இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன். 70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் 'தலைகீழ் விகிதங்கள்' போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது. நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எ...