அப்போது எல்லாருக்கும் மட்றாஸ்தான். சென்னை என்று சொல்லுவது நாகரிகமற்ற கர்னாடக வழக்கமாய்க் கருதப் பட்டிருக்கலாம். நான் மட்றாசுக்கு வருமுன்பே அப்பாவின் மூலம் அறிந்திருந்த முக்கியமான இடங்களில் ஒன்று மூர்மார்க்கெட். மதறாசில் எனக்கு மிகவும் பிடித்த இடமே இதுதான். இதன் இந்தோ சாராசானிகக் கட்டிட பாணியின் அழகை சொல்லி மாளாது. நுழைவாயில்களில் கருங்கள்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல்கலசங்களுமிருந்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பபட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் சுவர்களில் மேற்கூறிய கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப் பட்டிருந்தது பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் உள்ளே மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்த மூர்மார்க்கெட்டில் அன்று பெற்ற அப்பா அம்மாவைத் தவிர மற்றது எல்லாம் கிடைக்கும். பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும். பழைய புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் கிடைக்குமிடம். ஒரு கடையில் பத்து வருட...