30.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 27

அழகியசிங்கர் போகன் சங்கர் கவிதைமுத்தம் செய்வதெப்படி
எனக் கேட்ட
முதிரா முலைப் பெண்ணே...

முத்தத்தைப்
பலவகைகளில் செய்யலாம்

தெய்வத்தைத் தொழுவதைப் போல
பக்தியுடன்
சிலர் செய்வார்
பழம் சாப்பிடுவது போல
பசியுடன் சிலர் செய்வார்
பட்டாம்பூச்சி
பிடிப்பது போல்
பயத்துடன் சிலர் செய்வார்
முள்கரண்டியில்
இறைச்சியைக்
குத்துவது போல
இன்னும் சிலர் செய்வார்
நான் எப்போதும்
முத்தத்தை
யுத்தத்தைப் போலதான்
செய்வேன்

நன்றி : எரிவதும் அணைவதும் ஒன்றே - கவிதைகள் - போகன் சங்கர் - பக்கம் : 112 - விலை : ரூ.90 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 600 083, தொலைபேசி : 044-24896979 


29.9.16

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 8


அழகியசிங்கர்வழக்கம்போல எட்டாவது கூட்டம் இது.  என் நண்பர் பெ சு மணி நாங்கள் இருந்த போஸ்டல் காலனி முதல் தெருவின் எதிரிலுள்ள ராமகிருஷ்ணபுரம் 2வது தெருவில் வசித்து வருகிறார்.  ஒவ்வொரு முறையும் தெருவில் நடந்து செல்லும்போது அவரைச் சந்திப்பது வழக்கம்.

இப்படி ஒவ்வொரு விழாக்கிழமையும் பலரைச் சந்தித்து பேட்டி எடுக்க வேண்டுமென்பது அடியேனின் விருப்பம்.  இதை எத்தனைப் பேர்கள் ரசிப்பார்கள் என்பது தெரியாது.  இதை இன்னும் கொஞ்சம் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும்.  இப்போதுதான் இது புரிய வருகிறது.

https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs&authuser=0
https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs

28.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 26


அழகியசிங்கர்  

தெரிதல் புரிதல்

பிரம்மராஜன்

நான் எழுதிக்கொண்டிருப்பதை
எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எழுதிக்கொண்டிருப்பதாக எழுதுவதை
எழுதுகிறேன்.
எழுதுவதை எழுதுகிறேன் என்று
எழுதிக்கொண்டிருப்பதை எழுதுகிறேன்.
எழுதுவதால் எழுதுகிறேன்.
தெரிகிறேன் என்பதால் பார்க்கிறாய்
பார்ப்பவன் பார்க்கப்படுகிறான்
தெரிகிறதா
கேட்கப்படுபவன் கேள்வியாக
தெரிபவன் தெரிதலாக
புரிபவன் புரிதலாக
பூப்பவன் புதிராக
அடுக்கடுக்காய் அதிர்ச்சியாக
சிந்திப்பவன் சிக்கலாக
சிற்பி உளியாக
ஓவியன் காணுதலாக
சிக்கல் சிரமமாக
சிரமம் சிந்தனையாக
சுடர் சாம்பலாக
சாம்பல் உன் எலும்பாக
பாஸ்பரஸ் பகற்கனவாக
பகற்கனவு பதியன் பூவாக
பூத்தது புதிராக புரியாதாய்
புதிய புத்தம் கவிதையாய்
அடுக்கடுக்காய் அணூ அணுவாய்
அலையில் அலையில்
தழுவித் தழுவி
கழுவிக் கரைந்த உடலாக
கரைமீது கால்.

நன்றி : ஞாபகச்சிற்பம் - கவிதைகள் - பிரம்மராஜன் - பக் : 64 - முதல் பதிப்பு : ஜøன் 1988 - விலை ரூ.12 - தன்யா - பிரம்மா பதிப்பகம், பர்ன் வூயு, குன்னூர் தெரு, ஊட்டி 643 001 

26.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 25

அழகியசிங்கர்  

                    பெண்பாற் கூற்று

சுகிர்தராணி


வெகுதூரம் ஓடிய
விலங்கொன்றின் உலர்நாவென
தரையோடு வற்றிவிட்டது உறைகிணறு
ஒற்றை உடலோடு உறங்குமிந்த இரவு
உவப்பாக இல்லை
என் பாதிப் புன்னகைக்குப் பின்னே
சொல்லப்படாத கதையொன்று இருக்கிறது
அவனை மிகவும் விரும்புகிறேன்
சீராக நறுக்கப்படாத அவன் மீசையையும்
என் கவிதைகளைச் சிலாகிக்கிறீர்கள்
குழந்தைகள்மீது பெருவிருப்பம் எனக்கு
ஆயினும் கருத்தரிக்க இயலாது
கூந்தலை வெட்டிக் கொள்கிறேன்
உதட்டில் ஊறும் முத்தங்களை
அவ்வப்பொழுது உமிழ்ந்து விடுகிறேன்
வேறென்ன செய்ய
இறந்து போன அப்பாவைப்
பார்க்க வேண்டும் போலிருக்கிறது
சிறுமிகளுக்கு
மாலை நேர வகுப்பெடுக்கிறேன்
கள்ளக்காதல் என்னும் சொல்லின்
பின்னுள்ள வலி புரிகிறது
இந்தக் கவிதையில்
மர்மங்கள் எவையுமில்லை
அகழ்ந்தெடுத்தல் புராதனச் சோதனை
எவையும் வேண்டாம்
வேண்டுமானால்
என்னை ஒழுக்கங்கெட்டவள்
என்று சொல்லிக் கொள்ளுங்கள்

நன்றி : இப்படிக்கு ஏவாள் - கவிதைகள் - சுகிர்தராணி - விலை ரூ.75 - பக் : 72 - முதல் பதிப்பு : மே 2016 -  காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன் : 04652 - 278525


25.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 24

அழகியசிங்கர்

 தூர்

 நா முத்துக்குமார்வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொரு முறை
விசேஷமாய் நடக்கும்.

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.

கொட்டாங்குச்சி, கோலி,
கரண்டி,
கட்டையோடு உள்விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்,
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே.

சேறுடா...சேறுடாவெபன
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்.

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

நன்றி :  பட்டம்பூச்சி விற்பவன் - கவிதைகள் - நா முத்துக்குமார் - முதல் பதிப்பு : டிசம்பர் 1997 - விற்பனை உரிமை : ப திருநாவுக்கரசு, 31/48  இராணி அண்ணா நகர், கலைஞர் நகர், சென்னை 600 078 - விலை ரூ.20.24.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 23

அழகியசிங்கர்  


நிலவும் நிலவுகளும்

தேவதச்சன்


எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
எங்களூரில் நான்கு கிணறுகள்
மூன்று ஊருணிகள்
ஒவ்வொரு இரவும்
எங்களூரில்
ஏழு நிலவுகள் வந்து
அழகு கொள்ளை கொள்ளும்
தண்ணீரில் கல் எறிந்து
ஒரே நிலவை
ஆயிரம் நிலவாய்
ஆக்குவோம் நாங்கள் சிறார்கள்.
வெறுமனே
பொறுமை காத்து
ஆயிரம் நிலவுகள்
ஒரே நிலவாய் கலப்பதை
பார்ப்பார்கள் பெரியவர்கள்
இப்போது ஊருணியை
பஸ் நிலையங்கள்
ஆக்கிவிட்டார்கள்.  மேலும்
கிணற்றை மூடி
குப்பைத்தொட்டியாக மாற்றி
விட்டார்கள்.
இப்போது
தனியான ஒரு நிலவு
எங்கள் ஊர்
மேலாகப் போய்க்கொண்டிருக்கிறது

நன்றி : எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது - கவிதைகள் - தேவதச்சன் - பக்கம் : 64 - விலை : ரூ. 40 - உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை  600 018 - தொ பேசி : 91-44-24993448

23.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 22

அழகியசிங்கர்

  நான்

நகுலன்


வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
üüயார்?ýý
என்று கேட்டேன்.
üüநான்தான்
சுசீலா
கதவைத் திறýý
என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?


நன்றி : நகுலன் கவிதைகள் - தொகுப்பும் பதிப்பும் : முனைவர் சு. சண்முகசுந்தரம் - காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை - பதிப்பாண்டு : 2001 - விலை : ரூ.100 


22.9.16

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 7

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 7

அழகியசிங்கர்

      நண்பர்களே,

வணக்கம்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற பகுதியில் ஞாநியைப் பேட்டி கண்டுள்ளேன்.  இது என்னுடைய ஏழாவது பேட்டி.  மிகச் சிறிய சோனி டிஜிட்டல் காமெரா மூலம் இதை செய்துகொண்டு வருகிறேன். இன்னும் தொடர்ச்சியாக இதைத் தொடர விரும்புகிறேன்.  இதை நீங்கள் பார்த்து உங்கள் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.எழுத்தாளர்கள் மட்டுமின்றி மிகச் சாதாரண மனிதர்களையும் பேட்டி எடுக்க உள்ளேன்.  இதில் நான் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு ஞாநியை பரீக்க்ஷா மூலம் தெரியும்.  இதற்கு முன்னால் அவர் கிருத்துவக் கல்லூரியில் படித்தவர்.  அவரை ஞாநியாகத் தெரியாத தருணத்தில் கல்லூரியில் சில நண்பர்களிடம், இனி கசடதபற வராது என்று சொல்லிக்கொண்டிருந்ததை நான் கேட்டிருக்கிறேன்.  பின் பரீக்ஷா ஏற்பாடு செய்த நாடகத்தில் நானும் நடித்திருக்கிறேன். அப்போது ஒரு வியாபார ரீதியில் சரியாக இயங்கத் தெரியாத ஒரு நாடகக் குழுவில் போய்ச் சேர்ந்து, அவர்கள் என்னை துரத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் ஞாநியின் நாடகத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  எப்படி நடிக்க வேண்டுமென்று ஞாநி எப்போதும் சொன்னது கிடையாது.  ஒரு அப்பாவி இளைஞனாக அறந்தை நாராயணனின் மூர் மார்க்கெட் என்ற நாடகத்தில், மேடையில் பாதி தூரம் நடக்கும் நடிகனாக நான் நடித்தேன்.  அதன்பின் நான் நடிக்கவில்லை.  என் இயல்புக்கு அது சரியாகப் படவில்லை.

இதோ நீங்கள் ஞாநியின் பேட்டியைக் கேளுங்கள்.
21.9.16

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்...

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்...

அழகியசிங்கர்சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.  அவர் முன்பு இருந்த பிள்ளையார் கோயில் தெருவிலேயே அவர் குடி வந்து விட்டார்.  அவருடைய உறவினர் சங்கர சுப்பிரமணியன் அவர் வீட்டின் பக்கத்தில் குடியிருந்தார்.  சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரியும் - சங்கர சுப்பிரமணியனின் தாயாரும் அங்கு இருந்தார்கள்.
சி சு செல்லப்பா தன் புத்தகம் கொண்டு வரும் ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாக் கூட்டத்தில் ஒவ்வொரு பதிப்பாளரையும் அணுகி தன்னுடைய மூன்று பாகங்கள் கொண்ட சுதந்திரதாகம் என்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகத்தைக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த ஆண்டு 1995ஆம் ஆண்டாக இருக்குமென்று நினைக்கிறேன்.  எந்தப் பதிப்பாளரும் சுதந்திர தாகம் புத்தகத்தைக் கொண்டு வரத் தயாராயில்லை.  காரணம் சி சு செல்லப்பாவின் எழுத்து. அவருக்கு விளக்கு பரிசு கொடுக்க முயற்சி செய்தபோது, அதன் மூலம் கிடைக்கும் தொகையை üஎன் சிறுகதைப் பாணிý என்ற கட்டுரைத் தொகுதியைக் கொண்டு வர சி சு செல்லப்பா ஒப்புக்கொண்டார்.  ஆனால் அதைப் பணமாகப் பெற அவர் விரும்பவில்லை. மயிலாப்பூரில் ஒரு கூட்டம் ஏற்பாடாகியது.  அதில் பல படைப்பாளிகள் கலந்து கொண்டார்கள்.  அக் கூட்டம் சிறுபத்திரிகைகள் கலந்து கொள்ளும் கூட்டமாக அமைந்தது. 
சி சு செல்லப்பா சுதந்திர தாகம் புத்தகத்தை தானே கொண்டு வரத் திட்டம் போட்டார்.  அவர் துணிச்சலை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒவ்வொரு பாகமும் (மொத்தம் மூன்று பாகங்கள்) ஆயிரம் பிரதிகள் கொண்டு வர கிட்டத்தட்ட ரூ50000 வரையாவது செலவாகும்.  அதாவது ஒருலட்சமாகவாவது செலவாகும்.  அன்றைய தினம் அது பெரிய தொகை. 
முதலில் சி சு செல்லப்பா வெளி ரங்கராஜன் முயற்சியில் பார்க்கர் என்ற அமைப்பின் மூலம் சு தாவின் மூன்று பாகங்களையும் டிடிபி செய்து வைத்துக்கொண்டார். மணி ஆப்செட் காரரை நான் சி சு செல்லப்பாவிற்கு அறிமுகம் செய்தேன்.  சி சு செயின் வயது காரணமாக நேரிடையாக அவரைப் பார்த்து அச்சடித்துத் தரும்படி கேட்டுக் கொண்டேன்.  
பின் நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இந்த மூன்று பாகங்கள் வர உதவி செய்தார்கள். குறிப்பாக லலிதா ஜ÷øவல்லரி சுகுமாரனை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.   சில மாதங்களில்  மூன்று பாகங்கள் சுதந்திர தாகம் அச்சடித்து வந்ததைப் பார்த்து சி சு செவிற்கு  ஒரே சந்தோஷம்.   அவர் வீடு முழுவதும் கட்டுக்கட்டாக சுதந்திரதாகம் நிரம்பி வழிந்தது.  தானே ப்ரவுன் அட்டை வாங்கி வந்து ஒட்டி புத்தகங்களை எல்லா இடத்திற்கும் அனுப்பினார்.
அன்று இந்திய டுடே (தமிழில்) மூலம் சுதந்திர தாகம் புத்தகத்திற்கு பெரிய விளம்பரம் கிடைத்தது.  அதோடு மட்டுமல்லாமல் பல பத்திரிகைகள் பக்கப்பலமாக அந்தப் புத்தகத்திற்கு ஆதரவு தந்தன. அதன் மூலம் சி சு செல்லப்பா ஒரு 200 பிரதிகளாவது விற்றிருக்கக் கூடும்.  ஆனால் பெரும்பாலான புத்தகங்களை அவர் நினைத்தபடி  விற்க முடியவில்லை.
அப் புத்தகத்தை நூல் நிலையத்தில் வாங்குவதற்கு அதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தும், அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகம் என்பதால் நூல்நிலைய ஆதரவு கிட்டவில்லை.  இந் நிலையிலும் சி சு செல்லப்பாவின் புத்தகம் கொண்டு வரும் ஆர்வம் சிறிதும் தணியவில்லை.  80 வயதுக்கும் மேற்பட்ட இளைஞராக அவர் செயல்பட்டார்.  இரண்டு மூன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நோய் குணமாகி வீடு வந்து சேர்ந்தார்.  ஒரு முறை மருத்துவமனையில் அவரைப் பார்க்கும்போது, üமாமிக்கு டாடா சொல்லிட்டேன்..ஆனால் திரும்பி வந்து விட்டேன்,ý என்று சிரித்தபடி என்னிடம் கூறியிருக்கிறார்.
அவருடைய அடுத்தப் புத்தகமாக ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தார்.  கிட்டத்தட்ட 300 பக்கம் வரை உள்ள புத்தகம் அது.   ராமையாவின் பக்தர் சி சு செல்லப்பா.  300 க்கும் மேற்பட்ட கதைகள் எழுதிய ராமையாவின் கதைகள் எந்த ஆண்டு எந்தப் பத்திரிகையில் வெளிவந்தன என்ற குறிப்புடன் அப் புத்தகம் வெளிவந்தது.  அப் புத்தகம் முழுவதும் ராமையாவின் ஒவ்வொரு கதையாக எடுத்து விமர்சனம் எழுதி இருந்தார்.  "ராமையாவின் கதைகளே புத்தகமாக இல்லாதபோது, ஏன் இப்படி ஒரு விமர்சனப் புத்தகத்தை அச்சடித்தீர்கள்?" என்று கேட்டேன்.  ஆனால் யார் சொல்வதையும் சி சு செல்லப்பா கேட்க மாட்டார்.  இன்னும் கூட ராமையாவின் முழுக் கதைத் தொகுதி வெளிவரவில்லை. சி சு செல்லப்பாவின் அந்தப் புத்தகம் வேறு 500 பிரதிகள் வீட்டின் இடத்தைப் பிடித்துக் கொண்டன.  
வயது மூப்பின் காரணமாக சுதந்திர தாகம் புத்தகத்திற்கு நூலக ஆதரவு கிடைக்காமலே மரணம் அடைந்து விட்டார்.  பின் அந்தப் புத்தகக் கட்டுகள் எல்லாம் விற்கப் பட முடியாமல், சி சு செல்லப்பாவின் உறவினரான சங்கர சுப்பிரமணியன் வீட்டில் ஒரு அறையில் இருந்தன.  பல புத்தகங்கள் கரையானால் பாதிக்கப்பட்டு வீணாய்ப் போயின.
"பாருங்கள்...சுதந்திர தாகம் புத்தகங்கள் எல்லாம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திற்கு வரப் போகின்றன," என்று ஒரு கோட்பாடு ரீதியில் விமர்சனம் செய்யும் விமர்சகர் சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிறது.  மூன்று பாகங்கள் கொண்ட சு தா புத்தகத்தின் விலை ரூ.500 தான்.  கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம்.  1997ஆம் ஆண்டில் அது பெரிய தொகை.  யாரும் அவ்வளவு எளிதில் பணம் கொடுத்து வாங்கி விட மாட்டார்கள்.
மேலும் சி சு செல்லப்பாவின் தமிழ் நடை.  அதைப் படித்துப் பழக வேண்டும்.  அவ்வளவு இணக்கமான நடை அல்ல அது.  உதாரணமாக சு தா வின் முதல் பாகத்தில் பக்கம் 300ல் உள்ள ஒரு பாராவில் சி சு செல்லப்பா இப்படி எழுதியிருப்பார் :
"தாங்கள் மதிப்பு வைத்துள்ள தங்கள் ஊர் பிரமுகரை இப்படி அல்ப போலீஸ் நடத்தினால் அங்கேயுள்ள ஜனங்கள் மனம் எப்படி கொதித்திருக்கும் கற்பனை செய்து பார்,"
இப்படி புத்தகம் முழுவதும் அவர் நடையைப் படிக்க பழகியிருக்க வேண்டும்.  ஆனால் நிதானமாக வாசித்தால் அவர் நடையை ரசிக்க முடியும். 
சி சு செல்லப்பாவிடம் எனக்குப் பிடித்தது.  அவருடைய எளிய வாழ்க்கை.  கடைசி வரை தன்னுடைய பிடிவாதத்தை அவர் விட்டுக் கொடுத்ததில்லை.  அவர் எழுத்து மீது அவருக்கு அபார நம்பிக்கை உண்டு.  
அவர் இறந்தபிறகு சுதந்திர தாகம் புத்தகத்திற்கு நூல்நிலைய ஆதரவு கிடைத்தது.  அவருக்கு அந்தப் புத்தகத்திற்காக சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது.  அவர் உயிரோடு இருந்தால் அந்தப் பரிசை வாங்கியிருக்க மாட்டார்.  மேலும் சுதந்திர தாகம் புத்தகத்தை நான்  புத்தகக் காட்சியில் ரூ150 விதம் ஒரு செட் புத்தகத்தை எளிதாக பல பிரதிகளை விற்றுக் கொடுத்தேன்.  எல்லாப் புத்தகங்களும் விற்றுத் தீர்ந்து விட்டன.  
இப்போது சுதந்திர தாகம் மூன்று பாகங்களையும் புத்தகமாக மறுபடியும் கொண்டு வருவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகத்தான் தோன்றுகிறது.  சி சு செல்லப்பாவின் பல புத்தகங்களைக் கொண்டு வந்த காலச்சுவடு பதிப்பகம் ஏன் சுதந்திர தாகத்தை விட்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை.  ஆனால் முதன் முறையாக டிஸ்கவரி புக் பேலஸ் சுதந்திர தாகத்தைக் கொண்டு வர உள்ளது.  வேடியப்பனின் துணிச்சலுக்கு என் வாழ்த்துகள்.  ஆயிரம்பக்கங்களுக்கு மேல் உள்ள இப் புத்தகத்தின் சலுகை விலை ரூ.1000.  சி சு செல்லப்பாவின் புதல்வர் மணியைச் சந்தித்து உரிமைப் பெற்றுதான் இப் புத்தகத்தை வேடியப்பன் கொண்டு வருகிறார்.  அவர் உற்சாகத்திற்கு யாரும் தடை செய்ய முடியாது.  இத் தருணத்தில் 
    சி சு செல்லப்பா உயிரோடு இருந்தால் அவருடைய ஆசிர்வாதம் வேடியப்பனுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். நானும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


 

20.9.16

எதையாவது சொல்லட்டுமா ......102

        

அழகியசிங்கர்


நேற்று நான் மயிலாடுதுறையில் இருந்தேன்.  நான் தங்கியிருக்கும் லால் பகதூர் வீதிக்குச் செல்லும் வழியில் ஏகப்பட்ட நாய்கள்.  ஒவ்வொன்றும் கத்திக்கொண்டிருந்தது.  எனக்கு நாய் என்றால் பிடிக்காது.  கடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கூட உண்டு.  என்னை பைக்கில் அழைத்துக்கொண்டு வந்தவர், மயிலாடுதுறையில் இருக்கும் என் நண்பர் பிரபு.  அவரிடம் கேட்டேன்:

"இந்த நாய்களை ஒன்றும் செய்ய முடியாதா?"  'முடியாது,' என்பதுபோல் தலை ஆட்டினார்.  இரவு நேரத்தில் தனியாக அந்தத் தெருவில் நடந்து வர முடியுமா என்பது சந்தேகம்.

சில மாதங்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவருக்கு அந்தப் பகுதியில்தான் ஒரு நாய் கடித்துவிட்டது.  பிரபுடன் வண்டியில் போனதால்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.   அந்த உறவினர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மயிலாடுதுறைக்கே வரவில்லை என்று பிரபுவிடம் சொல்லி ஜோக் அடித்தேன்.  

"மேனகா காந்தியால் பிராணிகள் வதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டதால், நாய்களை யாரும் பிடித்துக்கொண்டு போக மாட்டார்,"
 என்றார்  பிரபு பெருமிதத்தோடு.

"ஆனால் ஒன்று செய்யலாம்.  எல்லா நாய்களுக்கும் கருத்தடை செய்து விடலாம்," என்றேன் நான். பின் நாய்களைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டோம்.  பின் அசிக்காடு என்ற ஊரில் உள்ள வீரன் கோயிலுக்கு நாங்கள் இருவரும் ஒன்றாகச் சென்றோம்.  வழியில் மயூர விலாஸ் என்ற ஓட்டலுக்குச் சென்று இட்லி வடையுடன் தோசையும் சாப்பிட்டோம்.  ஆனால் தோசையைப் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை.  வேண்டாமென்று ஒதுக்கி விட்டோம்.  அசிக்காடு என்ற ஊரல் ஒரே ஒரு குருக்கள்தான் அவர் பல கோயிலுக்கும் குருக்களாக இருக்கிறார்.  கோயிலில் சாமி மாத்திரம்.  அவர்தான் பூஜை செய்து கொண்டிருக்கிறார்.  எங்களுடன் வீரன் கோயிலுக்கு வந்து அங்கு அர்ச்சனை செய்தார்.  வீரன் என்பது கோயில் பக்கத்திலுள்ள பனை மரங்கள்தான் என்று பனை மரம் இருக்கும் திசையைக் காட்டினேன் பிரபுவிடன்.

பிரபு என்னை மயிலாடுதுறையில் விட்டுவிட்டு சிதம்பரம் சென்று விட்டார்.  எப்படி? பைக்கில். அவருக்கு சின்ன வயது என்றாலும் துணிச்சல் அதிகம்.  நேற்று ஒரே வெயில்.  மயிலாடுதுறையில் உள்ள எங்கள் வங்கியில் பணிபுரியும் என் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்.   அவரைப் பார்க்கும்போது என்னால் நம்ப முடியவில்லை.  வயதானவராகக் காட்சி அளித்தார்.  அதற்கான காரணம் என்ன என்று புரியும்.  ஒருவர் வங்கியில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து பின் பதவி உயர்வு பெற்றால், அவருக்கு பதவி உயர்வு பலனாக சர்கரை, இரத்த அழுத்தம் எல்லாம் வந்துவிடும்.  நண்பர் இரவு 8.30க்குத்தான் வீட்டிற்கு அலுவலகத்திலிருந்து போவதாக வருத்தத்துடன் சொன்னார்.  "வவுச்சர்களை பாஸ் செய்யும்போது, ஜாக்கிரதை," என்றேன்.  "கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்," என்றார்.  

மாலை 4 மணிக்கு பிரபு வந்திருந்தார்.  அவர் முகத்தில் களைப்பு தெரிந்தது. ஆனால் உற்சாகமான மனிதர்.  ஒரு கவிதை ஒரு கதை கூட்டத்தை மயிலாடுதுறையில் நடத்த நினைத்தேன்.  ஆனால் பிரபுவிற்கு மூட் இல்லை.  அதனால் அந்த முயற்சியைத் தொடர வில்லை.  அதனால் நான் ஒரு கவிதை ஒரு கதை ஒரே ஆள் கூட்டமாக மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இரவு 8 மணி சுமாருக்கு ஆரியாஸில் நானும் பிரபுவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  அப்போது வெள்ளம் வந்தபோது திருப்பனந்தாள் காசி மடம் ஒரு கிராமத்தை தத்து எடுத்து உதவி செய்ததை பிரபு விவரித்துக் கொண்டிருந்தார்.  யாருக்காவது உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிரபுக்கு எப்போதும் உண்டு.  சிதம்பரம் சென்றது கூட யாருக்கோ படிப்புக்காக உதவி செய்யத்தான்.  நான் அவர் பெயரை இங்கு பயன்படுத்துவதைக் கூட அவர் விரும்ப மாட்டார்.  ஆனால் அவரைப் பற்றி தெரிய வேண்டு மென்பதற்காககத்தான் அவர் அனுமதி இல்லாமல் பெயரைப் பயன்படுத்துகிறேன்.

நானும் அவரும் பேசிக்கொண்டிருக்கும்போது சில நிகழ்ச்சிகள் நடக்கும்.  சிலசமயம்.  ஒருமுறை மயிலாடுதுறையில் இருந்தபோது எனக்கு சுரம்.  ஒரு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனார்.  அங்கே ஒரே கூட்டம்.  நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.  அந்த சமயத்தில் எங்கள் முன்னால்  டாக்டரைப் பார்க்க வந்திருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் இதயம் துடிக்க கீழே விழுந்து மரணம் அடைந்து விட்டார்.  எனக்கும் பிரபுவுக்கும் பெரிய திகைப்பு.  நான் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட்டேன்.

அந்த நிகழ்ச்சியைத்  தாங்க முடியாமல் ஆஸ்பத்ரி வாசலில் பிரபு வாந்தி எடுத்தார்.  

தன்னலமற்ற சேவை செய்வதில் காசிமடத்தின் பங்கைப் பற்றி பிரபு பேசிக்கொண்டு வந்தார்.  "உழவன் எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும்," என்றேன் பிரபுவிடம்.  திரும்பவும் நாங்கள் வீட்டிற்கு வந்து, நான் சென்னைக்குச் செல்ல ஆயுத்தம் செய்து கொண்டேன்.  என்னை டூவீலரில் ரயில்வே ஸ்டேஷனலில் கொண்டு விட தயாராக இருந்தார்.

அப்போதுதான் பிரபுவிற்கு காசி மடத்திலிருந்து செய்தி வந்தது.  திருப்பணந்தாள் காசிமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் சித்தி அடைந்து விட்டார் என்ற செய்தி.  நாங்கள் ஆர்யாஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சுவாமிகளுக்கு எதிர்பாராத விதமாய் மாரடைப்பு வந்து சித்தி அடைந்து விட்டார்.  பிரபுவும் அவரும் சில தினங்கள் கழித்து பங்களூர் செல்வதாக இருந்தார்கள். உண்மையில் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பற்றிதான் பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.  இதுமாதிரியான நிகழ்வு ஒரு தொடர்ச்சியா?

நான் உழவன் எக்ஸ்பிரஸ் பிடித்து செல்லும் இத் தருணத்தில் இந்தச் செய்தி வந்தது.  பிரபு பரபரப்பாகி விட்டார்.  பலருக்கு போன் செய்தார்.  உடனேயே என்னை ஸ்டேஷனலில் கொண்டு விட்டு திருப்பனந்தாள் செல்ல தீவிரமாக இருந்தார்.  அப்போது மணி இரவு பத்து மணி இருக்கும்.  "வேண்டாம். பிரபு.  காலையில் போய்ப் பாருங்கள்," என்றேன்.  பிரபு பதட்டத்தில் இருந்ததால் அதையெல்லாம் கேட்கவில்லை.  திருப்பனந்தாள் கிட்டத்தட்ட மாயவரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  தெருவில் டூ வீலரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலர் தெருவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து பிரபு வண்டியை நிறுத்திவிட்டு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் சித்தி அடைந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்.  

உழவன் எக்ஸ்பிரஸில் தனியாக என்னை விடும்போது நானும் அமைதி இல்லாமல் இருந்தேன்.  மாரடைப்பு வந்தால் யாராலும் உடனடியாக காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு முன்னால்,

நகுலனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.

18.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 21


அழகியசிங்கர்  


தூரத்து மலைகள்


ஆனந்த்
தூரத்து மலைகள்
அருகில் நெருங்கும்போது
பக்கத்து மரங்கள்
விலகி வழிவிடுகின்றன

பெருமிதம் கொள்கின்றன
மலைகள்

ஒருநாள்
வானம் வந்து
சூழ்ந்தணைத்துக்கொண்டபோது
மரங்களும் மலைகளும்
வெட்கிப்போய்
ஓரம் புகுந்தன

வானம் அவற்றைக் கூப்பிட்டு
சேர்த்தணைத்துக்கொண்டது

வானத்தின் அணைப்பில்
சற்றும் வலிக்காமல்
மலைகளும் மரங்களும்
மிதந்து கொண்டிருக்கின்றன

நன்றி : அளவில்லாத மலர் - கவிதைகள் - ஆனந்த் - விலை ரூ.65 - பக் : 86 - முதல் பதிப்பு : டிசம்பர் 2007 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன் : 04652 - 278525

17.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 20

அழகியசிங்கர் 

 ஆயா

எம் டி முத்துக்குமாரசாமி 
ஆயாவின் பெயரை யாரும் கேட்டதில்லை
குடும்பம் உண்டா
விலாசம் என்ன
வயது என்ன
சொந்த ஊர் எது
தினசரி எங்கிருந்து வருகிறாள்
எங்கே போகிறாள்
நோயுண்டா நொடியுண்டா
எப்படி சளைக்காமல் வேலை செய்கிறாள்
யாரும் கேட்பதில்லை
சம்பளப்பணம் பேசியதோடு சரி

இந்த ஆயா இல்லாவிட்டால்
இன்னொரு ஆயா
பேச்சில்லாமல் வேலையைப் பார்த்தோமா
போனோமா
என்றிருக்க வேண்டும்
அவ்வளவுதான்

என்றாலும்
ஆயாவின் அரதவணைப்பை
ஒளியை அறிவது போல
நன்கு அறியும்
உங்கள் குழந்தைகள்

நன்றி : நீர் அளைதல் - கவிதைகள் - எம் டி முத்துக்குமாரசாமி - பக்கம் : 112 - விலை : ரூ.90 - முதற் பதிப்பு அக்டோபர் 2012 - வெளியீடு : நற்றிணை பதிப்பகம், ப எண் : 123 எ புதிய எண் 243 எ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5
தொலைபேசி : 9486177208 - 044 43587070

16.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 19

அழகியசிங்கர் 

 பற்று          

ந ஜயபாஸ்கரன்குலுக்க நீட்டிய கையைப்
பின்னால்
இழுத்துக் கொள்ள
மறந்து
போயிற்று.

சிறிது கண்ணீர்
(கண்ணீர் என்பதே
அசங்கிய வார்த்தை)
நிறைய சொல்
செலவான பின்
தெரிந்தது
நீட்டிய கையைப்
பற்றிக் கொள்ள
எதிரே கை ஒன்றும்
இல்லை
என்று.

நீட்டிய கையை
நட்டு விட்டுப்
பயணப் பட்டேன்
எதிர்த் திசையில்
ஈரம் அற்ற
இன்னொரு கையை
எடுத்துக்
கொண்டு

நன்றி : அர்த்தநாரி அவன் அவள் - கவிதைகள் - ந ஜயபாஸ்கரன் - பக்கங்கள் : 143 - விலை ரூ.100 - முதல் பதிப்பு : டிசம்பர் 2011 உயிர் எழுத்து பதிப்பகம், 9 முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி - 1 - தொலைபேசி : 0431 - 6523099 - 

15.9.16

பத்து கேள்விகள் பத்து பதிலகள்- கௌரி கிருபானந்தன்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 6

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 6    
                                                                                                                                           15.09.2016

அழகியசிங்கர்


மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற கௌரி கிருபானந்தனை பேட்டி எடுத்து பத்து கேள்விகள் பத்து பதில்கள் பகுதியில் சேர்த்து உள்ளேன்.  கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். தமிழில் கு அழகிரிசாமி சிறுகதைத் தொகுதியை சாகித்திய அக்காதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.  அதே போல் பிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற நாவலையும் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.  அவருடைய சிறிய வீடியோ பேட்டி இதோ.

https://www.youtube.com/watch?v=5KQL8IunxKU

14.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 18

அழகியசிங்கர் 

  எங்கள் ஜாதி

கிருஷாங்கினி         மாத முதலில் அல்லது கடைசியில்
இடைவிடாத லாரிகளின் ஓட்டம்,
காலியாக அல்லது தானிய மூட்டையுடன்.
அரசின் தானியக் கிடங்கு,
அதன் அருகில் எங்கள் வீடு
விடியற் கருக்கலில் ஆளரவமற்ற போதில்
காக்கைகளும் குருவிகளும் தெருவில்
தானியம் கொத்திப் பசியாறுகின்றன.


நன்றி : கவிதைகள் கையெழுத்தில் - கவிதைகள் - கிருஷாங்கினி - விலை : ரூ.150 - பதிப்பாண்டு 2007 - பக்கம் : 143 - அளவு கால் கிரவுன் - வெளியீடு : சதுரம் பதிப்பகம், 34 சிட்லப்பாக்கம் 2வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை 600 047 - தொலைபேசி : 044 - 22231879 13.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 17

அழகியசிங்கர் 


முனியமரம்

பாலாஅந்த புளியமரத்தைக் கடந்துதான்
எல்லோரும் செல்லவேண்டும் ஊருக்குள்

உருண்டு திரண்டு நிற்கும் அந்தப் புளியமரம்
ஒட்டுமொத்த ஊருக்கான
பயத்தையும் உள்வைத்திருந்தது

ஒத்தையாய் ஒருவரும் கடப்பதில்லை
முனி இருப்பதாய் சொல்லும்
அந்தப் புளியமரத்தை

வாந்தி பேதி முதல்
நல்லது கெட்டது வரை
முனியோட வேலைதான் என நம்பிய ஊர்
இரவு எட்டுமணிக்கும்
சாமியாடியின் பேச்சுக்கும்
அடங்கிபோகும்

முனி விரட்டுதலும்
மூலிகை வைத்தயமும்
மூன்று தலைமுறையாய் வளர்க்கிறது
சாமியாடியின் சந்ததியை

வாக்கு கேட்டு வருவோரின்
வசதியை பொருத்து வசூலிக்கப்படும்
வகை வகையாய் சுருட்டு, சாராயம், கோழி என
எல்லாவகை வஸ்த்துக்களும்

ஒரு நாள்
அடித்த அசுரக் காற்றில்
அடியோடு சாய்ந்த முனியமரம்
பெருந்திரள் கூட்ட பூசையோடு
அகற்றப்பட்டது

பிழைப்புப்போன விசனத்தில்
ஒடுங்கிப்போன சாமியாடிக்கு
பாடம் போட்டாள் சாமியாடி சம்சாரம்

"அட கூறுகெட்ட மனுசா
ஒத்தையா குத்தவைச்சு ஒக்காராம
ஊருக்குள்ள போயி சொல்லு!
புளியமரத்துல இருந்த முனி
நேத்து வைச்ச புங்க செடியில்
குடியேறிச்சுனு"

அடுத்த பூசை ஆரம்பமானது.......


நன்றி : முனியமரம் - கவிதைகள் - பாலா - விலை : ரூ.80 - பதிப்பாண்டு 2015 - பக்கம் : 80 - புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11 அப்துல்ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை, சென்னை 600 015
தொலை பேசி எண் : 044 - 42147828

11.9.16

பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11


தொலைந்துபோன பாரதியார்


அழகியசிங்கர்
நண்பரொருவர் பேச்சைக் கேட்டு
எழுதிப்பார்த்தேன் பாரதியாரை
துடிக்கும் மீசையுடன்
என் முன்னால் நின்றார் பாரதியார்
எங்கே ஒளிந்திருக்கிறீர்
என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்
சிரித்தபடி மறைந்து விட்டார்

போனில் படித்தபோது
நண்பர் தலை ஆட்டி
'நன்று நன்று' என்றார்
கொண்டு வருவார்
துடிப்புடன்
பாரதியார் பற்றி எழுதிய
பலர் கவிதைகளையெல்லாம்
சேர்த்தென்றால்
கேட்டவுடன்
திட்டத்திலிருந்து விலகி விட்டார்

அப்போது எழுதிய
அந்தக் கவிதையை
எங்கே வைத்தேன்
ஃபைல்களைப் புரட்டிப்
பார்த்தாலும் கிட்டவில்லை
பாரதி என் பாரதி

நீண்ட நோட்டில்
எழுதிப் பார்க்கும்
கவிதைகள் பலவற்றை
சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு
இருந்தாலும்
பாரதியாரைப் பற்றி
நானெழுதிய கவிதையைக்
காணவில்லை ஏனோ..
எங்கே ஒளிந்துகொண்டார்?
தெரியவில்லை
வாவென்றால் வருவாரா?
தெரியவில்லை

அவர் வரிகளிலிருந்து
கயிறு பிடித்து
இறங்கியிருக்கிறோம்.
வழிதெரியாமல்
திகைத்த
எங்களுக்கு
வரங்கொடுத்து
வரி தந்த மேதையவர்

அவரை வைத்துப் படம் எடுக்கிறார் பலர்
பாட்டுப்பாட பிய்த்துக் கொண்டனர்
அவர் பாடல்களை

நானோ கவிதை எழுத முயற்சிக்கிறேன்


10.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 16

அழகியசிங்கர் 


  வேஷம்

க. நா. சு


நான் அறிவாளி என்று வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்
நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னை சோம்பேறி என்றார்கள்.
நான் எழுதத் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
எல்லோரும், பாவம் அவனுக்கு எழுதவராது என்றார்கள்.
நான் பொய்யன் போல வேஷம் போட்டபோது
அவர்கள் எல்லோரும் என்னைப் பொய்யன் என்றார்கள்
நான் பணக்காரன் போல நடந்துகொண்டபோது
அவர்கள் என்னைப் பணக்காரன் என்றார்கள்.
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் மாதிரி வேஷம்                         போட்டபோது
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் என்றார்கள்.
நானும் அறியாமலே, மனவலி தாங்காது நான் முனகியபோது
நான் துயருற்றவன் போல வேஷம் போடுகிறேன் என்றார்கள்

நன்றி : க நா சு கவிதைகள் - கவிதைகள் -  பக்கம் : 176 - விலை ரூ.65 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83    


9.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 15


அழகியசிங்கர் 

எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு....

விக்ரமாதித்யன்எப்பொழுதும்போல
இருக்கிறேன்

எப்பொழுதும்போல
என்றால்?

எப்பொழுதும்
போலத்தான்

அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்

தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்

காசு கிடைக்கையில்
குடிக்கிறேன்

வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்

ஏதாவது படிக்கத் தோன்றினால்
படிக்கிறேன்

எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்

நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய்ப் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமேயெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்

ஊர்சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்

கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
கோயில் கோயிலாகப் போய் வருகிறேன்

இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே

வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்


8.9.16

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 5

            

அழகியசிங்கர்இதுவரை நான்கு படைப்பாளிகளைப் பேட்டிக் கண்டு பத்து கேள்விகள் பத்து பதில்களை வீடியோவில் பிடித்து யூ ட்யூப்பில் இணைத்துள்ளேன்.  அசோகமித்திரன் தான் இதை ஆரம்பித்து வைத்தார்.  அவரைத் தொடர்ந்து எஸ் வைதீஸ்வரன், சாரு நிவேதிதா, ஞானக்கூத்தன் என்று எடுத்திருந்தேன்.  சமீபத்தில் சென்னை வந்திருந்த எழுத்தாளர் விட்டல்ராவை இது மாதிரி பேட்டிக் கண்டு எடுத்துள்ளேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

7.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 14

அழகியசிங்கர்


தலைப்பில்லாத கல்யாண்ஜி கவிதை

கல்யாண்ஜி


உங்களைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.
தபால் பெட்டியில் கடிதம் இடுபவராக
ஆதார் அட்டை வரிகையில் நிற்பவராக
மீன் வியாபாரியிடம் சிரித்துப் பேசுபவராக,
மழையில் வாகனம் ஓட்டிச் செல்பவராக,
கண்மருத்துவ மனையில் சோதிக்கப் படுபவராக,
மரணவீட்டில் நாற்காலியில் குனிந்திருப்பவராக,
புதிய சுவரொட்டியை ஆர்வமாக வாசிப்பவராக,
கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுப்பவராக,
தலைக் கவசம் அணியாமல் காவலரிடம் கெஞ்சுபவராக,
பலூன் விற்பவரிடம் நீல பலூன் வாங்குபவராக...
இவ்வளவு இடங்களில் பார்த்திருக்கிற என்னை
எங்குமே பார்க்காதது போல் உங்களால்
போக முடிவது எப்படி
நன்றி : மூன்றாவது முள் - கவிதைகள் - கல்யாண்ஜி - பக்கம் : 64 - விலை ரூ.55 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83    - PHONE : 044 - 24896979

5.9.16

நவீன விருட்சம் 100வது இதழும் நானும்...

.


அழகியசிங்கர்


நவீன விருட்சம் 100வது இதழைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இதழ் வெளிவந்துவிடும்.  மொத்தம் 250 பக்கங்களுக்கு மேல்.  இதுதான் முதல் முறை நான் அதிகப் பக்கங்களுடன் நவீன விருட்சம் இதழைத் தயாரிப்பது.  ஏகப்பட்ட கவிதைகள், ஏகப்பட்ட கதைகள், கட்டுரைகள் என்று இதழ் ரொம்பி வழிகிறது.  இந்த முறை எனக்கு உதவி செய்ய நண்பர்கள் வட்டமும் சேர்ந்துள்ளது.  

 100வது இதழுக்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபு அனுப்பிய கவிதையை உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.

புத்தகம்
--------------

பலர் உள்ள
ஒரு வீட்டில்

பிரியும் தாள் திரளாய்
சஞ்சிகையாய்
காலிகோ பைண்டாய்
பேப்பர் பேக்காய்
பேதமாகி
பிரிந்து
ஒற்றைச்சொல்
அடையாளப்படுத்தலாய்
ஆனது
புத்தகம்

மொழி படியா
மழலைக்கு
பிம்பப் பெருவெளியாய்

சிறார்க்கு
சாதனையாய்
வெல்லும் சவாலாய்

மங்கையர்க்கு
குறிப்புகளின்
சமையலாய்

முதியோர்க்கு
கதியாய்

தன்னிருப்பை
தானுணர்ந்தது
புத்தகம்

ரசங்கள்
ஒன்பதும்
வாசகர்
உணர்ந்தும்

வாசித்து
தவழும் குழவி
ஸ்பரிசித்து
கிழிக்கும்
போது

மிகவும் மகிழ்ந்தது
புத்தகம்

மயிலாடுதுறை பிரபு

3.9.16

பார்வையாளராக இருத்தல்

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்

 பார்வையாளராக இருத்தல்

                                                                                                            தமிழில்  : அழகியசிங்கர்

கேள்விகேட்பவர் :  நான் முழுக்க ஆசைகளுடன் இருப்பவன்.  எப்படி நான் விரும்புவதைப் பெற முடியும்?

மஹாராஜ் : நீங்கள் விரும்புவதைப்பெற தகுதியுடையவரா?  ஏதோ வகையில் நீங்கள் விரும்புவதைப்பெற நீங்கள் உழைக்க வேண்டும்.  உங்களுடைய சக்தியைச் செலவிடவேண்டும்.  பின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

கே.கே : எங்கிருந்து அந்தச் சக்தியைப் பெறுவது?

மஹா : நம்முடைய ஆசையே நம் சக்தி.

கே.கே :  அப்படியென்றால் ஏன் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதில்லை.

மஹா : அது நிறைவேறும்படியாக கடைசிவரை வரும்படி வலிமை மிக்கதாக இருக்காது..

கே.கே :  ஆமாம்.  அதுதான் என்னுடைய பிரச்சினை.  சிலவற்றை விரும்புகிறேன்.  அதை நிறைவேற்றப் போகும்போது சோம்பேறியாக இருக்கிறேன்.

மஹா : உங்களுடைய ஆசை தெளிவாகவும் வலிமையாகவும் இல்லாவிட்டால், அது எந்த உருவத்திற்கும் வராது.  கூடவே, உன் ஆசை உன்னுடையதாக இருக்கும் பட்சத்தில் அதாவது உன் சந்தோஷத்திற்காகவென்றால் அது குறுகியது.  உன்னை மீறி வெளிப்படாது.

கே.கே :  இன்னும் மிகச் சாதாரண மனிதர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அடைந்து விடுகிறார்கள்.

மஹா : ரொம்ப காலத்திற்குப் பெரிதாக என்ன நினைத்தாலும், அவர்களுடைய சாதனைகள் குறுகியவை.

கே.கே :  சுயநலமில்லாத ஆசைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மஹா : நீங்கள் ஒரு பொதுவான தன்மைக்காக ஆசைப்பட்டால், இந்த உலகம் முழுவதும் உங்களுடன் சேர்ந்து ஆசைப்படும்.  மக்களுடைய ஆசையை உங்கள் ஆசையாக எடுத்துக்கொள்ளுங்கள்.  அதற்காக முயற்சி செய்யுங்கள்.  அது நிச்சயம் தோல்வி அடையாது.

கே.கே : மக்களுக்காக என்பது கடவுளுடைய செயல்.  என்னுடையது அல்ல.  நான் என்னைப்பற்றிதான் நினைத்துக்கொள்கிறேன்.  என்னுடைய தேவையான ஆசைகள் நிறைவேற நான் பார்ப்பதில் தவறில்லை அல்லவா?  என்னுடைய ஆசைகள் நியாயமானவை.  அவை சரியான ஆசைகள்.  ஆனால் அவை ஏன் உண்மை ஆவதில்லை.

மஹா : சூழ்நிலைகளைப் பொறுத்தே ஆசைகள் நியாயமானதா இல்லையா என்பது தெரியும்.  அது எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.  அது ஒவ்வொருத்தரைப் பொறுத்த விஷயம் எது நல்லது கெட்டது என்பதை அறிய.

கே.கே : என்ன மாதிரியான அளவுகோல் உள்ளது நல்லது கெட்டது என்ற வித்தியாசத்தை அறிய.   எப்படி நான் அறிந்துகொள்வது எது மாதிரியான ஆசை நல்லது அல்லது கெட்டது என்பது.

மஹா : உங்களைப் பொறுத்தவரை துக்கத்தைத் தருகிற ஆசைகள் எல்லாம் தவறானவை.   அதேபோல் சந்தோஷத்தைத் தருகிற ஆசைகள் எல்லாம் சரியானவை.  ஆனால் நீங்கள் மற்றவர்களை மறக்கக் கூடாது.  அவர்களுடைய துக்கமும், சந்தோஷத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கே.கே :  முடிவுகள் எதிர்காலத்தில் உள்ளன.  எப்படி எனக்குத் தெரியும் அவர்கள் எப்படி இருப்பார்களென்று.

மஹா : உங்கள் மனதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.  நீங்கள் மற்றவர்களைவிட வித்தியாசனமானவர் இல்லை.  அவர்களுடைய பெரும்பாலான அனுபவங்கள் உங்களுக்கும் பொருந்தும்.  எப்போது தெளிவாகவும் ஆழமாகவும் யோசனை செய்யுங்கள்.  தீவிரமாக உங்களுடைய முழுமையான ஆசைகளை நோக்கிச் செல்லுங்கள்.  அவற்றின் மாற்றங்களையும் புரிந்துகொள்ளுங்கள்.  அவை சிந்தனாபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உங்களை உருமாற்றுகிறது.  உங்களுடைய செய்பாடுகளையும் அவை மாற்றுகிறது.  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்குத் தெரியாததை நீங்கள் ஒதுக்கித் தள்ள முடியாது.  உங்களைத் தாண்டி போகவேண்டுமென்றால், உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கே.கே : இது என்ன அர்த்தத்தைத் தருகிறது?  நான் என்னை அறிந்துகொள்வதன் மூலம் நான் என்ன தெரிந்துகொண்டு விட முடியும்?

மஹா : நீங்கள் எதுவுமில்லை என்பதை

கே.கே : நான் எதுவுமில்லையா?

மஹா : நீங்கள் என்னவாக உள்ளீர்களோ அவ்வாறு ஏற்கனவே உள்ளீர்கள்.  நீங்கள் எதுவுமில்லை என்பதை அறியும்போது, நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைந்து விடுகிறீர்கள்.  உங்களுடைய உண்மையான தன்மையுடன் இருந்து விடுகிறீர்கள்.  இவையெல்லாம் தானகவே எந்த முயற்சியில்லாமல் நடக்கும்.

கே.கே :  நான் என்ன ஆராய்வது?

மஹா : நீங்கள் ஆராயவேண்டியது ஒன்றுமில்லை என்பதைத்தான்.  நீங்கள் நீங்களாக உள்ளீர்கள்.  அவ்வளவுதான்.

கே.கே : ஆனால் இறுதியாக நான் என்னவாக உள்ளேன்?

மஹா : நீங்கள் எதாக இல்லை என்பதை கடைசிவரை உதறுவதுதான்.

கே.கே :  எனக்குப் புரியவில்லை

மஹா : நீங்கள் இதுவாகவோ அதுவாகவோ இருப்பதாக   தீர்மானிக்கப்பட்ட கருத்தாக உங்களிடம் உள்ளது.   அதுதான் உங்களைக் கட்டுப்படுத்துகிறது.

கே.கே : நான் எப்படி இந்தக் கருத்திலிருந்து விடுபடுவது?

மஹா : நீங்கள் என்னை நம்புவதாக இருந்தால், நான் சொல்வதைக் கேளுங்கள்.   தெளிவான விழிப்புணர்வு நிலையில் நீங்கள் உள்ளீர்கள். முடிவில்லாதத் தெய்வீகத்தன்மையை அது வெளிப்படுத்தும்.  இதை உணருங்கள்.  அதன்படி வாழுங்கள்.  என்னை நீங்கள் நம்பவில்லை என்றால், உங்களுக்குள் பயணம் செய்யுங்கள்.  'நான் யார்?' என்பதை விஜாரித்துக்கொண்டிருங்கள்.  அல்லது உங்கள் மனதிற்குள், 'நான்தான்' என்பதில் குவியுங்கள்.  எளிமையான தெளிவான ஒன்றாக அது இருக்கும்.

கே.கே : உங்கள் மீதான எந்தவிதமான நம்பிக்கையைப் பொறுத்தது அது.

மஹா : உங்கள் உள்ளூணர்வின் மூலம் மற்றவர்களின் மனங்களைப் புரிந்து கொள்வது பொறுத்து.  என்னை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்களையே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

கே.கே :  என்னால் எதையும் செய்ய முடியவில்லை

மஹா : ஒழுக்கமுள்ள பயனுள்ள வாழ்வின் மூலம் உங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்களுடைய எண்ணங்களை, உணர்வுகளை, வார்த்தைகளை, செயல்பாடுகளை கவனியுங்கள்.  இது உங்களைத் தெளிவுபடுத்தும்.

கே.கே :  நான் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டுமா?  வீடு இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா?

மஹா : நீங்கள் எதையும் துறக்க வேண்டாம்.  நீங்கள் வீட்டைவிட்டு வருவதன் மூலம் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்குத் தொந்தரவு தருகிறீர்கள்.  நம்முடைய பந்தங்கள் நம் மனதில் உள்ளன.  அவை நம்மை விட்டுப் போகாது.  நாம் நம்மை அறியும்வரை.  முதலில் உங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.  எல்லாம் தானாகவே வரும்.

கே.கே :  நீங்கள் என்னிடம் முன்பே கூறியுள்ளீர்கள்.  üநான்தான் ஒப்புயர்வற்ற உண்மைý என்று.  இது சுய கருத்தில்லையா?

மஹா : நிச்சயமாக நீங்கள்தான் ஒப்புயர்வற்ற உண்மை.  ஆனால் எதிலிருந்து.  ஒவ்வொரு மணல்துகளும் கடவுள்தான்.  இதை அறிவது முக்கியம்.  ஆனால் அது ஒரு ஆரம்பம்தான்.

கே.கே : நல்லது.  நீங்கள் சொல்கிறீர்கள்.  நான்தான் ஒப்புயர்வற்ற உண்மை என்பதை.  நான் நம்புகிறேன்.  அடுத்தது நான் என்ன செய்ய வேண்டும்.

மஹா : நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  நீங்கள் எதில் இல்லை என்பதை ஆராய்ந்து கண்டுபிடியுங்களென்று.  உடல், உணர்வுகள், எண்ணங்கள், கருத்துக்கள், காலம், வெளி, இருத்தல், இல்லாமல் இருத்தல், இது அல்லது அது - எதுவும் தீர்மானமாக இல்லாமலும், தெளிவில்லாமலும் உங்களை நோக்கிக் குறிக்கப்படுகிறது.  வெறுமனே சொற்களால் ஆன பிரகடனம் எந்தப் பலனையும் அளிக்காது.  நீங்கள் எதாவது ஒரு சூத்திரத்தை முடிவில்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம்.  அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.  நீங்கள் உங்களைத் தொடர்ந்து  கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும் - குறிப்பாக உங்கள் மனதை  
- ஒவ்வொரு கணமும் எதையும் விட்டுவிடாமல்.   'தான்' என்பதிலிருந்தும், 'தான் இல்லை' என்பதிலிருந்தும் அறிய பார்வையாளனாக இருப்பது முக்கியம்.

கே.கே :  பார்வையாளனாக இருப்பது என்னுடைய உண்மைத் தன்மை இல்லை.

மஹா : பார்வையாளனாக இருப்பதற்கு எதாவது பார்ப்பதற்கு இருக்க வேண்டும்.  நாம் இன்னும் இரட்டைத்தன்மையுடன் இருக்கிறோம்.

கே.கே :  பார்வையாளன் பார்ப்பது என்னவாக உள்ளது?

மஹா : வார்த்தைகளைக் கோர்ப்பது உங்களை எங்கும் இட்டுச்செல்லாது.  உங்களுக்குள் செல்லுங்கள்.  பிறகு கண்டுபிடியுங்கள் நீங்கள் என்னவாக இல்லை என்பதை.  மற்றதெல்லாம் ஒன்றுமில்லை.  

(PUBLISHED IN NAVINA VIRUTCHAM 68-69TH ISSUE)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 13


அழகியசிங்கர்


        அரும்புகள்

ராமலக்ஷ்மிஎன்றைக்கு
எப்போது வருமென
எப்படியோ தெரிந்து
வைத்திருக்கின்றன
அத்தனைக் குஞசு மீன்களும்

அன்னையருக்குத் தெரியாமல்
நடுநிசியில் நழுவிக்
குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட
மெல்ல மிதந்து
உள்ளே வருகிறது
பிள்ளைப் பிறை நிலா.நன்றி : இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி - கவிதைகள் - விலை : ரூ.80 - முதல் பதிப்பு : ஜனவரி 2014 - வெளியீடு : அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306 - தொலைபேசி : 999 454 1010 

1.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 12

அழகியசிங்கர் 

முதல் முத்தம்

சுஜாதா செல்வராஜ்அது அத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை
முன்னறிவிப்பின்றி நிகழ்ந்து முடிந்த முயற்சி

மீனை கவ்விக்கொண்டு பறக்கும்
பறவையின் துரிதக்கணம் அது

கன்னத்தின்
இதழ் சித்திரம் மட்டுமே
அது முத்தம் நிகழ்ந்த இடமென்று
அறிவித்துக்கொண்டிருந்தது

நினைவைக் கலைத்துக் கலைத்து அடுக்கிப்பார்க்கிறேன்
ஒரு முழு முத்தக்காட்சியை
கண்டுணரவே முடியவில்லை

ஆனால்
அதிர்வு அடங்கா நரம்புகளும்
கொதித்து ஓடும் குருதியும்
சொல்லும்
இது போன்றதொரு முத்தம்
இனி சாத்தியமே இல்லை என்று


நன்றி : காலங்களைக் கடந்து வருபவன் - சுஜாதா செல்வராஜ் - கவிதைகள் - விலை : ரூ.90 - முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2014 - வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 9042158667