எஸ் வைத்தியநாதன் என்ற என் நண்பரைப் பற்றி சொல்ல விருப்பப்படுகிறேன். எனக்கு சில இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு வைத்தியநாதன் ஒரு முக்கிய காரணம். ஒரு இலக்கியச்சிந்தனைக் கூட்டத்தில்தான் வைத்தியநாதனை சந்தித்தேன். இந்தச் சந்திப்பை ஏற்படுத்தியவர் நடராஜ் என்ற நண்பர். வைத்தியநாதன் மூலம் ழ என்ற பத்திரிகை பற்றியும், அதில் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் சில நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் அந்த இலக்கிய நண்பர்கள் கவிஞர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.எல்லோரும் கவிதைகள் எழுதுபவர்கள். கவிதைகளைப் பற்றி பேசுபவர்கள். வைத்தியநாதன் ஒரு கவிஞர். ழ பத்திரிகை நினைத்தபோது வரக்கூடிய பத்திரிகை. பத்திரிகை ஆசிரியர் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டபோது, பெரிய அதிர்ச்சி அதில் ஈடுபட்ட நண்பர்களுக்கு ஏற்பட்டது. ஆத்மாநாமிற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் அவருடைய நண்பர்கள் பெரிய வருத்தத்துடன் இருந்தார்கள். எனக்கு ஆத்மாநாம் அவ்வளவு நெருக்கம் கிடையாதென்றாலும், ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய புத்தகமான காகிதத்தில் ஒரு கோடில் அவ...