27.02.2021 துளி - 173 அழகியசிங்கர் சுஜாதாவிடம் ஒரு நல்ல குணம் உண்டு. கவிதையைப் படித்தாலும் சரி, சிறுகதையைப் படித்தாலும் சரி ஒரு வரி எழுதி விடுவார். மனதார வாழ்த்துவார். '406 சதுர அடிகள்' என்ற என் சிறுகதைத் தொகுப்பை சுஜாதாவிடம் கொடுத்தேன். அந்த மாதம் கணையாழியில் அந்தப் புத்தகத்தைப்பற்றி எழுதியிருந்தார். ஒரு வரி கூட எழுதிவிட்டார். அழகியசிஙகரே கேட்டாரே என்று நான் என் கருத்துகளைச் சொன்னேன் என்று. என்னடா இது இப்படி எழுதிவிட்டாரே என்று தோன்றியது. சுஜாதாவிடம் கொடுத்தால் நிச்சயம் படித்துவிட்டு எழுதுவார். அதன் மூலம் விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணித்தான் கொடுத்தேன். 406 சதுர அடிகள் புத்தகத்தில் 406 சதுர அடிகள் என்ற குறுநாவலைச் சிலாகித்து எழுதவில்லை. ஆனால் லாம்பி என்ற சிறுகதையைச் சிலாகித்து எழுதினார். பிப்ரவரி 1998ல் கடைசிப் பக்கத்தில் வந்திருந்தது. அப்போது அசோகமித்திரன் சுஜாதா எழுதியதைப் படித்து விட்டு ஒரு வார்த்தை சொன்னார். ஏன் நீங்கள் அவரைப் பார்த்துக் கொடுத்தீர்கள் என்று.