Skip to main content

Posts

Showing posts with the label தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

ஜப்பான் பேனா நண்பி

முன்னர் அவள் அனுப்பியவை நீண்ட கடிதங்களுடன் காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும் செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும் புகைப்படங்களில் பனி நிறைந்த சோலைகளில் ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள் அனைத்து மடல்களிலும் ஆங்கில வகுப்பினைக் குறித்தும் குளிர்தினங்களில் நீச்சலை விரும்பாத குளத்தின் தங்க மீன்களைப் பற்றியுமே எழுதியிருந்தாள் காலம் செல்லச் செல்ல தற்பொழுது என்றாவது வருகிறது கடிதம் அதே இடம்தான் இது பெரிய கட்டிடத்தின் அடியில் வீட்டுக் குருவிப் பார்வையோடு அவளிருக்கும் இப் புகைப்படம் இப்பொழுதுதான் வந்தது எனக்கு 'நித்திரையேயில்லை இரவில் புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை என்ன செய்ய வேண்டும்?' புகைப்படத்தின் பின்னால் அவளது உடைந்த கையெழுத்து மூலம் - இஸுரு சாமர சோமவீர

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

  அஸீஸ் நேஸின்        அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது . சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார் . அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார் . அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார் .        அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன . வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை . வேலையொன்றைத் தேடிக் கொண்டு , அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாரா ?        எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார் . அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல , நகருக்கு வெளியேயும் கூட வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்தவேண்டியிருக்கும் . வாடகையைச் செலுத்தத் தவறினால் , வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வா...

வெளிச்சம்

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே இஸுரு சாமர சோமவீர

எமதுலகில் சூரியனும் இல்லை

  இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென உணர்கிறது இதயம் எப்போதும் அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில் பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால் இரு பாதங்களையும் வைத்தபடி மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின் உரிமை எமக்கில்லை பிள்ளையே ஊருமற்று நாடுமற்று லயன் தான் வாழ்க்கையே கிணற்றுத் தவளைகள் போல லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும் உரிமையில்லை எதற்கும் இது பற்றிக் கதைக்கவும் கூட - ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

ட்ரோஜனின் உரையாடலொன்று

இது என்ன விசித்திரமான தேசம் கைக் குழந்தைகள் தவிர்த்து ஆண் வாடையேதுமில்லை எல்லோருமே பெண்கள் வயதானவர்கள் நடுத்தர வயதுடையோர் யுவதிகள் எல்லோருமே பெண்கள் விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான இவ் விசித்திர நகரில் எஞ்சியுள்ள எல்லோருமே விதவைகள் எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச் சகோதரரைப் புத்திரர்களை சீருடை அணிவித்து வீரப் பெயர்கள் சூட்டி மரியாதை வேட்டுக்களின் மத்தியில் புதைத்திட்டோம் செத்துப்போனவர்களாக மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)

மொழிபெயர்ப்புக் கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து என்னிடம் கூறப்பட்டதைப்போலவே - அதிகாலையில் மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான் நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான் மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய் இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம் போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில் உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன் பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

மூலம் - ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)

சுய துரோகம் நேற்று நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம் காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம் காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம் காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம் எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம் நேற்று நாங்கள் சந்திக்காதிருந்தோம் இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம் காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம் பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை அனுபவிக்காதிருந்தோம் நேற்று நான் கண்ட அதே நிலவை நீ காணாதிருந்தாய் நான் அனுபவித்த தென்றலின் தழுவலை நீ அனுபவிக்காதிருந்தாய் நேற்று நீயென்று ஒருவர் இருக்கவில்லை நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும் இன்றும் அவ்வாறே நான் மாத்திரமே பாதம் பதிக்க இடமற்ற வெற்று வெளியொன்றில் புவியொன்றா பிரபஞ்சமொன்றா பொருளொன்றா சக்தியொன்றா எண்ணமொன்றா உணர்வொன்றா இவை ஏதுமற்ற வெற்று வெளியொன்றில் வெறுமனே தரித்திருக்கிறேன் நேற்று சூரியன் உதித்திடவில்லை நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை அதுவுமன்றி நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை எல்லாமே வெறுமையாய்...

மொழிபெயர்ப்புக் கவிதை

சந்தேகம் நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பனியூறும் இரவில் தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம் நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும் இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக் கூடும் இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில் கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும் பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும் அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும் இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக் கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும் மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில் துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும் எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும் சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும் மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

புத்தாண்டுக் கனவு

நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது மனப் பொதி ஒரேயடியாக வெடித்து அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும் நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர் *நீலப் படைகளுக்கு இடையிலும் *சிவப்புப் படைகளுக்கு இடையிலும் ஒரே நேரத்தில் நடமாடுவார் ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில் தலைப் பக்கத்திலும் பூ பக்கத்திலும் மீசை முறுக்கும் ஹிட்லர் குப்புறக் கவிழ்ந்து கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார் *நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும் **பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும் *சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும் கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார் புது வருடத்துக்கு புதிதாகக் காணும் கனவு எத்தனை மென்மையானது? பழைய கனவுக்கு உரித்தானவன் நான் எவ்வளவு முரடானவன் ? மூலம் - மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230

மொழிபெயர்ப்புக் கவிதை

ஜனாதிபதித் தேர்தல் ( வீரனைத் தேடும் போ ட்டி ) தின்றுகொண்டு தின்றுகொண்டு அவர்கள் ஒன்றாக வரும்பொழுது ஒருவாறு தப்பித்த எனக்கு கால்களை மேலே போட்டவாறு இனி பார்த்துக் கொண்டிருக்கலாம் ஒருவன் மற்றவனைத் தின்றுகொள்ளும் போது குட்டை வால் எஞ்சும் வரைக்கும் மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை இன்றொரு கவிதை எழுதவேண்டும் சொல்லும்பொழுதே தாளொன்று பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும் விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு ஒன்பது மணிக்கு குழு வகுப்பு இரவில் விடைதிருத்தும் வேலை சிவப்புப் பேனையிலிருந்து வழிவது மனைவியின் முறைப்பு செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில் எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின் கவிதைத் தலைப்புகளே இங்கு சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை கரும்பலகையில் வெண்கட்டி போல தேய்ந்துபோகும் வாழ்விடையே கவிதைகள் கைவிட்டு நழுவி எனக்கே மிதிபட்டு அலறும் சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன் இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன் கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள் எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன் மூலம் - திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில் )