டும் அல்ல, வாசகனையும் வியக்க வைக்கிறது.

டேவிட்டின் தாய் பியா, அவள் அம்மாவுடன் மருத்துவ மனையில் தங்க நேர்வதால், அன்று இரவு தன் வழக்கத்திற்கு மாறாக, டேவிட் ஆலிஸுடன், ஜூல்ஸின் படுக்கையில் உறங்கி விடுகிறான் – அவனுக்கு அவன் நேரப்படி எல்லாம் நடக்க வேண்டும்.

ஆலிஸ், ஜூல்ஸுடன் பேசுகிறாள்; கீழே விழுந்து கிடக்கும் அவரது மூக்குக்கண்ணாடியைத் தன் நைட்டியில் துடைத்துப் போட்டுவிடுகிறாள்; குளிர் என்பதால், அவரது கட்டம் போட்ட சால்வையைப் போர்த்தி, கால்களில் காலணிகளை மாட்டி விடுகிறாள். சிறிது நேரம் அருகே படுத்து உறங்க முயற்சி செய்கிறாள்.

 " நீங்கள் ஏன் படுக்கையிலேயே செத்துப் போகவில்லை ? “ என்று கேட்கிறாள். “ அப்போது நாம் போர்வைக்குள்ளேயே ஒரு குட்டித் தூக்கம் போட்டிருக்கலாம்.”

ஒரு கணம் அவர் மறைந்து போனதை மறந்து விடுகிறாள்; தப்பிக்கவே முடியாத இந்த உண்மை மீண்டும் அவளைத் தாக்கியபோது, அவள் கண்கள் கண்ணீரால் நிரம்புகின்றன.

அவருடன் பேசிக்கொண்டே, செய்தித்தாளை அவர் மடியில் போட்டுவிட்டு, காலைச் சிற்றுண்டி உண்கிறாள். குளித்து, தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிகிறாள். வெளியே இனி கடைகளுக்குத் தனியாகச் செல்லவேண்டும் என்ற நினைப்பில், மனம் உடைந்து போகிறாள்.

ஜூல்ஸிடம் கடந்த காலத்தில் தான் மறைத்திருந்த ஓர் உண்மையை அவரிடமே சொல்கிறாள். அவருக்கு மிகவும் பிடித்த, வோல்கா என்னும் பெண்ணிடம் அவருக்கிருந்த காதலை (அவளை உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்தானே ?), அவர் அறியாமலே எப்படி முறியடித்தாள் என்று விவரிக்கிறாள். அந்த வன்மத்தின் பின்னே, அடிநாதமாக, அவள் அவருக்காக ஏங்கும் அன்பும் காதலும் இழைந்தோடுவதை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துகிறாள். பனிக்கட்டிபோல் சில்லிட்டிருந்த அவரது இதழ்களில் முத்தமிட்டு, “ தயவு செய்து என் மேல் கோபப்படாதீர்கள்.” என்று சொல்கிறாள் . “கடைசீயில் நான் அதைச் சொல்லிவிட்டேன் என்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது .“
 குற்ற உணர்ச்சி இப்போது இல்லை.

ஜூல்ஸின் வங்கி வேலையுடன் இணைத்து, தேன்நிலவுக்காகப் பாரீஸ் சென்றதையும் ,

” நீங்கள் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தீர்கள் ஜூல்ஸ். தலைமுடியில் தைலம் தடவி, பனிபோல் வெண்மையான சட்டையை அணிந்திருந்தீர்கள். என் நாசி உங்கள் கழுத்தில் உரச, உங்கள் சட்டையில் கழுத்துப்பட்டையைப் பொருத்தும்போது, உங்களிடமிருந்து எழுந்த வாசனை எனக்கு தெள்ளத் தெளிவாக நினைவில் இருக்கிறது.”

அங்கு ஆரம்பக் கட்ட ’கருச்சிதைவு’ தனக்கேற்பட்டதையும் நினைத்துப் பார்க்கிறாள். ‘ நாம் இருவருமே இதைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளவே இல்லை - உங்கள் கல்லறைக்கு எடுத்துப் போகும் இந்த ரகசியம் மட்டும் நாம் இருவரும் பகிர்ந்துகொள்ளும் ஒன்று ‘ என்று நெகிழ்கிறாள்.

மிக நுட்பமாக, ஒவ்வோர் எண்ணத்தையும் பிம்பமாக வரைந்திருக்கிறார் இதன் ஆசிரியர் டயான் ப்ரோகோவன் – ஃப்ளெமிஷ் எழுத்தாளர் ; ஒரு நேர்காணலில் அவர் கூறுகிறார், ‘ வயதாக ஆக எழுதுவதற்குக் குறைவான சொற்களே தேவைப் படுகின்றன. சொற்களுக்கிடையில் உள்ள மெளனங்கள், சொற்களின் அளவுக்கு முக்கியமானவை “ . இந்த நாவலைப் படிக்கும்போது, நம்மால் இதனை உணர முடியும்.

இந்நாவலை மொழிபெயர்த்துள்ள திரு ஆனந்த் (பி. 1951), ஒரு கவிஞர், நாவலாசிரியர்; ஜோஸே ஸரமாகோவ், ராபர்ட்டோ கலாஸ்ஸோவ் ஆகியோர் நூல்களை இவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

வாழ்தல், இறத்தல் பற்றிய தெளிவானதொரு சிந்தனையை நம் முன் தோற்றுவிக்கிறது இந்த நாவல். ஒரு வித்தியாசமான படைப்பு என்றுதான் சொல்லவேண்டும்.மிஸ்டர் ஜøலஸ÷டன் ஒரு நாள் - ஆசரியர் : டயான் ப்ரோகோவன் - தமிழில் : ஆனந்த் - நாவல் வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - விலை ரூ.75 - தொலைபேசி எண் : 91-4652 278525
Comments

Popular posts from this blog