ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பஞ்சாயத்து பள்ளிக்கூடத்திற்கு , நடந்து போனால் ஒரு குட்டிக்கதை முடிவதற்குள் போய்விடலாம். அதற்குமேல் படிக்கத்தான் வெகுதொலைவு நடக்க வேண்டியிருந்தது அந்த ஏரிக்கரை வழியாக. ஏப்ரல் , மே மாதம் தவிர எல்லா மாதங்களிலும் வாய்க்காலில் தண்ணீர் போய்க்கொண்டே இருப்பதால் மிதிவண்டி வாங்கிக் கொடுத்தனுப்ப பயந்தாள் அம்மா. நாளுக்கு ஒரு கதை என்றிருந்த வழக்கம் இப்போதெல்லாம் மூன்று நான்கு என்றானது. வீட்டில் கதையேதும் கேட்டுவராத சிலர் ஏற்கனவே சொல்லிய கதையிலிருந்து பெயரை மாற்றி புதுவிதமாக ஏதாவது சொல்வார்கள். தேர்வில் முதலிடத்தைப் பிடிக்க எனக்கும் பண்ணையார் பொண்ணுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவும். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருந்தது. பாட்டும் விளையாட்டுமாக தினமும் பள்ளிக்கு சென்று வருகிற ஏரிப்பாதையின் ஓரங்களிலிருக்கும் , ஒவ்வொரு புதர் மறைவுகளுக்கும் ஒற்றையடிப்பாதையொன்று செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கும். கொடிகள் படர்ந்து ஒருசில புதர்கள் மட்டும் பழங்கால குகையைப்போல பார்க்கவே பயமாக இருக்கும். அந்த இடங்களையெல்லாம் நாங்கள் எப்போதும் ஓடியேதான் கடப்போம்...