அது ஒரு மிருகம் கொடூர மிருகம் நெற்றியில் பல் பதித்து தோலுரிக்க ஆரம்பித்து கால் நுனி வரை இழுத்துப் போடும். முழுவதுமாய் எனை சிவப்புப் பாளமாக்கி நக்கும். அந்நக்குதலின் சுகத்துக்காய் கிடந்திருக்கலாம். மிகத் தடிமனான நாக்கு அதற்கு. செங்களரியில் கன்னம் வைத்து அதன் குளிருக்கு இதம் சேர்க்கும். அவ்வப்போது எங்கேனும் ஓடிவிடும். தேடினாலும் கிடைக்காது. திடீரென முன்வந்து பல்லிளிக்கும். எனை முழுவதுமாய் உறிஞ்சக் கெஞ்சினால் குதிகாலில் கோணியூசி குத்தி உறிஞ்சி, உறிஞ்சி எனக்குள்ளேயே துப்பும். எப்போதும் தூங்காது. தலை மேட்டில் அமர்ந்து கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கும். அதனோடு இருத்தல் தரும் சுகம் அலாதியானது. பார்க்க சாது போல என்னை அண்டி நடந்து வரும். பிறர் முன் நான் அதன் முதலாளி போல் நடிப்பேன். என் போலிமை அறிந்தும் காட்டிக் கொடுக்காது ஆதரவாய் அமைதி காக்கும். எங்கள் விசுவாசத்தை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. கைமாறிக் கொண்டேயிருப்போம் எனக்கான அதுவும் அதற்கான நானும்.