31.7.14

எதையாவது சொல்லட்டுமா......97

  

    அழகியசிங்கர்


    ரொம்ப நாளைக்குப் பிறகு ஜெயகாந்தன் சிறுகதை வெளியீடு கூட்டத்திற்கு சென்றேன்.  இதற்கு முன் ஜெயகாந்தன் என்ற பெயரையே மறந்து விட்டேன்.  சமீப காலத்தில் யாரும் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் பெயரை யாரும் உச்சரிப்பதில்லை.  அவர் மீது யாருக்கும் எந்தக் கோபமும் இல்லை.  பல ஆண்டுகளுக்கு முன்னாலே அவர் எழுதுவதை நிறுத்தி விட்டார்.  பத்திரிகைகளில் கூட அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வருவதில்லை.  ஒருமுறை அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரைப் பற்றி பேச்சு வந்தது.  அவர் நலமாக வீடு வந்து சேர்ந்துவிட்டார் என்ற செய்தியுடன் அவரைப் பற்றி பேச்சு நின்று விட்டது. 

    அவர் சிறிய வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டார்.  சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிக் குவித்தவர்.  அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய பெரிய பத்திரிகைகள் காத்துக்கொண்டிருந்தன.  குறிப்பாக விகடன் அவர் எழுத்தை பிரசுரம் செய்ய காத்துக்கொண்டிருந்தது.  அந்தக் காலத்தில் தமிழ் எழுத்தாளர்களிடையே மதிப்பை உயர்த்தியவர் ஜெயகாந்தன் என்று குறிப்பிடுவார்கள். 

    ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்தில் சட்டையும் பேன்டும் அணிந்துகொண்டு  மிடுக்காக செல்பவர் அவர் ஒருவர்தான். பொதுவாக மற்ற எழுத்தளார்கள் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு போவார்களாம்.

    முழுக்க முழுக்க எழுத்தையே நம்பி பெரிய வெற்றி அடைந்தவர் அவர் ஒருவர்தான். மியூசிக் அகாடமி, சென்னையில் 24ஆம் தேதி நடந்த கூட்டத்தில், உட்கார இடம் கூட கிடைக்காமல் பலர் அவதிப் பட்டார்கள்.  அப்படி கூட்டம்.   ஜெயகாந்தன் கதைகள் என்ற அவர் புத்தகமும், அவருடைய பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைப்பெற்றன. டாக்டர் ராம்தான் ஜெயகாந்தன் கதைகள் என்ற புத்தகத்தைத் தொகுத்தவர்.  அவர் நீண்ட வரவேற்புரையை நிகழ்த்தினார்.  சிறு பத்திரிகைகளிலிருந்து பெரிய பத்திரிகைக்கு நுழைந்தவர் ஜெயகாந்தன் என்று குறிப்பிடுவார்கள்.  ஆனால் சிறுபத்திரிகையைச் சேர்ந்த யாரையும் பேசக் கூப்பிடவில்ல

    நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஜெயகாந்தன் ஆலந்தூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பேச வந்தார்.  அவர் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் நானும் கலந்து கொண்டேன்.  கையில் வைத்திருந்த துண்டு மாதிரியான துணியை பாரதி மாதிரி முண்டாசு கட்டிக்கொண்டார்.  அவர் பேச ஆரம்பித்தபோது ஆவேசமாகப் பேசினார்.  அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களையே அவர் திட்ட ஆரம்பித்தார்.  எனக்கு அவர் அப்படி திட்டி பேசியதைக் கேட்டு அவர் துணிச்சலை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.  அந்த வயதில் ஆச்சரியமாக இருந்தது.  நானும் எங்கள் மாம்பலம் ஏரியாவில் ஒரு இடத்தில் பேச போனபோது ஜெயகாந்தன் மாதிரி ஆவேசமாகக் கத்தினேன்.  பின் யோசித்தபோது அது முட்டாள்தனம் என்று தோன்றியது.  அந்தக் கூட்டத்திற்குப் பின் நான் ஜெயகாந்தன் கூட்டங்களுக்குப் போவதில்லை.  அவர் எப்படி பேசுவார் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தேன். 

    கொஞ்சம் கொஞ்சமாக நான் சேகரித்து வைத்திருந்த ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவம், சினிமா அனுபவம் போன்ற புத்தகங்களை என் நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன்.  அவர்கள் படித்தார்களா என்பதுகூட தெரியவில்லை.  ஏனென்றால் யாரும் திரும்பவும் புத்தகங்களைக் கொடுக்கவும் இல்லை.  படித்த மாதிரியும் சொல்லவில்லை. 

    ஜெயகாந்தனால் தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் பல எழுத்தாளர்கள் அவர் எழுத்தை தொடர்ந்து அதே பாணியில் எழுத ஆரம்பித்தார்கள். 

    பின்னாளில் ஜெயகாந்தன் பேசும்போது, அவரிடம் அந்த ஆவேசம் குறைந்து விட்டது.  ஆனால் பேசும்போது ஒருவிதத் தெளிவை என்னால் உணர முடிந்தது.  எந்த விஷயத்தைப் பற்றியும் அவர் தெளிவான சிந்தனையுடன் பேசுவார் என்று தோன்றியது.  நானோ மாறி விட்டேன்.  ஜெயகாந்தன் கூட்டத்தைவிட நான் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்குத்தான் போவேன்.  கூட்டத்தில் பேசத் தெரியாத, விரும்பாத எழுத்தாள நண்பர்களுடன்தான் பேசுவேன்.

    24ஆம் தேதி அன்று ஜெயகாந்தன் கூட்டத்திற்கு வந்திருந்தபோது, அவர் எழுந்து சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை.  ஆனால் அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கும்.  அந்தக் கம்பீரத்திற்கு எந்தக் குறைவும் இல்லை.  இன்றைய எழுத்து அவருடைய எழுத்தையெல்லாம் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது.  ஆனால் ஜெயகாந்தனை நம்மால் மறக்க முடியாது. 

29.7.14

எதையாவது சொல்லட்டுமா......96


    அழகியசிங்கர்

            இன்று மதியம் தொலைபேசியில் ஒரு கேட்ட குரல் ஒலித்தது.  ''நீல பத்மநாபனா?'' என்று கேட்டேன்.  'ஆமாம்' என்று பதில் வந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக் சென்டரில் அவருடைய கூட்டம்.  
               
                உண்மையில் அந்தக் கூட்டம் சனிக்கிழமையே முடிந்து விட்டது என்று நினைத்துவிட்டேன்.  உடனே நான் சில நண்பர்களுக்கு போன் மூலம் கூட்டம் பற்றிய தகவலைத் தெரிவித்தேன்.  இந்தக் கூட்டத்தின் முக்கியமான பங்கு என்னவென்றால், பல எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கலாம்.  முக்கியமாக நீல பத்மநாபனை சந்திக்குமிடமும் இதுதான்.  வயதின் முதிர்ச்சியில் அவர் தளர்ந்து காணப்பட்டார்.  

       அவருடைய 'இலைஉதிர் காலம்' நாவலைப் பற்றி சுப்ர பாலன் என்ற எழுத்தாளர் விமர்சனம் செய்தார்.  பின் நீல பத்மநாபன் சுருக்கமான ஒரு உரையை வெளிப்படுத்தினார்.  கூட்டம் 40 அல்லது 50 பேர்கள் கொண்டதாக இருந்தது.  நீல பத்மநாபன் நாவல்கள் முழுவதையும் மறு வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டுமென்று தோன்றியது.  இன்றைய சூழ்நிலையில் தமிழில் புத்தகம் படிப்பவர்களே அரிதாக மாறிக்கொண்டு வருகிறது.  அதுவும் தமிழில்.  ஒரு போராட்டமே நடத்தினால்தான் புத்தகம் படிக்க வைக்க முடியும்.  நீல பத்மநாபன் அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் அவருடைய படைப்புகளால் தலை நிமிர்ந்து நின்றவர்.  அவருக்கு எல்லா பரிசுகளும், மரியாதைகளும் கிடைத்து விட்டன. அவர் திரும்பவும் அவர் எழுத்துக்களையே திரும்பிப் பார்க்கும் நிலையில் உள்ளார். 

    எனக்கு எப்போதும் நீல பத்மநாபன் என்று சொன்னால், நகுலன் ஞாபகம்தான் வரும்.  திருவனந்தபுரம் என்றால் நகுலன், நீல பத்மநாபன், காசியபன், ஷண்முக சுப்பையா பேர்கள்தான் ஞாபகத்தில் வரும். 

       நீல பத்மநாபனை பலர் கேள்வி கேட்டார்கள்.  நான் ஒரு கேள்வி கேட்டேன்.  'உங்கள் நண்பர் நகுலனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று.

         'நகுலன் என் குருமாதிரி.  நான் எழுதுவதை அவரிடம் காட்டி அபிப்பிராயம் கேட்பேன்.  அவர் அதைப் படித்துவிட்டு எல்லோரிடமும் குறிப்பிடுவார்,'என்றார். 

    நீல பத்மநாபன் பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.   

22.7.14

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)


மரம்

வானத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து - மத்து ஆடுகிறது
என் நிழல்
வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என்
பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்.

என்னை வெட்டிச் சாய்க்க
வருகிற வீரன்
என் நிழலை மட்டும்
வெட்டிச் சாய்த்து விட்டானானால்
நான் ஓங்கிக் கிளைத்து வளருவேன் -
ஒன்பதாய்ப் பெருகுவேன்
என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும் -
முடியுமா
என் நிழலை மட்டும்
அப்புறப் படுத்திவிட....?
                                                                                                 க நா சுப்ரமண்யம்

19.7.14

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)
வட்டம் 3


என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை

ஏதோ நாவல்
ஏதோ கதை
என்றெழுதிய
வையும்
குப்பைக் கூடையில்
ஏக வாரிசு
என்றாலும் என்ன?

சுசீலாவே
செத்துவிட்டாள்
என் எழுத்து மறைந்தபின்
நான்
இருந்தென்ன
இலலாமல் போனால்
தான்
            என்ன?

                        நகுலன்

16.7.14

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 7வட்டம் (2)


பேனாவுக்கு மையிட்டு
அதன் முனைதீட்டி
வெள்ளைக் காகிதத்தை
மேசை மீது விரித்து

எழுத வருங்
கால்
பேனாவின் முனை
மூளையின் மண்டைக்
கனத்தில்
குடை சாயும்
வெள்ளைக் காகிதத்தின்
வைரத் தின்மையில்
அதன்
கூர் மழுங்கும்;

சேலை அவிழ்க்
காலமென்றா
லோ
சுசீலாவும் செத்துக்
கிடக்கின்றாள்

                        - நகுலன்

12.7.14

வண்ணச்சிறகுகளாலான கோட்டோவியம்


 தேனு

ஒரு இளம்பெண்ணின் கோட்டோவிய கீழ்நுனியின்
வண்ணமற்ற இழையைப் பிடித்தபடி
மையம் நோக்கி நடக்கத் துவங்குகிறாள் யாழினி.
விழிகளின் வெளிச்சத்தை மெலிதாய் பரப்பி 
நீள்கோடுகளைக் கடைந்தெடுத்து
சொற்களாய் உருக்குகிறாள்.
மேடுகளைச் செதுக்கி அலையலையாய்
முன்னேறும் வேகம் என்றுமே
அவளுக்கு அலாதியானது..
ஒவ்வொரு வளைவிற்குத் தன் சொல்லொன்றையும்,
ஒவ்வொரு முடிச்சிற்குத் தன் புன்னகையொன்றையும்
சிறகடிக்க விடுத்து நகர்கிறாள்.
சொற்களையும் புன்னகைகளையும்
ஒரு சேர கலந்து வெளியிட்டு
வண்ணம் அமைக்க அவளால் மட்டுமே முடிகிறது.
மையம் அடைந்தவள் மெலிதான மௌனமொன்றை
வெளியிட்டபடி சிறகுகளை உள்ளடக்கிச்
சாயவும்,
வண்ணம் பூக்கத் துவங்குகிறது அவளைச் சுற்றி..
காலங்கள் கடந்து வண்ணத்து உயிர் சிற்பமாய்
உருமாறி இருந்தது கோட்டோவியம்,
அருகில் புன்னகைச்சொல்லொன்றை உதிர்த்தபடி துயில்கிறாள்
வண்ணச்சிறகுகளின் இளவரசி யாழினி..8.7.14

மூன்று கூட்டங்களும் நானும்(PHOTOS TAKEN BY AUDITOR GOVINDARAJAN)
அழகியசிங்கர்


சமீபத்தில் நான் எதிர்கொண்ட மூன்று இலக்கியக் கூட்டங்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.  ஒரு கூட்டத்தில் நான் பார்வையாளனாக இருந்தேன். 
 இன்னொரு கூட்டத்தில் நான் பங்கு கொள்பவனாக மாறி இருந்தேன்.  மூன்றாவது கூட்டத்தை நானே நடத்துபவனாக இருந்தேன்.  இந்த மூன்று கூட்டங்களைப் பற்றி இங்கே சொல்வது முக்கியமாக கருதுகிறேன். 

முதல் கூட்டம்: அசோகமித்திரனை வாசித்தல் என்ற கூட்டம். பெருந்தேவி அவருடைய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்.  அக் கூட்டத்தை இவ்வளவு தூரம் சிறப்பாக ஏற்பாடு செய்வார் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை.  ஒருநாள் முழுவதும் கூட்டத்தை சிறப்பாக நடத்தி விட்டார்.  இக் கூட்டத்திற்கு நான் மதியம்தான் வர முடிந்தது.  அன்று ஏகப்பட்ட வெயில்.  தாங்க முடியவில்லை.  டூ வீலரில் வந்த நான் நடுவில் திரும்பி விடலாமாவென்று நினைத்தேன்.  ஆனாலும் எப்படியும் கூட்டத்திற்குப் போய்விட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் சென்றேன்.  உண்மையில் அக் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனைப் பேர்களும் என் நண்பர்கள்.  

மதியம் ஆரம்பமாகும் கூட்டத்திற்குத்தான் நான் வந்தேன்.  முதலில் ராமானுஜம் என்பவர் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலை ஒட்டிப் பேசினார்.  கிட்டத்தட்ட ஒரு கட்டுரையாக எழுதி வாசித்தார்.  அக் கட்டுரையை அவர் வாசிக்கும்போது என்னால் கட்டுரையை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.  ஒரு சமயம் கட்டுரையை அச்சடித்து முன்னதாகவே கொடுத்திருந்தால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டிருக்கலாம்.

அடுத்ததாகப் பேசிய ராஜன் குறை அவர்கள் தற்சமயம் என்று எதோ சொல்லிக்கொண்டு வந்தார். அவரும் கட்டுரையாக வாசித்தார். இதிலும் பிரச்சினை அவர் அசோகமித்திரன் நாவலான இன்று குறித்து என்ன சொல்ல வருகிறார் என்பதுதான்.  பார்வையாளனாக இருக்கும்  எழுதிய கட்டுரையை நிதானமாக வாசிக்க வேண்டியவன், காதால் கேட்கிறேன் என்று தோன்றியது.   அசோகமித்திரன் எழுத்து சுலபமானது.  எளிதில் பலவற்றை  புரியும்படி எடுத்துரைக்கும் தன்மை கொண்டது.  ஆனால் அவர் நாவலை வைத்துப் பேசியதுதான் புரியவில்லை.  

மூன்றாவதாகப் பேசிய பெருந்தேவி, மானசரோவர் என்ற அவருடைய நாவலை முக்கியமாக எடுத்துப் பேசினார்.  அவரும் எழுதித்தான் வாசித்தார்.  அந்தக் கட்டுரையில் வேறு பல ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.  திரும்பவும் ஒரு பிரச்சினை என் முன்னால் நின்றது.  எழுதப்பட்ட கட்டுரையின் முழுவடிவம் முன்னதாகவே கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான்.  

அசோகமித்திரனின் எழுத்துக்கள் எப்படி?  அதை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறோம் என்பது மிக மிக முக்கியம். அவர் நாவல்களில் காணப்படும் எளிமை அவரைப் பற்றி சொல்வதில் இல்லையோ என்றுதான் எனக்குத் தோன்றியது.  வீட்டிற்கு நான் வரும்போது ஒன்றே ஒன்றை நான் நினைத்துக்கொண்டேன்.  திரும்பவும் அசோகமித்திரன் நாவல்களை எடுத்து வாசிக்கலாமென்பதுதான்.  

இக் கூட்டத்தை சிறப்பாக நடத்திய பெருந்தேவி முன்னதாகவே என்ன பேசப் போகிறோம் என்பதையும் அச்சடித்துக் கொடுத்திருந்தால், பார்வையாளர்களும் முழு வீச்சில் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள்.  இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

நான் கலந்துகொண்ட இரண்டாவது கூட்டம்.  மலாய் கவிஞர்களுடன் தமிழ் கவிஞர்கள் கவிதைகள் வாசித்தல்.  சென்னை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம், மற்றும் மலாய் பல்கலைக் கழகம் சேர்ந்து நடத்திய கூட்டம் இது.  11.06.2014 அன்று நடந்த கூட்டம் இது. கவிதையாய் விரியும் வாழ்வு என்று அக் கூட்டத்திற்கு தலைப்பு. 28 தமிழ்க் கவிஞர்கள், 21 மலாய் கவிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது.  மலாய் கவிதைகள் எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.  அதேபோல் தமிழ் கவிதைகள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.  இரண்டு நாட்கள் நடந்த இக் கூட்டத்தில் மொத்தம் 49 கவிஞர்கள் கவிதைகள் வாசித்தோம்.  இந்தியாவில் உள்ள மற்ற மொழியைச் சேர்ந்தவர்களுடன் இது மாதிரியான கூட்டம் நிகழ்ந்ததில்லை.  ஆனால் மலேசியாவைச் சேர்ந்தர்களுடன் இப்படியொரு கூட்டம் நிகழ்வது ஆச்சரியமாக இருந்தது.  

இக் கூட்டத்திற்கு தனி மனித பொறுப்பை ஏற்றுக்கொண்ட லதா ராமகிருஷ்ணனைப் பாராட்டாமல் இருக்க முடியாது.  அவர் ஒருவரே எல்லா தமிழ் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நல்ல புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.   கவிதையைக் குறித்து எஸ் சண்முகமும், சி மோகன் அவர்களும் கட்டுரைகள் வாசித்தார்கள்.  சண்முகம் கட்டுரை படிக்க வேண்டிய கட்டுரை.  கேட்க வேண்டிய கட்டுரை இல்லை.  சி மோகன் தெளிவாக தன் எண்ணங்களை கட்டுரை வாயிலாக வாசித்துக் காட்டினார்.  பல கவிஞர்களைச் சந்தித்த நல்ல அனுபவம் இது.

மூன்றாவது கூட்டத்தைப் பற்றி இப்போது சொல்ல விரும்புகிறேன்.  ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற முயற்சி மே மாதத்திலிருந்து நான் தொடங்கி உள்ளேன்.  அதன் தொடர்ச்சியாக கவிஞர் பயணியின் கூட்டத்தை ஜøன் மாதம் நடத்தினேன்.  எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்ற நண்பர்.  பயணி அடக்கமானவர்.  அவர் இது வரையில் இரண்டு கவிதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளார்.  என் நிகழ்ச்சிக்கு வழக்கம்போல் குறைவானவர்களே வருவார்கள்.  ஆனால் கூட்டம் 2 அல்லது 3 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும்.  அன்றைய கூட்டமும் சிறப்பாக நடந்தது.  இக் கூட்டத்தில் முக்கியமான ஒன்று பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  பயணி மட்டும் அன்று பேசவில்லை.  பார்வையாளர்களும் சேர்ந்துதான் பேசினார்கள்.  இதனால் கூட்டம் கேட்க சிறப்பாக இருந்தது.  பொதுவான கருத்துகளும், பயணியின் கவிதைகள் பற்றிய கருத்துகளும் கூட்டம் முழுவதும் நிரம்பி வழிந்தன.  
  

7.7.14

நதியில் என் ஓடம்ராமலக்ஷ்மி
 

த்தனை ஆயிரம் இரவுகளோ அறியேன்
ஓடும் நதியில்
ஓடத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.
அழகிய சோலைகளின் பக்கம்
அமைதியில் உறைந்த வனங்களின் பக்கம்
இறங்குவேன் என்றெண்ணி
ஓடம் கரை தொட்டு நின்ற கணங்களை
கவனிக்கத் தவறி
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.

துள்ளும் மீனைப் பாராமல்
புள்ளின் ஒலியைக் கேளாமல்
வெயிலை மழையை உணராமல்
வானின் நீலத்தை, விரையும் மேகத்தை
நிலவை, நட்சத்திரங்களை ரசிக்காமல்
கனவுகளைச் சுவாசித்து
சுளித்தோடும் நீரில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

என் கனவில் சந்தித்து
கைகளைக் குலுக்கிக் கொள்கிறார்கள்
நான் அறிந்த ஆனால்
ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள்.
சந்திக்கிறேன் நானும்
பரிச்சயமான ஆனால் 
அதுவரை சந்தித்திராத நபர்களை.
தினம் ஒரு கனவு
தினம் ஒரு நிகழ்வைச் சுற்றி
முடிவென்பது இல்லாமல் ஆனால்
தொடங்கிய புள்ளியிலிருந்து விலகாமல்.

நீங்காத உறக்கத்தால்
பகல்களும் இரவுகளாய்க் கழிய
சேகரமான கனவுகள் எல்லாம் சேர்ந்து
என் தலையைப் பாரமாக்கிய ஓர் இரவில்
விழித்துக் கொள்கிறேன்
விரும்பி நதியில் குதிக்கிறேன்
புத்துணர்வுடன் 
எழும்பி விண்ணில் பறக்கிறேன்
எல்லைகளற்றப் பிரபஞ்சத்தில்
இறகைப் போல் மிதக்கிறேன்
ஆனந்தம் பிறக்கிறது
பறக்கப் பிடிக்கிறது
தலைப் பாரம் இறங்கி விட்டது.

நிலவின் பிம்பம் போல்  
நதியில் என் ஓடம்
தொலைவில் தெரிகிறது
அலையின் போக்கில் 
செல்கிறது அசைந்தாடி 
இப்போதும்
நான் இல்லாமலும்

***

3.7.14

எதையாவது சொல்லட்டுமா..........95

      

அழகியசிங்கர்


    ஒவ்வொருக்கும் அந்தக் கடைசி மாதம் கசப்பாகத்தான் இருக்கும்.  எப்போது இதிலிருந்து விடுதலை ஆகி ஓடிவிட முடியும் என்றுதான் தோன்றும்.  என்னுடைய கடைசி மாதத்தில் நான் அப்படி நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை.  கடந்த 35 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தின் நிழலில் அசையாமல் என் பொழுதை ஓட்டிவிட்டேன்.  ஆனால் இப்போது திரும்பவும் நினைத்துப் பார்த்தால் திகைப்பாகத்தான் இருக்கிறது. 

    ஒவ்வொருமுறை என் அலுவலக நண்பர் என்னிடம் போனில் பேசும்போது, அவருக்கு என் மீது பொறாமையாகக் கூட இருக்கும்.  ''சார் நீங்க தப்பிச்சிட்டீங்க..." என்று.  ஆமாம். உண்மைதான். தொடர்ந்து இனி இருக்க முடியாது. 

    மார்ச்சு மாதம் முதல் தேதி.  மொட்டை மாடிக்குச் சென்று சூரியனைப் பார்த்து கைகூப்பினேன்.  35 வருட அலுவலக வாழ்க்கை முடிந்தது.  இனி அவசரம் அவசரமாக காலை 8.30 மணிக்கே போய் வங்கிக் கதவைத் திறக்க வேண்டாம்.  யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.  நிம்மதி.

    ஒரு மாதமாக பதவி ஓய்வுப் பெற்ற பலரிடம் பேட்டி கண்டேன்.  என் முதல் கேள்வி.  "எப்படி பொழுது போகிறது?" என் அலுவலகத்திலேயே பணிபுரிந்து பதவி மூப்பு பெற்றவர் சொன்னார் : "பொழுதே போக மாட்டேங்கறது...காலையில் எழுந்தவுடன் பூங்கா சென்று விடுவேன்.  அங்கே போய் உட்கார்ந்துவிட்டு வருவேன்.."    என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றியது.  ஏமாற்றமாக இருந்தது.  இன்னொருவர் சொன்னார் : "காலையில் பூஜை செய்ய ஆரம்பித்தால்,  மதியம் வரை ஓடும்.  அதன்பின்தான் சாப்பாடு,"என்று.

    "ஐயோ போர்..  நான் வேலைக்குப் போறேன்.  சம்பளம் குறைச்சல்தான்...ஆனா பொழுது போகிறது.."

    சொன்னவர் அலுவலகத்தில் முக்கியமான பதவியில் இருந்து பதவி மூப்பு அடைந்தவர். 

    நான் கேட்ட யாரும் பதவியை விட்டு வந்தபின் இன்னும் அதில் ஒட்டிக்கொள்ள வேண்டுமென்று துடியாக துடிப்பவர்கள்.  யாருக்கும் தான் பார்த்த பதவியை விட முடியவில்லை. 

    சில மாதங்களுக்கு முன் பதவி மூப்பு அடைந்த என் நண்பனிடமிருந்து போன் வந்தது.  "இன்சூரன்ஸில இருக்கேன்... நீ இன்சூரன்ஸ் போடு," என்றான்.  நான் அவனுக்கு பதிலே சொல்லவில்லை.  திரும்பவும் சில நாட்கள் கழித்து போன் செய்தான்.  பதில் சொல்லவில்லை.  அவனும் விடவில்லை.  ஒருமுறை அவனிடம் சொல்லிவிட்டேன்.  "ஏன் இப்படி இன்சூரன்ஸிலே வேலைப் பாக்கறே.. சும்மா இருக்க முடியாது...நமக்கு கிடைக்கிற பென்சன் பணம் போதுமே.. வீட்டில இருக்கலாமே.." என்றேன்.

    "வீடு போரடிக்கிறது...யார் இருக்கிறது.  முடிஞ்ச வரை வேலை பாக்கறது.." என்றான்.  யாரையும் திருத்த முடியாது என்று தோன்றியது. 

    காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி போவதற்கு முன், உவேசாவின் என் சரித்திரம் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் படிப்பேன்.  பின் ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்று கு அழகரிசாமியின் கதை ஒன்றை எடுத்துப் படிப்பேன்.  பின் டைரி எழுதுவேன்.  சரியாக 7 மணிக்கு நடைபயிற்சிக்குக் கிளம்புவேன். நானோ காரை எடுத்துக்கொண்டு போவேன்.  நடைபயிற்சி ஒன்று.  காரை ஓட்டறது இன்னொரு பயிற்சி.  திரும்பி வரும்போது மணி ஒன்பது ஆகிவிடும்.

அன்றைய செய்தித்தாள்களைப் படிப்பேன். பின் நிதானமாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட உட்காருவேன்.  நிதானமாக குளிப்பதை எடுத்துக்கொள்ளுங்கள்.  வளசரவாக்கத்தில் இருக்கும்போது இது நடந்ததா?  அவசரம் அவசரமாக ஓடி எட்டரை மணிக்கு வங்கிக் கதவைத் திறக்க வேண்டும்.  ஒரு முறை தாமதமாக வந்தபோது, முதன்மை மேலாளர், "நீங்க சீக்கிரமாக வந்து கதவைத் திறக்க வேண்டும்," என்றார். "சிலசமயம் அது முடியாது சார்...நான் மாம்பலத்திலிருந்து வருகிறேன்," ''அப்படியெல்லாம் சொல்ல முடியாது.  வரத்தான் வரணும்.. நீங்க வரவில்லையென்றால் மத்த ஊழியர்களை ஒன்றும் கேட்க முடியாது," என்றார்.  வேற வழி. எட்டரை மணிக்கு வந்து கதவைத் திறக்க வேண்டும்.  அவசரம் அவசரமாகக் குளித்து, அவசரம் அவசரமாக சாப்பிட்டு, அவசரம் அவசரமாக டூ வீலரில் வளசரவாக்கம் கிறைக்கு ஓட வேண்டும்.

        "என் அப்பாவிற்கு 92 வயதாகிறது....வீடு மாம்பலத்தில் இருக்கிறது.  மாம்பலத்தில் உள்ள கிளையில் என்னை மாற்றினால் நன்றாக இருக்கும்,ýý என்று மேலிடத்தில் கேட்டுப் பார்த்தேன்.  ஒன்றும் நடக்கவில்லை.  இத்தனைக்கும் நான் பதவி மூப்பு அடைய ஒரு வருடம் கூட இல்லை. "

    நான் அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டுக் கதவை தாளிட்டு விட்டு வந்து விடுவேன்.  அப்பா தானாகவே குளித்துவிட்டு, தானாகவே சாப்பிட்டுவிட்டு, பேப்பர் படித்துவிட்டு, தூங்குவார் தூங்குவார் அப்படி தூங்குவார்.  யாராவது பெல் அடித்தாலும் போய் திறக்க மாட்டார்.  போன் எதாவது வந்தால் காது கேட்காது. 

    எனக்கு ஞானக்கூத்தன் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. 'விடுமுறை தரும் பூதம்' என்பதுதான் கவிதை.

        ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
        வேலை என்னும் ஒரு பூதம்
        திங்கள் விடிந்தால் காதைத் திருகி
        இழுத்துக் கொண்டு போகிறது

        ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
        ஆளை அனுப்பிக் கொல்கிறது
        மறுநாள் போனால் தீக்கனலாகக்
        கண்ணை உருட்டிப் பார்க்கிறது

        வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
        வீட்டில் ஒருவல் நலமில்லை
        என்னும் பற்பல காரணம் சொன்னால்
        ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

        வாரம் முழுதும் பூதத்துடனே
        பழகிப் போன சிலபேர்கள்
        தாமும் குட்டிப் பூதங்களாகிப்
        பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

        தட்டுப் பொறியின் மந்திரகீதம்
        கேட்டுக் கேட்டு வெறியேறி
        மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
        மதியாதிந்தப் பெரும்பூதம்

        உறைந்து போன இரத்தம் போன்ற
        அரக்கை ஒட்டி உரை அனுப்பும்
        'வயிற்றில்  உன்னை அடிப்பேனெ' ன்னும்
        இந்தப் பேச்சை அது கேட்டால்

    ஜனவரி மாதம் 25ஆம் தேதி கண்பொறையால் அவதிப்பட்டதால் கண் சரியாகத் தெரியவில்லை.  முழுவதும் அலுவலகம் போகாமல் இருந்து விடலாமாவென்று நினைத்தேன்.  ஏன்என்றால் நான் பிப்பரவரி மாதம் பதவி மூப்பு அடைகிறேன். 

    "கணனியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.  அலுவலகத்திற்கு வாருங்கள்," என்று தொந்தரவு செய்தார்கள் அலுவலகத்தில். டூ வீலரை ஓட்ட முடியவில்லை. அலுவலகம் போவதற்கு பஸ்ஸில்தான் போக முடிந்தது.  கண் தெரியவில்லை. 

    கணினி முன் சும்மா போய் உட்கார்ந்து கொள்வேன்.  ஆனால் வேற விதமான பணியை செய்யும்படி நேரிட்டது.  ஒவ்வொரு பத்திரம் பதிவு செய்யும் அலுவலகத்திற்கெல்லாம் சென்று கண் சரியாக தெரியாவிட்டாலும் கையெழுத்துப் போடும்படி நேரிட்டது.  அலுவலக தொந்தரவு.

    பலருக்கு பதவி மூப்பு அடைவது வருத்தமான விஷயமாக இருக்கும்போது, நானோ எப்போது வெளியே வரப் போகிறேனென்று பரபரப்பில் இருந்தேன்.  ஒரு வழியாக பிப்ரவரி முடிந்து வெளியே நல்லபடியாக வந்துவிட்டேன்.

    ஆரியகவுடர் ரோடில் உள்ள வங்கிக் கிளையில்தான் பென்சன்.  வீட்டிலிருந்து நிதானமாகப் போய் வங்கிக் கிளையில் திரண்டிருக்கும் கூட்டத்தில் நின்று பாஸ்புக்கில் பதிவு செய்கிறேன். பரபரப்பான அந்த ரோடில் எந்தப் பத்தட்டமும் இல்லாமல் நடப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.   அவசரம் அவசரமாக பலர் அலுவலகம் செல்ல பயணிக்கிறார்கள்.  பள்ளிக்கூடம், கல்லூரி செல்ல மாணவ மாணவிகள் திரண்டு ஓடுகிறார்கள்.  நான் அங்குலம் அங்குலமாக நடந்து செல்கிறேன்.  நானும் அலுவலகத்தில் இருந்தால் இதெல்லாம் நடக்கக் கூடிய விஷயமாக எனக்குத் தோன்றாது. 

    பதவி மூப்பு அடையும் விஷயத்தை ஞானக்கூத்தனிடம் கூறினேன்.  "இனிமேல்தான் சுதந்திரமான உலகத்திற்குள் வருகிறீர்கள்.." என்றார்.

    அவர் சொல்வதில் எல்லா உண்மையும் இருக்கிறது.  ஆனால் தூங்கும்போது, கனவில் அலுவலகத்தில் போய் நிற்பதுபோல் தோன்றுகிறது.  அலுவலகத்தில் உள்ளவர்களுடன் பேசுவதுபோல் தோன்றுகிறது.

    நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் அடுக்கடுக்காய் என் முன்னால் வீற்றிருக்கின்றன.