தெரு விளக்குகள் அணைந்து விட்டது. எல்லா திசைகளிலும் பூரணமான இருட்டு. மணி எட்டேகால் சொச்சம்தான். காற்று சூறையாக சப்தம் காட்டியபடி தாறுமாறாக வீசியது. இந்தக் கோடையில் காய்ந்து சருகாகி மடிந்துப்போன சாலைப் புழுதியெல்லாம் காற்றில் மேலெழுந்து கண்களில் அப்பியது. மேலெல்லாம் நாற்றப் பூச்சு. நட்சத்திர மண்டலம் மறைந்துப் போனது. தேய்ந்து போய் வளர்ந்த நிலவையும் காணோம். மின்னல் மின்னி நெளிய, இடி இடித்துக் காட்டியது. மழைவரும் என்று பேசிக்கொண்டு சிலர் ஓட்டமும் நடையுமாய் விரைந்தார்கள். தூற்றல் பலமாக விழுந்தது. ஏறிவந்த சைக்கிளை தள்ளிக் கொண்டும் போக இயலவில்லை. சுழற்றியடித்து அதை நிறுத்தியது காற்று. உடல் பலஹீனம்வேறு. தேங்கிவிட்டேன். காலம் என் முன்னே இருளாக கவிழ்ந்து கிடக்கிறது. விளக்குகள் மீண்டும் உயிர்பொற்றன. காற்றும் தூறலும் கூடிக்கொண்டே இருந்தது. நாலு வீடு தள்ளி, ஒரு வீட்டின் முன்புறம் கொஞ்சம் பெரிய பெட்டிக்கடை. அதன் முன்னால் போடப் பட்டிருந்த கீற்றுப் பந்தலில் சிலர் ஒதுங்கி நின்றார்கள். மழை விடட்டுமென சைக்கிளை ஓரத்தே விட்டுவிட்டு நானும் அங்கே ஏறிக்கொண்டேன். தூரத்தில் இருக்கும் எங்க முஹல்லா பள்...