ஏழு பேர் ஆர். ராஜகோபாலன் அங்கே  மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள்.  அவர்களில் பெரியவனாகத் தெரிந்த ஒரே ஒரு பையன் மட்டுமே கால்சிராயும் சட்டையும் அணிந்திருந்தான்.  மற்றவர்களில் சிலர் மேலேயோ கீழேயோ மட்டுமை அணிந்திருந்தார்கள்.  இரு பொடியன்கள் ஒன்றுமே இல்லாது இருந்தார்கள்.  ஒரு சிறுமிகூட ஒரு கிழிந்தபாவாடை ஒன்றையே இடுப்பு வரை கட்டியிருந்தாள்.  அவள் மடியிலிருந்த குழந்தை வாயில் விரலைப் போட்டுக்கொண்டு அவள் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டிருந்தது. இவன் உட்கார்ந்த திண்ணைக்கு நான்கு வீடுகளுக்கப்பால் அவர்கள் இப்போது வந்திருந்தார்கள்.  நன்றாகவும் தெளிவாகவும் அவர்கள் செய்கை இவனுக்குத் தெரிந்தது.  கீழே கிடந்த ஒரு அறுந்த மாலையை அவர்களில் ஒருவனுக்குப் போட்டுக் கைதட்டி பெருஞ்சத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.  ஒரு பையன் நழுவி விழும் கால்சிராயை ஒரு கையில் பிடித்துக்கொண்டே கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அவர்களுக்குச் சுற்றுப்புற பிரக்ஞையே இல்லாதது போல இவனுக்குப் பட்டது.  பொழுது போகாமல் வெளியே வந்து உட்கார்ந்திருந்த இவனுக்கு அது மிகுந்த வேடிக்கைக்குரியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூட இருந்தது.  ஒரு அயலானின் ப...