பிசாசுகள் கவிதைக்குள் ஒளிந்து கொள்வதில்லை கவிதையின் சூடு தாங்காமல் பிசாசுகள் செத்துவிடக்கூடும் பிசாசுகள் மனித உடலில் எவ்வாறு குடியேறுகின்றன எப்படி வாழ்கின்றனென்பதை கவிதைகள் அறியும். பிசாசுகள் விரட்டிய கவிதைகள் மண்ணில் நெடுங்காலம் வாழ்ந்திருக்கின்றன பிசாசுகளின் புகைபடங்கள் யாரிடமுமில்லை. அவை எங்கிருந்து பயிராகின்றன. எப்படி இரவுகளை கடக்கின்றனென்பதை கண்டுபிடிக்கின்றன கவிதைகள். பெண் உதட்டின் வாசனை பிடித்து நுழையும் பிசாசுகளை கவிதைகள் காட்சிப் படுத்துகின்றன இந்தக் கவிதைக்குள் கொதிக்கும் நீரை செலுத்துகிறேன். ஒளிந்திருக்கும் பிசாசுகள் அலறியடித்துச் செல்லக்கூடுமென்று பிசாசுகளுக்கு செல்லமாக நீங்கள் பெயர் வைத்திருக்கலாம் அடிமைத்தனமென்றோ அவமானமென்றோ அச்சமென்றோ ஏதாவது ஒன்று. பிசாசுகளை அடையாளம் காணுங்கள் அதைத் துரத்தும் வழிகளை சொல்லித் தரக்கூடும் ஏதோவொரு கவிதை.