Skip to main content

இது அவனைப் பற்றியக் கதையல்ல

வெகுநாட்களாகவே கதை எழுதிவிட விருப்புற்றிருந்தாலும், கதை எழுதுதல்
குறித்த பல கேள்விகள், இயலுமா எனும் ஐயம், நற்பல கதையாசிரியர்கள்
இருக்குமிடத்தில் எழுதல் குறித்த தயக்கம், எழுத்துக்கு உடன்படாமல்
இருக்கிற சூழல், வர மறுக்கிற வார்த்தைகள், வந்தாலும் உறவு முறித்துக்
கொண்டு போகிற காதலியாய் கரு என முடியாமையின் எச்சங்கள் மிகைந்து பொதிந்து
கிடந்த தறுவாயில்..

அவன் எனக்கு எந்த விதத்திலும் நெருக்கமானவனில்லை, அவன் எனக்கு எந்த
விதத்திலும் தூரமானவனுமில்லை, அவனை நான் அறிந்திருக்கிறேன், அவனை நான்
அறியாமலும் இருக்கிறேன், அவனை எனக்கு அவனாக தெரியும், அவனை எனக்கு
அவனாகவும் தெரியாது, இப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலில் உங்களுக்கு எப்படி
அவனை அறிமுகம் செய்யப் போகிறேன் என்று எனக்கு புரியவில்லை.

இந்த இரவில் அவனைப் பற்றி கதை சொல்லவேண்டும் என்று ஏன் எனக்கு
தோன்றியதென்று அறிகிலேன், எனினும் அவனைப் பற்றி சொல்லவே எனக்கு
விருப்பமாய் இருக்கிறது, தற்போது தான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு
புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி எனக்கான
முன்பதிவு செய்துவிட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துவிட்டேன்.

அவனைப் பற்றி நினைத்தாலே அவனின் பல பெயர்களும் நினைவுக்கு வருவதை
தவிர்க்க இயலாது, மொன்னை பிளேடு, ரம்பம், செடி, அறுவை, தோல்வாயன், தொன
தொன கிழவி இத்யாதி, இத்யாதி. இவ்வளவு பெயர்கள் இருந்தாலும் அவன் அதனை
பொருட்டாக எடுத்துக் கொண்டதுமில்லை, அதை பற்றி கவலையுற்று தன்னை மாற்றிக்
கொள்ளவும் எண்ணியதில்லை. பெரும்பாலும் அவன் பேச்சுக்கள் ஒரு
நிலைப்பட்டதாய் இருக்காது, அது சம்பந்தம் சம்பந்தமில்லாத களங்களுக்கு
மாறிக் கொண்டே இருக்கும், சம்பந்தமே இல்லாத சில விடயங்களையும் சம்பந்தம்
செய்யும், அப்பேர்ப்பட்ட தருணங்களில் அவனைக் கண்டு நான் வியக்காமல்
இருந்ததில்லை, என்றாலும் அவன் பேச்சுக்கள் உண்டாக்குகிற அயர்ச்சி
எரிச்சலோடு முகம் சுழிக்கவும் வைக்கும், நானே அவனிடம் அப்படி நடந்து
கொண்டும் இருக்கிறேன்.

பேருந்து இன்னும் புறப்படவில்லை, மனதை இழுத்து செல்கிற அழகிய பெண்களைப்
போல, எதிர்பாராமல் சந்திக்கிற இனிமையான மனிதர்களைப் போல, சுவையான
சம்பவங்களைப் போல, மகிழ்ச்சியான தருணங்களைப் போல, மேகங்கள் வானத்தில்
கூடி கூடி கலைந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன் இந்த மேகங்களை நான்
பார்த்திருக்கிறேனா ? இவை புதிய மேகங்களா ? அல்லது பழயவைகள் தானா ? என்
அருகிருக்கையில் அமர்ந்திருப்பவனை போலத் தான் இந்த மேகங்களுமா,
இங்கிருந்து புறப்பட்ட உடன் இதனுடனான என் தொடர்பு அறுந்துவிடுமா ?

ஓவியங்களில் அவனுக்கு மிகைந்த ஈடுபாடு உண்டு, அதுமட்டுமல்ல கைவினைப்
பொருட்களும் மிக அழகழகாக செய்வான். வீட்டில் அவன் அறையின் நான்கு
சுவர்களிலும் நான்குவித வண்ணப்பூச்சுக்கள் அடித்து வைத்திருக்கிறான்,
வித்யாச வித்யாசமான வண்ண விளக்குகள், மணி போன்ற சின்ன சின்ன விளக்குகள்,
இயற்கை காட்சி போன்ற நவீன ஓவியங்கள் என்று அந்த சுவர்களை மெருகேற்றியும்
வைத்திருக்கிறான். அவன் வீட்டுக்கு சென்று வருகிறவர்கள், அதுவரை
பழக்கமாகாத அவனைப் பார்ப்பார்கள், ஒரு கண்காட்சிக்கு வந்திருப்பதைப்
போன்று உணர்வார்கள். அவனை காண அவன் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தேன்,
வெளியே எங்கோ போயிருப்பதாய் சொன்னார் அவன் அப்பா..

அவனுக்காக அவன் வீட்டில் காத்திருந்தேன், சற்றைக்கு மிகைந்த நேரம்
கழித்தே வந்தான், என்னை கண்டும், எதுவும் பேசுமால் வீட்டின் பின்புறமாய்
சென்றான்

“அந்த தம்பி ரொம்ப நேரமா உனக்காக காத்திட்டு இருக்கு, நீ எங்க போய்
சுத்திட்டு வர” என்ற அவன் அம்மாவின் குரலையும் பொருட்படுத்தவே இல்லை..

என்ன மனுசன் டா இவன் ? இவன பார்க்கத்தானே வந்திருக்கோம், கண்டுக்காம கூட
போறான் என்று அவமானமாக இருந்தது. அதற்கு மேல் அவன் வீட்டில்
அமர்ந்திருக்க தன்மானம் தடுத்தது, கடுப்பாக இருந்தது, அப்படியே சொல்லாமல்
கிளம்பி விடலாம் என்று தோன்றியது.

“சொல்லாமல் கிளம்பினால் அவன் வீட்டார் என்னைப் பற்றித்தான் என்ன
நினைப்பார்கள் ?”

அவன் கண்டு கொள்ளவில்லை என்றாலும் அவன் வீட்டார்கள் நல்லவிதமாய் தானே
என்னிடம் நடுந்து கொண்டார்கள், உபசரித்தார்கள், அப்படி இருக்க அவர்களிடம்
கூறாமல் செல்வது சரியாக இருக்குமா ?

அவன் அம்மாவை அழைத்து “ நான் கிளம்புறேன் மா” என்றேன்

அவர்களுக்கு என் மனநிலை புரிந்திருக்க வேண்டும்

“ஒரு நிமிஷம் இருப்பா, அவன போய் கூட்டியாறேன்” என்று சங்கடமான முகத்தோடு
சொன்னார்கள்

“நீங்க இருங்க மா, நானே போய் அவன பார்த்து சொல்லிட்டு கிளம்புறேன்”

அவர்கள் பதில் சொல்லும் முன் வீட்டின் பின்புறம் நோக்கி நடந்தேன்

வீட்டுக்கு வரும் பொழுது கொண்டு வந்திருந்த கான்கிரிட் கட்டும் கம்பியை,
கொல்லையில் இருந்த மாமரத்தில் வயிறு தட்டையான “S” போன்ற வடிவத்தில்
வளைத்துக் கொண்டிருந்தான்.

“நான் கிளம்புறேன் டா”

“இரு டா, உனக்கொன்னு செய்து காட்டலாம் தான் இந்த கம்பியை வளச்சிட்டு
இருக்கேன்” என விழிகளில் பெருமை பொங்க சிரித்தான்

வீட்டுக்கு வந்தவனை வா னு கூட கூப்பிடாம வந்துட்டு, எனக்கு செய்து
காட்டுறேன் னு சொல்றியே “ லூசா டா நீ” என்று கேட்க தோன்றியது

ஆனால் கேட்கவில்லை.

திரும்பி பார்த்த போது என் இடது புற வரிசையில் ஜன்னலுக்கடுத்த இருக்கயில்
அமர்ந்திருந்த பெண் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அலைபேசியில் யாரிடமோ
பேசிக் கொண்டிருந்தாள். பொத்தல் விழுந்த ஓடாக அவள் கண்களில் இருந்து
கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது. ஒரு விடை பெறுதலுக்கான பேச்சாகத்தான்
அது இருக்க வேண்டும், பிரிவுத் துயரில் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள்
என்று மனது பேசியது. தலை நிறைய அவள் சூடியிருக்கும் பூக்களில் இப்போது
எந்த நறுமணம் வீசும் ? ஆற்றாமையின் நறுமணமா ? அழுகையின் நறுமணமா ? அவளின்
நறுமணமா ? இல்லை பூவின் நறுமணமா ?

வேரோடு அறுந்துவிடுகிற பிரிவோ ? அல்லது தற்காலிகமான பிரிவோ ? அதை
சொல்லுதல் என்பது அவ்வளவு சுலபமானதல்ல, வார்த்தைகள் நனைய வழிகிற
கண்ணீரில் அந்த பிரிவின் கனம் குறைந்துவிடுவதில்லை. ஒரு அழுத்தத்தை
என்றுமே அது நம்முள் இருத்துகிறது, அதன் அடர்த்தி அதிகமாகும் போதெல்லம்
யானையின் கால்களை கொண்டு அது நம்மை நசுக்குகிறது. அடர்த்தி குறையும் போது
எறும்பின் கால்களை போல சுருங்கி மனசின் பரப்பெங்கும் ஊர்ந்து கொண்டே
இருக்கிறது.

வளைத்த கம்பியை வைத்து அவன் ஒரு டைனோஸர் செய்தான், மிகத்துல்லியமாக இல்லை
என்றாலும் அது டைனோஸர் போலவே இருந்தது.

“இந்த ஓவியங்களை எதை பார்த்து வரைஞ்ச டா” என்று அவன் சுவரில் இருக்கும்
ஓவியங்கள் குறித்து கேட்டேன்

“இதுவா வான்காவுடையது, இணையத்தில் பார்த்தேன், பிரிண்ட் எடுத்துட்டு
வந்து வரைஞ்சேன், உனக்கு வான்கா பற்றி தெரியுமா ? “

உதட்டைப் பிதுக்கினேன்

“அவரு ஒரு போஸ்ட் இம்ப்ரஷனிஸ்ட், அவரோட ஓவியங்கள் எல்லாம் வயல் வெளி
காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும், வாழும் போது அவரை யாரும் கண்டுக்க கூட
இல்ல, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஓவியங்கள் வரை வரைஞ்சுருக்கார், ஆனால்
அதில் இரண்டே இரண்டுதான் அவர் வாழும் போது விற்ற, அதுவும் சொற்ப
விலைக்கு, இப்ப அவர் கையால் வரையப்பட்ட ஓவியங்கள் 2 கோடி வரை
விற்கப்படுது, கடைசி வரை அவர் கல்யாணமே பண்ணிக்கல” என்று ஒரு
குறுஞ்சரித்திரத்தையே சொன்னான்

“எங்க இருந்து டா இவ்வளவு விஷயங்கள சேகரிக்கிற”

“இணையத்தில் இருந்துதான்” என்று பெருமையோடு என் வியப்பை கண்டு
புன்னகைத்தான்

“டா வின் சியோட, மோனோலிஸா ஓவியம் பற்றிய ரகசியம் என்ன னு தெரியுமா டா”

நான் கேட்டதும் அவனின் கருத்த முகம் மேலும் இருண்டது, அவனுக்கு அபிராமி
குறித்த நினைவுகள் வந்திருக்க வேண்டும், அபிராமியும் இவனை உண்மையாகவே
காதலித்தாள், ஆனால் இவனின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அவளுக்கு இவன்
மீதாக பயத்தை உண்டு பண்ணிவிட்டது. அவள் இவனைப் பிரிந்ததின் சரியான விவரம்
எனக்கு தெரியாதென்றாலும், அவள் இவனை விட்டு முற்றுமாக விலகி
சென்றுவிட்டாள் என்பது எனக்கு நிச்சயமாய் தெரியும்.

அவனை அப்படிப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது, அவன் கவனத்தை திசை
திருப்ப..

“ஜிம்மி எங்க டா காணோம்” என்றேன்

“ஜிம்மியா இரு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, டைனோஸரின்
முன்னங்கால்களிலும், பின்னங்கால்களிலும் நுண்மையாய் வெட்டிய கம்பிகளை
நகங்களாக செருகிக் கொண்டிருந்தான்.

பிறகென்னை கொல்லைப்புறம் அழைத்து சென்றான், “ இந்த கொய்யா செடியை
பார்த்தியா, பெரிசா வந்திருக்கு இல்ல”

“ம்” இதை எதற்கு என்னிடம் காட்டுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்த
போதே

“இந்த செடி ரொம்ப நாளா வளராமலே இருந்துச்சு, ஏதாவது உரம் வச்சா வளரும்னு,
ஜிம்மிய கொன்னு இதுக்கு உரமா புதைச்சுட்டேன்”

அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போன்னேன் நான், அவனைப் பார்க்கவே எனக்கு பயமாக
இருந்தது, அவன் எந்த சலனமும் இல்லாமல் சாதாரணமாய் நின்றிருந்தான். அவன்
முகத்தில் பெருமை பொங்கும் புன்னகை வழிந்து கொண்டிருந்தது..

பசங்க சொல்வது போல் இவனுக்கு மனப்பிறழ்வு தான் ஏற்பட்டிருக்கிறது..

எனக்கு அதற்கு மேல் அவன் வீட்டில் இருக்க தைரியமில்லை, அவன் பதிலைக் கூட
கேட்காமல் "கிளம்புறேன் டா" என்று சொல்லி வெளியேறிவிட்டேன்

குழந்தை போல் வளர்த்த பிராணியை கொல்ல மனம் வருமா ? எப்போதாவது இவன்
வீட்டுக்கு வரும் என்னையே வாலாட்டி, துள்ளி இப்பக்கமும், அப்பக்கமும் ஒரு
குழந்தை போல ஓடி சந்தோஷமாய் வரவேற்குமே அந்த அன்பான ஜீவனையா இவன்
கொன்றுவிட்டான். அபிராமி இவனைப் பார்த்து மிரட்சியுற்றத்தின் அர்த்தம்
கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது.

அவனை ஒரு சரியான மனநல மருத்துவருக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று
தோன்றியது, ஆனாலும் அவன் மீது உண்டான வெறுப்பும், பயமும் என்னை அவனை
விட்டு விலகவே செய்தது. அதற்கப்புறம் அவனிடம் இருந்து வரும்
மின்னஞ்சல்களைக் கூட படிக்காமல் டெலிட் செய்ய ஆரம்பித்தேன்

அழுது கொண்டிருந்த பெண்ணை பார்த்தேன், அவள் தற்போது மகிழ்ச்சி பொங்கும்
குரலில் பேசிக் கொண்டிருந்தாள், தன் துயரத்தில் இருந்து வெளி வந்து
சமாதானமாகி இருக்க வேண்டும் என்று தோன்ற, அவளுக்கடுத்து ஜன்னலுக்கு அருகே
அமர்ந்திருந்த பெண்ணும் யாரோடோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

சாலையில் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன, இதில்
பெரும்பாலானவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்க வேண்டும்,
கனரகவாகனங்களின் விளக்கு வெளிச்சங்கள் கண்களைக் கூச வைத்தன, என் அருகே
அமர்ந்திருந்தவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

எனக்கான கதையை ஏந்தி வந்தவன் மனதில் நடமாடிக் கொண்டிருந்தான்.

Comments

அவனைப் பற்றியே குழப்பமான அவனுக்கு அவனைப் பற்றிய கதை தெரிவதில்லை... அவனைக் குறித்து பரிதாபமாக இருக்கிறது.
நல்ல கதை
குமரி எஸ். நீலகண்டன்
ஆதி said…
மிக்க நன்றி நீலகண்டன் அவர்களே

Popular posts from this blog