Skip to main content

Posts

Showing posts from December, 2013

இடையனின் கால்நடை

எம் . ரிஷான் ஷெரீப் காலை வெயில் அலைமோதும் பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில் மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும் தனித்திருந்த கொட்டகையின் கூரைகள் பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும் வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம் உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது எங்கும் தப்பிப் போய்விடாது எனினும் வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில் எங்கெங்கோ அலைந்து தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய் உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம் தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும் அன்பென எண்ணிச் சுவைக்கும் அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் - பிறகும் அகலாதிருக்க இவ் வாழ்வும் உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும் தசை , தோல் , எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன் கத்தியைக் கூர் தீட்டும் நாளில் ...

உயிர்ப்பித்தல்..

அமைதிச்சாரல் விளைநிலங்களிலும் வளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில் மொட்டைத்த(ரை)லையில் கொஞ்சம் பூச்செடிகளுடன் குறுமரங்களையும் சூடிக்கொண்டிருக்கும் கட்டிடங்களைக் கண்ணுறும்போது மட்டும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது எப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட மாந்தோப்பும் மல்லிகைத்தோட்டமும். சிந்திச்சிதறிக்கிடக்கும் சூரியச்சில்லறைகளில் புரண்டெழுந்த அணிற்பிள்ளைகளுடன் பகிர்ந்துண்ட தித்திப்பு இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது அடிநாக்கில். “செவ்வகப்பெட்டியினுள் அடைபட்டிருப்பது என் தோப்புக்கிளியிலொன்றாக இருக்குமோ” என்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று தோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும். விசும்பியழும் மனதைச் சமாதானப்படுத்த தொட்டி ரோஜாவும், க்ரோட்டன்ஸுமாய் வீராவேசத்துடன் உயிர்த்தெழுகிறான் மனதுள் உறங்கும் விவசாயி.

"மார்க் ஸுக்கர்பெர்க் நகர்"

பா சிவபாதசுந்தரம் பிரகாஷை ஒரு குறும்பட பயிற்சி பட்டறையில்தான் அவன் சந்தித்தான். சிறுசேரியில் உள்ள ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொல்லியிருந்தான். இப்ப அவனை பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கிறான். அம்பத்தூரிலிருந்து நேர் பஸ் கிடையாது. மத்திய கைலாஷ் வந்து வேறு பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். ராஜீவ் காந்தி சாலை இன்றைக்கு காலைலதான் பேக் பிரித்து எடுக்கப்பட்டது போல் ஒரு மெருகோடு இருந்தது. பார்க்கிற பக்கமெல்லாம், ஜீன்ஸ், லெக்கின் மற்றும் கவ்வி பிடித்திருக்கும் மேலாடைகளுடன் இளம்பெண்கள். அனேகமாக அனைவரது கழுத்திலும் கலர் கலரான பட்டைகளுடன் அடையாள அட்டை. தாலி மாதிரி. இருபது வருடங்களுக்கு முன் தரமணியில் வேலை செய்கையில் இதே ரோடில் தினமும் பயணித்திருக்கிறான். அப்போதெல்லாம் கசங்கிய காக்கி உடைகளுடன் பாலிடெக்னிக் மாணவர்களும், மற்ற தொழிற்சாலை ஆட்களும், மிக சாதாரண அல்லது பழைய உடைகளுடன் வி.ஹெச்.ஸ் நோயாளிகளும், அவர்களின் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்களும் நடமாடுவதை பார்த்திருக்கிறான். ஹும், எல்லாம் மாறிப்போச்சு. சாலையின்  அழகை சமதளமாக இடப்பட்ட தார் மட்டுமல்ல, அதி...

பாலிதீனில் பணப்பை

 மாயன் சத்யா பாலிதீன் பையில் பத்திரப் படுத்தப்பட்டது கொஞ்சம் துவண்டு போன அந்த பணப்பை (மணிபர்ஸ்) பின்பையில் வைத்தால் காணாமல் போகலாம் என்றெண்ணி நெஞ்சருகே அணைத்து வைக்கப்பட்டது பணப்பை வருடத்தின் ஓரிரு மாதத்தில் ஒரு சில நாளில் பெய்யும் மழைக்காக வருடமெல்லாம் பாலிதீனில் பதுங்குகிறதா பணப்பை இல்லை.. இல்லவே இல்லை வருடமெல்லாம் பொய்க்காமல் பெய்யும் மழை ஒன்றிடமிருந்து பாதுகாக்கப் படுகிறது பணப்பை மண் சூடு தீர்க்கும் வான் மழை பொய்க்கலாம் உழைப்பாளியின் உடல் சூடு நீக்கி பெருகும் மழை வற்றாமல் வருடமெல்லாம் வழிந்தோடும் வியர்வை உழைக்காத காசு உடம்பில் ஒட்டாது இங்கே உழைத்த காசு ஒட்டிவிடக்கூடாது என்பதற்க்காக வியர்வையிடமிருந்து ஒழித்து வைக்கப் படுகிறது பாலிதீனில் பணப்பை

பஞ்சு மனசுகள் (சிறுகதை) -

செல்வராஜ் ஜெகதீசன் கை யில் இருந்த பீடியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு , தூர எறிந்தான் பாலு. பஞ்சாலையில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டது. நைட் ஷிப்டுக்கான அழைப்பொலி. முன்பென்றால் , இந்நேரம் கிளம்பி வேக வேகமாக வேலைக்கு போயிருப்பான். இப்போது எந்த வித அவசரமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தான். வேலை மட்டும் போயிருக்காவிட்டால் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இவைகள்   எல்லாம்   இல்லாமல் போய் இருக்கும். வேலையிலேயே இருந்திருந்தால் கலாவும் கூடவே இருந்திருப்பாள். அப்படியும் சொல்ல முடியாது. வேலை போனதை எப்படி கலா போனதோடு ஒப்பிட முடியும் ? இத்தனை வருடங்கள் கழித்து , எட்டு ஆறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளை விட்டு ஒரு அம்மாவால் இன்னொருவனோடு எப்படிப் போக முடிந்தது ? “ வா சார் வா அஞ்சு வச்சா பத்து , பத்து வச்சா இருபது ” என்ற குரல் வந்த திசை நோக்கி அவன் கால்கள் திரும்பின. ஸ்டாப் குவாட்டர்ஸ் ஒட்டி இருந்த மதிற்சுவர் ஓரம் மாணிக்கம் தன் கடையை விரித்து எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் முன் பெரிய அட்டைத்தாள் ஒன்று விரிக்கப்பட்டு , ஆறு சினிமா ந...

எதையாவது சொல்லட்டுமா.....91

அழகியசிங்கர் ரெட்ஹில்ஸ் பக்கத்தில் உள்ள பம்மாத்துக்குளம் என்ற இடத்தைப் பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அங்குதான் என் மாமனார் (நான் அவரைப் பார்த்ததில்லை) அறுபதுகளில் இரண்டு கிரவுண்டு வீட்டு மனை வாங்கிப் போட்டிருக்கிறார்.  அதைப் பற்றி அவருடைய வாரிசுகள் யாரும் கவலைப்படவில்லை.  என் மாமியார் உயிரோடு இருந்தவரை அந்த வீட்டு மனை நல்ல விலைக்குப் போகும் என்ற கற்பனையோடு இருந்தார்.  பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அந்த இடத்தைப் பார்க்க பெரிய முயற்சி செய்து பார்க்கவும் செய்தேன். அப்போது அந்த இடத்தில் மண் வாரிக் கொண்டிருந்தார்கள்.  பெரிய பள்ளமாக இருந்ததால் அங்கு வீட்டு மனைகள் உண்டா என்ற சந்தேகம் வந்து விட்டது.  அதன் பின் நான் பார்க்கும் முயற்சியை கைவிட்டுவிட்டேன்.  ஆனால் சமீப காலமாக ஒரு புரோக்கர் என் மாமனார் இடத்தை 2 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொல்லி பலமுறை போன் தொல்லை செய்து கொண்டிருந்தான். அந்த இடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நானும் அந்த இடம் பத்து லட்சம் போகும் என்று அடித்துப் பேசினேன்.  அவன் விடவில்லை.  தொடர்ந்து போன் செய்து தொந்தரவு ச...

எதற்காகவும் எதையும்...

வைரமுத்து எதற்காகவும் எதையும் விட்டுத் தராத ஒரு கேவலமான சமூகமாக இருந்த நாம் இப்போது எதற்காகவும் எதையும் விட்டுத்தரத் தயாராயிருக்கும் சமுதாயமாகிவிட்டோம் எதற்காகவும் எதையும்...

மயானத்திலிருந்து

பா. சிவபாதசுந்தரம் கழற்றி எறிந்த மாலையின் பூக்களை மேயும் ஆடுகள் அரிசிதனை கலைத்து காசை பொறுக்கும் சிறுவர்கள் காலையில் போன கதிரவன் வருகின்றான் மாலை மரியாதையுடன் மந்திரியும் வர நாலு நாள் கழித்து கருமாதி முடிவாச்சு நான் செத்து இன்றோடு நாட்கள் பத்தாச்சு

கதையல்ல....... நிஜம்

பா சிவபாதசுந்தரம் நேற்று "தீராநதி" அழகியசிங்கரோட கவிதையை படித்தேன். இன்று காலையில் அழகியசிங்கரின் நவீனவிருட்சத்தை பற்றி விநாயக முருகனின் பதிவையும் பார்த்தேன். அழகியசிங்கர் எங்கள் கல்லூரியிலுள்ள இந்தியன் வங்கியின் கிளையில்தான் மேலாளராக உள்ளார். இன்று மாலை கல்லூரி முடிந்தவுடன் அழகியசிங்கரை பார்க்கலாமேன்னு கிளம்பினேன். பாங்க் போகும் வழில கிரவுண்ட்ல பொம்பளபிள்ளைங்க கொ-கொ வும், பசங்க கிரிக்கெட்டும் ஆடிட்டிருந்தாங்க. கிரிக்கெட் ஆடுறத பார்த்தவுடனேயே மனசு நமநமக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்பல்லாம் பேட்டை கைல வச்சிருக்கவங்கெல்லாம் மனசுல வீராத் கோஃலி, தவான்னு நெனச்சுக்கிட்டிருக்க மாதிரி, அந்த காலத்துல எனக்கு கவாஸ்கர்ன்னு நெனப்பு.(ஆனா ஒரு தடவ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரில நடந்த ஒரு மேட்ச்ல Orthodontist சந்திரசேகர் அடித்த ஷாட்ட காட்ச் பிடிக்கப்போய் மூஞ்சி கிழிஞ்சு வந்தது தனி கதை)மன உந்துதல கட்டுப் படுத்திக்கிட்டு ஒரு வழியா அழகியசிங்கர பார்த்திட்டு திரும்பறேன். கொ-கொ ஆடுற பெண்கள் வழிவிட, சில மாணவிகள் விஷ் பண்றாங்க. என் பார்வை அந்த பவுலிங்க் போடற பையன் மேல. அந...