இ டுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது? துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். வீடு செல்லும் வழியில்தான் "தனலட்சுமி டாக்கீஸ்" இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார். தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான...