அழகியசிங்கர்
சேலத்தில் உள்ள ஒரு எழுத்தாள நண்பர், ü400 பக்கங்களுக்கு மேல் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன், அதைப் புத்தகமாகக் கொண்டு வர, யாராவது பதிப்பாளரைத் தெரியுமா?ý என்று கேட்டார். ஒரு பதிப்பாளர் பெயரைக் குறிப்பிட்டேன். உடனே அவருக்குப் போன் செய்து பேசிவிட்டார். பதிப்பாளர் தற்போது நாவல் போடுவதில்லை என்று மறுத்துவிட்டாராம். கட்டுரைப் புத்தகங்களைத்தான் கொண்டு வருகிறாராம். திரும்பவும் எனக்கு போன் பண்ணி எழுத்தாள நண்பர் சொன்னார். அவர் நாவல் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் அவர் நூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய நாவல்கள் சினிமாப் படங்களாக ஒரு காலத்தில் வெளி வந்திருக்கின்றன. வெகுஜன வாசகர்களுக்கு அவர் நன்றாக அறிமுகமானவர்.
ஆனால் இன்று கவிதைப் புத்தகம் சிறுகதைப் புத்தகம் மாதிரி நாவல்களும் விற்பதில்லையா? விற்கிறது. ஆனால் ஒருசில பேர்களைப் பார்த்துதான் வாங்குகிறார்கள். குறிப்பிட்ட பதிப்பாளர் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை சமீபத்தில் பிரசுரம் செய்திருக்கிறார்.ஆனால் சேலம் எழுத்தாளர் புத்தகத்தைப் பிரசுரம் செய்ய மாட்டார். 1000 பக்கங்கள் கொண்ட நாவல் எப்படி விற்பனை ஆகிறது?
என் இலக்கிய நண்பர் ஒருவர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை உடனே வாங்கிக்கொண்டு வரும்படி சொன்னார். அப்புத்தகம் பற்றி தினமலரில் விமர்சனம் வந்திருந்தது. அதை வாங்கிக்கொண்டு போய் கொடுத்தேன். ஒரு வாரத்தில் படித்தும் விட்டார். திரும்பவும் அவரைப் பார்க்கும்போது அந்த நாவல் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார். அந்த நாவலுக்கு இணை வேறு எதுவும் இல்லை என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். அந்த நாவலின் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவும் சொல்வார்.
'அந்த நாவலை எழுதியவரை நான் பார்க்க வேண்டும். பார்க்க நீ ஏற்பாடு செய்," என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார். 'உன்னிடம் கொடுக்கிறேன்... நீயும் படி,"ன்றார். ü'என்னால் முடியாது..'' என்றேன். உண்மையில் என்னால் ஒரு புத்தகத்தை இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை. அதற்கு நேரம் கிடைப்பதில்லை. எனக்கு சாத்தியம் இல்லாத விஷயம் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படிப்பது. மூன்று தலைமுறை நாவலை எழுதியிருக்கிறார் என்று நாவலாசிரியர் தம்பட்டம் அடித்துக்கொண்டால், படிக்கவே வேண்டாம் என்று தோன்றும்.
நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், சில பக்கங்களில் புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்பது தெரிய ஆரம்பித்து விடும். பின் முழுவதும் படிக்க முடிவதில்லை. இப்படி அரைகுறையாகப் படித்த புத்தகங்கள் என்னிடம் அதிகமாக உள்ளன. பின் எதாவது புத்தகம் படித்து முடித்துவிட்டால் உடனே அதைப் பற்றி எழுதி விட வேண்டும். இல்லாவிட்டால் சில வாரங்கள் கழித்து அப்புத்தகம் எதைப் பற்றி சொல்கிறது என்பது மறந்துவிடும்.
சமீபத்தில் நான் படித்து எழுதாமல் விட்டுவிட்ட புத்தகம் க.நாசுவின் கோதை சிரித்தாள் என்ற புத்தகம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் என்ற நாவலை நான் பாதிக்கு மேல் படிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு நாவல் என்பது 200 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். அப்படி எழுதப்படுகிற நாவல்களைத்தான் படிக்க முடியும். நேரம் இருக்கும்.
என் பள்ளிக்கூட நாட்களில் நான் படித்த கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற மகா பெரிய நாவலை நினைத்துப் பார்க்கிறேன். அப்புத்தகத்தின் கடைசி பாகத்தை படிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. கடைசி பாகத்தை முடித்தவுடன், நாவலை என்ன இப்படி முடித்துவிட்டாரே என்று தோன்றியது.
படைப்பாளி என்னதான் எழுதினாலும், படைப்பை தீர்மானிப்பவன் வாசகனே. வாசகனின் ஆதரவு இல்லாவிட்டால் படைப்பாளி ஒன்றும் செய்ய முடியாது.
சமீபத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் பற்றி ஒரு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் க.நா.சு என்ற எழுத்தாளரைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. நூறாண்டுகளைக் கடந்த க.நா.சு மணிக்கொடியில் ஒன்றும் எழுதவில்லையா? ஆனால் மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி க.நா.சு அபிப்பிராயம் சொல்லியிருக்கிறார்.
தமிழில் விமர்சனத்தை வளர்த்ததற்கு க.நா.சுவின் பங்கு முக்கியமானது. என் இலக்கிய நண்பர் குறிப்பிட்ட தகவல்படி க.நா.சு முதலில் ஆங்கிலத்தில்தான் பி ஏ படித்தாராம். ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்று விரும்பினாராம். மணிக்கொடி எழுத்தாளர் பி எஸ் ராமையாவின் கதைகளைப் படித்தபிறகு அவருக்கும் தமிழில் எழுதத் தோன்றியதாம். பின்னாளில் ஒவ்வொரு மணிக்கொடி எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி க.நா.சு எழுதியிருக்கிறார். அதனால்தான் அவரை மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக தோன்றுகிறது.
எழுத்து பத்திரிகை ஆரம்பித்தபோது, 'விமர்சனத்தையும் நாம்தான் ஆரம்பிக்க வேண்டும்,' என்று க.நா.சு குறிப்பிட்டு ரசனை விமர்சனத்தை ஆரம்பித்தவர். சி சு செல்லப்பாவிற்கு அதில் நம்பிக்கை இல்லை, எழுத்தைக் கூறுபோடும் அலசல் விமர்சனத்தை அவர் தொடங்கினார். சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்று விட்டவர். க.நா.சு அப்படி இல்லை. அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அது குறித்து தன் கருத்தைத் தெரிவிப்பார். 24 மணி நேரமும் பத்திரிகை, புத்தகம் என்று படித்துக்கொண்டிருப்பார். க.நா.சுவிற்கு இசையில் ஈடுபாடு உண்டா என்பது தெரியவில்லை. சினிமாப் படங்களைப் பார்த்து ரசிப்பாரா என்பதும் தெரியவில்லை. புத்தகம் படிப்பது, அது குறித்து எழுதுவதுதான் அவர் விருப்பமாக இருந்தது. ஆனால் இன்றைய படைப்பாளிகள் அப்படி அல்ல. அவர்களுக்கு பல துறைகளில் ஆர்வம் உண்டு.
மணிக்கொடி எழுத்தாளர்களில் பி எஸ் ராமையா சினிமாவிற்குப் போய்விட்டவர். மணிக்கொடி என்றால் எனக்கு பி எஸ் ராமையாவின் மணிக்கொடியைத்தான் தெரியும் என்று கி அ சச்சிதானந்தம் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. பி எஸ் ராமையா 300க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியவர். சிறுகதையை இயக்கமாகப் பரப்பியவர். அவருடைய 300 கதைகளும் புத்தகமாக வரவில்லை. ஒருசிறுகதையை சில மணித்துளிகளில் படித்துவிடலாம். 200 பக்க நாவலை சில நாட்களில் முயற்சி செய்தால் படித்து விடலாம். 1000 பக்க நாவலை மாதக்கணக்கில் படித்துவிடலாம் ஒரு சந்தோஷமான செய்தி. முதன்முதலாக சிறுகதை உலகின் தலைசிறந்த எழுத்தாளரான கனடாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ இலக்கியத்துக்காக இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார். முதன் முதலாக நோபல் பரிசு சிறுகதைக்காக இந்த ஆண்டுதான் கொடுத்துள்ளார்கள்.
ராமையாவின் அத்தனைக் கதைகளைப் பற்றியும் விமர்சனத்தை சி சு செல்லப்பா எழுதி இருக்கிறார். ராமையாவின் சிறுகதை பாணி என்ற புத்தகத்தில். ராமையாவிற்கு ஒரு வாசகனாக அவரை எழுதத் தூண்ட சி சு செல்லப்பா கிடைத்தது மாதிரி, எத்தனை எழுத்தளர்களுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால் வியாபார பத்திரிகைகளில் சிறுகதைகள் இல்லாமல் போய்விட்டன. ஒரு காலத்தில் அமரர் வாசன் கேட்டுக்கொண்டபடி ராமையா ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை ஒவ்வொரு வாரமும் ஆனந்தவிகடனில் எழுதியிருக்கிறார். வாசக தயவு இல்லாமல் எத்தனையோ படைப்பாளிகள் எழுதுவதற்கு விருப்பமில்லாமல் தொலைந்து போயிருக்கிறார்கள். இன்று கோடிக்கணக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து போய்க்கொண்டிருக்கும் கதை உலகத்தை யார் புரிந்துகொள்ள போகிறார்கள். மௌனியையும், புதுப்பித்தனையும் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்.
நான் தடித்தடி புத்தகங்களைப் படிக்க வைத்துக்கொண்டு மிரண்டு போயிருப்பவன். அந்தத் தடிப் புத்தகங்களில் ஒன்றை 91 வயதாகிற என் அப்பாவிடம் படிக்கக் கொடுத்தேன். அவர் காலத்தில் எந்தப் புத்தகத்தையும் அவர் படித்த மாதிரி ஞாபகம் இல்லை. காசு கொடுத்து புத்தகம் வாங்க மாட்டார். அவர் தி ஜானகிராமன் கதைகள் முழுவதையும் படித்து முடித்துவிட்டார். அசோகமித்திரன் சிறுகதைத் தொகுதி 2 பாகங்களையும் படித்துவிட்டார். எம் வி வெங்கட்ராமன் கதைகளையும் படித்துவிட்டார். இப்போது ஆதவன் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார். ஆனால் நாவலையோ கவிதையையோ படிக்க விரும்புவதில்லை. ஒரு கதையைப் படித்துவிட்டு பரவசம் அடைந்து எதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தால் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.
காஞ்சிபுரத்திலிருந்து எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு வயது 85. கல்யாணம் ஆகி 6 மாதங்களில் விதவை ஆகிவிட்டவர். எனக்கு அவரைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். சாதிய கட்டுப்பாட்டால் அவர் குடும்பத்தினர் அவருக்கு மறுமணம் செய்து வைக்கவில்லை. அதைவிட கொடுமை என்னவென்றால் அவருக்கு மொட்டை அடித்து முக்காடு போட்டுவிட்டார்கள். இப்போதும் அவர் காஞ்சிபுரம் மடத்தில் தங்கி இருக்கிறார். அவர் எந்த வீட்டிலும் சில நாட்கள் கூட தங்கி இருக்க மாட்டார். ரொம்ப ஆசாரம் பார்ப்பார். 85 வயதிலும் பார்க்க லட்சணமாக இருப்பவர். நான் நினைத்துப் பார்ப்பேன் சின்ன வயதில் அவர் எவ்வளவு அழகான யூவதியாக இருந்திருப்பாரென்று. வயது ஏற ஏற முகத்தின் லட்சணம் குறைந்துகொண்டே போகும். ஆனால் ஒரு சிலர்தான் வயதானாலும் லட்சணமாக இருப்பார்கள்.
அந்த உறவினர் என் வீட்டிற்கு இரண்டு நாட்கள் தங்க வந்திருந்தார். எப்போதும் முகத்தில் விபூதி இட்டுக்கொண்டு சுவாமி ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருப்பார். அந்தக் காலத்தில் அவர் கணவர் எப்படி காவேரியில் குளிக்கப் போய் இறந்து போனார் என்ற நிகழ்ச்சியை கண்ணீரோடு இப்போது கூட எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார்.
என் வீட்டில் கூடத்தில் அவர் படுத்துக்கொண்டிருந்தார். இரவு நேரத்தில் கொஞ்சம் பால், பழம் மாத்திரம்தான் சாப்பிடுவார். தூக்கம் வராத இரவு நேரத்தில் லைட்டைப் போட்டுவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தார். அவர் என்ன புத்தகத்தை எடுத்துப் படிக்கிறார் என்று பார்த்தேன். காசியபனின் üஅசடுý என்ற புத்தகம். எனக்குப் பெருமையாக இருந்தது.
அவர் காஞ்சிபுரம் கிளம்புவதற்கு முன் கட்டிலில் அவர் படித்த அந்தப் புத்தகம் முழுவதும் முடிக்காமல் படித்தப் பக்கத்துடன் குப்புற கிடந்தது. 'அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடு,'என்று கேட்பாரென்று நினைத்தேன். ஒன்றும் கேட்கவில்லை. சும்மா பொழுது போகாமல் படித்திருக்கிறார்.
புத்தகம் எழுதி விடலாம். ஆனால் படிப்பதற்கு வாசகர் வேண்டும். புத்தகம் படித்துவிட்டு அது குறித்து பேசுகிற வாசகர் வேண்டும்.
(அம்ருதா நவம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)
Comments
வணக்கம்.
மனதை ஈர்த்து நெகிழ் வைத்த கட்டுரை.
இயல்பான, மனத்தை அக்கம் பக்கம் அலைக்காமல் வாசிக்க வைத்த கட்டுரை.
வணக்கம்.
நான் எப்பவாவதுதான் வருகிறேன். இருப்பினும் இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்களேன்.