நீண்ட நாள் கழித்து இந்தஅறைக்குள் நுழைகிறேன். மொட்டைமாடியில் காற்றோட்டமான ஜன்னல்கள் கொண்ட மேற்கூரை மேய்ந்த சின்ன அறைதான்.ஆனாலும் என்னுடைய சாம்ராஜ்யம் இங்கேதான் நடந்திருக்கிறது. சுற்றிலும் புத்தக அலமாரிகள் நடுவில் ஒரு மரமேஜை அருகில் நாற்காலி . சின்னதாய் டேபிள்ஃபான் ஒன்று . நண்பர்கள் வந்தால் அவர்களை உட்கார வைக்க நீளமாய் ஒரு மரபெஞ்ச். குடிநீருக்காய் ஒரு பானை அவ்வளவுதான் சாம்ராஜ்ய சொத்துக்கள்! பதினைந்து வருஷம் முன்பு இந்த அறையைக்கட்டி முடிக்கவே பத்தாயிரம் ரூபாய்க்குமேல் செலவானது. சுமதிகூட,”என்னங்க இவ்ளோ பணம் ஒரு சின்ன ரூமுக்கா செலவழிக்கணும் அதுல ரம்யாக்கு தங்கத்துல நகையாவது வாங்கலாம் அவளுக்கும் வயசு ஏழு ஆகபோகுதில்ல?” என்றாள் கவலையுடன். “கீழ்வீட்ல எனக்குன்னு தனி ருமே இல்லை ஒரே சத்தம் வேற. இங்கே தனியா ஏகாந்தமா உக்காந்திட்டு கற்பனை செய்து கதைகதையா எழுதி லட்சலட்சமா சம்பாதிச்சிடுவேன் கவலைப்படாதே”என்று சமாதானம் சொன்னேன். கலைஞனுக்கு லட்சங்களில் லட்சியம வந்துவிட்டால் கலைமகளுக்குப்பிடிக்காதுபோலும்.... பணத்திற்காகவே எழுத ஆரம்பித்தேன். நாலைந்துவருஷங்களிலேயே என் புகழ...