தாய்மை அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக் கிடக்கவாவது முடிகிறதா என்ன? விடிகாலையில்தான் எத்தனை வேலைகள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும். வீட்டை, முற்றத்தைக் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொள்ளவேண்டும். மூத்தவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயார் செய்யவேண்டும். அதிலும் அந்தப் பிள்ளை சோம்பேறிப் பிள்ளை. மெதுவாக எழுப்பி எழுப்பிப் பார்த்தும் எழும்பாவிட்டால் கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் எழுப்பவேண்டியிருக்கும். விடுமுறை நாளென்றால் ஜோதி அவளைக் கொஞ்சம் அவள் பாட்டிலே தூங்கவிடுவாள். அவள் எழும்பித்தான் என்ன செய்ய? வளர்ந்த பிறகு இப்படித் தூங்கமுடியுமா? அதற்கு இளையவள்.. ஜோதி எழும்பும்போதே எழும்பிவிடுவாள். இப்பொழுதுதான் நடக்கத் தொடங்கியிருக்கும் வயது. அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யமுடியுமா? பாலைக் கொடுத்து, கொஞ்சம் இறக்கிவிட்டால் அது ஓடிப் போய் எதையாவது இழுக்கத் தொடங்கும். ஒரு முறை இப்படித்தான...