நான் இந்தத் தொடரை எழுதவே மறந்துவிட்டேன். இப்போது திரும்பவும் ஆரம்பிப்பதற்குள் என்ன எழுதினேன் என்பதை நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டும். திரும்பவும் நான் எழுதியதை எடுத்துப் படிக்க வேண்டும். ஏனென்றால் சொன்னதையே திரும்பவும் சொல்லக்கூடாது. ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தின்போது பிரமிள் கலந்துகொண்டு பேசியதை எழுதியிருந்தேன். அதில் சில தகவல்களைக் கூறியிருந்தேன். அந்தத் தகவல்களில் சிலவற்றை நான் மறந்து விட்டேன். வங்கியில் பணிபுரிவது ஒரு பக்கம் இருந்துகொண்டாலும், பல படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசுவது என் பொழுதுபோக்கு. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட உபயோகமான விஷயம். இப்போதெல்லாம் அதுமாதிரி நடப்பதில்லை. முன்பு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் வருவது எளிதான விஷயம். பார்க்கலாம். பேசலாம். திரும்பவும் போய்விடலாம். பிரமிள் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றுவிடுவார். அவர் நுங்கம்பாக்கம் ஹைரோட் வழியாக நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்படி சந்தித்துக்கொள்ள முடியாவிட்டால், இவரை ஏன் சந்திக்க முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்படும...