Skip to main content

Posts

Showing posts from November, 2008

பூனைகள் பூனைகள் பூனைகள் - 5

பசுவய்யா பூனைகள் பற்றி ஒரு குறிப்பு பூனைகள் பால் குடிக்கும். திருடிக் குடிக்கும் கண்களை மூடிக்கொள்ளும் மூடிய கண்களால் சூரிய அஸ்தமனம் ஆக்கிவிடும் மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன் கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போது ம் ரகசியம் சுமந்து வளைய வரும் வெள் ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள் கை கொண்டவை பெண் பூனைகள் குட்டி போ டும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன் று அல்லது நான்கு அல்லது குட்டிகளுக்கு மி யாவ் மியாவ் கத்தச் சொல்லித் தரும். வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இ ரண்டு அடுக்குக் கண்களில் காலத்தின் குரூரம் வழியும் பூனைகள் குறுக்கே வராமலிருப்பது அவற்றுக்கும் நமக்கும் நல்லது குறுக்கே தாண்டிய பூனைகள் நெடுஞ்சாலைகளில் தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை போல் ஓட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள் குறுக்கிட்டுத் தாண்டும் சிறிய பூனைகள்தான்பெரிய பூனைகள் ஆகின்றன பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின் மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம் அவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி நாம்யோசிப்பது காணாது இருப்பினும் அவை இருக்கின்றன பிறப்பிறப்பிற்கிடையே.. (நன்றி : பசுவய்யா 107 கவிதைகள்)

தானாய் விழும் அருவி...

கண்கூசும் வண்ண ஒளி மேடையில் களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி. நெடுநாள் கழித்துப் பார்க்கும் நண்பர்களின் நலம் விசாரிப்புகள். புடவை நகை பற்றிப் பேசவென்றே புறப்பட்டு வந்திருந்த பெண்கள். நாற்காலிகளுக்கு இடைப்பட்ட நடைபாதைப் பாய்விரிப்பில் உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டு உள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து மகன்மேல் ஒரு கண்ணோடு மடிமேல் தாளமிட்ட மங்கை. குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி அரங்கெங்கும் நடந்தபடி இருந்த அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்? ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில் கைதட்டல் சத்தத்தை யாருக்கோ கேட்கச் செய்துகொண்டிருந்தவனின் இசையார்வத்தை எதில் சேர்க்க? எப்பொழுதும் நிகழக்கூடும் இவளின் அழைப்பை எண்ணி கைப்பேசியைப் பார்த்தபடி இவனும். தன்னளவில் எதற்கும் பொதுவாய் தானாய் விழும் அருவியென ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்.

இரு கவிதைகள்

எல்லாம் காற்றுவாழ்வனவே... காற்றின் நுண் ஆய்வாளனெனக் கைகுலுக்கியவன் தோள் மாட்டி பை முழுவதும் எண்ணிறாத பறவைகளின் வண்ணவண்ண இறக்கைகள் பறந்தன காற்றில் ஒற்றையில் அலைந்து இறக்கை எழுதும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை என்றவன் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் என்று கண்டறிந்ததாய்ச் சொன்னவை: தாமரைக்கொடியின் காற்றைச் சுவாசிக்கும் மீன்கள் அதிகம் ருசிக்கும் வேப்ப மரக்காற்றைச் சுவாசித்து உறங்கினால் தீரா நோயனைத்தும் திரும்பிப் பாராமல் நடை கட்டும் ஆலமரக் காற்றைச் சுவாசித்து உறங்கினால் ஆயுள் கொடுக்கும் செல்கள் வீர்யம் கொள்ளும் அரச மரத்துக் காற்றால் மூளையின் அறைகளில் புது ஊட்டம் பிறக்கும் அழகிய பெண் சுவாசித்தைச் சுவாசித்த மரம் அதீதமாய்ப் பூத்துக் குலுங்கும் மரங்களில் முட்கள் முளைப்பதற்கு முரடர்கள் சுவாசக் காற்றே காரணம் பூச்செடி, கொடிகளில் முட்கள் முளைப்பதற்கு முரட்டுப்பெண்ணின் சுவாசம் காரணம் சற்று நிறுத்தியவன் தொடர்ந்து சொன்னவை: பறத்தல் எனும் வினை தேர்ந்த கண்கட்டு வித்தை காற்றின் ஆழத்தில் எல்லாமே மூழ்கிக் கிடக்கின்றன எல்லாம் காற்றுவாழ்வனவே... துடுப்புகள் பிணைந்த பறவைகள் மிதந்தே செல்கின்றன துடுப்படிக்கா

ஐந்தாவது மாடிக் கட்டிடமும் தீ விபத்தும்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1978 ஆம் ஆண்டு, வேலை சேர்வதற்கான உத்தரவை கையில் வைத்துக்கொண்டு அந்தக் கட்டிடத்திற்குள் முதன் முதலாக நுழைகிறேன். நான் செல்ல வேண்டிய இடம் ஐந்தாவது மாடி. அந்த மாடியில் நுழையும்போது எனக்குள் ஏற்பட்ட சாதாரண படப்படப்பை எளிதில் விளக்க முடியாது. முதன் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் போய்ச் சேரப் போகிறேன். 1975 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டு நிலையில்லாத பல இடங்களில் இருந்து, பின் ஒரு நிரந்தரமான உத்தியோகமாக 1978ஆம் ஆண்டு வங்கி அளித்ததை என்னால் மறக்க முடியாது. 70-80க்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் வங்கியில் பணியில் சேர்க்கப்படுவார்கள். வங்கியில் பணியில் சேரும் ஒருவருக்கு எளிதாக திருமணம் ஆக வாய்ப்பு அதிகம். ஐந்தாவது மாடியில் உள்ள பணியாளர் துறையில் நான் நுழையும்போது படபடவென்று தட்டச்சு ஒலி என் காதைப் பிளக்கிறது. ஒவ்வொரு டேபிளிலும் ஒரு தட்டச்சுப் பொறியுடன் ஒவ்வொருவர் அமர்ந்துகொண்டு தட்டச்சுச் செய்து கொண்டிருக்கிறார்கள். இளமையின் குதூகூலம் எல்லார் முகத்திலும் தெரிகிறது. அப்போதுதான் நான் வித்தியாசமான புத்தகங்கள

எப்படி இருந்திருக்கக்கூடும்?...

ஜன்னலோரப் புறாக்களின் சிறகடிப்போடு புலர்ந்ததந்த காலைப் பொழுது. முதல் அழைப்பிலேயே கண்விழித்து முகம் பார்த்து சிரித்த மகன். பையனை ஏற்றிவிட்டுவந்த பள்ளிக்கூடப் பேருந்தில் சிரித்த முகங்களோடு சீருடைச் செல்லங்கள். எப்போதும் போலன்றி இவளும் இன்முகம் கொண்டொரு சிரிப்புடன். வழியெங்கும் நெரிசலின்றி வரவேற்ற வழக்கமான சாலை. அவனது அலுவலக அடுக்குமாடி கட்டிடத்தின் அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த இவன்வயது இளைஞன் ஒருவனின் மாரடைப்பு பற்றிய செய்தி வந்து சேர்ந்ததும் அந்த ஒரு காலைப் பொழுதில்தான். எப்படி இருந்திருக்கக்கூடும் அவனின் காலைப்பொழுது?

பூனைகள் பூனைகள் பூனைகள்

பூனை 4 ஞானக்கூத்தன் தடவிப் பார்த்து சார்லஸ் போதலேர் அடடா என்றாராம் பூனையை. பிரான்ஸ் நாட்டுப் பூனைகள் இருக்கும் போலும் அப்படி என்பதற்குள் எங்கும் பூனைகள் அப்படித் தானென்று சொல்லக் கூடும் பூனை ரட்சகர்கள். நமது நாட்டுப் பூனைகள் குறித்து போதலேருக்கோ ஹெயின்ரிஷ் ஹெயினுக்கோ தெரிந்திருக்க நியாயமில்லை நமது பூனைகள் தவம் செய்யும் என்றோ முனிவன் இல்லாத நேரத்தில் இருளில் குடிசைக்குள் காமுக வேந்தன் நுழையத் தங்கள் வடிவை இரவில் தருமென்றோ. முன்னொரு காலத்துப் பகைவன் சந்ததியை என்னிடம் தேடுவது போல் பார்க்கும் பூனைகள் குறித்து லட்சம் கொடுத்தாலும் புராணம் எழுதப் பிடிக்காத கவிஞன் நான். வெள்ளிக் கிரணங்களால் புனைந்த தன் உடம்பை இரும்புக் கம்பிகளின் ஊடே நூல்போல் நுழைந்து அடுக்களை போகும் அவற்றை நான் வெறுக்கிறேன். அப்படியானல் எதற்குப் பூனையைப் பற்றி இப்போது எழுதுவானேன்? சூரிய உதயம் ஆவதற்கு முன் பசும்பால் வாங்கத் தெருவில் இறங்கினேன் எனது வீட்டை விட்டுக் குதித்துத் தெருவில் ஓடிய பூனையைக் குறவன் இமைப் பொழுதுக்குள் கோணியில் பிடித்தான் இரண்டு ரூபாய் தருகிறேன் பூனையை விடுதலை செய்யென்று கெஞ்சிக் கேட்டேன் தமிழ் தெரியாதவன்ப

சில குறிப்புகள் : 10

நவீன விருட்சம் 81-82 வது இதழ் அச்சாகிவிட்டது. அக்டோபர் மாதத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்ற என் பரபரப்பு இதழ் உருவாக்கத்தில் சில குறைபாடுகளை ஏற்படுத்தாமலில்லை. navinavirutcham.blogspot மூலம் பல புதியவர்கள் நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளார்கள். வேண்டியமட்டும் படைப்புகளும் கிடைத்துள்ளன. எல்லாவற்றையும் நவீன விருட்சம் இதழில் கொண்டு வந்துள்ளேன். கவிஞர் எஸ் வைதீஸ்வரன் முகப்போவியம் பிரமாதமாக வந்துள்ளது. இனி நவீன விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும். முழுவதும் அனுப்ப எனக்கு குறைந்தபட்சம் 15 நாட்களாவது பிடிக்கும். கனத்த ஜோல்னா பையை தோளில் சுமந்துகொண்டு அலுவலக சாப்பிடும் நேரத்தில் வண்டியில் க்ரோம்பேட்டை தபால் அலுவலகத்தில் எல்லாவற்றையும் சேர்த்துவிடுவேன். முன்பெல்லாம் சந்தா அனுப்பச் சொல்லி எல்லோருக்கும் கார்டு எழுதுவது வழக்கம். இப்போது அதெல்லாம் முடிவதில்லை. சந்தா அனுப்பிவிடுவார்கள் என்று எண்ணி பத்திரிகை அனுப்பிக்கொண்டிருக்கிறேன். இந்த இதழில் புதியவர்களாக நிலாரசிகன், அனுஜன்யா, மைக்கேல், இராகவன், ச முத்துவேல், சைதை செல்வராஜ், செல்வராஜன் ஜெகதீசன் முதலியவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களு

ஜே கிருஷ்ணமூர்த்தி

அது எனது உயர்நிலைப் பள்ளியின் இறுதி நாளொன்றில் நடந்தது. இலங்கையின் திருக்கோண மலையிலிருந்த ராமக்கிருஷ்ண மிஷன் பாடசாலையில் படிப்புக்குப் புறம்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு ஆசிரியரிடமிருந்து நான், ஜே.கிருஷ்ணமூர்த்தயின் The First and Last Freedom என்ற நூலை இரவல் வாங்கினேன். அதுவரை நான் படித்த அதற்குப் பின்பும் நான் படிக்கவிருந்த ஏராளமான நூலாசிரியாகளிலுள் இந்த நூலாசிரியரல்லாத ஒருவரது வாசகங்கள் எவ்வளவுக்கு என்னைச் சல்லடையிடப் போகின்றன என்று நான் அப்போது சந்தேகிக்கவில்லை. நூலை எனக்குத் தந்தவர் ஒரு மார்க்ஸீயவாதியெனினும் ராமக்கிருஷ்ண மிஷனின் அடிப்படைகளில் மதிப்புக் கொண்டவர். ஏற்கனவே அவரிடம் மார்க்ஸீயம், கம்யூனிஸம் பற்றி சில பல உபதேசங்களைப் பெற்றிருக்கிறேன். எனது சில பல நண்பர்கள் அவர் மூலம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவட்டார்கள். நான் அவரிடம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவிட்டார்கள். நான் அவரிடம் கேட்டேன். 'மனிதனை உந்துகிற உண்மையான வேட்கையைப் பற்றி மார்க்ஸ் என்ன சொல்கிறார்?' மாக்ஸியத்தை நான் பின்பு கற்றறிந்ததுக்கும் அவர் சொன்ன பதிலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. ஆனால் இலங்கையிலும

மொழி பெயர்ப்புக் கவிதை

சீன மூலம் : யான்யி நான் விழித்துக்கொண்ட போது மூன்று பகல் மூன்று இரவு கடும் போருக்குப் பின் ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்தேன் நான் விழித்துக்கொண்டபோது சட்டென்று ஒரு உருவம் கடந்ததைப் பார்த்தேன் ஒரு பெண் என்பது வெளிப்படை அவள் பின்னலின் முடிவில் சிகப்புக் கம்பளி ரிப்பன் என் தங்கையின் அப்பட்டமான வடிவமாகத் தெரிந்தாள் எவ்வளவு மோசம் நான் அவளைச் சரியாகப் பார்க்காதது நிமிர்ந்து உட்கார்ந்து தூசியைத் தட்டினேன் எங்கே போயிற்று என் சட்டையில் இருந்த புல்லட்டின் துளை? ஒரு ஜதை புதிய கருப்புக் காலணிகள் என் காலடியில் ஒரு பளிச்சிடும் வேறுபாடு என் பழைய வைக்கோல் செருப்புடன் பாருங்கள் அற்புதமான தையல் வேலையை காலணிகள் எனக்கும் பொருத்தமாய், லகுவாக,செளகரியமாக நன்றி உணர்வுடன், அவற்றை உற்றுப் பார்த்தேன், அந்தப் பெண்ணின் உருவம் என் கண்முன் பளிச்சிட்டது (நவீன விருட்சம் ஏப்ரல் - ஜூன் 1991 - ம் இதழில் வெளிவந்த கவிதை)

பூனைகள் பூனைகள் பூனைகள் - 1

3. கல்யாணராமன் பூனையை முன் வைத்துக் காதலியுடன் ஒரு சம்பாஷணை அன்புற்குரியவளே! பூனையை விட்டு விடு நீ விரித்த வலையில் மனம் தப்பி தலைக்குப்புற மீள முடியாமல் விழுந்துபோன உன்னடிமை சொல்கிறேன் தயவுசெய்து பூனையை விட்டுவிடு நீ வைத்து விளையாட வாலிபப் பொம்மைகள் ஆயிரம் இருக்கின்றன நீ வீசும் புன்னகைக் காற்றில் வானுயரம் குளிர்ந்த பறக்க வயசாளிப் பலூன்கள் கோடிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன வழக்கம்போல் அவர்களோடு விளையாடிக்கொள் நீ பாவம் இந்தப் பூனையை விட்டுவிடு பூனையோடு விளையாட உனக்குத் தெரியாது சந்தோஷமானால் ஆரத் தழுவிக் கொஞ்சுவாய் கோபம் கொண்டாலோ சோறே போடாமல் வதைப்பாய் அன்பிற்குரியவளே! பூனையோடு பழகும் திறனோ சிரித்துச் சிரித்து விளையாடும் கலையோ சுட்டுப் போட்டாலும் வராது உனக்கு தயவுசெய்து பூனையை விட்டு விடு இருகரங்களாலும் அள்ளியெடுத்து மூச்சுக் காற்று முட்ட முட்ட மார்போடு அணைத்துக்கொள்ளத் துடிக்கும் பயங்கரமான உனது அன்பை ஒரு சிறு சீறலுமற்று அப்படியே தாங்கிக்கொள்ள உணர்ச்சி கெட்ட வெறும் ஜடமல்ல அது திறந்து கிடக்கும் சமையலறையில் நீ உறை குத்தி வைத்த பாலை குடித்துத் தீர்க்கும் பரபரப்பில் தவறுதலாய் உன் வீட்டுக்