Skip to main content

Posts

Showing posts from October, 2009

எதையாவது சொல்லட்டுமா....6

போன 84வது நவீன விருட்சம் இரங்கல் செய்தியாக இருந்ததாக எல்லா நண்பர்களும் சொல்லிவிட்டார்கள். இதனால் 50 ஆண்டு கவிதைக் கொண்டாட்டமாக இல்லாமலும் போய்விட்டதாக சிலர் சொன்னார்கள். உண்மையில் இரங்கல் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதழில் கவிதைகள் சற்று அதிகம்தான். 160 பக்கம் 20 ரூபாய் என்பது ஆச்சரியமான விலை. பலர் நவீன விருட்சத்தை வாங்கிப் படித்தார்கள். எப்போது வரும் க்ரோம்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் 20 பிரதிகளுக்கு மேல் போன இதழ் விற்பனை ஆகி உள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம். ஏன் என்றால் அங்கு 5 பிரதிகள் கூட விற்பனை ஆகாது. பலர் இதழைப் பாராட்டியும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் சொன்னார்கள். (சிறு பத்திரிகை என்றால் கடிதம் எழுத மாட்டார்கள்). எனக்குத் தெரியாத பல புதியவர்கள் படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி. ஒரு காலத்தில் நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது படைப்புகளுக்காக எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. வலைதளத்தில் பலர் தெரியாத புதியவர்கள் படைப்புகளை கொட்டுகிறார்கள். சிலர் எழுத்துக்களை மறந்து விடுகிறேன். எல்லோரும் தீவிர எழு...

சில கவிதைகள்

தூக்கி எறியும் பழைய செருப்புகளும் புதிதில் ஆசையாக வாங்கியதுதான் * வரும்போது இனிதே வரவேற்று போகும்போது இனிதே வழியனுப்பும் இரு பக்கங்கள் வாய்க்கிறது.. ஊர் எல்லை பெயர்ப்பலகைக்கே. * ஊருக்குப்போயிருக்கும் மகனின் மழலைச்சிரிப்பை எண்ணுந்தோறும் தனிமையில் விரக்தியாய் சிரித்துக்கொள்கிறான் அதற்கும் பெயர் சிரிப்புத்தானா? * கைகளேந்திப் பெற்றுக்கொண்டு திரும்பி நடக்கும் அந்தக் கண்களை உற்று நோக்குங்கள் திரளும் கண்ணீர்

எதையாவது சொல்லட்டுமா....5

நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து நான் கும்பகோணம் பக்கத்தில் உள்ள எந்த ஊரில் இருப்பேன் என்பது தெரியது. எனக்குப் பிடித்த ஊரான மாயவரத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இந்த கம்ப்யூட்டரெல்லாம் இங்கயே வைத்துவிட்டுப் போய்விடுவேன். சில காலம் அங்கு பழகி, வேறு கம்ப்யூட்டரில் என்னை நுழைத்து திரும்பவும் எல்லாம் கொண்டு வர வேண்டும். இந்த முறை எனக்கு அங்கு செல்லவே பிடிக்கவில்லை. ஏன் பிடிக்கவில்லை? என் அப்பாவிற்கு வயது 88 ஆகிறது. அவரை விட்டுப் போவது ஒவ்வாத விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. என் அப்பா என்னை மாதிரி ரொம்ப சாதுவான மனிதர். நல்ல மனிதர். யாருடன் சண்டைக்குப் போக மாட்டார். கொடுத்ததைச் சாப்பிடுவார். பலருக்கும் உதவி செய்யும் நோக்கம் உடையவர். 88வது வயதில் கூட வெற்றிலைப் பாக்குக் கூட போட மாட்டார். எனக்குப் பிடித்த ஊரான மாயூரம் கிடைத்தால், நான் என் அப்பாவை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைப் பார்த்துவிட்டு திங்கள் மாயூரம் போவேன். ஆனால் ஆண்டவன் சித்தம் எப்படி இருக்கும் என்று தெரி ய வில்லை . எனக்கும் 56 வயதாகிறது. என் மனைவி, அப்பாவை விட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும். மடிப்பாக்கத...

டெரகோட்டா சிற்பங்கள்

கொஞ்சம் களிமண் எடுத்துக்கொள்ளுங்கள் கெட்டியாக பிசையவேண்டும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் நீங்கள் விரும்பும் வடிவத்தின் அச்சில் வார்க்கவும் அடைக்கப்பட்ட அறையில் புத்தகங்களை எரித்து க‌ளிமண்ணைப் போட்டுவிடுங்கள் டாக்டர் பொம்மையோ கணினி வல்லுனரோ விரும்பும் சிற்பங்கள் தயாராகும். களிமண்ணின் விருப்பத்தை மட்டும் கேட்காதீர்கள்.

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம் தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து குதூகலத்துடன் என்னை வரவேற்றது அங்கே ஆனந்தமும், ஆச்சர்யங்களும் ஒவ்வொரு மணற்துகள்களிலும் பரவிக்கிடந்தன காற்றலைகளில் மழலைச் சிரிப்பொலி தேவகானமாய் தவழ்ந்து கொண்டிருந்தது மோட்ச சாம்ராஜ்யம், தனக்குத் தேவதைகளாக குட்டி குட்டி அரும்புகளை தேர்ந்தெடுத்திருக்கின்றது அங்கு ஆலயம் காணப்படவில்லை அன்பு நிறைந்திருக்கின்றது காலம் கூட கால்பதிக்கவில்லை அவ்விடத்தில் சுயம் இழந்து நானும் ஒரு குழந்தையாகி மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன் அந்தக் கணத்தில் மரக்கிளையொன்று முறிந்து விழுகையில் அதைக் கொண்டு இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது எங்கு நோக்கினும் முடமாக்கப்பட்ட பொம்மைகள் உடைந்த பந்துகள் கிழிந்த காகிதக் குப்பைகள் சேற்றுக் கறை படிந்த சுவர்கள் களங்கமில்லா அரும்புகள் எனக்கு கற்றுத் தந்தது இவைகள் வீட்டிற்குத் திரும்பியதும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த அலமாரி பொருட்களையெல்லாம் ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன், தரையில் விசிறி எறிந்தேன் ஏக்கத்தோடு ஊஞசலின் மீது அமர்ந்தேன் எனது வீட்டை அங...

மரணம் ஒரு கற்பிதம்

நேற்று ஒரு கார்டு வந்தது. ..''மேட்டூரில் எனது தந்தை சம்பந்தம் போனவாரம் சனிக்கிழமை சிவலோகப்ராப்தி அடைந்தார் '' என்று தெரிவித்து மேலும் சில விவரங்களுடனும் கருப்புக்கறை தடவி இப்படிக்கு சிவராமன் '' என்று கையெழுத்திட்டிருந்தது. கார்டில் கண்ட விஷயம் வெகு நேரம் புரியாமல் இருந்தது. யார் இந்த சம்பந்தம்... யார் இந்த சிவராமன் இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ன சொந்தம்.. இவர்கள் நண்பர்களா சொந்தக்காரர்களா.. அல்லது பங்காளிகளா ? வெகுநேரம் குழம்பிய பின் வயதான என் தாயார் மூலம் ஓரளவு அவர்களின் அடையாளங்கள் எனக்கு லேசாக தெரியவந்தது. அவர்கள் என் காலஞ்சென்ற தந்தையாரின் பங்காளிகளின் வம்சாவளிகள்.. அவர்களை நான் பிறந்ததிலிருந்தோ பிறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகோ பார்த்ததேயில்லை. என்னைப் பொறுத்த வரையில் சம்பந்தம் நாட்டின் எத்தனையோ மக்களைப் போல் எனக்கு சற்றும் தொடர்பில்லாமல் மேட்டூரில் எங்கோ வாழ...

தாமதமான மனிதாபிமானம்...

நடுச்சாமம் சற்றே நகர்ந்த அதிகாலைச் சாலையில் விமானதளம் விரைகையில் குறுக்காக கிடந்த அந்த சாலையோரச்சடலத்தின்மேல் படாமல் வண்டியை ஓட்டுனரும் பார்வையை நானும் திருப்பிய லாவகம்... ஊர் வந்திறங்கி வேலை முடித்து வந்த ஊர் பிரசித்தமெல்லாம் வாங்கிபோட்டு விமானம் ஏறிஇறங்கி வீடு திரும்புகையில் - காலையில் காரை நிறுத்தியிருக்கலாமோ?

நினைவின் கணங்கள்

பெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் ஒரு தனித்த அந்தி எல்லாக் கணங்களையும் விரட்டிக்கொண்டு போய் பசுமைப் பிராந்தியமொன்றில் மேயவிடுகிறது நீ வருகிறாய் மேய்ச்சல் நிலத்திலிருந்த கணங்களனைத்தையும் உன்னிரு உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி கீழே சிதறட்டுமென விடுகிறாய் எல்லாம் பள்ளமென ஓடி நினைவுகளுக்குள் புதைகிறது மீளவும் நினைவின் கணங்கள் மலையிறங்கக் காத்திருக்கின்றன

எதையாவது சொல்லட்டுமா....4

3வது இலக்கியக் கூட்டம் 18.10.2009 அன்று வழக்கம்போல் எல்எல்ஏ பில்டிங்கில் நடந்தது. இந்த முறை அஜயன்பாலாவும், தமிழ்மணவாளனும் கலந்துகொண்டார்கள். சினிமாவைப்பற்றிய அனுபவத்தை அஜயன்பாலா பகிர்ந்துகொண்டார். எல்லோருக்கும் போன் ஒரு முறை செய்வது. பின் இன்னொருமுறை போன் செய்வது. இதுதான் கூட்டம் நடத்தும் முறை. பத்திரிகையிலோ வேறு எங்கேவோ விளம்பரம் கிடையாது. அஜயன்பாலா சினிமாவைப் பற்றிய தன் அனுபவத்தைப் பேசினார். எனக்குப் பல ஆண்டுகளாக அஜயன்பாலாவைத் தெரியும். அவர் ஒரு பிடிவாதக்காரர். சினிமாவில் தன் தடத்தைப் பதிய வைக்கவேண்டுமென்ற வைராக்கியம் மிக்கவர். இதற்காக பல இன்னல்களை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட அவரை அதிகமாகக் கவர்வது சிறுகதை எழுதுவதுதானாம். இதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் முதல் சிறுகதை நவீன விருட்சத்தில்தான் வந்தது. ஒரு உதவி டைரக்டராக சினிமாவில் நுழைய அவர் பட்ட சிரமங்களை சுவாரசியமாகப் பேசினார். எனக்கு அதைக் கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. வேலைக்குக் கட்டாயம் போகக்கூடாதென்று முடிவெடுத்து, டிகிரி சர்டிபிக்கேட்டை போய் வாங்கக்கூட இல்லையாம்....

இதயத்தில்

என்னுடைய நிறம் கருப்புமில்லாத வெளுப்புமில்லாத சாம்பல் நிறம் என் இதயப் பகுதியில் பச்சை நிறத்தில் ஒரு முதலை இருக்கிறது வெகுநாட்களாக நானும் இந்த முதலையும் காத்துக்கிடந்தோம் இருபத்தைந்து வயது யுவதி என்னை ஸ்பரிசித்தாள்; இப்போது அவள் வீட்டில் நான்; வயது முதிர்ந்த அவரை என்னுடன் அனுப்புகிறாள் வெளியே செல்லும் எங்களுக்குக் கையசைத்து விடையளிக்கிறாள் விரைந்த வாகனத்தின் தகரத்தில் மாட்டிய என் கை குருதிப் புனலில் நினைவிழந்த பெரியவருக்குக் குழாயில் சொட்டும் இரத்தம் எல்லோரும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் தொங்கியபடி நானும் நாவில் குருதியொழுகும் முதலையும் குதிரை இதயத்துடன் வந்தவனுடன் அவளும்

முன்னாள் காதலிகள்

சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன் எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும் முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவென மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன். எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் அதுவும் ஐந்து என அவள் சொல்கையில் மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம் o

கவிதை (1)

அலுவலகம் செல்லும் வழியில் அடிபட்டு இறந்திருந்தது ஒரு செவலை நாய் விரையும் வாகனங்களின் குழப்பத்தில் சிக்கி இறக்க நேரிட்டிருக்கலாம் நாலைந்து நாட்களில் தேய்ந்து கரைந்தது இறந்த நாயின் உடல் காக்கைகள் கொத்தி தின்ன ஏதுவில்லை வாகனங்கள் நெடுகித் தொலையும் பெருவழிச்சாலையில் எப்போதும் பிறரின் மரணங்கள் ஒட்டியிருக்கிறது நமது பயணத்தடங்களில் .

பதட்டம்..

சகபயணி ஒருவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்த மூக்குக்கண்ணாடியோடு மாட்டிக்கொண்டபடி வந்த பேனாவை மீண்டும் சரியாகப் பொருத்தவில்லை - தன் சட்டைப் பாக்கெட்டில். பதட்டம் கூடிக் கொண்டிருந்தது பார்த்துக்கொண்டிருந்த என்னுள்.

எதையாவது சொல்லட்டுமா....3

காலை 7.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிவரை என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைத்தேன். தலைப்பு பொதுவான தலைப்புதான் அதில் மாற்றம் இல்லை. ஆரம்பத்தில் எனக்கு பாரமௌன்ட் பப்ளிஸிட்டியில் வேலை. நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் சம்பளம். வெள்ளிக்கிழமை மட்டும் பூஜை முடிந்தபிறகு ரூ.2.50 பைசா கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு எங்கள் வீட்டு தெருமுனையில் உள்ள டீ கடையில் சுண்டல் சாப்பிடுவேன். நான் டீ கடையில் சுண்டல் சாப்பிடுவது என் தம்பிக்குப் பிடிக்காது. பின் பள்ளிக்கரணை என்ற இடத்தில் கார்டெக்ஸ் அடுக்குபவனாக எனக்கு வேலை. மாதம் ரூ.205 சம்பளம். என்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள சிபாரிசு செய்தவர் நான் அதிகமாக தலை முடி வைத்திருந்தால் பிடிக்காது. பாக்டரி பக்கத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்போம். இந்த வேலைக்கு நான் காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டையில் பஸ் பிடிக்க வருவேன். சைதாப்பேட்டை ஸ்டேஷனலில் உள்ள ஒரு கடையில் செய்தி வாசிக்கும் சப்தம் கேட்கும். செய்திகள் வாசிப்பது....சரோஜ் நாராயணசாமி என்று ரேடியோவில் கேட்கும் பின் நான் பள்ளிக்கரணை பாக்டரி போய்விட்டுத் திரும்பும்போது சைதாப்பேட்டையில் அதே செய்திகள்...

சாட்சி

விவாகரத்து வழக்கொன்றிற்காக சாட்சி சொல்ல நீதிமன்ற வளாகத்தின் வேப்பமரத்தடியில் காத்திருந்தபோது பார்த்தது. ஜில்லென்ற தூறல் காற்றில் நனைந்த சிறகுகளை ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய் கோதிக்கொண்டிருந்தன தவிட்டு குருவிகள் இரண்டு.

வாசனை திரவியம்

வாசனையால் ஆனவனை ஒருமழைக் காலத்தில் சந்திக்க நேரிட்டது பொத்தலாக நனைந்திருக்கும் அவனது உடலெங்கும் பொங்கிய அந்த வாசனை அறுவறுப்பைக் கொடுத்தது பின்னுச்சியிலிருந்தும் முதுகெலும்பின் அடிப்பாகத்திலிருந்தும் தனக்கு வாசனை பிறப்பதாகவும் மக்கிய இதழ்களை உணவாகப் புசிப்பதாகவும் கூறினான் மெல்ல மெல்ல என்னிடமிருந்து வாசனையை அவன் உறுஞ்சுவதாக உணர்ந்தேன் சட்டென அகலுகையில் இழுத்து இழுத்து பெய்த மழையின் சகதியொட்டிய என் உடலெங்கும் வாசனை பரவிக் கொண்டிருந்தது

எதையாவது சொல்லட்டுமா....2

ஒ ரு தீபாவளிபோது நாங்கள் இருக்கும் அடுக்கத்தில் யாவரும் வருத்தத்துடன் இருந்தோம். எங்கள் தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் வசித்த வந்த ஒரு வயதான பள்ளி ஆசிரியை கொலை செய்து விட்டான் ஒரு கொலையாளி.. அதவும் நகைக்காக. அந்தப் பள்ளி ஆசிரியை தனியாக வசித்து வந்தார். எங்கள் பகுதியில் சின்ன சின்ன திருட்டுக்கள் நடக்கும். ஆனால் கொலை செய்யும் அளவிற்குப் போகுமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை எங்கள் அடுக்கத்தில் உள்ள வீடுகளின் வாசல்களைப் பூட்டிவிட்டு மாடியில் உள்ள பித்தளை வால்வுகளைத் திருடிப் போனான் ஒருவன். கீழே உள்ள ஒரு குடியிருப்பில் புகுந்து பீரோவையெல்லாம் திறந்து நகைகளை எடுக்கப் போனான். கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் அவ் வீட்டின் டிவியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அது பெரிய ரகளையாகிவிட்டது. அந்த வீட்டுக்காரர் போலீஸில் புகார் சொல்ல விரும்பவில்லை. அது எதாவது விபரீதத்திற்கு எடுத்துப் போய்விடுமோ என்று பயந்தார். அந்தக் குடியிருப்பில் இரண்டு வாசல்கள். கொல்லைப் பக்க வாசல் வழியாக பத்துப் பாத்திரங்களைத் தேய்க்கப் நடமாடும் பகுதியைப் பயன்படுத்தினார்கள். பொ...

ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்

கதவு இது ஒரு காலம் யாராலும் நிச்சயம் கொள்ள இயலவில்லை எதைப்பற்றியும் கதவை திறந்து வைப்பதா அல்லது மூடி விடுவதா என்பதையும் கூட ஒவ்வொரு முறையும் கதவைத் திறக்கும் போதும் சிறிதே தயங்குகின்றன கைகள் மீண்டும் மீண்டும் நிச்சயம் கொள்ள முடியாமலே போய்விடுகிறது எனக்கு நான் இருப்பது கதவுக்கு இந்தப் பக்கமா அல்லது அந்தப் பக்கமா? (ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

எதையாவது சொல்லட்டுமா....1

நான் எதையாவது எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன். அப்படி எழுதும்போது யார் மனதையாவது புண்படுத்தாமல் இருக்க வேண்டும். சிலசமயம் என்னை அறியாமல் யார் மனதையாவது புண் படுத்தி விடுவேன். பேசும்போது கூட சிலசமயம் அப்படி நடந்து விடுவதுண்டு. ஒரு சமயம் என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. நான் அவரைப் பார்த்து,'எப்படி அப்பா இருக்கு உடம்பு' என்று கேட்டேன். அவருக்கு செம்ம கோபம். உடம்பு எப்படியிருக்குன்னு கேட்கறானே, என்ன திமிர் இருக்குமென்று. அது போகட்டும், நான் சொல்ல வேண்டிய விஷயம் வேறு. எஸ் சண்முகத்தை நான் நடத்தும் கூட்டத்திற்கு அழைத்தேன். வருகிறேன் என்று சொன்னாலும் கூட அவரால் வர முடியாது என்பதை ஊகித்துதான் அப்படி அழைத்தேன். அப்போதுதான் அவர் சொன்னார் நாகார்ஜுனன் எழுதிய 'நளிர்' என்ற புத்தகத்திற்கு நடத்தப்போகும் கூட்டத்தில் அக்டோபர் 2 ஆம்தேதி அவர் பேசப் போவதாக..நாகார்ஜுனன் இந்தியாவில்தான் இருக்கிறார் என்றும் கூறினார். ஆனால் சென்னையில் இல்லை. கேராளாவில் இருக்கிறார் என்றார். லண்டனில் இருக்கும் நாகார்ஜுனன் இந்தியாவிட்டு திரும்பவும் லண்டனுக்குப் போவதற்குமுன் ஒரு முறையாவத...

மழைக்குப்பின்........

இந்தக் கணம்தான் உருவானதுபோல் எல்லாம் நான் பார்க்க பார்க்க முளைத்தன மரங்கள் படர்ந்து சென்றது வானம் எதிலும், எங்கும் காற்றில் பழுத்தன பறவைகள் மனிதர்களும் இப்போதுதான் தோன்றியதுபோல் எங்கெல்லாமொ.....எப்படியெல்லாமோ மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும் விதைத்துவிடு மனதில் தோன்றியதை ஆகாயத்தைக் கூட சிருஷ்டித்துக் கொள் விரும்பியவற்றை மரம், பறவை, வீடு ஏன் மனிதனையும் கூடத்தான் தமிழில் : திலீப் குமார் (ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)