நீங்கள் நாள் கணக்கில் மரங்களுக்கு இடையிலும் கற்களுக்கு இடையிலும் நடக்கிறீர்கள். அபூர்வமாகக் கண் ஒரு பொருளின் மீது பளீரிடுகிறது, அதாவது அப்பொருள் வேறொரு பொருளின் குறி என்று அடையாளம் கண்டுகொண்ட பிறகே மணலில் உள்ள ஒரு சுவடு ஒரு புலி செல்லும் வழியைச் சுட்டுகிறது. சதுப்பு நிலம் தண்ணீரின் நாளத்தை; செம்பருத்திப்பூ குளிர்காலத்தின் முடிவை. மற்றெல்லாம் அமைதியும் ஒன்றுக்கொன்று மாற்றத்தக்கதும், மரங்களும் கற்களும் அவை என்னவாக இருக்கின்றனவே அவையே. இறுதியாகப் பயணம் தமாரா நகருக்கு இட்டுச் செல்கிறது. சுவர்களில் துருத்திக் கொண்டிருக்கும் பெயர் பலகைகள் நெருக்கமாக உள்ள தெருக்களின் வழியாக நீங்கள் ஊடுருவுகிறீர்கள். கண்கள் பொருள்களைப் பார்ப்பதில்லை. ஆனால் வேறு பொருள்களைக் குறிக்கும் பொருள்களின் படிமங்களைப் பார்க்கின்றன. குறடு பல் பிடுங்குபவரின் வீட்டைச் சுட்டுகிறது; பீப்பாய் மது பானக்கடையை, ஈட்டிகள் பாசறையை; தராசுகள் மளிகைக்கடையை. சிலைகளும் கேடயங்களும் சிங்கங்களை, டால்ஃபின்களை, கோபுரங்களை, நட்சத்திரங்களைத் தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகின்றன. ஏதாவதொன்றான ஒரு குறி : யாருக்குத் தெரியும் என்ன என்று?...