Skip to main content

நான், பிரமிள், விசிறி சாமியார்.............17

அழகியசிங்கர்


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேவைப்படுவது. உணவு, உடை, இருப்பிடம்.  இந்த மூன்றுமே பிரமிளுக்குச் சிக்கலாக இருப்பதாகவே எனக்குப்படும்.  இருப்பிடம் என்பதை எடுத்துக்கொண்டால், வேறு வழியில்லாமல் இருக்க வேண்டுமென்று இருப்பதாக எனக்குப்படும். 

க்ரியா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தெருவில் உள்ள இடத்தில் ஒரு அறையில் அவர் ரொம்ப வருடங்கள் குடியிருந்தார்.  அது வெறும் அறை.  பொது எதிரில் உள்ள ஒரு அறையில் அவர் ரொம்ப வருடங்கள் குடியிருந்தார்.  அது வெறும் அறை.  பொது கழிவறை, குளியலறை. அந்த இடத்திற்கான வாடகையைக்கூட யாரோ சில நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். 

பின் அங்கிருந்து திருவான்மியூரில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்றார்.  அங்கிருந்து அவர் அயோத்தியா குப்பம் என்ற இடத்திற்கு வந்தார்.  உள்ளே நுழையக்கூடிய அறை மட்டும்தான்.  பொதுவாக அயோத்தியா குப்பத்திலுள்ள எல்லோரும் பயன்படுத்தும்படி பொது கழிவறை.  போதுமான வசதிகள் இல்லாமல் எத்தனையோ ஏழை மக்கள் இப்படியெல்லாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  மயிலாடுதுறையில் நான் இருந்த இடத்திலுள்ள தெருவில் பாய் முடைபவர்கள், பாயெல்லாம் முடைந்து தெருவில்தான் படுத்துக்கொள்வார்கள்.  அவர்கள் இருப்பிடம் தெருதான்.

சைதாப்பேட்டையில் என் உறவினர் ஒருவர், காற்று சூரியவெளிச்சம் இல்லாத வீட்டில் குடியிருந்தது இப்போதுகூட ஞாபகம் வருகிறது.  அனல் கக்கும் இந்த வெயில் காலத்தில், உறுதியான மனம் படைத்தவர்கள்கூட பேதலித்துப்போக வேண்டிய சூழ்நிலைதான் ஏற்படும். 

பிரமிள் நுங்கம்பாக்கம் வந்தபோது, அவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில் பன்றிகளை வெட்டி விற்பனை செய்துகொண்டிருப்பார்கள்.  பன்றி அலறலுடன், அந்த இடத்தில் நாற்றம் குடலைப் புடுங்கும். பிரமிளைப் பார்க்க அவர் அறைக்குப் போகவே எனக்கு நடுக்கமாக இருக்கும். 

சரி, பிரமிள் என்னமாதிரியான உடை உடுத்திக்கொள்வார்.  எத்தனை எண்ணிக்கை உள்ள சட்டைகள் வைத்திருந்தார்.  எத்தனை பாண்ட் அவர் வைத்திருந்தார்.  அதெல்லாம் அவருடன் பழகும்போது நான் கவனித்ததே இல்லை.  அவருடன் விசிறி சாமியாரைப் பாரக்கச் சென்றபோது, அழுக்கான உடையுடன் விசிறி சாமியார் காட்சி அளித்தார்.  அழுக்கான உடையில் இருந்தாலும் அவர் முகத்தில் காணப்படும் தேஜஸ் ஆச்சரியமாக இருக்கும். 

தெருவில் நடமாடும் பிச்சைக்காரர்கள், பைத்தியக்காரர்கள் அழுக்கான உடையில் பார்க்கும்போது, நாம் ஏனோ முகம் சுளிக்காமல் இருப்பதில்லை.  வசதியாக இருந்தும், பலர் உடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

முழுமையாக மூன்று வேளை சாப்பாடு அவருக்குக் கிடைத்ததில்லை.  இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரிய விஷயங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார்.  ஒரு நல்ல புத்தகம் படித்தாலும் சரி, ஒரு நல்ல சினிமா பார்த்தாலும் அதைப் பற்றியெல்லாம் சொல்லாமல் இருக்க மாட்டார்.  இதோ அவரைப் பற்றி இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்பதை சொல்ல முயற்சி   செய்கிறேன்.
                                                            

                                                                                                                         (இன்னும் வளரும்)

Comments