ஆறுதல் விடுமுறையில் குழந்தைகளுடன் மனைவி ஊருக்குச் சென்றுவிட்டாள் குழந்தையின் பூனைக்கத்தல், அவனின் சிரிப்பு, குறும்பு, குதூகலங்களின் பின்னணியில் மிக்ஸியின் காட்டுப் பிளிறல் சமையலறையில் பாத்திரங்கள் உருள்கிற விழுகிற பின்வாசலில் வாளிகள் மோதுகிற சப்தம் எதுவுமின்றி குக்கர் விசில், குழாயில் தண்ணீர் விழும் சப்தம், என ஏதுமின்றி ஒரே நிசப்தம். தனிமையில் அவன். உயிர்களற்ற உலகில் அவன் மட்டும் தனிமையில் உலவுவது போல் ஒரு உணர்வு அவனுள். என்னவோ போல் இருந்தது. சமையலறையில் திடீரென பாத்திரங்கள் உருளும் சப்தம். அதிர்ச்சியில் அங்கே சென்று பார்த்தான் ஒரே ஆறுதல். சமையலறையில் பதுங்கி வந்தன எதிர் வீட்டுப் பூனை அதன் குட்டிகளுடன்.