Skip to main content

முத்துசாமியின் நாடக வெளியிட்டு விழா



அழகியசிங்கர்


ந முத்துசாமியின் நாடகங்கள் வெளியீட்டு விழா போதி வனம் என்ற அமைப்பின் மூலம் நேற்று (30.05.2015) மினி ஹால், மியூசிக் அக்கடமியில் நடந்தது.  காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை.  கூட்டத்திற்குச் செல்வதற்கு முன், நான் சில சில்லறை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு நுழையும் போது, உட்கார இடம் கிடைக்கவில்லை.  நிஜ நாடக இயக்குநர் ராமசாமி என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  ஒரு வழியாக இடம் தேடி  உட்கார இடம் கண்டுபிடித்து உட்கார்ந்தேன்.  

 கூத்துப் பட்டறை என்ற அமைப்பை ஆரம்பித்து, அதில் தீவிரமாக இயங்கியவர் முத்துசாமி.  அவர் பல நடிகர்களை கூத்துப் பட்டறை மூலம் உருவாக்கியவர்.  

அவர் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.  முதன் முதலில் அவருடைய சுவரொட்டிகள் என்ற நாடகத்தை லலித்கலா அகாதெமியில் நடைபெறும்போது பார்த்திருக்கிறேன்.  அப்போது என் அலுவலகத்தில் பணிபுரிந்த ரமணன் என்ற நண்பரையும் சந்தித்திருக்கிறேன்.  எனக்கு இந்த நாடகம் சுத்தமாகப் புரியவில்லை.  அப்போது நான் புரியவில்லை என்பதுபோல் ரமணனைப் பார்த்தேன்.  அவரும் அப்படித்தான் தலையை ஆட்டினார். முதலில் இந்த நாடகம் ஒரு மேடையில் குறுகிய இடத்தில் நடைபெறாமல், வெளியில் நடைப்பெற்றது. எப்படி இதை நாடகம் என்று நம்புகிறார்கள் என்று யோசித்தக் கொண்டிருந்தேன்.  ஆனால் முத்துசாமியின் நாடகம் வேறு தளத்தில் எனக்கு நாடகம் பார்த்து ரசிக்கும் தன்மையை ஏற்படுத்தி விட்டது.

நானும் வித்தியாசமாக நடக்கும் நாடகங்களைப் பார்க்கும் நபராக மாறிவிட்டேன்.  பரீக்ஷா என்ற நாடகக் குழுவுடன் சேர்ந்து மூர்மார்க்கெட் என்ற நாடகத்தில் நடித்திருக்கிறேன்.  பின் அங்கிருந்த எடுத்த ஓட்டம் நாடகப் பக்கம் திரும்பவில்லை.  

பரீக்ஷா முத்துசாமியின் நாற்காலிகாரர் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறது.  அதில் ஒரு கதா பாத்திரத்தை என்னால் மறக்க முடியாது.  அசோகமித்திரன்தான் அது.  அவர் எந்த வசனமும் பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பார்.  

முத்துசாமியின் நாடகங்கள் அவ்வளவு எளிதாகப் புரியாது.  ஆனால் அவர் கூத்துப்பட்டறை என்ற அமைப்பு அமைத்து, அதன் மூலம் பல நாடகங்களை எழுதி அவரே இயக்கியிருக்கிறார். அசாத்தியமான துணிச்சல்காரர். ஏற்கனவே அவர் நாடகங்களை க்ரியா புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கின்றன.  

 
ஒரு நாடகத்தில் வசனம் எப்படி பேச வேண்டும் என்பதற்காக தீவிரமான பயிற்சி கொடுப்பவர் முத்துசாமி.  ஒருமுறை நான் ஏற்பாடு செய்த விருட்சம் கூட்டடத்தில் ஞானக் கூத்தன் கவிதைகள் சிலவற்றை எடுத்து நாடகமாக அவர் நடிகர்களை வைத்து நடித்துக் காட்டினார்.  அவர் சிறுகதை எழுத்தாளரும் கூட.  சிறப்பாக பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் பேசுவதும் எழுதுவதும் ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும்.  அவர் பேசும்போது அவரைச் சுற்றி அவருடைய ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டு  இருக்கும்.  21 நாடகங்கள் கொண்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.   ரூ700 க்கு இப் புத்தகத்தை  நேற்று போதி வனம் விற்றுக்கொண்டிருந்தது.

Comments


நவீன விருட்சம்,

விழாவிற்கு எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். கால்வாய் நாராயணன், கவிஞர் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் நடராஜன் வரவேற்றார். சங்கர மூர்த்தி இறைவணக்கம் பாடினார். கவிஞர் ஜெயபாலனின்"குயில் தோப்பு' நூலினை டாக்டர் பரமசிவம் வெளியிட மருத்துவ கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் செல்லப்பா பெற்றுக்கொண்டார். நூல் விமர்சனம் குறித்து பாரதிமாறன் பேசினார். நெல்லை வானொலி நிலைய இயக்குனர் சோமாஸ் கந்தமூர்த்தி, பொருநை இலக்கிய வட்டம் தளவாய் ராமசாமி, பொதிகை கவிஞர் மன்றம் மித்ரா வள்ளிமணாளன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வானம்பாடி சங்கர், கீதாலயம் கவிதை வளர்ச்சி அமைப்பு கண்ணன், தாமிரபரணி இலக்கிய மாமன்றம் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினர். சிறந்த கவிதைக்கான பரிசினையும், சான்றிதழ்களையும் லயன்ஸ் மாவட்ட தலைவர் ஜானகிராம் அந்தோணி வழங்கினார். நிகழ்ச்சிகளை வாசுகி வளர்கல்வி மன்றம் மணி தொகுத்து வழங்கினார். கவிஞர்கள் சார்பில் பாலகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். கவிஞர் தச்சை மணி நன்றி கூறினார்.
பொருநை இலக்கிய வட்டத் தலைவர் அண்ணன் தளவாய் ராமசாமி பொன்.வள்ளிநாயகம் நெல்லை கபாலி அவர்களோடு
KINDLY ARRANGE TO PROVIDE CONTACT ADDRESSES OF ABOVE LIT. ASSOCN.

REGARDS
balasingam1951@gmail.com