விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஐந்தாவது கூட்டம், மூத்தக் கவிஞர் எஸ் வைதீஸ்வரனை வைத்து இந்த மாதம் 20ஆம் தேதி சிறப்பாக நடந்தது.      எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வருபவர் எஸ் வைதீஸ்வரன்.  தொடர்ந்து இன்னும் கவிதை எழுதி வருகிறார்.  அவர் கொஞ்சம் கவிதை...கொஞ்சம் வாழ்க்கை என்ற தலைப்பில் உரை நிகழ்ந்தினார்.        கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் தன் அனுபவங்களை  அவை எப்படி கவிதைகளாக மலர்ந்தன என்பதைக் குறித்து கவிதைகளுடன் உரை நிகழ்த்தினார்.      எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதினாலும், எழுத்து என்ற பத்திரிகைப் பற்றி தெரியாமலும் கவிதையில் ஏற்பட்ட புதிய மாற்றம் பற்றியும் தெரியாமலும் கவிதை எழுதியதாக குறிப்பிட்டார்.  அவர் முதன் முதலாக எழுதிய கவிதையை அவருடைய உறவினரும், குருநாதருமான ராம நரசுவிடம் காட்ட, இதுமாதிரியான கவிதைகள் எல்லாம் திருவல்லிக்கேணியிலிருந்து எழுத்து என்ற பத்திரிகையை சி சு செல்லப்பா என்பவர் கொண்டு வருகிறார்.  அவர்தான் இதையெல்லாம் பிரசுரம் செய்வார் என்றாராம்.  அதேபோல் எழுத்து பத்திரிகையில் அனுப்பிய அந்தக் கவிதை அப்படியே பிரசுரம் ஆனதாம். ...