31.5.15

முத்துசாமியின் நாடக வெளியிட்டு விழாஅழகியசிங்கர்


ந முத்துசாமியின் நாடகங்கள் வெளியீட்டு விழா போதி வனம் என்ற அமைப்பின் மூலம் நேற்று (30.05.2015) மினி ஹால், மியூசிக் அக்கடமியில் நடந்தது.  காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை.  கூட்டத்திற்குச் செல்வதற்கு முன், நான் சில சில்லறை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு நுழையும் போது, உட்கார இடம் கிடைக்கவில்லை.  நிஜ நாடக இயக்குநர் ராமசாமி என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  ஒரு வழியாக இடம் தேடி  உட்கார இடம் கண்டுபிடித்து உட்கார்ந்தேன்.  

 கூத்துப் பட்டறை என்ற அமைப்பை ஆரம்பித்து, அதில் தீவிரமாக இயங்கியவர் முத்துசாமி.  அவர் பல நடிகர்களை கூத்துப் பட்டறை மூலம் உருவாக்கியவர்.  

அவர் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.  முதன் முதலில் அவருடைய சுவரொட்டிகள் என்ற நாடகத்தை லலித்கலா அகாதெமியில் நடைபெறும்போது பார்த்திருக்கிறேன்.  அப்போது என் அலுவலகத்தில் பணிபுரிந்த ரமணன் என்ற நண்பரையும் சந்தித்திருக்கிறேன்.  எனக்கு இந்த நாடகம் சுத்தமாகப் புரியவில்லை.  அப்போது நான் புரியவில்லை என்பதுபோல் ரமணனைப் பார்த்தேன்.  அவரும் அப்படித்தான் தலையை ஆட்டினார். முதலில் இந்த நாடகம் ஒரு மேடையில் குறுகிய இடத்தில் நடைபெறாமல், வெளியில் நடைப்பெற்றது. எப்படி இதை நாடகம் என்று நம்புகிறார்கள் என்று யோசித்தக் கொண்டிருந்தேன்.  ஆனால் முத்துசாமியின் நாடகம் வேறு தளத்தில் எனக்கு நாடகம் பார்த்து ரசிக்கும் தன்மையை ஏற்படுத்தி விட்டது.

நானும் வித்தியாசமாக நடக்கும் நாடகங்களைப் பார்க்கும் நபராக மாறிவிட்டேன்.  பரீக்ஷா என்ற நாடகக் குழுவுடன் சேர்ந்து மூர்மார்க்கெட் என்ற நாடகத்தில் நடித்திருக்கிறேன்.  பின் அங்கிருந்த எடுத்த ஓட்டம் நாடகப் பக்கம் திரும்பவில்லை.  

பரீக்ஷா முத்துசாமியின் நாற்காலிகாரர் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறது.  அதில் ஒரு கதா பாத்திரத்தை என்னால் மறக்க முடியாது.  அசோகமித்திரன்தான் அது.  அவர் எந்த வசனமும் பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பார்.  

முத்துசாமியின் நாடகங்கள் அவ்வளவு எளிதாகப் புரியாது.  ஆனால் அவர் கூத்துப்பட்டறை என்ற அமைப்பு அமைத்து, அதன் மூலம் பல நாடகங்களை எழுதி அவரே இயக்கியிருக்கிறார். அசாத்தியமான துணிச்சல்காரர். ஏற்கனவே அவர் நாடகங்களை க்ரியா புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கின்றன.  

 
ஒரு நாடகத்தில் வசனம் எப்படி பேச வேண்டும் என்பதற்காக தீவிரமான பயிற்சி கொடுப்பவர் முத்துசாமி.  ஒருமுறை நான் ஏற்பாடு செய்த விருட்சம் கூட்டடத்தில் ஞானக் கூத்தன் கவிதைகள் சிலவற்றை எடுத்து நாடகமாக அவர் நடிகர்களை வைத்து நடித்துக் காட்டினார்.  அவர் சிறுகதை எழுத்தாளரும் கூட.  சிறப்பாக பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் பேசுவதும் எழுதுவதும் ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும்.  அவர் பேசும்போது அவரைச் சுற்றி அவருடைய ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டு  இருக்கும்.  21 நாடகங்கள் கொண்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.   ரூ700 க்கு இப் புத்தகத்தை  நேற்று போதி வனம் விற்றுக்கொண்டிருந்தது.

29.5.15

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்அழகியசிங்கர்
                                                                                    1. 

சமீபத்தில் நான் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களைப் பற்றி என் நினைவில் என்ன எழுத முடியுமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  

ஒவ்வொரு மாதமும் கணையாழி நடத்தும் ஒரு கூட்டத்தில் இந்த மாதம் 16.05.2015 சனிக்கிழமை அன்று நானும் பிரமிள் பற்றி பேசியிருக்கிறேன்.  அந்தக் கூட்டத்தில் அமிர்தம் சூர்யா ஒரு சிறப்பான பேச்சை வழங்கி உள்ளார்.  நான் அந்தக் கூட்டத்திற்கு தயாராகும்போது, எழுதி கட்டுரையாக வாசிக்க நினைத்தேன்.  அதன்படி கட்டுரை ஒன்றையும் பத்து அல்லது பதினைந்து பக்ககங்களுக்குள் தயாரித்துக் கொண்டேன்.  ஆனாலும் பிரமிள் பற்றி எழுதிப் படிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது.  அதனால் மனதிலிருந்து பேச தீர்மானித்திருந்தேன்.  எதைப் பற்றி பேச வேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  அவர் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் நன்றாகத் தயாரிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  

எழுத்து காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது என்று ஒரு இடத்தில் பிரமிள் குறிப்பிடுகிறார்.  ஆனால் அவர் கவிதைகளை படிம நிலையில் ஒரு நிதான வாசிப்பில் வாசகர்களை ஆழ்த்துகிறார் என்று தோன்றியது. மேலும் அவர் எழுத்து காலத்தில் ஒரு விதமாகவும், அதன் பின் வேறு விதமாகவும் கவிதைத் தன்மையை மாற்றிக் கொண்டு விட்டார் என்று பட்டது.    நான் பிரமிளுடன் என் நட்பைப் பற்றி பேசினேன்.  பொதுவாக எழுத்து மீது உள்ள அபிமானத்தில் பல எழுத்தாளர்களுடன் எனக்கு நட்பு உண்டு.  பிரமிளும் அவர்களில் ஒருவர்.  அவருக்கு ஏற்பட்ட மரணம் என்னை ரொம்பவும் சங்கடப் படுத்தியது.  அவருடைய தீவிரமான மனப் போக்கு  என்னை ஆச்சரியப்படுத்தத் தவறவில்லை.  நான் பிரமிளைப் பற்றி நன்றாகப் பேசியதாக அமிர்தம் சூர்யா அவர் பேச்சில் குறிப்பிட்டவுடன் நிம்மதி அடைந்தேன்.  

அடுத்துப் பேசிய அமிர்தம் சூர்யா, பேசுவதில் கலையைக் கற்றவர் மாதிரி தென்பட்டார்.  எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்துகிறார், எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசினார்.  மே மாதத்தில் வெளிவந்த கணையாழியின் சிறந்த கதையையும், கவிதையையும் அவர்தான் தேர்ந்தெடுத்தார்.  இணையத்தின் முன்பும்,பின்பும் என்ற தலைப்பில் அவர் சொல்வதை அலசி இருந்தார். 

எப்போதும் எழுத்து பிரசுரம் ஆவது என்பது இணையத்திற்கு முன்பு பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்துள்ளது.  நகுலன் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்துக்கொண்டு தோன்றுவதை எழுதிக்கொண்டே போவார்.  பின் அவற்றை தேவையான பத்திரிகைகளுக்கு அனுப்புவார்.  பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் அனுப்பும் போது, பிடிக்காவிட்டால் பிரசுரம் செய்ய வேண்டாம் என்று எழுதி அனுப்புவார்.   அமிர்தம் சூர்யா அவர் எழுத்துக்களை எந்தந்தப் பத்திரிகைகள் எப்படியெல்லாம்  பிரசுரம் செய்யும் என்ற நுணுக்கத்தை அறிந்து வைத்திருந்தார். சவ ஊர்வலம் என்ற கவிதையை விருட்சம் பத்திரிகைக்கு அனுப்பியதாகவும், அதை பிரச்சார நெடி உள்ள கவிதை என்று நான் நிராகரித்ததையும் குறிப்பிட்டிருந்தார். எனக்க உண்மையில் ஞாபகம் இல்லை. 

அமிர்தம் சூர்யா, ப்ரியம், தமிழ் மணவாளன் கவிதைகளை நான் விருப்பத்துடன் விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.  இதெல்லாம் முன்பு.  இது இணையதளம் காலம். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் இணையம் மூலம் பிரசுரம் செய்து கொள்ளலாம்.  எல்லோருக்கும் ஒருவித சுதந்திரம் வந்து விட்டது.  உண்மைதான்.  ஆனால் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.  ஊடகம் மூலம் அபத்தங்கள் அதிகமாகப் பெருகத் தொடங்கி விட்டன.  கூட்டத்தை சிறப்பான முறையில் கணையாழி ஆசிரியர் ம ரா நெறிப்படுத்தினார். வாழ்த்துகள்.

கணையாழி கூட்டத்திலிருந்து நான் அடுத்தக் கூட்டத்திற்கு வந்து விட்டேன்.  பேசுபவனாக இருப்பதைவிட பார்வையாளனாக இருப்பது சால சிறந்தது.  இக் கூட்டம் கிருஷ்ணகான சபாவில் 22ஆம் தேதி அன்று மே மாதம் நடந்த கூட்டம்.  இதை சுப்பு என்பவர் நடத்துகிறார் என்று நினைக்கிறேன்

.  தமிழ் அறிஞர்களைப் பற்றிய கூட்டம் இது. 14வது கூட்டம் என்று நினைக்கிறேன்.   இக் கூட்டத்திற்கு வ.வே.சுப்பிரமணியனும், ஆர் வெங்கடேஷ் அவர்களும் கலந்துகொண்ட கூட்டம்.  அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ் அறிஞர் ராஜாஜி.  நான் ராஜாஜியை அரசியல் ராஜ தந்திரியாகத்தான் அறிந்திருக்கிறேன்.  பெரியாரும் ராஜாஜியும் வேறு வேறு கருத்துக்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய  நண்பர்கள்.  எளிமையான மனிதர் ராஜாஜி.

  அவருடைய மகாபாரதத்தையும், இராமயணத்தையும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  முதன் முதலாக அந்தப் புத்தகங்கள் அச்சில் வெளிவந்தபோது ஒரு லட்சம் பிரதிகள் விற்றதாக சொல்வார்கள்.  வவேசுவும், வெங்கடேஷ÷ம் ஒருவரை ஒருவர் ராஜாஜியைப் பற்றி பேசிக்கொண்டே போனார்கள்.  இது புதுமாதிரியாக இருந்தது.  திக்கற்ற பார்வதி என்ற நாவல் ஒன்றை ராஜாஜி எழுதியிருப்பதாக என் ஞாபகத்தில் இருந்தது.  அதை ராணிமுத்து புத்தகமாகக் கொண்டு வந்ததாகக் கூட நினைப்பு.  அக் கூட்டத்தில் கேட்ட பேச்சிலிருந்து ராஜாஜி தமிழ் மொழிக்கு பல பங்களிப்பை அளித்திருப்பதாக அறிந்தேன்.  கூட்ட முடிவில் ராஜாஜியின் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.  கிருஷ்ணகானசபாவில், காமகோடி அரங்கம் என்ற ஒன்று உள்ளது.  அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது.  

                                                                  (இன்னும் முடியவில்லை)

15.5.15

புத்தக விமர்சனம் 4

அழகியசிங்கர்
நடைவெளிப் பயணம் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  40 வாரங்கள் குங்குமம் இதழில் தொடராக வந்திருந்த கட்டுரைத் தொகுப்பு இது. பலவிதங்களில் இப் புத்தகம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், 83வயதாகும் அசோகமித்திரன் தன் அனுபவங்களைச் சாராகப் பிழிந்து கொடுத்திருப்பதுதான்.

பொதுவாக புத்தகம் படிக்கும் அனுபவம் மகத்தானது.  பெரும்பாலோருக்கு இது பிடிபடுவதில்லை.  புத்தகம் படிக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அடுத்தப் புத்தகத்திற்கு அவர்களுடைய மனம் தாவிவிடும்.  முதல் புத்தகம் என்ன என்பதுகூட அவர்கள் முழுவதும் மறந்து விடுவார்கள்.

ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் திரும்பவும் படிக்கும்போது அப் புத்தகத்தின் நுன்ணுணர்வு நம்மிடம் வந்து சேரும்.

  எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தொகுதியாகவே எனக்கு இப் புத்தகம் தோன்றுகிறது.  இதில் பலதரப்பட்ட மனிதர்கள், பலதரப்பட்ட இடங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே போகிறார் அசோகமித்திரன்.

'மேலும் படிக்க' என்ற தலைப்பில் அமி அவர்கள் என்னன்ன புத்தகங்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.  அவர் குறிப்பிடும் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை படிப்வர்களுக்கு உண்டாக்குகிறார்.

இப்படி படிக்க என்ற பகுதியில் புத்தகங்களின் மேன்மையைப் பற்றிக் கூறும் போது, அசோகமித்திரன் இப்படியும் எழுதுகிறார் :

   `இந்தப் பகுதி வந்ததிலிருந்து நெருங்கிய நண்பர் முதல், என்னைத் துச்சமாகக் கருதுபவர்கள் வரை, அவர்கள் நூல்களைச் சிலாகித்து எழுத வற்புறுத்துகிறார்கள்.  நம்பகத்தன்மை என்று ஒன்று இருக்கிறது.  நான் மட்டுமே பாராட்டினால் போதுமா?  வெறும் புகழ்ச்சி நம்பகத்தன்மை இல்லாதது.  |  அவர் குறிப்பிடுவது எவ்வளவு உண்மை.

பல ஆண்டுகளாக நான் மேற்கு மாம்பலவாசி.  ஆனால் என் வீட்டில்அருகில் இருக்கும் பப்ளிக் ஹெல்த் சென்டரைப் பற்றிய விபரம் எனக்குத் தெரியாது. அதென்ன பழைய மாம்பலம் என்ற கட்டுரையில்  எம் சி சுப்பிரமணியன் மூலம் உருவான மருத்துவமனையைப் பற்றியும் குறிப்பிட்டு அசோகமித்திரன் எழுதி உள்ளார்.
  
`இன்று ஆஸ்பத்திரி என்பது ஓர் வாணிபச் சாதனம்.  ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் அதைக் கலப்படமற்ற தொண்டாகச் செய்யலாம் என்பதை எம்.சி நிரூபித்துக் காட்டினார்.  கடைசிவரை கதர் உடுத்தி முதிர்ந்த வயதில் தொண்டனாகவே உயிரைத் துறந்தார்.  என் அனுமானம், அவருடைய புகைப்படம் கூடக் கிடையாது.  அவரைப் பாரத்துநானும் பல ஆண்டுகள் கதரே அணிந்தேன்.'  என்று அவர் விவரித்துக் கொண்டு போகிறார்.  

இப்புத்தகம் இன்னொரு விதத்திலும் கவனம் பெறுகிறது. எந்தக் கட்டுரையை எடுத்துப் படித்தாலும், படிப்பவருக்கு பயனுள்ள கருத்து கிடைக்காமல் இருக்காது.

என்னை நெகிழ வைத்த கட்டுரை ஒன்று உள்ளது.  'ஜனதா  அடுப்பு' என்ற கட்டுரை.  அதை வாங்கி வர டில்லியிலிருந்து ஆதவன் என்ற எழுத்தளரைக் கேட்டுக்கொள்கிறார்.  அவருக்கு சிரமம் தரக் கூடாது என்று சென்னை சென்டரலில் தில்லி ரயிலுக்காக அமி காத்துக் கொண்டிருக்கிறார்.  வண்டி அன்று பார்த்து மூன்று மணிநேரம் தாமதமாக வந்தது.  அதைவிட வருத்தம் ஆதவன் ஜனதா அடுப்பு வாங்கி வரவில்லை என்பதுதான்.  இக் கட்டுரையில் எந்த இடத்திலும் ஆதவனை குறை கூற வில்லை.  தன் விதியை நினைத்து வருந்தவுமில்லை.  

அசோகமித்திரரன் கட்டுரையில் அவ்வப்போது நகைக்சுவை தன்மையும் வெளிப்பட்டுக் கொணடிருக்கும்.  தி.க.சியின் தங்கத் தாமரை நாட்கள் என்ற கட்டுரையில், 'என் பக்கத்து வீட்டுக்காரர், "உங்களுக்குத் தினம் இவ்வளவு தபால்கள் வருகின்றனவே, என்னிடமும் ஒரு பத்திரிகையைத் தாருங்களேன்," என்று கேட்டார்.  நான் அவரிடம் 'சோவியத் பலகனி' சில இதழ்கள் கொடுத்தேன்.  அவர் என்னோடு பேசுவதையே விட்டுவிட்டார்'  இப்படி எழுதுவதுதான் அசோகமித்திரன்.  

அசோகமித்திரனின் கதைப் புத்தகத்தைப் படித்தாலும், கட்டுரைப் புத்தகத்தைப்படித்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. 

கட்டுரைகளைக் கூட கதைகள் மாதிரிதான் அவர் எழுதுவார். வாசகனைக் கவர்ந்திழுக்கும் திறமையை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

நடைவெளிப் பயணம் - கட்டுரைத் தொகுதி - அசோகமித்திரன் - பக்கம் : 168 - விலை ரூ. 130 - வெளியீடு : சூரியன் பதிப்பகம், 229 கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600 004 
 

13.5.15

நண்பர்களே,
வணக்கம்.


நவீன விருட்சம் என்ற 97வது இதழ் வெளிவந்து விட்டது.  வழக்கம்போல் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று 64பக்கங்கள் கொண்ட இதழ்.
இதழில் பங்கு கொண்ட படைப்பாளிகளின் விபரம்.

1. என் தஙகையைப் புகழ்ந்து - விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
மொழி பெயர்ப்பு : பிரம்மராஜன்
2. எதிர்பாராத சந்திப்பு - விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
மொழி பெயர்ப்பு : தேஜøகிருஷ்ணா
3. விபத்தில் சிதைந்த காதல் கதை - சிறுகதை - உஷாதீபன்
4. நான் ஒரு சகாதேவன் - கட்டுரை - வைதீஸ்வரன்
5. ஏன் இப்படி ஆயிற்று - சிறுகதை - அழகியசிங்கர்
6. ம.பொ.சியின் ஆறு கதைகள் - கட்டுரை - பெ சு மணி
7. ஒரு பூவின் சாலை மரணம் - கவிதை - ஜெ பாஸ்கரன்
8. சந்திரா மனோகரன் கவிதை
9. மயிலாடுதுறை பாசஞ்சர் - கவிதை - சபரீஸ்
10. இரு கதைகள் - மா தக்ஷ்ணமூர்த்தி
11. புத்தக விமர்சனம் - அழகியசிங்கர்
12. பூத்துக் குலுங்கும் நித்தியம் -
கவிதை - நா கிருஷ்ணமூர்ல்த்தி
13. ஜன்னவி கவிதைகள்
14. இரண்டு கவிதைகள் - அழகியசிங்கர்
15. அஞ்சுகிறேன் - கவதை - பிரதிபா
16. துரை ஜெயபிரகாஷ் கவிதைகள்
17. அற்புதத்தின் ஒரு துளி - கவிதை - நந்தாகுமாரன்
18. கல்தூண் - கவிதை - எஸ் வி வேணுகோபாலன்
19. முதற்சான்றிதழ் - கவிதை - ஜெ பாஸ்கரன்
20. கடிதங்கள்
21. எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்
22. முட்டையினுள் -குந்தர் கிராஸ் - மொ பெ கவிதை

3.5.15

விருட்சம் இலக்கிய சந்திப்பு – 11.டாக்டர் பாஸ்கரன்’ 

விருட்சம் தனது 11 ஆவது இலக்கிய சந்திப்பு நிகழ்வினை 25- 4 – 2015 அன்று மாலை, தி நகர் அலமேலுமங்கா திருமண மண்டபத்தில் நடத்தியது. சமீபத்தில் விஷ்ணுபுரம் பரிசு பெற்ற கவிஞர் திரு ஞானக்கூத்தன் அவர்கள் ‘படைப்பின் இரக்சியம்’ பற்றிப் பேசினார்.

கொல்லன் பட்டறையில் ஈயாக நானும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்! முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களைச் சந்திக்கும் அவா மேலோங்கியிருந்தது !

சுஜாதா அவர்கள் பல கட்டுரைகளில், பல சந்தர்ப்பங்களில் ஞானக்கூத்தனைவாசிக்கச் சொல்லுவார்! கவிதையுலகில் தனக்கென ஒருதனியிடம் உள்ளவர் - அவர் கவிதைகள், காலம் கடந்தும் அவர் புகழ் பாடும். அவரது கவிதை உள்ளமும், வார்த்தைகளை அலசி ஆராயும் திறனும், தொலை நோக்குப் பார்வையும், பரந்துபட்ட இலக்கிய அறிவும், அவரது “கவிதைக்காக” ( கட்டுரைகள், மதிப்புரைகள்) – விருட்சம் வெளியீடு - புத்தகத்தை வாசிக்கும்போது புலப்படும் ! அவரைப் போல்,வரிகளுக்கிடையே, வார்த்தைகளுக்கு நடுவே, எழுத்துக்களுக்குப் பின்னே என அழகாகப் பொருள் சொல்லமுடியாது – அதற்கு, அவருள் இருக்கும் கவிஞனின் பார்வையும், தேடலும் தேவை ! ’கவிதைக்காக’ புத்தகம் பற்றி சற்று விரிவாக வேறொரு சமயம் சொல்லவேண்டியிருக்கிறது .

முதலில், ஞானக்கூத்தன் அவர்களைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. திருவல்லிக்கேணியில் அவர் வாழும் வீடு, தெரு,பார்த்தசாரதி கோயில், கறவைப் பசு, சைக்கிள், மனிதர்கள் எல்லாம் கவிதை பேசின ! இலக்கிய ஆளுமைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஞானக்கூத்தன் ஆகியோரது கருத்துக்களை அவர்களே சொல்லுவதுபோல் நல்ல முறையில் தொகுத்திருந்தார்கள். இரயிலின் கடைசீப் பெட்டி மெதுவாக ஊர்ந்து மறைய, அது மனதில் ஏற்படுத்தும் வெறுமையைக் கூறும் ஞானக்கூத்தனின் கவிதை வரிகளுடன் படம் முடிவது நல்ல முத்தாய்ப்பான நெகிழ்ச்சி. இப்படத்தினைத் தயாரித்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் !

கணையாழியில் தான் எழுதிய ஞானக்கூத்தன் பற்றிய கட்டுரையை திரு மூர்த்தி அவர்கள் வாசித்தார் – தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக ஞானக்கூத்தன் பற்றிய அவர் கட்டுரைகள் வெளியாவதாகக் குறிப்பிட்டார். மூன்று கட்டுரைகள் போதாதுதான் !

பிறகு பேசிய ஞானக்கூத்தன் அவர்கள், மொழி, சொற்கள், அவை உணர்த்தும் ‘இலை மறை காய்’ அர்த்தங்கள் எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு படைப்பாளி எப்படித் தன் தூக்கத்தை இழக்கிறான் என்று விளக்கிய அவர், அந்தக் காரணத்தாலேயே கூட்டங்களுக்கு அதிகம் பேச வருவதில்லை என்றும் கூறினார். நல்லவற்றை எழுத, ஒரு படைப்பாளி நல்ல மனமுடையவனாகவும் இருப்பது அவசியம் என்றார்.

கேள்வி பதில் நேரத்தில், சில கவிதைகளை அவற்றின் போக்கிலேயே, இடம், காலம் சார்ந்து பொருள் கொள்ளவேண்டும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில்,” காலைத் தூக்கி நிற்பவர்தான் நடராஜர் – இல்லையேல் அது அவர் இல்லை “ என்றும், ‘காலைத் தூக்கி’ என்று எழுதுவதற்கும், ’தூக்கிய திருவடி’ என்பதற்குமான இலக்கிய நய வேறுபாட்டை அழகாக எடுத்துரைத்தார்.

திரு அசோகமித்திரன் அவர்கள் எழுத்தாளர்கள் தூக்கம் இழப்பதைப் பற்றியும், ஒரு கவிதை எந்த சூழலில் எழுதப்படுகிறது என்பதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அழகாகப் பேசினார். இந்தத் தள்ளாத வயதிலும் அவர் காட்டும் இலக்கிய ரசனை இன்னும் இளமையாக இருப்பது வியப்புக்குரியது !
நன்றி கூறிய ஆடிட்டர் திரு கோவிந்தராஜன், புதியவர்கள் பலர் இக்கூட்டங்களுக்கு வருகை தருவது மகிழ்ச்சிக்குரியது என்றார். மார்ச் மாத சிறந்த சிறுகதைக்கான பரிசினை திரு அசோகமித்திரனுக்கும், சிறப்புரை ஆற்றிய ஞானக்கூத்தன் அவர்களுக்குப் பரிசினையும் வழங்கியவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

நல்ல இலக்கிய சிந்தனையுடனும், மகிழ்ச்சியான மன நிறைவுடனும் விருட்சம் இலக்கியக் கூட்டம் நிறைவடைந்தது !