சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை இவன் ஒப்படைத்தபோது இருள் கவிய துவங்கியிருந்தது. திருவல்லிக்கேணியின் மிகப் பிரபலமான அந்த தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தியில் எங்கோ ஒலிக்கும் பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வந்தன. பரிட்சைக்காக காத்திருக்கும் மாணவனின் படபடப்புடன் இவன் அமர்ந்திருந்தான் . சுற்றிலுமிருந்த புத்தகங்களை கண்கள் துழாவியபோதும் எதிலும் லயிக்கவில்லை மனம். மின்விசிறியின் சத்தம் பெருகி பெருகி இவனை விழுங்கிக்கொண்டிருந்தது. கவிதைத்தாள்களை வாங்கியவர் முதல் பக்கத்தை பார்த்துவிட்டு கேட்டார் “கிருஷ்ணமூர்த்தி ஏதோ கதை புஸ்தகம்னு சொன்னான்..” “இல்ல சார் கவிதைகள்.புதுக்கவிதைகள் “ இவன் பதிலிட்ட மறுகணம் அவரது தொலைபேசி அலறியது. இவனது இருத்தல் பற்றிய பிரக்ஞையின்றி அழைப்பில் மூழ்கிப்போனார் அவர். தெருவை வெறித்துக்கொண்டிருந்தவன் பூ விற்கும் பெண்ணொருத்தி கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. மழைத்துளியில் ...