Skip to main content

சின்னத்திரையில் மும்பை பயங்கரம்.
டெக்கான் முஜாகிதின் என்று அது வரை கேட்டிராத பெயரில் நவம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பயங்கரவாதச் செயல்களைத் துவக்கிய கும்பலின் உண்மையான பின்னணிகள் என்ன, லஸ்கர் இ தொய்பாவான அதன் சதித்திட்டங்கள் யாவை என்பனவற்றை உயிருடன் பிடிப்பட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப் போலீஸிடம் கக்கத் தொடங்கியவுடன் மும்பைத் தாக்குதல் எத்தகைய முன்னேற்பாடுகள் கொண்டவை என்பது தெரியவந்தது.


முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்ட பயங்கரவாதிகளுக்கு இணையாக தேசிய பாதுகாப்பு காவலர்கள், கடற்படை தரைப்படை வீரர்கள் போலீஸ்காரர்கள் ஆகியோர் அப்போதைக்கப்போது திட்டமிட்டு செயல்பட்டு அந்த கோர சம்பவத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தனர். என்னசெய்வதென்று அறியாமல் இவற்றையெல்லாம் கையைப் பிசைந்த நிலையில் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதே சமயத்தில் எவ்வித முன்னேற்பாடோ முன் அனுபவமோ இல்லாத தொலைக்காட்சி சேனல்கள் அந்த ஐம்பத்து ஒன்பது மணி நேரங்களை வினாடி வினாடியாகப் பகுத்து மக்களுக்கு அங்கே நடப்பவற்றை வழங்கிக் கொண்டிருந்தனர்.


தொலைக்காட்சி தகவல் ஒளிப்பரப்பு என்பது இந்தியாவில் ஒரு பக்குவ நிலையை எய்திருப்பதை அவை காட்டின. Head Lines Today, NDTV, Times Now, CNN-IBN, News X போன்றவை உடனுக்குடன் தாஜ், ஓபராய் ஓட்டல்கள் மற்றும் நரிமன் இல்லம் ஆகியவற்றின் நடப்புகளை ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தன. CNN, BBC World ஆகிய சேனல்கள் ஓட்டல்களில் சிக்கிக்கொண்டிருந்த அமெரிக்க ஆங்கிலேயர்களின் நலன் பற்றியே அதிக அக்கறை செலுத்திக் கொண்டிருந்தன. அவை தவிர மேல பெயர்தரப்பட்டுள்ள பிற சேனல்கள் அனைத்து மனிதர்களின் பாதுகாப்பு பற்றியும் அக்கறை கொண்டிருந்தன. சேனல்களின் கேமரா மனிதர்கள் மற்றும் செய்தியாளர்கள் நெரிசலான கூட்டங்களிடையே அநாயாசமாக ஊடுருவிக் கொண்டிருந்தனர். பல சமயங்களில் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை வந்த போதிலும் அவர்கள் சற்றும் பின்வாங்கவில்லை. நிலையத்திலிருந்த அறிவிப்பாளர்கள் களத்திலிருந்த செய்தியாளர்களைக் கேள்விகள் கேட்பதும் நிகழ்வுகளைத் தொகுப்பதுமாக இருந்தனர்.


சமயோசிதம், பொதுஅறிவு, ஆங்கில மொழிவன்மை ஆகியவற்றுடன் அவர்கள் கண்ணியமான நடத்தை உடையவர்களாக விளங்கினர். விளைவுகளைப் பற்றி கவலைப்படாது பரபரப்பைத்தூண்டும் விதமாக அவர்கள் ஒரு போதும் நடந்து கொள்ளவில்லை. எதையும் உறுதிப்படுத்த இயலாத சூழ்நிலையில் யூகங்களை விரைந்து கொண்டாலும் அவற்றை முடிவுகளாக ஆணித்தரத்துடன் வெளிப்படுத்த சற்றும் முயலவில்லை. சொல்லப்படுகிறது, எண்ணப்படுகிறது, நம்பப்படுகிறது போன்ற சொற்பிரயோகங்கள் மலிந்து காணப்பட்டன. அரசியல் வாதிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் தார்மீக சினத்தை வலிந்து வரவழைத்துக் கொண்டு குற்றம் சாட்டவில்லை. இவையெல்லாம் தமிழ் சேனல்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை. சென்னையை சுனாமித்தாக்கிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே அதைப்படம் பிடித்து காட்டிய ஒரு தமிழ் சேனலின் செய்தியாளர்கள் அவதிக்குள்ளாகியிருந்த மக்களிடம், 'அதிகாரிகள் உங்களை வந்து பார்த்தார்களா?' 'நிவாரணம் கிடைத்ததா?' என்கிற பாணியில் அரசியல் லாபத்தை குறிவைத்து கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்தனர். மாறாக, காங்கிரஸை குறை கூறிவிட்டு பயங்கரவாதிகளின் குண்டடிப்பட்டு உயிர்நீத்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சந்தர்ப்பவாத அரசியலை அவை உடனேயே கடுமையாகக் கண்டித்தன.


இரவு பகல் பாராமல் பயங்கரவாதிகளின் முற்றுகைகள் பற்றித் தொடர்ந்து ஒளிபரப்பி அச்சூழலின் பரபரப்பை லாபகரமாக்கிக் கொண்டதாக அவை மீது விமர்சனம் எழுந்தது. அது முறையானதல்ல. மும்பை பயங்கரம் உலகையே உலுக்கிய நிகழ்வு. முற்றுகையின் போது பலியானவர்கள் யார் உயிர் பிழைத்தவர்கள் யார் நரிமன் வீட்டில் இருந்த யூதப்பாதிரியின் குடும்பத்தினர் நிலைமை என்ன என்பது பற்றி எல்லோரும் பதைபதைத்துக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நேரிடையாக தொடர்புகளை அளித்துக் கொண்டிருந்தன. வருடத்திற்கு நூறு நாட்கள் கிரிக்கெட் மாட்சை ஒளிபரப்புவதில் உள்ள வியாபாரமும் அங்கு இல்லை. விளம்பரப்படங்களுக்கான இடைவெளிகள் எதுவுமில்லை.


பல்வேறுவிதமான தொடர்புகளை இந்நிகழ்ச்சிகள் சாத்தியமாக்கின. ஓட்டல் அறைகளில் அடைபட்டிருந்த மக்கள் செல்போன்கள் மூலமாக சேனல் நிகழ்ச்சியாளர்களுடன் தொடர்புகொண்டார்கள் இதன் வாயிலாக அவர்களது நிலைமையை அறிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு சேனல் ஓட்டலில் ஆயுதங்களுடன் திரிந்துக் கொண்டிருந்த பயங்கரவாதியுடனும் தொடர்பு கொண்டது. ஹோட்டல் அறைவாசிகள் தொலைக்காட்சி பெட்டிகள் வாயிலாக தங்களை காப்பாற்ற என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றான என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.இது அவர்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கும். பயங்கரவாதிகளும் தங்கள் ப்ளாக்பெரி செல்போன்கள் மூலம் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர்கள் தங்கள் மீது எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் வியூகங்களை மாற்றி அமைத்துக் கொள்ள உதவியிருந்தால் அது பிணையாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்திருக்கும் என்று ஒரு வாதம் கிளம்பியது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.


ஆனால் இது தகவல் யுகம் என்பதை மறந்துவிடக் கூடாது. தொலைக்காட்சிகள் அவற்றை ஒளிபரப்பு செய்திராத பட்சத்திலும் செல்போன்கள் வாயிலாக வெளிநடப்புகளை அவர்கள் வெளியிலுள்ள தங்கள் கூட்டாளிகள் மூலம் தெரிந்து கொண்டிருப்பார்கள். தொலைக் காட்சிகள் வாயிலாக தங்களுக்கு வெளியே எத்தகைய தாக்குதல் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதும் மக்களிடையே தங்களுடைய செயல்களுக்கு எத்தகைய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். அது அவர்களை கொஞ்சமாவது வலுவிழக்கச் செய்திருக்கும். இதற்கெல்லாம் மேலாக லஸ்கர் இ தொய்பா இயக்கம் தனக்கும் இ஢தற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்ததையும் பாகிஸ்தான் அரசியல் வாதிகள் இச்செயலைக் காட்டுமிராண்டித்தனம் என்று வர்ணித்ததையும் அவர்கள் கேட்டிருப்பார்கள். இக்கொடூரச்செயல்களைத் தூண்டிவிட்டவர்களே தங்களை அநாதரவாகத் தவிக்கவிட்டதை அறிந்து மனச்சிதைவும் அடைந்திருக்க வாய்ப்புண்டு. லஸ்கர் இ தொய்பாவினால் ஏவப்பட்ட அந்த பயங்கரவாதிகள் எத்தகைய நிபந்தனையையும் கடைசிவரை முன் வைக்கவில்லை. திஹார் சிறை முதலாக பல இடங்களிலும் இந்தியாவில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அடைபட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற நிபந்தனை கூட விதிக்கப்படவில்லை. அதாவது அந்த இயக்கத்திற்கு தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கூட இல்லை.


பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளுவதற்காகவே அனுப்பப்பட்ட தற்கொலைப்படை அது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அந்த உத்தரவிற்கு கீழ்ப்படியத் தயாராக மனிதர்கள் எளிதாக மதத்தின் பெயரால் முன்வருகிறார்கள் என்னும் போது அந்த இயக்கத்திற்கு மனிதர்கள்- தங்கள் இயக்கத்தைச் சார்ந்த மனிதர்கள் உட்பட எவரும் ஒரு பொருட்டே அல்ல என்பதும் தெளிவாகிறது. எல்லாபக்கங்களிலும் ராணுவம் சூழ்ந்துவிட்டதால் இனி ஒரு போதும் தப்பிக்க இயலாது என்ற நிலையில், தொடர்ந்து மூன்று இரவுகள் சற்றும் கண் அயராது ஓட்டல் அறைகளில் மாறி மாறி ஓடி ஒளிந்து தாக்குதல் புரிந்து கொண்டிருந்த அந்த பயங்கரவாதிகள் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்திருக்கக் கூடும். இது போன்று செயல்களுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு இவை ஒரு எச்சரிக்கை உணர்வையும் அளிக்கும். தொலைக்காட்சி ஊடகம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி கவனம் கொள்ளவில்லை என்று குறை சொல்லப்பட்டது. அங்கே வன்முறை பயங்கரம் முடிந்துவிட்ட ஒன்று என்பதனால் தொலைக்காட்சிகள் அங்கு செல்லவில்லை என்று கொண்டாலும் அங்கு உயிர்நீத்தவர்கள் பற்றியும் காயம் பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பற்றியும் செய்திகளே தராமல் போனது கண்டிக்கத்தக்கதுதான். அதைப்போலவே அந்த மூன்று நாட்களிலும் உலகத்தில் நடக்கும் எந்தசெய்தியையும் அவைகள் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. டயானா இறந்தபொழுது பிபிசி ஒன்பது நாட்களுக்கு டயானா பற்றிய செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி உலகத்தையே இருட்டடிப்பு செய்தது.


மும்பை அரசாங்கமும் சரி தேசிய பாதுகாப்பு படையினரும் சரி ஊடகங்களைப் பெரிதும் மதித்தனர். ஊடக மனிதர்கள் தங்களுடைய வேலையை செய்கிறார்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் களத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில அபாயகரமான இடங்களில் மட்டும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாஜ் ஓட்டலின் பின்புறத்தைப் படம் பிடிக்க ஊடகங்களுக்கு ஆரம்ப முதலே அனுமதி தரப்படவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் தீர்த்துக்கட்டப்பட்டார்கள் என்பது உறுதியான அடுத்த அரைமணி நேரத்திலேயே அவர்கள் கேமராக்களுடன் எவ்வித எதிர்ப்புமின்றி அங்கு படையெடுத்தனர். இது போன்ற ஒரு பயங்கரம் சென்னையில் நடை பெற்றிருந்தால் அதை நமது ஊடகங்கள் படம் பிடிக்கச் சென்றிருந்தால் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறதோ அதற்கு சொந்தமான அல்லது சாதகமான சேனல்கள் மட்டும் அங்கு இருக்கும். மற்றவர்களுடைய கேமராக்கள் சேதப்படுத்தப்படும். முதலில் போலீஸிடம் அடிவாங்குவது கலவரங்களைப் படம் பிடிக்கும் புகைப்படக்காரர்களும் மற்றும் செய்தியாளர்களும் தான் என்பது தெரிந்த ஒன்று.


மகாராஷ்டிர முதல் மந்திரியிலிருந்து பாகிஸ்தான் சர்தாரிவரை எல்லோரையும் சேனல்கள் பேட்டி எடுத்து ஒளி பரப்பின. மக்கள் மனதில் என்ன கேள்விகள் தோன்றுமோ அவற்றைத் துணிவுடன் கேட்டன. சட்டத்திற்கு முன் மட்டுமல்ல ஊடகங்கள் முன்பாகவும் எல்லோரும் சமம்.


Comments