Skip to main content

நான் பார்த்த சினிமாப் படங்கள்

அழகியசிங்கர்


12ஆம் தேதி கணினி முன் அமர்ந்து நவீன விருட்சம் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  மதிய நேரம்.  அப்போது ஒரு போன் வந்தது.  போன் செய்தவர் பிரபு.  அவர் ரஜனிகாந்த் ரசிகர். 

 \\லிங்கா பார்க்க வர்றீங்களா?"
"இப்பவா?"
"இப்பத்தான்," என்றார்.  
"எத்தனை மணிக்கு வரணும்."
"ஒன்றரை மணிக்கு வந்திடுங்க."
நான் மடிப்பாக்கம் கிளம்பினேன்.  நானும் பிரபுவும் 2.15 க்குக் கிளம்பினோம்.  படம் 2.45க்கு. புழுதிவாக்கத்தில் உள்ள குமரன் தியேட்டர்.  அங்கு போனவுடன் தெரிந்தது.  படம் பார்க்க 4 மணிக்கு வரவேண்டுமென்று.  "வீட்டுக்குப் போய்விட்டு, அங்கே ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம்," என்று சொன்னேன்.

பிரபு வீட்டிற்குப் போய் சற்று ஓய்வெடுத்தோம்.  திரும்பவும் 4 மணி சுமாருக்கு தியேட்டருக்கு வந்தோம்.  ஒரே கூட்டம்.  முண்டி அடித்துக்கொண்டு போனோம்.  40 ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளியின் போது, சிவாஜியின் இரு மலர்கள் என்ற படத்தை முதல் நாளே போய்ப் பார்த்தேன்.  அதன் பின் இப்போதுதான் தியேட்டரில் முதல் நாள் ஒரு படம் பார்க்க வந்திருக்கிறேன்.  அதுவும் ரஜனிகாந்தின் லிங்கா படத்தைப் பார்க்க.  

ரஜனி ரசிகரான பிரபு உற்சாகமாக இருந்தார்.  நான் சினிமாப் படங்களை தியேட்டரில் பார்ப்பது என்பது ரொம்ப அரிதான விஷயமாகப் போய்விட்டது.  பார்ப்பதே இல்லை.  ஆனாலும் நான் ரிட்டையர்ட் ஆகிவிட்டப்பின் தியேட்டர்களில் கொஞ்சம் கொஞ்சம் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.  ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பற்றி எதாவது எழுத வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு எழுவதுண்டு.  ஆனால் நான் எழுதுவதற்குள் மற்றவர்கள் எழுதி முடித்துவிடுவார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் படத்தைப் பற்றி சொல்வார்கள்.  "படம் நன்றாக இருக்கிறதா இல்லையா?" என்று யாராவது என்னைக் கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன்.  

பொதுவாக சினிமா என்பது பொழுதுபோக்கு விஷயமாகத்தான் நான் பார்ப்பேன்.  அதன் மூலம் நமக்குக் கிடைப்பது ஒன்றுமில்லை.  படம் பார்க்கிறோம்.  படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதில்லை.  சில படம் பார்த்தப் பின்பும் நம் ஞாபகத்தில் இருந்துகொண்டிருக்கும்.  சில ஞாபகத்தை விட்டு ஓடிப் போயிருக்கும்.  சில படங்கள் பாடல்கள் மட்டும் நம் கவனத்தில் இருக்கும்.  ஒரு படத்தை இன்னொரு முறையும் பார்க்க விரும்பினால், அது படத்தின் வெற்றி. 
    
புழுதிவாக்கத்தில் உள்ள குமரன் தியேட்டர் உட்கார்ந்து படம் பார்க்க ஏற்ற இடமாக இருந்தது.  ரஜனிகாந்தின் ரசிகர்கள் புடைசூழ முதல்முறையாக நான் தியேட்டர் முழுவதும் உள்ள கூட்டத்தை அப்போதுதான் பார்த்தேன்.   சமீபத்தில் நான் படம் பார்க்கும்போது கூட்டமே இருக்காது.  இது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  படம் எடுக்க போட்ட பணம் தயாரிப்பாளர்களுக்கு, வினியோகஸ்தர்களுக்குக் கிடைத்திரக்குமா என்ற ஐயம் எனக்கு எப்போதும் ஏற்படும்.

40 ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட நிலை இல்லை.  அப்போது சிடி கலாச்சாரம் இல்லை.  இன்று ஒரு படம் 100 நாள் ஓடுவதில்லை.  ஒருசில நாட்களில் படம் எடுத்தவர்கள் தங்கள் மூலதனத்தை எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் என்றார்கள் எனக்குத் தெரிந்த நண்பர்கள்.  பல தியேட்டர்களில் படம் அதிக விலை டிக்கட் மூலம் பணத்தை எடுத்து விடுவதாக சொல்கிறார்கள். அதிலும் முக்கியமான நடிகர்கள் நடிக்கும் படத்திற்குத்தான் இந்த நிலை.  சாதாரண நடிகர்கள் அதுவும் புதுமுகங்கள் நடிக்கும் படத்திற்கு அப்படி இல்லை. 

மேலும் தமிழில் 300 க்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் அவஸ்தைப் படுவதாக அறிந்தேன்.  சமீபத்தில் காவியத் தலைவன் என்ற படத்தைப் பற்றி பலர் நல்ல அபிப்பிராயம் சொன்னதால் அதைப் பார்க்க வேண்டுமென்று நினைப்பதற்குள் அந்தப் படம் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள உதயம் காம்ப்ளெக்ûஸ விட்டுப் போய்விட்டது.  வேறு தியேட்டர்களில் பகல் காட்சி மட்டும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  இந்தத் தருணத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் படத்தை முதல் ஷோ பார்க்க வந்தேன். 

சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் போட்டவுடன், எல்லோரும் ஏக காலத்தில் சத்தம் போடடார்கள்.  விஸில் சத்தம் காதைப் பிளந்தது.  பேப்பர் துண்டுகளை பூ மாதிரி தூக்கி விசிறி எறிந்தார்கள். நான் முன்புபோல் இருந்திருந்தால் இது மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டிருப்பேன்.  ஆனால் இப்போது நான் வேடிக்கைப் பார்க்கும் மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். 

லிங்கா படத்தில் ரஜனிகாந்தை இளமையாகக் காட்டியிருந்தார்கள்.  அந்தக் காலத்தில் எம்ஜிஆர் படத்தில் எம்ஜிஆரை இளமையாகக் காட்டுவார்கள்.  ஒரு காலத்தில் அவருடன் கதாநாயகியாக நடித்த சிலர் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார்கள்.   எப்படி இந்தப் படத்தில் துள்ளும் இளமையுடன் ரஜனிகாந்த் காட்சி தருகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  1975 வாக்கில் தாம்பரத்தில் உள்ள சேலையூரில் நடிகர் ரவிச்சந்திரன் லட்சுமி நடித்த ஒரு பாடல் காட்கியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.  ரவிச்சந்திரனால் முட்டிப் போட்டுக்கொண்டு பாடல் காட்சியில் பாட முடியவில்லை.  அவர் போட்டிருந்த பேன்ட் உள்ளே நிறைய துணிகளை விட்டுக்கொண்டு நடிப்பார்.  ஆனால் லட்சுமியோ துள்ளும் இளமையுடன் வேகமாக குதித்து நடனம் ஆடுவார்.  
ஆனால் சினிமா பார்க்கும் நமக்கு அதெல்லாம் தெரிவதில்லை.  இந்த வயதிலும் ரஜனிகாந்த் ஈடுகொடுத்துதான் நடித்திருக்கிறார்.  இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் குறுகிய காலத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறார்.  ஒரு பேட்டியில் இந்தப் படம் எடுப்பதற்காக ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைத்ததாக கூறி இருக்கிறார்.  

ரஜனிக்கென்று சில அம்சங்கள் உண்டு.  அது இப்படத்தில் தொலைந்து போகவில்லை.  தாத்தா ரஜினியாகவும், பேரன் ரஜினியாகவும் இரட்டை வேடத்தில் ரஜனிக்கு நல்ல தீனி கொடுத்திருக்கிறார்கள்.  அவர் எப்போதும் பேசும் பஞ்ச் வசனத்திற்குக் குறைவில்லை.  

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.  தாத்தாவின் பெருமையைக் காப்பாற்ற பேரன் ரஜினி முன் நிற்கிறார்.
  
பொதுவாக ரஜினி படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் அதன் பொழுது போக்கு அம்சத்தைப் பார்த்து ரசிப்பார்கள்.  தாத்தா ரஜனி பெரிய ராஜாவாக இருந்து தன் சொத்துக்களை எல்லாம் ஒரு அணையைக் கட்ட இழப்பது, வெள்ளைக் காரர் ஒருவர் வில்லனாக மாறி அணையைக் கட்ட விடாமல் செய்வது போன்ற காட்சிகள் இயல்பானதுதான்.  சோலையூர் மக்களுக்காக தன் சொத்துக்கள் முழுவதையும் இழக்கிறார்.  வெள்ளைக்காரன் மிரட்டிய சவாலில் அவர் அந்தக் கிராமத்தை விட்டும் போய்விடுகிறார்.  இதையெல்லாம் எத்தனை முறை ரஜனி படங்களில் காட்டினாலும் யாருக்கும் அலுப்பதில்லை.  இந்தப் படத்திலும் அப்படிதான் நடக்கிறது.  சில்லறைத் திருட்டுக்கள்மூலம் அகப்படும் ரஜனி, அதிலிருந்து தப்பி சோலையூருக்குக் கடத்துகிறார் அனுஷ்கா.  அவர் டிவி ரிப்போர்ட்டராக வருகிறார்.  திருட்டுதனத்தில் ஈடுபடும்போது எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.

ரஜனி மாத்திரம் இல்லை.  பெரிய நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், அஜித், என்ற நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களையெல்லாம், பொழுது போக்கும் அம்சமாக நாம் பார்த்து பழகிக்கொள்ள வேண்டும்.  

லிங்கா என்கிற இந்தப் படம் நமக்கு பார்க்க அலுக்காது.  இதோ பிரபு அவர் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு இரண்டாவது முறையாக லிங்காவைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
  
 

Comments

Popular posts from this blog