Skip to main content

இரவுக்குள் ஒரு இழப்பு

இங்கே குளிர் காலம். வெளிநாட்டுக் குளிரை முதல் முதலாக
அனுபவிக்கிறேன். இரவு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு
படுத்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்கும் மூளைக்கும் இடையிலுள்ள
பிரதேசத்தில் என்னென்னவோ காட்சிகள் தோன்றி மறைகின்றன. அது
கனவாகவும் இல்லாமல் உள்நினைவின் சிதறலாகவும் இல்லாமல்
குழம்பி இருக்கிறது.
திடீரென்று ஏழுகடல் தாண்டி..இடையிலுள்ள எவ்வளவோ தேசங்களைத்
தாண்டி போஸ்டல் காலனி முதல் தெருவில் ஆறாம் நம்பர் வீட்டின் முதல்
அடுக்ககத்தில் இருக்கிறேன். என் இனிய நண்பர் சந்திரமௌலி கூட
உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எங்கே இவ்வளவு தூரம் ? " என்று
கேட்கிறார். " சும்மாத் தான் .." என்கிறேன். " எனக்கு ஆபீஸுக்கு
நேரமாகி விட்டது.. இப்போது இலக்கியம் பேசமுடியாது.. அதுவும் என்
வாழ்க்கை மற்றவர்கள் போலில்லை.. நான் ஆபீஸிக்கு ரயிலில் சீர்காழிக்கு
போக வேண்டும் " என்கிறார்..." நானும் வருகிறேன் பேசிக் கொண்டே
போகலாம்.." என்கிறேன். " சரி ஆனால் எனக்கு நேரமாகி விட்டது..
நான் போய்க் கொண்டே இருக்கிறேன்.. பின்னால் வாருங்கள்.."என்கிறார்.
அவர் போய் விடுகிறார். நான் குளித்து விட்டு உடை அணிந்து கொண்டு
என் காலணியைத் தேடுகிறேன். இத்தனைக்கும் அது சின்ன அறை தான்
என் காலணி தென்படவேயில்லை.. பெஞ்சு நாற்காலி மேஜை அத்தனை
அடியிலும் தேடுகிறேன். மணி ஆகிக் கொண்டிருக்கிறது. காலணியைக்
காணவில்லை.. உள்ளே சமையல் கட்டில் சந்திரமௌலியின் மனைவி
இருக்கிறார்கள். அவர்களிடமும் தயங்கி இதைச் சொல்லுகிறேன் அவர்கள்
உடனே வந்து அறையிலுள்ள அட்டாளியின் மேலேறி அங்கிருந்து என்
காலணியை எடுத்துக் கொடுக்கிறார்கள். " அது எப்படி அங்கே போச்சு? "
புதிராக இருக்கிறது.. திடீரென்று சிரிப்பொலி கேட்கிறது என் பின்னாலிருந்து.... அறையில் ஐராவதமும் சீனிவாஸனும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.. என்னைப் பார்த்து சிரிப்பதற்காகவே
அவர்கள் அங்கு வந்து உட்கார்ந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
நான் காலணியை அணிந்து கொண்டு வேகமாக வெளியேறுகிறேன்.
அப்போது என் கைப் பேசி ஒலிக்கிறது. காதில் வைத்து " யாரென்று
கேட்கிறேன்? " மௌலி " நான் தான் .. இப்போது சீர்காழியில் இறங்கி
பஸ்ஸில் ஆபீஸுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்..நீங்கள் வந்தால் கூட
என்னால் பேச முடியாது..என் மண்டை முழுக்க லெட்ஜரும் கணக்கும்
ஆபீஸ் கடுதாசிகளும் தான் இருக்கின்றன..தவிர ஆபிஸில் மற்றவர்கள்
பேசும் கோள்கள் தான் கேட்கின்றன...இலக்கியம் இங்கே செல்லாது..."
என்கிறார்..
" என் காலணி சதி செய்து விட்டது .. உங்களை சந்திக்க வேண்டுமென்று
தான் ஓடி வந்தேன்.. வாழ்க்கையில் நினைத்தது நிறைவேறாமல் எல்
லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை..இதில் கொடுத்து வைத்தவர்கள்
ஐராவதமும் சீனிவாஸனும் தான்.. அவர்கள் தான் சிரித்துக்
கொண்டே வாழ்க்கையை கழிக்க முடிகிறது.." என்றேன்..
திடீரென்று மூளை ஊமையாகி கண்ணிமைகள் படபடத்தது.
நான் விழித்த போது கதகதப்பான கட்டிலில் ஆனாலும் எனக்கு
ஒவ்வாத சூழலில் விழித்துக் கொண்டிருந்தேன்..எனக்கும் மௌலிக்கும்
இடையே ஏராளமான தூரம் இருந்தது!!

Comments