குளிர் காலத்தைவிட கோடைகாலம் மிகக் கடுமையானது. அதுவும் என் அலுவலகக் கட்டிடத்தை விட மட்டமானது எதுவுமில்லை. காலையில் மயிலாடுதுறையில் 6 மணிக்கு மின்சாரத்தை நிறுத்தினால் 9 மணிவரை ஆக்கி விடுகிறார்கள். சூடு பறக்கும் தேர்தல் நேரம் வேறு. யாருக்கு நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானே கேட்டுக்கொள்கிறேன். போனமுறை என் பெயரும், நடிகர் கமல்ஹாசன் பெயரும் வாக்களர் பட்டியலில் இல்லை. என் பெயர் இல்லை என்பதைப் பற்றி யாரும் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் பெயர் விடுப்பட்டிருந்தது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துவிட்டது. நான் சாமான்யன் என்பதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். சரி யாருக்கு ஓட்டுப் போடுவது. ஒவ்வொரு முறையும் நான் ஓட்டுப் போடும்போது எல்லாக் கட்சிகளிலும் ஓட்டுப் போடுவேன். சிலசமயம் முகம் தெரியாத தனித்து நிற்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுவேன். அல்லது ஓட்டே போடாமல் போய்விடுவேன். ஓட்டுப் போட்டு எதாவது கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களுடைய குறையைத் தீர்க்க முடியாது. பெரிய புரட்சியை செய்து விட முடியாது. ஆனால் நியாயமான நிர்வாகத்தை வெளிப்படுத்தின...