Skip to main content

Posts

Showing posts from June, 2013

கண்ணாடி மீன்கள்

செ.சுஜாதா , கொஞ்சம் இமைகளை இலகுவாக்கு   பெண்ணின் முதுகுத்தண்டாய் சரிந்து இறங்கும் இந்த ஒற்றையடிப்பாதை அழகிய தாமரைத் தடாகத்திற்கு உன்னை அழைத்துச்செல்லும் கொழுத்த செந்நாரைகள் நீந்தப்பழகும் கண்ணாடி மீன்களை தின்று திளைத்தபடி இருக்கின்றன கண்டுகளிக்கலாம் முடிந்தால் உன் தூண்டிலையும் உடன் எடுத்து வா ஆளற்ற வீட்டின்முன் எத்தனைநேரம் தான் வெறித்திருப்பாய் ****

நாம் மனிதரைப் புரிந்து

ஆனந்தி வைத்யநாதன் நாம் மனிதரைப் புரிந்து கொள்ளா விட்டாலும் நம்மை மனிதர் புரிந்து கொள்ளா விட்டாலும் நாம் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளா விட்டாலும் சூழ்நிலை நம்மை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் நாம் உண்மையை உணர்ந்து கொள்ளா விட்டாலும் உண்மை நமக்குள் இறங்கி தெளிந்து கொள்ளா விட்டாலும் நாம் பிறர் அன்பைப் புரிந்து கொள்ளா விட்டாலும் பிறர் அன்பு நம்மை இழுத்துக் கொள்ளா விட்டாலும் தானாய் வந்த வம்பை நாம் அறிந்து கொள்ளா விட்டாலும் நாமாய் தேடி வம்பு புரிய மனம் கொள்ளா விட்டாலும் விழுந்து,விழுந்து செய்த செயல்கள் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் செய்த செயல்கள் பின் நன்மை தருமென தெரிந்து கொள்ளா விட்டாலும்...

அச்சங்கள்

 ராமலக்ஷ்மி தோளில் வலையுடன் காடு மேடுகளில் தேடித் திரிகிறான் கவிதையை, ஒரு வேடனைப் போல. காற்றைக் கிழித்தபடி கிளியொன்று தன் குஞ்சுகளுக்காகக் கவ்விப் பறந்தச் சோளக் கதிரிலிருந்து நிலத்தில் உதிர்ந்த சிலமணிகளை, ஆசையுடன் கொத்தப் போனச் சாம்பல்நிறப் புறா மேல் சாதுரியமாய் வலையை வீசுகிறான். தப்பிக்கும் போராட்டத்தில் தோற்றுத் தளர்ந்த பறவையின் கால்களை இடக்கையால் வசமாய்ப் பற்றி எடுத்துச் செல்கிறான். ஆனால்.. அது சுவைக்கப் படுகையில் ஏற்படவிருக்கும் சத்தத்தை எண்ணிப் பயப்படுகிறான். இருண்ட, அறியாத பாகங்களைக் கொண்ட அதன் உடற்கூறு குறித்து அச்சமுறுகிறான். தூக்கிப் பிடித்து அப்படியும் இப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். திடுமெனத் திறந்து கொண்ட அதன் சிகப்புநிறச் சிறுகண் தன்னை இகழ்ச்சியாய்ப் பார்ப்பதைத் தாங்க மாட்டாமல் விரல்களைப் பிரிக்கிறான். கண் எதிரே படபடத்துக் கைநழுவி உயர உயரப் பறக்கிறக் கவிதைப் புறாவை.. பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

எலிப்பத்தாயம்

சின்னப்பயல் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன் அந்த எலி இந்த நேரத்தில் தான் வருகிறது. வந்தவுடன் கவிழ்ந்து கிடக்கும் பீங்கான் குவளையை உள்ளுக்குள் எதேனும் இருக்கிறதா என சுற்றி ஒரு வட்டம் போட்டு பார்த்துவிட்டு அடுக்களையின் அடுத்த இடங்களுக்கும் செல்கிறது. ஒன்றை விடுவதில்லை மீந்து கிடக்கும் ரொட்டித்துண்டுகள் சிந்திய பால் , கடித்து மீதம் வைத்த கடலை மிட்டாய், தக்காளியின் மேல் செதில்கள், உரித்துப்போட்ட பூண்டுத்தொலிகள் என இருக்கட்டும் என்று விட்டுவைத்தேன் ஒன்றும் கிடைக்காத நாட்களில் பரணில் கிடக்கும் வீணான உளுத்துப்போன கட்டைகளை பற்கள் கொண்டு ராவுவது தொடர்ந்தும் கேட்கும். இன்று விடக்கூடாது என்று “வீட்டிற்குள் தின்றுவிட்டு வெளியே போய்ச்சாகும் “ என்று குறிப்பிட்டிருந்த பாஷாணம் வாங்கிவந்தேன். இன்றும் வருகிறதா என்று பார்த்துவிட்டு நாளை வைக்கலாம் என்று ஓரமாய் பாக்கெட் பிரிக்காமல் வைத்துவிட்டேன். வந்தது,இரவில் அதே நேரத்திற்கு எனக்கும் எழுப்புமணி இல்லாது விழிப்பு வந்துவிட்டது. என்றும் போல அதே குவளையை வளைய வந்து விட்டு அடுக்களையின் அனைத்து மூலைக

எதையாவது சொல்லட்டுமா............85

அழகியசிங்கர் தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2012-13 ஆம் ஆண்டில் 1 கோடியே 70 லட்சத்து 91 ஆயிரத்து 768ஆக அதிகரித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   இந்த அறிவிப்பை படித்தவுடன் எனக்கு திகைப்பு கூடி விட்டது. மேலே குறிப்பிட்ட எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 11.21 சதவீதம் அதிகமாம்.  மோட்டார் கார்கள் மட்டும் 15,22,706.  இப்படி மோட்டார் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனால் கார்களை எங்கே நிறுத்துவது.  பெரும்பாலும் எல்லோரும் கார்களை தெருவில்தான் நிறுத்துகிறார்கள்.  என் வீட்டிற்கு எதிரில் வீட்டில் வாகனங்களை நிறுத்த முடியாமல் தெருவில் எல்லோரும் நிறுத்துகிறார்கள்.  இதனால் அகலமான தெரு குறுகலாக மாறிவிட்டது.   சென்னையில் இன்று ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாகன வசதி இல்லாமல் போக முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.   சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு மோட்டார் கார் வாங்கி ஓட்ட வேண்டுமென்ற ஆசை.  ஆனால் மோட்டார் கார் வாங்கினால் எங்கே நிறுத்துவது.  நான் இருந்த போஸ்டல் காலனி அடுக்ககத்தில் சொந்தக்காரரான ஒருவருக்கும் எனக்கும் கார் வைத்துக் கொள்வதில் பெரிய த