Skip to main content

எதையாவது சொல்லட்டுமா.....93

அழகியசிங்கர் இந்தப் புத்தாண்டில் என் நண்பரிடமிருந்து வாழ்த்துக் கடிதம் வந்தது. ஒரு கார்டில் எழுதியிருந்தார். புத்தாண்டு வாழ்த்து என்று மேலே குறிப்பிட்டு பாரதியார் கவிதை வரிகளை இப்படி எழுதியிருந்தார். இனி என்னைப் புதிய உயிராக்கி எனக்கேதும் கவலையறச் செய்து மதி தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிக்கச் செய்வாய் - பாரதி இப்போதெல்லாம் கார்டில் வாழ்த்துச் செய்தி அனுப்புவது என் நண்பர் மட்டும்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். என் எழுத்தாள நண்பர்களில் பலர் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தியெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக புத்தாண்டு என்பதை கண்டுகொள்வதில்லை. ஆனால் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்வோம். கைக் குலுக்கிக்கொள்வோம். நானும் பல ஆண்டுகளுக்குமுன் என் நண்பர்களுக்கு கார்டில் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள் என்றுதான் அனுப்புவேன். அதற்கு சிலர் பதில் வாழ்த்துத் தெரிவிக்காமல் இருக்கமாட்டார்கள். அழகான கையெழுத்தில் வல்லிக்கண்ணன், தி.க.சி, பழமலய் போன்ற படைப்பாள நண்பர்கள் பதில் எழுதாமல் இருக்க மாட்டார்கள். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் புத்தாண்டு வாழ்த்துக் கார்டு அனுப்பாமல் இருக்க மாட்டார். நான் இதுமாதிரி பலருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியும் ஒருசிலரைத் தவிர பலர் பதில் எழுத மாட்டார்கள். எனக்கு சந்தேகம் வந்துவிடும். அவர்களுக்கு என் வாழ்த்துக் கடிதம் போய் சேர்ந்ததா என்று. நான் இப்போதெல்லாம் அப்படி எழுதி அனுப்புவது இல்லை. ஏன் தபால் கார்டையே நான் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் தபால் அலுவலகத்திற்குப் போனால் கார்டை வாங்கி சேகரிக்கும் பழக்கம் என்னை விட்டுப் போகவில்லை. உண்மையில் எதாவது சொல்வதென்றால் சுருக்கமாக கார்டில் பதில் எழுதி விடலாம். மறைந்த என் இலக்கிய நண்பர் எம் என் பதி அவர்கள் கார்டில் அவர் மனதில் தோன்றுவதை எழுதி விடுவார். சின்ன சின்ன எழுத்தில் அவர் எழுதியதைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். அசோகமித்திரனும் கார்டில் எதாவது தெரிவிக்க வேண்டுமென்றால் தெரிவித்து விடுவார். பிரமிள் கார்டும் பேனாவுமாக அலைந்து கொண்டிருப்பார். üஉங்களை இந்த நாளில் வந்து சந்திக்கிறேன்,ý என்பதைக்கூட கார்டில் எழுதி விடுவார். ஆனால் இப்போது கார்டு இடத்தை எஸ்எம்எஸ், இ மெயில் பிடித்துக்கொண்டு விட்டது. கையால் எழுதும் பழக்கம் நம்மைவிட்டுப் போய்விட்டது. இன்னொரு விஷயம் பொன்மொழி. அறிவுரையும் பொன்மொழிகளும் நம்மை விட்டுப் போகாது என்று தோன்றுகிறது. யாருக்காவது நாம் இலவசமாக வழங்க வேண்டுமென்று நினைப்பது அறிவுரையைத்தான். சிலர் கேட்காமலேயே அறிவுரை கூற ஆரம்பித்து விடுவார்கள். நான் சின்ன வயதில் ரேஷன் கடையில் க்யூவில் நின்றுகொண்டிருக்கும்போது, விவேகானந்தர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். அவருடைய பொன்மொழிகளைப் படிக்கும்போது எனக்கு வீரம் வந்துவிடும்போல் நினைப்பேன். அது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இப்போதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் சில சினிமாப் பாடல்களைக் கேட்டால் வீரம் வந்துவிடும். சில பாடல்களைக் கேட்டால் சோகமாக இருக்கும். சிலதினங்களுக்கு முன் நான் வளசரவாக்கம் தெருவில் வண்டியை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கும்போது ஒவ்வொரு மின்சாரக் கம்பத்திலும் விவேகானந்தரின் பொன்மொழிகள். பொன் மொழியைப் படிப்பதுபோல் அபத்தத்தைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் நம்மிடம் தென்படும் துயரத்தை எப்படி சரி செய்வது. என் நண்பர் ஒரு திருமணத்திற்கு அவர் மனைவியுடன் சென்றிருந்தார். அது உறவினர் திருமணம். அந்தத் திருமணத்தில் மனைவியின் நகைகள் சில தொலைந்து போய்விட்டன. இருவரும் பதட்டம் அடைந்து விட்டார்கள். எல்லா இடத்திலும் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரியவில்லை. இந்தத் துயரம் ரொம்ப நாட்கள் அவர்களை வாட்டிக்கொண்டிருந்தது. அவர்களை அழைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த இரண்டு மூன்று குறி சொல்லும் இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். எனக்கும் குறிசொல்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஒரு வயதான பெண்மணி வீட்டிற்குச் சென்றோம். அவருடைய புதல்வருடன் அவர் வசித்துக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர்கள் அந்தப் பெண்மணியிடம் தங்கள் துயரங்களைக் கொட்ட காத்துக்கொண்டிருந்தார்கள். நண்பரும் அவர் மனைவியும் பூ பழங்கள் வாங்கிக்கொண்டு பயப்பக்தியுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை சொல்வதற்குமுன் எல்லோருடைய துயரங்களையும் கேட்டுக்கொண்டிருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அது எத்தனை கொடுமையான விஷயம். ஒரு துயரத்தை முடித்தவுடன், அடுத்தவர் துயரத்தை சொல்லஆரம்பித்து விடுவார். இப்படியே தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உண்மையில் துயரம் என்பது எல்லோருக்கும் சிறிய அளவிலாவது இருந்து கொண்டுதான் இருக்கும், குறி சொல்லும் பெண்மணிக்கும் துயரம் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அவர் யாரிடம் அதை வெளிப்படுத்த முடியும். நண்பர் நகை தொலைந்து போன விஷயத்தைச் சொன்னவுடன், அந்த பெண்மணி ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டார். பின் சொன்னார் : üüஉங்களுக்குத் தெரிந்தவர்தான் அதை எடுத்துக் கொண்டு விட்டார். உங்களுக்குக் கிடைக்காது..ýýஎன்றார். எனக்கும் நண்பருக்கும் கேட்கும்போது திகைப்பாக இருந்தது. நண்பரின் மனைவிக்கு வருத்தமாக இருந்தது. நண்பரை நான் சமாதனம் செய்தேன். பின் இன்னொருவரிடம் அழைத்துப் போகிறேன் என்றேன். அவரும் சரி என்றார். இன்னொருவர் ஒரு எழுத்தாளர். இராமலிங்க சுவாமிகள் படத்தை பூஜை செய்பவர். மனதில் தோன்றுவதையெல்லாம் அவர் எழுதி வைக்கும் வழக்கம் உடையவர். உலகத்தில் இந்தியாவில் நடக்ககும் விஷயங்களை எல்லாம் அவர் எழுதிக்கொண்டே வருவார். நண்பரும் நானும் போய் நின்றோம். அவர் மெதுவாக கேட்டுக்கொண்டார். பின் அதைப்பற்றி அவர் பேசவில்லை. வேறு விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தவர், இறுதியில் குறிப்பிட்டார். üüகிடைப்பது கஷ்டம்,ýý என்றார். நண்பரை திரும்பவும் ஆறுதல் படுத்தினேன். üஇன்னொரு இடத்திற்குப் போகலாம்,ý என்றேன். நண்பருக்கு எப்படியாவது நகைக் கிடைக்க வேண்டுமென்ற ஆதாங்கம். சரி என்றார். நான் அவரை அழைத்துப் போவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. குறி சொல்வது என்றால் என்ன? நம்முடைய கஷ்டங்களை மட்டும் கேட்பது மட்டுமல்லாமல், உண்மையில் அவற்றை நிறைவேற்ற முடியுமா என்பதுதான். அந்த வயதான பெண்மணி வீட்டிற்குச் சென்றோம். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு இட்டிருந்தார். அவர் பூஜை செய்யும் இடம் ஒரு கோயிலாக இருந்தது. நண்பர் தன்னைப் பற்றி கூறி அவர் முன் போய் உட்கார்ந்தார். நண்பரின் நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டு, üநாளை வாருங்கள்.ýý என்றார். அடுத்தநாள் நானும், நண்பரும் சென்றோம். "உங்கள் நகைகள் திரும்பவும் வந்துடும். எடுத்தவர் உங்களுக்குத் தெரியாமல் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள்,"என்றார். நமஸ்காரம் செய்துவிட்டுக் கிளம்பினோம். நண்பருக்கும் எனக்கும் நம்ப முடியவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து நகைகள் கிடைத்துவிட்டன. எடுத்தவர்கள் அவருடைய டூ வீலர் சைட் பாக்ஸில் போட்டுவிட்டார்கள். யார் எடுத்தார்கள் என்பது தெரியாவிட்டாலும் நண்பருக்குக் கிடைத்தது ரொம்ப சந்தோஷம். இப்படித்தான் நம்முடைய கஷ்டங்களை பிறரிடம் சொல்லிக்கொண்டே நம்மை நாம் ஆறுதல் படுத்திக்கொண்டே இருக்கிறோம். திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் அவர்களை பிரமிளுடன் சந்தித்தபோது, நான் சாமியார்களைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தேன். யோகி ராம்சுரத்குமார் பாஸிங் ஷோ என்ற சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். ஒரு அழுக்கு ஆடையில் காட்சி அளித்தார். அவர் குளித்தே பல நாட்கள் ஆகியிருக்கும் என்பதுபோல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் தென்பட்ட தேஜஸ்ûஸ என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வந்திருந்த எங்களை அவர் குறிப்பிட்ட இடத்தில் உட்காரச் சொன்னார். அங்கு நான் எப்படி நடந்துகொண்டேன், எப்படிப் பேசினேன் என்பதை இப்போதும் அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பேன். மனிதர்களின் சுபாவம் அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள். எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை உணர்வதே இல்லை. எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் ஏன் இப்படி செய்ய வேண்டுமென்று நினைப்பதே இல்லை. அகந்தை என்ற ஒன்று இருக்கிறதே அது நம் பேச்சில் வெளிப்பட்டு விடும் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. குறி சொல்பவர்களைப் பார்ப்பதுபோல்தான் யோகி ராம்சுரத்குமார் போன்ற எல்லாம் துறந்தவர்களையும் பார்ப்பது. அவர்களிடமும் நம் துயரத்தைக் கொட்டுகிறோம். அவர் ஒரு சம்பவம் சொன்னார். அவரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்தாராம். அந்தப் பெண்மணிக்கும் அவருடைய கணவருக்கும் பெரிய சண்டை மூண்டு விட்டதாம். அதைத் தீர்ப்பதற்கு எதாவது வழி இருக்கிறதா என்பதைக் கேட்க யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்க வந்திருக்கிறார். அவர் உடனே அந்தப் பெண்மணியின் பெயரை மாற்றி வேறுவிதமாக உச்சரிக்கச் சொன்னாராம். சில மாதங்களில் அந்தப் பெண்மணிக்கு கணவருடன் இருந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. அந்தப் பெண்மணி திரும்பவும் யோகியாரைப் பார்த்து நன்றி சொன்னாராம். üஎனக்கும் அலுவலகத்தில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது,ý என்றேன் பிரமிளிடம் ஒருநாள். üஉங்கள் நீளமான பெயரில் கடைசியில் உள்ள இரண்டு எழுத்தை மட்டும் பயன்படுத்தாதீர்கள்,ý என்றார் பிரமிள். நானும் அவ்வாறு முயற்சி செய்தேன். ஆனால் பிரச்சினை தீரவில்லை. (Appeared in Amirtha February 2014 issue)

Comments

Popular posts from this blog