அழகியசிங்கர் ந முத்துசாமியின் நாடகங்கள் வெளியீட்டு விழா போதி வனம் என்ற அமைப்பின் மூலம் நேற்று (30.05.2015) மினி ஹால், மியூசிக் அக்கடமியில் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை. கூட்டத்திற்குச் செல்வதற்கு முன், நான் சில சில்லறை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு நுழையும் போது, உட்கார இடம் கிடைக்கவில்லை. நிஜ நாடக இயக்குநர் ராமசாமி என்பவர் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக இடம் தேடி உட்கார இடம் கண்டுபிடித்து உட்கார்ந்தேன். கூத்துப் பட்டறை என்ற அமைப்பை ஆரம்பித்து, அதில் தீவிரமாக இயங்கியவர் முத்துசாமி. அவர் பல நடிகர்களை கூத்துப் பட்டறை மூலம் உருவாக்கியவர். அவர் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். முதன் முதலில் அவருடைய சுவரொட்டிகள் என்ற நாடகத்தை லலித்கலா அகாதெமியில் நடைபெறும்போது பார்த்திருக்கிறேன். அப்போது என் அலுவலகத்தில் பணிபுரிந்த ரமணன் என்ற நண்பரையும் சந்தித்திருக்கிறேன். எனக்கு இந்த நாடகம் சுத்தமாகப் புரியவில்லை. அப்போது நான் புரியவில்லை என்பதுபோல் ரமணனைப் பார்த்தேன். அவரும் அப்பட...