29.7.11

எதையாவது சொல்லட்டுமா........49


நான் இங்கே வந்தபிறகு 2 கவிதைகள் எழுத முடிந்தது.  கவிதை என்று சொல்லும்போது ஒரு விஷயம் ஞாபகவருகிறது.  இப்படி ஒரு இடத்திற்கு வந்தால், அந்த இடத்தை வைத்து கவிதை எழுத முடியும்? எழுத முடியும் என்றால் என்னவென்று எழுதுவது? 

க்ளியர் வாட்டர் பீச் என்ற இடத்திற்குச் சென்றேன்.  மதியம் நேரத்தில் படபடக்கும் வெயிலில், எல்லோரும் சத்தம்போட்டபடி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்.  நானும் கடல்நீரில் நின்று கொண்டிருந்தேன்.  என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நண்பர், இந்தக் காட்சியை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்ல முடியாது.  இப்போது இல்லாவிட்டால் பின்னால் எழுதலாம் என்றேன்.  பாரதியார் காலத்தில் பாரதியாருக்கு கவிதை எழுதுவது எளிது.  தேசம் விடுதலை ஆவதைப் பற்றி எழுதலாம்.  பக்தி பாடல்கள் எழுதலாம்.  மேலும் பாரதியாரே அவருடைய கவிதைகள் சினிமா பாடல்களாக பாட ஆரம்பித்தபிறகுதான் புகழ் அடைந்திருப்பார்.

 இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கு எந்தப் புகழும் கிடைக்குமா என்பது சந்தேகம்.  கவிதைத் தொகுதி அச்சிட்டால் அவர்களே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  கவிதை எழுதுவதும் ஒரு சவால். நவீன விருட்சம் blogspot ல் எழுதுபவர்கள் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. அந்த விமர்சனத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் எழுதுவதை நிறுத்தி விடலாம். 

2008லிருந்து தொடர்ந்து வரும் blogspotலிருந்து வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட்டாவ் பின்னால் எழுதுபவர்களுக்கு உபயோகமான ஒன்றாக அத் தொகுப்பு அமையும்.

நான் நடந்துவிட்டு மாடிப்படிக்கட்டுகளைக் கடக்கும்போது ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தேன். சிறிது நேரம் அது சுற்றுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  அதன் நிறம் அதன் லாவகம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.  பின் சுற்றி சுற்றி அது எங்கோ போய்விட்டது.  நான் எழுதிய இரண்டாவது கவிதையில் ஈக்களே ஈக்களே எங்கே போனீர்கள்? என்று எழுத மறந்து விட்டேன் என்று நினைத்தேன்.  உண்மையில் ஈக்களே இங்கு காணோம் என்பதைச் சொல்லத்தான் அப்படி எழுதலாம் என்று நினைத்தேன்.  ஆனால் நான் அமர்ந்த சோபாவில் ஒரு ஈ எப்படியோ வந்து விட்டது.  என்னை சுற்றி சுற்றி மொய்த்துத் தள்ளிவிட்டது.  நான் எழுதாமல் விட்டுப்போன வரிகளில் அது தொற்றிக்கொண்டு விட்டது. 

இங்கு ஒரு தபால் அலுவலககத்தைப் பார்த்தேன்.  அது மாதிரி ஒரு தபால் அலுவலகம் சென்னையில் பார்ப்பது அரிது.  தபால் அலுவலகம் முழுவதும் குளிர்பெட்டி பொருத்தப்பட்டிருந்தது.  ஒரு தபாலை அனுப்ப வேண்டிய கவர் முதல் எல்லாம் இருந்தது.  ஒட்டுவதற்கு கோந்தைத் தடவ வேண்டாம். பணியாளர் சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள்.  சென்னையில் எரிந்து எரிந்து விழுவார்கள். கூட்டம் மொய்த்துத் தள்ளும். 

குளிக்கும் அறையில் ஒரு பெரிய டப்பு இருக்கும்.  அந்த டப்பில்தான் குளிக்க வேண்டும்.  தண்ணீர் அப்படியே போய்விடும்.  ஒரு தண்ணீர் துளிகூட டப்பைத் தாண்டி வெளியே விழாது.  மயிலாடுதுறையில் காலையில் குளிக்கும்போது மின்சாரம் இருக்காது.  பின் குளியல் அறையில் நுழையும்போது பல்லி எங்காவது சுவரில் இருக்கிறதா என்று பார்த்து துரத்தி விட வேண்டும்.  எனக்கு இந்தப் பல்லியைக் கண்டால், அருவெறுப்பு.  ப்ளோரிடாவில் குளிப்பது நல்ல அனுபவம்.

@@@@@@@@@

ஜே கிருஷ்ணமூர்த்தி அவரைச் சுற்றி உள்ள பள்ளி சிறார்கள் முன்னால் மிகப் பொறுமையாகப் பேசுகிறார்.  ஊழல் எப்படியெல்லாம் உலகம் முழுவதும் இருக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறார். இந்தியாவில் அதன் ஆதிக்கம் அதிகம் என்று பேசுகிறார்.  அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். டேபிள் அடியில் ஒரு காரியத்தைச் சாதிக்க பணம் கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்.  ஊழலை எதிர்த்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை நிராகரிக்க வேண்டுமென்று பேசுகிறார்.  அதனால் நாம் பணத்தை இழந்தாலும் பரவாயில்லை என்கிறார்.  பள்ளி சிறார்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. 

இன்னொரு பக்கம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜே கேயிலிருந்து எல்லோரையும் திட்டுகிறார்.  பார்க்க வருபவர்களிடம், 'என்னைப் பார்க்க வந்துவிட்டு, உங்கள் comfortக்கு யாரையாவது பார்ப்பீர்கள்.  உங்களால் யாரையாவது பார்க்காமல் இருக்க முடியாது,' என்கிறார்.  அவர் இசையைப் பற்றி சொன்னது யோசிக்க வைத்தது.  இசையைக் கேட்பதை விட இந்த நாய் குலைப்பது இயல்பாய் இருக்கும் என்கிறார். நான் பேசுவதும், நாய் குலைப்பதும் ஒன்றாக இருக்கும்.  ஏன் என்னைத் தேடி வருகிறீர்கள் என்கிறார். நேற்று நன்றாகவே பொழுது போய்க் கொண்டிருந்தது.

குறிப்பு :
எதையாவது சொல்லட்டுமா 48ல் என் பையன் தயாரித்த Drummers என்ற டாக்குமெண்டிரி படத்தை இணைத்துள்ளேன் (You tube மூலமாக).  பார்க்கவும்.

28.7.11

தாகம்
                                                                                                    
                                                                                                        
காக்கை பறந்து வந்து
என் வீட்டுத்திண்டில் அமர்ந்தது.
அருகில் இருந்த குடுவையில்
அடியில் மட்டுமே கொஞ்சம் நீர்.
எப்படித்தான் எடுக்கும்
என்று பார்த்துக்கொண்டிருந்தேன்
அது குடுவையின் அருகே
வந்தமர்ந்து வெறுமனே
பார்த்து விட்டு
பின் நடை பழகியது,
எதையும் எடுத்து
குடுவைக்குள் போடவுமில்லை
நீரும் மேலே வரவில்லை
பறக்கும் காக்கைக்கு
ஒரு சிறிய குடுவையும்
அதன் நீரும் பெரிதா ?
காக்கை பறந்து சென்றுவிட்டது
இப்போது எனக்குத்
தாகம் எடுக்கிறது. 

நிலாவைத் தின்ற எறும்புநீரில் மிதந்த எறும்பு
அலையினில் அசைந்து
கொண்டிருந்த நிலாவை
கடித்து கடித்து இழுத்தது.
எறும்பின் கூர்வாய்க்குள்
நிலாவின் விழும்பு
இழுபடுவது போல் தோன்ற
இன்னும் உற்சாகமாய்
இழுக்க முனைகையில்
நிலாவைத் தின்ற
எறும்பின் சுவையறிந்த
ஒரு பறவை
எறும்பைக்
கவ்விப் பறந்தது.

இரண்டாவது இரவுதாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள்
களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன்.
மூத்ததைப்போல் மூக்கில்லை
முன்நெற்றி ரோமமில்லை
அவள் அசல் நான் நகல்
அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில்
அவள் அணிந்து அரைப்பழசாய் போன ஆடைகள்
அவள் விளையாடி காது பிய்ந்த கரடி பொம்மை
அவள் புதுவாசம் நுகர்ந்து,ஓரம் சுருண்ட ‘ஏழுநிறப்பூ’
பல் பதிந்த அழிறப்பர்,கம்பீரமிழந்த பென்ஸில்
அவள் திருமணம் குதியுயர் காலணியாய் அதிர நடக்க
என் மணமோ ஏழைச்செருப்பாய் நொய்ய நடந்தது.
ஒவ்வொரு விரலிலும் இவ்விரண்டு பரிசு மோதிரமாய் அவள்
மருதாணி விரல்களில் பாதி தேய்ந்தோர் மோதிரம் வெட்க நான்

அதிகமாய் வலித்ததன்று.
அவள் பார்த்து நிராகரித்த ஆண்மகனுடன் என் முதலிரவு.
அது முதலிரவன்று, ‘இரண்டாவது இரவு’

27.7.11

எதையாவது சொல்லட்டுமா........48                                                                                                                                                                                                             
ப்ளோரிடாவில் இரவு 8 மணி என்பது பகல்மாதிரி தெரிகிறது.   அதேபோல் காலை எட்டுமணிக்குத்தான் சூரியன் தன் கிரணங்களை வீசுகிறான்.  வீட்டில் 24 மணிநேரமும் ஏ.சி என்பதால் ஒரே குளிர்.  நான் அடிக்கடி ஏ சியை அணைக்க வேண்டி உள்ளது.  இங்கு ஒரு பால், தயிர் வாங்கக்கூட காரில்தான் செல்லவேண்டும்.  பஸ், டிரெயின் என்பதே கிடையாது.  சைகிளை யாரும் பயன்படுத்தவில்லை. டூ வீலர் யாரும் ஓட்டுவதில்லை.  வெயில் சென்னையில் அடிப்பதுபோல் சுள்ளென்று அடிப்பதில்லை. பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியவில்லை.  Publix என்ற கடையில் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாம் கிடைத்து விடுகிறது.  ஒவ்வொரு சனி ஞாயிறுகளில்தான் வெளியே சுற்ற முடியும்.  மற்ற நாட்களில் மிகச் சிறிய இடங்களுக்குச் சுற்ற முடிகிறது.  சென்னையில் அண்ணா மறுமலர்ச்சி நூல் நிலையம் மாதிரி, இங்கு
Broward County Library என்ற நூல்நிலையத்தைப் பார்த்தேன்.  பிரமிப்பாக இருந்தது.  ஆனால் சென்னையில் அமெரிக்கன் நூல்நிலையம் மாதிரி புத்தகங்கள் இருந்தன. அமெரிக்கன் நூல்நிலையத்தில்பெரும்பாலான நூல்களை நாம் படிக்காமல் தள்ளி விடலாம். Library யில் கணிணிகள் அதிகமாக இருந்தன. 

தினமும் காலையில் 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்வேன்.  எட்டு மணிக்குக் கிளம்பி. அந்த நேரத்தில் எந்த மனித உருவமும் தென்படாது.  இந்த இடம் முழுவதையும் திட்டமிட்டு திறமையாக வைத்திருப்பதாக தோன்றுகிறது.  இப்படி திட்டமிட்டு ஒரு இடத்தை சென்னையில் பார்க்க முடியாது.  தினமும் மாலை 6மணிக்குமேல்  மழை பெய்வதுபோல் இருந்தாலும் மழை பெய்வதில்லை.  நான் இங்கு வந்த முதல் சனி ஞாயிறில் sanibell என்ற இடத்திற்கு பையன் எங்களை அழைத்துக்கொண்டு சென்றான்.  அவனே 70 மைல் வேகத்தில் வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு அழைத்துக்கொண்டு போனனான்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  இங்கு முக்கியமாக டால்பின் விளையாட்டை ரொம்பவும் ரசித்தோம்.  மனித முயற்சிக்குக் கட்டுப்பட்டு டால்பின் செய்யும் சேஷ்டைகள் ஆச்சரியத்தைத் தந்தன.  இந்த இடமெல்லாம் கூட்டம் அதிகம்.  விதவிதமான மனிதர்கள்.  பெண்கள் யாரும் அவர்கள் உடை அணிவதைப் பற்றி கவலைப்படவில்லை.  அவ்வளவு சுதந்திரமாக அவர்கள் தென்பட்டார்கள்.  பிறகு பெரிய படகில் டால்பின் இருக்குமிடத்தைப் பார்க்கச் சென்றோம்.  ஒன்றிண்டு தவிர அதிகமாக தட்டுப்படவில்லை.  நாங்கள் அவதிப்பட்டது சாப்பாட்டிற்குதான்.  வாய்க்கு ருசியாக ஒரு காப்பியைக் கூட குடிக்க முடியவில்லை. 

அங்கிருந்து நாங்கள்  sanibell கடற்கரைக்குச் சென்றோம்.  அங்கு மண் கறுப்பு நிறத்தில் பவுடர் மாதிரி இருந்தது.  எந்த நேரத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  சிலர் கடலில் பீர் குடித்தபடி குளித்தபடி இருந்தார்கள்.  

        

   @@@@@@@@

தெரியாமல் 3 புத்தகங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வந்தேன்.  Carlos Castenada வின் The Active Side of Infinity என்ற புத்தகமும், யு ஜி கிருஷ்ணமூர்த்தியின் Stopped in our tracks என்ற புத்தகமும்.  யு ஜியைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.  சந்திரசேகர் என்பவர் யு ஜியைப் பற்றி எழுதிய புத்தகம்.  பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.  நான் மேலும் netல் சென்று இன்னும் அதிகமாக யு ஜியைப் பற்றி தெரிந்து கொண்டேன்.  அவருடைய வீடியோ டேப்பெல்லாம் பார்த்தேன்.  அவர் சொன்னதையெல்லாம் எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன். 

25.7.11

ஒரு கவிதை

                                                                                                             
என்ன இங்கு
காக்காயைக் காண முடியவில்லை?

என்ன இங்கு
அணில்கள் குண்டோ தரனாகத்
தெரிகின்றன..

எறும்பே எறும்பே
எங்கே போனீர்கள் நீங்கள்

தலைதெறிக்க கார்கள்
எங்கே ஓடுகின்றன

மரங்கள் என்ன
இப்படி ஓங்கி வளர்ந்திருக்கின்றன

அசையாமல் வீடுகள்
எல்லாவற்றையும் சொல்லி சொல்லி சிரிக்கின்றன

நனவிலி

 

                                                                                                       
என்னிலை நினைத்து
வருந்தவும்,
அதைப்பிறரிடம் கூறி
ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு
திட்டமிடவும்,
பின் அவற்றைச் செயலாக்கவும்,
உதவிய எந்தன் மொழி
எனது நனவிலி மனதிலிருந்தும்
அகற்றப்பட்டுவிட்டது.
அதை ஒரு வன்முறையாகப்
பார்ப்பவனால்
விலங்கு மனம்
அவனிலிருந்து இடம்
மாறியது எனக்கு
இப்போது எனக்கு
சிந்திக்க மொழியின்றி
வெறும் உணர்வுகளுடன்
வெளிச்சொல்லத்தெரியாத
குழப்பத்தில் நான் 

தீற்றல்


நிலைக்கண்ணாடி பிரதிபலித்த
முதல் நரை
மரணம் விரிக்கும் வலை
மழை நாள்
சூரியனைக் காணோம்
இரவு வெகு நீளம்
கழுகின் நிழலைக் கண்டு
அஞ்சும்
கோழிக் குஞ்சுகள்
மணி அடித்தாகிவிட்டது
தண்ணீர் போத்தல்
வாங்கப் போனவர்
இன்னும் வரவில்லை
வார இதழ்களை
கடைசி பக்கத்திலிருந்து
படிப்பது
பழக்கமாகிவிட்டது
சூரல் நாற்காலியில்
நாளிதழ், வானொலி
கேட்பாரற்றுக் கிடக்கிறது
முதியவரை மரணஅலை
அடித்துச் சென்றுவிட்டது
தெரு விளக்குகள் எரியவில்லை
அந்தகனைப் போல்
இருளில் துழாவித் துழாவி
வீடு வந்து சேர்ந்தேன்.

யாக்கை

 

ஆழ்கடல்
அமைதியாக இருக்கும்
கூட்டம் கடலலையை
கண்டு ரசிக்கும்

மேகக் கூட்டம்
படையெடுக்கும்
வானம்பாடி பாட்டுப் படிக்கும்

காட்டுப் பாதையில்
பூத்த மலர்
பறிக்க எவருமில்லை

வைகறை
மூடுபனி
உறக்கம் கலையவில்லை

திருத்தேர் வீதிஉலா
பலூன் வியாபாரியை
மொய்க்கும் சிறார்கள்

தீபாவளி நள்ளிரவு
வெடிச்சத்தம் ஓயவில்லை

தக்கை அசைகிறது
தூண்டிற்புழுவுக்கு
ஆசைப்பட்ட மீன்
பாத்திரத்தில் துள்ளுகிறது.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றுத் திறன்

இருவருக்கு எதிரில்
தலை குனிந்து
அமர்ந்திருக்கிறான்
மனைவி கோவிலில்
மெய்மறந்திருந்தாள்
அவனுக்குப் பேசும் திறமை
குறைவாக இருக்கிறது
பூங்காவில் மகள்
ஊஞ்சலாடுகிறாள்
வாடிக்கையாளர்களிடம்
தன் நிறுவனத்தின்
அருமை பெருமைகளைப்
பேசக் கூசுகிறான்
சதுரங்கக் காய்களுடன்
காத்திருக்கிறான் நண்பன்
நிறைவேற்றும் சாத்தியங்களற்ற
பொய்களைச் சொல்ல இயலுவதில்லை
இவன் காதலை நிராகரித்தவள்
மீண்டும் வந்திருக்கிறாள்
மகப்பேறுக்காக
வெளியூர் மேலதிகாரியின்
காதல் தோல்விகளை
சாயங்கால வேளைகளில்
அவருடன் குடித்துக் கொண்டே
கேட்டிருக்கலாம்.
வேலைக்காரச் சிறுமியை வருடும்
பணக்கார விரல்களை
அடுத்த முறை கண்டால்
வெட்டிவிட வேண்டும்
கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதிலும்
நேர்மை தவறாத நிர்வாகம்
வெளியேறும் நேர்முகத்தில்
உற்பத்தித் திறன் குறைவு
என்று மட்டும் குறிப்பிட்டது
இடப்பற்றாக் குறையால்?
இப்படிப்பட்ட இரவில்
பூங்காவில் மணியடித்து
கோயிலில் ஊஞ்சலாடி
மகப்பேறுக் காதலியுடன்
சதுரங்கம் விளையாடியதில்
உற்பத்தித் திறன் உயர்ந்ததாக
அந்தச் சிறுமி சொல்லிய போது
தனது பிரத்யேக வனத்துள்
மெல்ல மெல்ல பிரவேசித்தான்

கோடு

எறும்பின் பாதையில்
ஆள்காட்டிவிரல் தேய்க்கும் சிறுமி
சிரிப்பை மறந்து
அமர்ந்திருக்கிறாள்

வரிக்குதிரை சந்திப்புகளைக்
கடக்கும் கண்ணிழந்தவர்களை
யாரோ கைபிடித்துக் கொள்கிறார்கள்

சாக்குக்கட்டிகளை
கடந்து செல்லும்
மனிதர்களைப் பார்த்தபடி
சில்லறைக்குக் கீழே
வரையபட்டிருக்கிறான்
கைவளைந்த கடவுள்

22.7.11

அவலம்

Add captionகிறுக்கு ராஜத்தை ரெண்டு நாளாய்க் காணவில்லை. அக்ரஹாரமே அல்லோலப்பட்டது. ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். யாராவது இழுத்திட்டுப் போயிட்டாங்களோ? யாராவது கெடுத்து கொலை செய்திட்டுப் போயிருப்பாங்களோ? அப்படீன்னா பாடி கிடைக்கணுமே? சில சமயம் நல்லா இருப்பாளே? நல்லாப் பேசுவாளே? அப்போ அவளா எங்கேனும் ஓடிப் போயிருப்பாளோ? சதா இங்கதானே தெருத் தெருவாத் திரிஞ்சிண்டிருப்பா? காணவேயில்லையே? - என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். விஷயம் கிடைத்தால் போதாதா? அவரவர்கள் கற்பனைக்கு எப்படி எப்படியோ நீண்டது.

நாணம்மா பாட்டிதான் தவியாய்த் தவித்தாள். வீடு வீடாய் ஏறி இறங்கினாள். தன் பெண்ணை யாரேனும் பார்த்தீர்களா என்று ஒருவர் விடாது விசாரித்தாள். அழுது புலம்பினாள். தள்ளாத வயதில் என்னவெல்லாம் கஷ்டம் இந்தக் கிழவிக்கு? ஆதங்கப் படாதவர்கள் பாக்கியில்லை. முடிந்தவரை எல்லோரும் உதவி செய்ய முனைந்தார்கள். தங்கள் வீட்டுப் பிள்ளைகளை நாலா பக்கமும் அனுப்பித் தேடச் சொன்னார்கள்.

திருவிழா நடக்கும் பக்கத்துக் கிராமத்திற்குப் போயிருக்கலாம் என்றார்கள். வண்டி கட்டிக்கொண்டு போனவர்களிடம் விசாரித்தார்கள். குறுக்கு வழியாக வயல் வரப்பில் சென்று திருவிழா நடக்கும் கிராமத்திற்குச் செல்லும் ஜனங்களிடம் வழியில் உள்ள வயக்காட்டுக் கிணற்றில் எங்கேனும் கிடைப்பாளோ என்று பயந்து பயந்து பார்க்கச் சொன்னார்கள். ஓரிடம் இல்லாமல் அலசியெடுத்தார்கள். எங்கும் அவள் கிடைக்கவில்லை. தேடிக் களைத்து ஓய்ந்துபோனதுதான் மிச்சம்.

யாராவது வந்து சொல்வார்கள் என்று வாசலிலேயே காத்துக் கிடந்து வீதியையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டி கூட வீட்டினுள் சென்று தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள். பாட்டியின் இந்த மாற்றம் பலருக்கும் ஆறுதலாகத்தான் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ராஜத்துடன் ஆன கஷ்டம் ஒரு வழியாகப் பாட்டிக்கு நீங்கியது என்று எண்ணிக் கொண்டார்கள்.இப்பொழுதுதான் வேளை பிறந்திருக்கிறது என்பதுபோல் தெப்பக்குளமாய் நீண்டு கிடக்கும் வீட்டைப் பெருக்கி மெழுகிச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். பின் புறப் பட்டாசாலை, அடுப்படி, நடு அறை, நடை வராந்தா, திண்ணை என்று தண்ணீரை அடித்து ஊற்றிக் கழுவிவிடும் பொது வாசலில் தொப தொபவெனத் திறந்த வெளிச் சாக்கடையில் அழுக்கு இறங்குகையில் நாற்றம் குடலைப் பிடுங்கியது. எல்லோரும் பாட்டிக்காகப் பொறுத்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டு அகோபிலத் தாத்தாதான் காட்டு மாட்டுக்குக் கத்தினார். மனுஷா பக்கத்துல குடியிருக்கிறதா ஓடறதா? சதா வெளி வராண்டா பெஞ்சிலேயே பழியாக்க கிடக்கும் அவருக்குப் பொழுது போவதற்கு ஒரு விஷயம் கிடைத்திருப்பதாகவே பலரும் நினைத்தார்கள்.

அந்த வீட்டின் எல்லா அறைகளையும் பாட்டி ஒருத்தியால் எப்படிக் கழுவ முடிந்தது என்று ஆச்சரியமாய் இருந்தது. தினசரி இத்தனை நாற்றங்களோடா பாட்டி வாழ்ந்திருக்கிறாள்? பரிதாபம் ஏற்பட்டது. காரணம் புரிந்தவர்கள் அப்படித்தானே நினைக்க முடியும்..பாட்டி வாழும் வாழ்க்கை என்ன ஒரு வாழ்க்கையா? இன்னொருவர் என்றால் என்றோ வாயைப் பிளந்திருப்பார்கள். ஆனால் பாட்டிக்கு இருக்கும் மனத் திண்மையும், உடல திராணியும் வியந்து நோக்கத் தக்கதுதான்.

அந்த வீடே 'கிறுக்கு வீடு'. 'கிறுக்கு வீடு' என்றுதான் எல்லோராலும் அழைக்கப்பட்டது. அங்கே புத்தி ஸ்வாதீனத்தோடு இறங்கிக் கொண்டிருந்தவள் நாணம்மா பாட்டி மட்டும்தான். வரிசையாக ஏழெட்டு ரூம்கள் உண்டு அங்கே. ஒரு ரூம் விட்டு இன்னொன்று என்கிற கணக்கில் வரிசையாகத் தன் பெண், பையன் என்று பைத்தியங்களாய் அடைத்து வைத்திருந்தாள் பாட்டி. என்ன காரணத்திற்காக வீட்டில் இத்தனை அறைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அடைத்துப் போடுவதற்கென்று கட்டப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகக் கட்டப்பட்டு அது இவ்வாறு பயன்பட்டுக்கொண்டிருக்கிறதா? பெரிய வீடானாலும் இத்தனை அறைகள் எதற்கு? இன்றுவரை யாருக்கும் அந்தக் காரணங்களெல்லாம் தெரிந்ததில்லை. வெளி ஆட்கள் அதிகமாகப் போக்குவரத்து என்று இருந்தால்தானே? பாட்டியின் வீட்டுக்கு என்று யாரும் போவதோ வருவதோ கிடையாது. என்றோ பார்த்த வீட்டை மனதில் கொண்டிருப்பவர்கள்தான் எல்லோரும்.

வராண்டாவை அடுத்த உள் ஹாலில் ஏழெட்டுக் கண்ணாடி பீரோக்கள். அத்தனையிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். பாட்டியின் பிள்ளை சங்கரராமன் படித்தது என்றார்கள். தடி தடியாய் தலையணையாய் இருக்கும் அந்தப் புத்தகங்களைப் பார்த்தாலே இவ்வளவுமா ஒருத்தன் மண்டைக்குள் ஏறிற்று என்று பாமரத்தனமாய்த்தான் நினைக்கத் தோன்றும். ரொம்பவும் படித்துப் படித்துப் பேதலித்துப் போனதாய்ச் சொல்வார்கள்.

யார் அது ? என்று கேட்டபோது வெளியே தெருக்கோடியில் ஆற்றங்கரையை ஒட்டி 'ரேரேரே.....ரே....ரே...ரே...' என்று எதையோ உருவம் தெரியாமல் பாடிக் கொண்டு கட்டிய கோவணம் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் அம்மணமாய் அலையும் ஒருத்தரைக் காண்பித்தார்கள். இடுப்பில் ஒரு ஒட்டுத் துணிகூட இல்லாமல் ஏன் இப்படி? எல்லோரும் கேட்டுக் கேட்டு ஓய்ந்துதான் விட்டார்கள். எது நின்றது அவனிடம்? எல்லாமும் கழன்றுதானே இந்த நிலை? என்று பரிதாபப்பட்டவர்கள்தான் அநேகம். குப்பைகளையும், அசிங்கங்களையும் கால்களால் தள்ளிக்கொண்டே எதையோ பாடிக் கொண்டும், பேசிக்கொண்டும், முனகிக் கொண்டும், சிரித்துக் கொண்டும்.....பார்க்கவே கோரமாய் ஒரு மனிதன்.

"அப்படீன்னா கிறுக்கு ராஜம்?" என்றபோது அது அவளது அக்காள் என்றார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடப்பதுபற்றிக் கேட்டபோது அதுவும் அக்காள்தான் என்று தெரியவந்தது. ராஜத்துக்கும் சங்கர்ராமனுக்கும் மூத்த அக்காள் என்பது புரிந்தது.

பசங்களோடு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பார்க்க நேர்ந்தது. ஓங்கி அடிக்கப்பட்ட பந்தை எடுக்க ஒவ்வொரு வீட்டு மாடியாய்த் தாவித் தாவி பறந்தபோது, நாணம்மாப் பாட்டியின் வீட்டு முற்றத்தில் போய் எகிறி விழுந்தது பந்து.

"டேய் வந்துர்றா...அங்க போகாதடா..." நண்பர்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து மேலிருந்தவாறே நான் எட்டிப் பார்த்தேன். தலைவிரிக் கோலமாய் பளீரென்ற பேய்ச் சிரிப்போடு, பார்க்க நேர்ந்தது அந்த கோர உருவத்தை. அப்படியே ஆழமாய்ப் பதிந்து போனது அந்தக் காட்சி.

"என் சங்கிலியைத் தாடீ...என் வளையலைத் தாடீ...என் ஜிமிக்கியைத் தாடீ..." என்ற அந்தப் புலம்பலும் அழுகையும் மாறாமல நிலைத்துப் போனது மனதில். அந்தப் பாட்டிக்கு மொத்தம் நாலு பெண்கள் ஒரு பையன். அஞ்சாவதாய்த் தவமிருந்து பெற்றதுதான் இந்தச் சங்கர்ராமன். யாரோ சுவாமிகள் வந்து மடத்துக்கு அனுப்பிடச் சொல்லி அவனைக் கேட்டதாகவும், பாட்டி மறுத்துவிட்டதாகவும் அந்த தோஷம்தான் அவனுக்கு அப்படி ஆகிவிட்டதென்றும் அம்மா வழி சொல்லக் கேட்டபோது அதிர்ச்சியில் உறைந்து நான்.

"அது சரிம்மா...அது உண்மைன்னா மத்தவங்களுக்கும் ஏன் பைத்தியம் பிடிக்கணும்?"

"அது அந்தக் குடும்பச் சாபம்டா....நம்ப வீட்டுக்குக் கூட அப்படி ஒரு சாபம் உண்டு தெரியுமோல்லியோ உனக்கு..?" அம்மா அதிர வைத்தாள் என்னை.

"..எல்லாம் அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்....பாட்டியோட நாலுபெண்கள்ல ராமனுக்கு முதலாப் பிறந்த அந்த நாலாவது ஒண்ணுதான் தப்பிச்சது. அதுக்குக் கல்யாணமாகி எங்கேயோ இருக்கு. இந்தப் பக்கமே தலை காட்டறதில்லை. அந்தப் பொண்ணை ஒரு தரம் நானும் பார்த்திருக்கேன். சிண்டு போல குங்குமச் செப்பா இருக்குமாக்கும். அத்தனை லட்சணம். அவ்வளவு ஏண்டா? நம்ப ராஜத்தை எடுத்துக்கோ...எத்தனை குடும்பப் பாங்கா இருப்பா தெரியுமா? அவ நன்னாயிருக்கிறபோதிருந்து பழக்கம் எனக்கு. கல்யாணம் ஆன பின்னாடியிருந்துதானே அவளுக்கு இப்டி ஆயிடுத்து..."

"என்னம்மா சொல்றே?" அதிசயித்தவனாய்க் கேட்டேன் நான்.

"ஆமாம், ராஜத்துக்கு கல்யாணமாகி கொஞ்ச நாளைக்கு நல்லாத்தான் இருந்தா. முதல் பிரசவத்தின்போதுதான் இப்படியாச்சு. அவளுக்குப் பிறந்த குழந்தையும் செத்துப்போச்சு. இவளும் இப்படியாயிட்டா. யார் யாரோ மலையாள மாந்த்ரீகரெல்லாம் வந்து பார்த்தா...ஒண்ணும் நடக்கலை..சதா பூஜையும் மந்திரமுமாத்தான் அந்தாத்துல....ஒண்ணும் பலனளிக்கலையே..பாட்டி அழுகைச் சத்தம்தான் சதாக் கேட்டுக்கொண்டிருக்கும்...இந்தத் தெருவுல எல்லாருக்கும் பழகிப் போன ஒண்ணு அது. ரெண்டு மூணு தரம் வந்து பார்த்திட்டு பிற்பாடு அவ புருஷனும் வர்றதையே நிறுத்திட்டான். கோர்ட்டு மூலமா விவாகரத்து வாங்கிண்டுடான்னு கேள்வி. இப்போ அவன் வேறே கல்யாணமும் பண்ணின்டுட்டானாம். ராஜம் கல்யாணம் பண்ணின புதுசுல எப்டியிருப்பா தெரியுமா?"

அதைச் சொல்லும்போதுதான் அம்மாவின் முகத்தில் எத்தனை ஒளி. எப்டியிருப்பா? ஆர்வமாய்க் கேட்டேன் நான்.

"அந்தச் சின்ன வயசுலயே மடிசார்தான் உடுத்திப்பா அவ. பாட்டி அத்தனை ஆச்சாரம். இடது பக்கத் தலைப்பை இழுத்துப் போர்த்திண்டு கையில் எண்ணெய்க் கிண்ணத்தோட அவ கோயிலுக்குப் போற அழகே தனி. அவ்வளவு லட்சணமாயிருக்கும். எல்லார் கூடவும் சகஜமாப் பேசுவா...நம்பாத்துக்கெல்லாம் வந்திருக்கா...ஒரு விரதம் நோன்பு விடாம அனுசரிப்பா...இப்போக்கூடப் பாரு..தெருத் தெருவா சுத்தியடிச்சிண்டிருப்பாளே...அப்போ வழில என்னைப் பார்த்தான்னா நின்னு பேசறா பார்த்தியா? அது பழைய பழக்கமாக்கும்..ருக்கு..நன்னாயிருக்கியான்னு கேட்குறா பார்த்தியா? அந்த பகவான்தான் கண்தெறக்கணும்..." இதைச் சொல்லும்போது அம்மாவின் கண்கள் கலங்கி நெஞ்சு அடைத்தது அவளுக்கு. கொஞ்ச நேரம் அந்த சோகத்தில் மூழ்கிப் பேச்சற்றுப் போனாள் அம்மா.

அம்மா சொன்னதுபோல் ராஜத்திற்கு அவள் மேல் ஒரு தனிப் பிரியம் இருந்ததை என்னாலும் உணர முடிந்தது. புத்தி சரியில்லாத நிலையிலும் அவள் வேறு எங்கும் அடியெடுத்து வைத்து நான் பார்த்ததில்லை. நேரே விடுவிடுவென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்து விடுவாள். சமயங்களில் ஓ.... ராஜம்...இப்படி வருவாளா? குழந்தேள்லாம் பயந்துக்கிறது.. என்றவாறே அம்மா அவளின் கையைப் பிடித்துச் சென்று வெளியே விடுவாள். பிறகு திண்ணையில் வைத்துச் சாதம் போட்டு அனுப்பி வைப்பாள். பாயசம் இருக்கா..இன்னிக்கு வைக்கலியா? நாளைக்கு வச்சு எனக்குத் தரணும்...மறந்துடாதே...என்பாள் உரிமையோடு. ஒற்றைத் தெரு, கோயில் தெரு, நடுத்தெரு என்று மூன்று தெருக்களைக் கொண்ட அந்த அக்ரஹாரத்தைச் சுற்றி சுற்றி வருவாள் ராஜம். ராவெல்லாம் சுற்றிக் கொண்டிருப்பாள். கால்கள் இவளுக்கு ஓயவே ஓயாதா? என்று தோன்றும் நமக்கு. பாட்டியால் என்ன செய்ய முடியும்? விட்டு விட்டாள் அவள். ஒரு முறை சாமக் கோடாங்கி ஒருத்தன் வர, அவனோடு இவள் பேச, இவளைக் கண்டு அவன் அலறி ஓட...சொல்லிச் சிரிப்பார்கள் தெருவில் உள்ளோர்.

யாரையும் எதுவும் செய்ய மாட்டாள். அவள் பாட்டுக்குப் பாடிக் கொண்டு, பேசிக் கொண்டு, கும்மியிடித்துக் கொண்டு போய்க் கொண்டிருப்பாள். ஒவ்வொரு தெரு முக்கிலும் நின்று, நீண்டு கிடக்கும் தெருவைப் பார்த்து தன்னைத்தானே மூன்று சுற்று சுற்றிக்கொண்டு விழுந்து கும்பிடுவாள். கோயில் தெருவில் நின்று கோயில் வாசலில் விழுந்து நமஸ்கரிப்பாள். அந்த அம்பாள் அவளுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டாதவர்கள் பாக்கியில்லை. விழுந்து விழுந்து உக்கி போட்டுக் கொண்டிருப்பாள்.திடீரென்று யார் வீட்டுத் திண்ணையிலிருந்தாவது கோலப் பொடியைக் கொண்டுவந்து பெரியதாகக் கோலம் போட ஆரம்பித்து விடுவாள். அந்தப் புத்தி பிசகின நிலையிலும் எத்தனை கன கச்சிதமாக அந்தப் புள்ளிகளும், வளையங்களும் அந்தக் கோலத்திற்குள் வந்து விழுகின்றன அவளுக்கு என்று அதிசயிப்பர் எல்லோரும்.

இரக்கப்பட்டு அர்ச்சகர் கொடுக்கும் பிரசாத உருண்டையைத் தின்றுகொண்டே அவரையும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு நகருவாள். பெரும்பாலும் இவையே அவளது தினசரி நியமங்களாய் இருக்கும். கையில் எண்ணெய்க் கிண்ணத்தோடு ஒரு முறை கோயிலுக்குள் நுழைய யத்தனித்தபோது சிலர் அவளைத் தடுக்க,

"நான் பார்த்துக்கறேன்....யாரையும் ஒண்ணும் பண்ணமாட்டா..." என்று சொல்லி அம்மாதான் ராஜத்தைக் கையைப் பிடித்துக் கோயிலுக்குள் அழைத்துப் போனாள்.

 "தினசரி அம்பாளுக்கு எண்ணெய் திரி போடு, அப்பவாவது உன் தோஷம் கழியறதா பார்ப்போம்..." என்று அம்மா ஆதரவாக அவளை அழைத்துப் போனாள். அந்த அக்ரஹாரத்தில் வேறு யாருக்கும் இல்லாத இரக்கமும் நேயமும் அம்மாவுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அமாவாசை நேரங்களில்தான் ராஜத்தின் நிலை வெகுவாக மாறிப் போகும். அவள் அசிங்கமாய்த் திரிவதும் அப்போதுதான். சாதாரண நாட்களிலேயே அவளை அடக்க முடியாமல் தவிப்பாள் பாட்டி. இம்மாதிரி நாட்களில் கேட்கவா வேண்டும். பாட்டிக்கு பயம். ஏதேனும் கம்பு கிம்பை எடுத்து மண்டையில் போட்டு விடுவாளோ என்று.

அப்படியான ஒரு பொழுதில்தான் ராஜம் காணாமல் போயிருந்தாள். எங்கேனும் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ? அதற்கும் புத்தி ஸ்வாதீனம் இருந்தால்தானே முடியும்? யாரேனும் தவறான எண்ணத்தில் கடத்திக்கொண்டு போயிருக்கலாமோ? இப்படியெல்லாம் நினைக்க ஆரம்பித்தார்கள் எல்லாரும்.

ஒரு நாள் கிறுக்கு ராஜத்தின் மூத்த அக்காள் (உள்ளே அடை பட்டிருந்தவள்) இறந்து போனாள். ஆர்ப்பாட்டம் பண்ணியபோது நிலை தடுமாறி விழுந்து பின் மண்டையில் அடிபட்டு உயிர் போனது என்றார்கள். எப்படிப் போனால் என்ன? பாட்டிக்கு ஒரு சிரமம் குறைந்தது. பெருத்த பாரம் விட்டது. பாட்டி வீட்டில் அதுவரை காணாத சிலர் தென்பட்டார்கள். காரியங்கள் எல்லாமும் நடந்து முடிந்தன. ஒரு பொழுது விடியாத வேளையில் சத்தமின்றி அவர்கள் கிளம்பிப் போனார்கள். பாட்டியும் அவர்களோடு கிளம்பியதுதான் புதிய செய்தி. அப்படியானால் அந்தக் கிறுக்கு சங்கர்ராமன்? பாட்டியா அப்படி விட்டுப் போகிறாள்? எங்களால் நம்பவே முடியவில்லை. ரோட்டில் எங்கோ அசிங்கமாய்க் கிடக்கும் இடம் சென்று சாதம் ஊட்டி வரும் பாட்டியா விட்டுப் போனாள்? கையைப் பிடித்துத் தரதர வென்று இழுத்து வரும்போது கம்மென்று வருவானே சங்கர்ராமன்....யாருக்கும் அடங்காதவன் பாட்டிக்கு அடங்குவானே? அவனையா விட்டுப் போனாள் பாட்டி. விடை தெரியத்தான் இல்லை. பின்னொரு நாள் பாட்டி வருவாள் என்று மட்டும் பேசிக் கொண்டார்கள். அதன்பின் சங்கர்ராமனை அக்ரஹாரம் காத்தது. கொஞ்ச நாளில் பராபரியாய் அந்தச் செய்தி காதுகளுக்கு எட்டியது. அந்த நாலாவது பெண்ணுக்குத் தற்போது மனநிலை சரியில்லை என்று....அவளது சம்ரட்சணைக்காகத்தான் பாட்டி போயிருக்கிறாள் என்று.

"என்னம்மா இது கொடுமை...பாட்டிக்கு என்ன தலைவிதி இது" என்றேன் நான். மனம் ரொம்பவும் கனத்துப் போனது எனக்கு. அம்மா அதிர்ச்சி எதுவுமின்றி அமைதியாய் என்னிடம் சொன்னாள்.

"நம்ப தாத்தாவுக்குத் தாத்தா, அதாண்டா உங்க கொள்ளுத் தாத்தா...ரொம்ப முன் கோபக்காரராம்...ஒரு முறை தென்னந்தோப்புல காய் வெட்டு நடந்தபோது, மரமேறிண்டிருந்த கூலியாள் ஏதோ பதில் பேசினான்னு, சட்னு வந்த கோபத்துல அரிவாளை எடுத்து அவன் காலை வெட்டிட்டாராம் அவர். அந்த மரமேறி வயிரெறிஞ்சி சாபமிட்டானாம். அவன் பெண்டாட்டி அகத்து வாசல்ல வந்து மண்ணை வாறித் தூத்தினாளாம்....அன்னைலெர்ந்து இன்னைக்கு வரைக்கும் இந்தச் சாபம் இந்தக் குடும்பத்துல இருந்துண்டுதானேயிருக்கு? அழிஞ்சா போச்சு? உங்க பாட்டி வாய் ஓயாமச் சொல்லுவா...கதறிப் புலம்புவா...சாண் ஏறினா முழம் சறுக்கிறதோல்லியோ...அது அந்தச் சாபக் கேடுதான்...பார்க்கத்தானே செய்றோம் கண்கூடா? உங்கப்பா தொழில் பண்றேன் தொழில் பண்றேன்னு எத்தனை எடத்துல ஹோட்டல் வச்சிருப்பார்...ஒண்ணாவது நிலைச்சுதா? ஒண்ணாவது லாபம் தந்துதா? இழுத்து மூடறதுதானே வழக்கமாப் போயிடுத்து...? தமிழ்நாட்டுல கடை போடாத எடம் உண்டா? எது கை தூக்கி விட்டுது? எது தலை நிமிர்த்தினது? எல்லாமும் தலை குனியத்தான் வச்சிது இன்னிவரைக்கும்...அது போலத்தான் இதுவும்..இது பரம்பரைச் சாபம்...அவா அவா கட்டையோடதான் கழியும்..." அம்மாவின் விளக்கங்கள் அவளது வாழ்வியல் அனுபவங்களின் நிதர்சனங்களாய் தோன்றினவே அன்றி மனதைச் சமாதானப் படுத்தவில்லை. மாறாக வாழ்க்கை இன்னும் என்னென்னவெல்லாம் குரூரங்கள் கொண்டதாய் இருக்கும் என்று எண்ணியெண்ணி பயம் கொள்ளவே வைத்தது.

நரியும் நிலாவும்பௌர்ணமி இரவில்
கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.
குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை...
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.
பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி...
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.

21.7.11

புதிய ஊர்

நான் பார்த்துக்கொண்டிருந்த இடம்

என் கனவாக இருந்தது

எப்போதும் தண்ணீர்

தட்டுப்படாமல் கிடைத்தது

மின்சாரம் முணுக்கென்று போகாமலிருந்தது

மழையும் வெயிலும்

மாறி மாறி வித்தைக் காட்டிக்கொண்டிருந்தன

எங்கும் பார்த்தாலும்

அசையாமல் கட்டிடங்கள்

காத்துக்கொண்டிருந்தன

மனிதர்கள்

உள்ளேயிருந்து வெளியில் வந்தார்களா

அல்லது

வெளியிலிருந்து உள்ளே வந்தார்களா

என்பது தெரியவில்லை

நடந்துபோய் பொருள் வாங்க

வேண்டுமென்றால்

காரைக் காட்டினான் புதல்வன்

நாங்கள் அசைவற்று நின்றிருந்தோம்...21.07.2011

1.30 pm

கட்டங்கள் சொற்கள் கோடுகள்


கட்டங்கள் வரைந்து
சொற்களை உள்ளே இட்டேன்
அவற்றுக்குள் தொடர்பு
ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன்
கட்டங்கள் ஒன்றோடொன்று
இணைந்தன
சொற்கள் அடைபட்டுப்போய்
பேச மறுத்தன
கட்டங்களை நீக்கி விட்டு
சொற்களையும் கோடுகளையும்
இணைத்து விடலாம் என
எண்ணினேன்
கட்டி வைத்த சொற்களும்,
இணைக்க இழுத்த கோடுகளும்,
ஒட்ட மறுத்தன
மீண்டும் கட்டங்களை
வரைந்தபோது அந்த அதிசயம்
நிகழ்ந்தது.
கட்டங்களும், இணைப்புக்கோடுகளும்
ஒரு சேரக்காணாமல் போயின
எஞ்சிய சொற்கள்
என்னைக்கேலி
செய்து கொண்டிருந்தன.

20.7.11

எதையாவது சொல்லட்டுமா........47அழகியசிங்கர்நாங்கள் இறங்கிய இடம் ப்ளோரிடா. விஸ்தாரமான இடம். என் பையன் இருக்கும் வீட்டிலிருந்து எங்கு செல்வதாக இருந்தாலும் காரில்தான் செல்ல வேண்டும். ஒரு காய்கறி வாங்குவதற்குக்கூட காரில்தான் பயணம் போக வேண்டும். நடந்துபோக முடியாது. ஒரு பெரிய நிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பத்து அபார்ட்மெண்டுகள். வீடுகள் ஓடுகளால் வேயப்பட்டிருக்கின்றன. காரை இடது பக்கமாகத்தான் ஓட்ட முடியும். இதுவே இந்தியாவில் உல்டாவாக இருக்கும். தெருவில் கார் செல்லும் இடம் விஸ்தாரமாக இருக்கிறது. ஒரே சமயத்தில் 3 கார்கள் வரிசையாகப் போவதற்கும் வருவதற்கும் ரோடு வழிவகுத்துக் கொடுத்து இருக்கிறது. ஹைவேஸில் ஓட்டுவதாக இருந்தால் வேகமாக ஓட்ட வேண்டும். குறைந்தது 100 மைல் வேகத்தில் வண்டியை ஓட்ட வேண்டும். சிதம்பரத்திலிருந்து சென்னை வரும் தூரத்தை பையன் 2 மணி நேரத்தில் கடந்து விட்டான். அங்கு என்றால் 5 மணி நேரம் மேல் ஆகும். ஆனால் எங்கும் மனிதர்களே தென்படவில்லை. வீடுகள் கார்கள் மட்டும் கண்ணில் படும். மனிதர்கள் யாராவது உள்ளார்களா என்பது சந்தேகமாக உள்ளது.

பையனுக்கு வீட்டிலேயே பணி என்பதால், நான், பையன், மனைவி மூவரும் ஒரே இடத்தில் 24 மணி நேரமும் இருக்கிறோம். இது கிட்டத்தட்ட Pre retirement rehersal மாதிரி எனக்குத் தோன்றியது. ஆனால் சென்னையில் இருந்தால் அலை அலையென்று அலைந்து கொண்டிருப்பேன்.

@@@@@@@


நான் இங்கு வரும்போது, நிறையப் புத்தகங்களைப் படிக்க எடுத்து வரவேண்டுமென்று நினைத்தேன். எடுத்து வந்தால் என் மனைவி என்னுடன் வரமாட்டாள் என்பதால் சில புத்தகங்களை மட்டும் எடுத்து வந்தேன்.

அவசரம் அவசரமாக வந்ததால் கையில் கிடைத்தப் புத்தகங்களை எடுத்து வந்தேன். மேலும் ஏற்கனவே படித்த புத்தகங்களாக எடுத்து வந்தேன். ஒரு புத்தகத்தை நிதானமாக மிக நிதானமாகப் படிக்க அதிகமான நேரம் இங்கு கிடைத்துள்ளது. சனி ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் நாங்கள் எங்கும் சுற்ற முடியாது. நான் பார்த்த 2 இடங்களை பின்பு சொல்லாம் என்று நினைக்கிறேன். நான் இதெல்லாம் கூட எனக்காகத்தான் சொல்கிறேன். மற்றவர்களுக்காகச் சொல்கிறேன் என்பதுகூட ஆனவமாகத் தெரியும். நான் எழுதிப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஏன்என்றால் எல்லாம் மறந்து விடுகிறது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு டைரி மாதிரி எழுதிக் கொள்கிறேன்.

2000ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நான் அசோகமித்திரனை அவர் வீட்டில் சந்தித்தேன் என்று நினைக்கிறேன். அப்போது அவர் கையெழுத்திட்டு ஒரு புத்தகம் படிக்கக் கொடுத்தார். இந்தப் புத்தகத்தை ரொம்ப நாட்களாக அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஞாபகமாக எனக்கு அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அப்புத்தகத்தின் பெயர் 'மானசரோவர்'. அந்த நாவலை ரொம்ப வருடங்களுக்கு முன்னால் நான் படித்து முடித்திருந்தேன். பின் 2000-ல் கொடுத்தப் புத்தகத்தை நான் திரும்பவும் 2011-ல் அமெரிக்காவில் இன்றுதான் படித்து முடித்தேன். ஆனால் அப்போது படித்தபோது அந்தக் கதையில் ஒரு சித்தரை சந்திப்பதாக நிகழ்ச்சி வரும் என்ற ஞாபகம் தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை. திரும்பவும் படிக்கும்போது புதியதாக இந்த நாவலை எடுத்துப் படிப்பதாகத் தோன்றியது.

இந்நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் மாறி மாறி கதையைக் கொண்டு போகிறது. ஒரு காதாபாத்திரம் சத்யன்குமார். இன்னொரு கதாபாத்திரம் கோபால். ஒரு பாத்திரம் ஒரு வட இந்திய சினிமா நடிகர். இன்னொரு பாத்திரம் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர். கோபால் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

கோபால் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவம் நம்மை திகைக்க வைக்கிறது. கதையின் இந்தப் பகுதியை blow up பண்ணாமல் கொண்டு செல்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு வர்ணனையும் மிக முக்கியமானது. கோபால் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பயங்கரத்தை பல அத்ததியாயங்கள் கொண்டு செல்லலாம்.

'சியாமளா குழந்தையோடு என் வீட்டு வாசலில் காத்திருந்தாள். நான் கதவைத் திறக்க, டாக்டரோடு அவளும் உள்ளே போனாள். எங்களைக் கண்டதும் ஜம்பகம் கத்த ஆரம்பித்தாள். அவளுடைய புடவையெல்லாம் நனைந்திருந்தது. இன்னுமா ராஜா தூங்குகிறான் என்று அவன் படுத்திருந்த அறைக்குச் சென்றேன். அவன் ஒரு தலையணையை கொண்டு முகத்தை மூடியபடி படுத்திருந்தான். நான் தலையணையை எடுத்தேன். அவனுடைய மூச்சு நின்றிருந்தது.'

இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தால் எப்படி இருக்கும்? பையனின் உயிரைப் பறிக்கிற அளவிற்கு சியாமளா ஏன் சென்றாள்? கோபாலின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படும்படி அவள் சத்தம் போட்டாலும் அதில் எந்தவித நியாயமும் இல்லை.

இன்னொரு கதாபாத்திரம் சத்யன்குமார். கோபால் மீது அவர் வைத்திருப்பது என்ன? சத்யன்குமார் கோபாலைச் சந்திப்பதையே முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார். கோபால் வாழ்க்கையில் அவர் செய்த தவறை எப்படியும் சொல்லிவிட வேண்டுமென்று நினைக்கிறார். கேபால் ஆனால் அதைச் சொல்ல விடுவதில்லை. சுவாமிஜிதான் அதைப் போட்டு உடைக்கிறார்.

'என்ன சொல்ல வேண்டும். கோபால் வீட்டில் இல்லாதபோது நீ அவன் பெண்டாட்டி கையைப் பிடித்திழுத்தாய். அல்லது அவள் உன் கையைப் பிடித்திழுத்தாள். இதை அவன் பெண்ணும் பிள்ளையும் பார்த்து விட்டார்கள். இதைவிட வேறென்ன இருக்க முடியும்?' என்று சொல்லும்போது கதையின் புதிர் விடுபடுகிறது. சத்யன்குமாரின் இந்த நிகழ்ச்சிக்காக கோபால் ஆத்திரப்படவில்லை. அசோகமித்திரன் ரொம்பவும் subtle ஆக எடுத்துக்கொண்டு போன விதம் எனக்குப் பிடித்திருந்தது.சில்லறை

கடிகார முள்

எதை துரத்துகிறது

உச்சி வெயில்

சாலை வெறிச்சோடியது

வானில் ஒரு பட்டம்

நிலவு காய்ந்தது

என்னன்னமோ யோசனைகள்

விடிந்துவிட்டது

பைகளைத் துழாவினேன்

சில்லறை இல்லை

என் அதிர்ஷ்டம்

வீட்டுக்குத் திரும்பினேன்

கதவு பூட்டப்பட்டிருந்தது

நேற்று திறந்திருந்ததே

குடை விரிக்க

யோசிக்கிறேன்

நனைந்தால் ஒன்றும்

கரைந்துவிட மாட்டேன்

இன்று கடிதம்

வரவில்லை

என்று தான் வந்தது

நாய் துரத்தியது

தப்பினால் போதுமென்று

ஏதோவொரு வீட்டில் நுழைந்தேன்

நாய்கள் ஜாக்கிரதை என்ற

போர்டை கவனிக்காமல்.

நிலாக் காவல்

நடந்து கொண்டே

இருந்தேன். என்னைத்

தொடர்ந்து கொண்டே

இருந்தது நிலா.

இரவின் தனிமை

என்னை

அச்சமூட்டவில்லை...

நடந்த தூரங்கள் முழுக்க

தொடர்ந்து உரையாடிக்

கொண்டே வந்தது நிலா...

நான் நுழைந்த

அந்த வீட்டிற்குள்

மட்டும் நுழையவில்லை

அந்த நிலா..

எவ்வளவு நேரம்

எனக்காக வெளியே

காத்திருந்ததோ

எனக்குத் தெரியவில்லை...

19.7.11

ஓயாத அலைகள்

நீரலை அடியில்
நீந்தும் மீன்கள்
எப்போது வலையில்
வேடன் குறி
தப்பியது கிளி
அசைவின்றி மரம்
ஓயாத அலைகள்
நீல வானம்
படகின் பயணம்
நிழல்
வளரும் தேயும்
தண்ணீரில் முகம் தெரியும்
மின்விசிறி சுழல்கிறது
விளக்கு எரிகிறது
படுக்கையில் யாருமில்லை
சாலையில் ரோஜா
சருகாகும் வரை
பிணத்தின் வாடை
நடைபாதையில் பணமுடிப்பு
கையேந்தும்
குருட்டுப் பிச்சைக்காரன்
கும்மிருட்டு
நகரும் நட்சத்திரம்
மின்மினிப்பூச்சி
காட்டுப் பாதை
மேடு பள்ளம்
விநோத ஒலி.

இருபது ரூபாய்..(சிறுகதை)இந்த முறை பாபு. ஆனால் அவரை அனுப்ப மேலாளருக்கு விருப்பமில்லை. பாபு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விடுவார் என்று. பாபுவைப் பற்றி என்ன சொல்வது. 24 மணிநேரமும் பணத்தைப் பற்றியே சிந்தனை உள்ளவர். யாரிடம் எப்படி பணம் கடன் கேட்பது. பாபுவுக்கு குடும்பம் பெரிசு. 3 பெண்கள். பின் ஒரு ஆண் பிள்ளை. எல்லோரும் படிக்கிறார்கள். வருமானம் வங்கியில் கிடைக்கும் வருமானம் மட்டும்தான். வீட்டில் ஆடம்பரமான செலவு.

சாட்லைட் கிளைக்கு பாபுவை அனுப்ப மேலாளர் தயங்கியபோது, மேலாளர் மீதே பாபுவுக்குக் கோபம். ஒருநாள் சாட்லைட் கிளைக்குச் சென்றால், ரூ.300 கிடைக்கும். பாபு பரக்கிற பரப்பில் முன்னதாகவே பணத்தைப் போட்டு எடுத்துக் கொண்டு விடுவான். அன்று அப்படித்தான் டிஏ பில் போடாமலேயே பணத்தை வவுச்சர் போட்டு எடுத்துக் கொண்டு விட்டான். நான் மேலாளரிடம் புகார் செய்தேன். ஏனோ அவர் பாபுவை விஜாரிக்கவில்லை.

இது ஒரு பக்கம். பாபு புலம்ப ஆரம்பித்ததால், மேலாளர் சாட்லைட் கிளைக்கு பாபுவை இனிமேல் அனுப்ப ஒப்புக்கொண்டு விட்டார். பல மாதங்களாக சாட்லைட் கிளைக்கு நான் சென்று வந்ததால், சில பொறுப்புகளை பாபுவிடம் ஒப்படைக்க நானும் சென்றேன். காரில், நான், பாபு, மீனு..இந்த மீனு மதுரைப் பெண். அவளைத் தூக்கி சீர்காழி கிளையில் போட்டு சித்தரவதை செய்கிறார்கள். அவள் கிளார்க். பாபுவும், நானும் உதவி மேலாளர்கள்.

6கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கீராநல்லூர் சாட்லைட் கிளைக்கு 10 பேர்கள் வாடிக்கையாளர்கள் வருவார்கள். வாரத்தில் 2 நாட்கள் போகவேண்டும். ஒரு வாரத்தில் பாபுவுக்கு ரூ.600 கிடைக்கும். பாபு புலம்பியதற்குக் காரணம் இருக்கிறது.

சாட்லைட் கிளையில் உள்ள கணக்குகள் எல்லாம் மானுவல். கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி கணக்கு இருப்பது ஆபத்து. பாபு சாட்லைட் கிளைக்குச் செல்லப் போவதை அறிந்து எனக்கு இது வேற கவலை. மானுவல் கணக்கில் பலர் பணம் எடுக்கவே வருவதில்லை. பல கணக்குகளில் பேர் மாத்திரம் இருக்கும். என்ன முகவரி என்பது தெரியாது. பாபு நினைத்தால் சுருட்டலாம். மீனு செல்வதாக இருந்தாலும் கூட, எளிதாக சுருட்டலாம். மீனு புதுசு என்பதால், ஏமாற்றவும் ஏமாற்றலாம்.

ஆனால் பாபு அதுமாதிரி செய்யக்கூடியவரா என்பது எனக்குத் தெரியவில்லை. கொஞ்ச மாதங்களுக்குமுன் பூங்கோதை என்ற அலுவலர், வங்கியை ஏமாற்றி 3 லட்சம் வரை எடுத்துவிட்டாள். ரொம்பவும் தற்செயலாக அவள் ஏமாற்றிய விதத்தைக் கண்டுபிடித்தார்கள். வேறு பெயரில் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பது, அந்தக் கணக்கிற்கு அனோமதயக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவது, பின் தானாகவே கையெழுத்து இட்டு பணத்தை எடுப்பது..மீனா மாதிரி மஞ்சுளா என்ற பெண் புதிதாகச் சேர்ந்திருந்தாள். பூங்கோதை சொல்கிறாள் என்று மஞ்சுளா புதிய கணக்கை தொடங்கி வைத்தாள். அந்த வினையால் அவள் எங்கள் கிளையிலிருந்து வேறு எங்கோ தூக்கி எறியப்பட்டாள். அந்தத் திருட்டைக் கண்டுபிடித்த கேசவனுக்கு உடம்பெல்லாம் ஆட ஆரம்பித்து விட்டது. வவுச்சர்களை செக் பண்ணும்போதுதான் கேசவன் கண்டுபிடித்தார். அவரால் முதலில் நம்பவே முடியவில்லை. பூங்கோதை அப்படிப் பேசுவாள். உண்மையில் அந்த வவுச்சர்களை நான் செக் செய்திருந்தால், கண்டுபிடிக்காமல் போயிருக்கலாம்.

அன்று சனிக்கிழமை. பூங்கோதைதான் திங்கட் கிழமையிலிருந்து சாட்லைட் பிராஞ்சிற்கு செல்ல வேண்டுமென்று முடிவு செய்தோம். அப்படி முடிவு செய்த நாளில்தான் பூங்கோதையின் அயோக்கியத்தனம் தெரிந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சி. எங்கள் கிளையைவிட்டு பூங்கோதை போன பிறகு, திரும்பவும் தொடர்ந்து சாட்லைட் கிளைக்கு நான்தான் போய்க் கொண்டிருந்தேன். இதோ பாபு வந்து 2 மாதங்கள்தான் ஆகிறது.

சாட்லைட் கிளைக்கு நானும் பாபுவுடன் சென்றேன். அங்குள்ள நகைகளை எண்ணிக்கொடுத்தேன். பாபுவிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.

''சரி, வருகிறேன். இனிமேல் உங்கள் பொறுப்பு,'' என்றேன்.

''சார், ஒரு விஷயம். நீங்க மங்கள விலாஸ் வழியாகத்தான் போகப் போகிறீர்கள்...ஒரு தக்காளி சாதமும், ஒரு வடையும் வாங்கிக்கொண்டு போக முடியுமா?''

''சரி,'' எனறேன்.

என்னிடம் தக்காளி சாதம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கூறிய பாபு பணம் எதுவும் தரவில்லை. நாங்கள் வந்த வண்டி டிரைவரிடம், என்னை மெயின் கிளை அலுவலகத்திற்குக் கொண்டு விடச் சொன்னேன். போகும் வழியில் மங்கள விலாஸ் ஓட்டலுக்குச் சென்று எனக்கும் பாபுவிற்கும் சேர்த்து தக்காளி சாதம் 2 வடைகள் வாங்கி஧ன். மொத்தம் 40 ரூபாய் ஆயிற்று. பாபு ஒரு தக்காளி சாதம் வடைக்கு ரூ20 தரவேண்டும்.

மதியம் 2 மணிக்கு பாபுவும்  மீனுவும்  எங்கள் மெயின் கிளை அலுவலகத்திற்கு வந்து விட்டார்கள். சாட்லைட் கிளைக்கு அரைநாள் பணிதான். அங்கு மானுவல் கணக்கை முடித்துக்கொண்டு மெயின் கிளையில் கணக்கை முடிக்க வேண்டும்.

பாபு உள்ளே நுழைந்தவுடன் என்னைப் பார்த்து,

''என்ன தக்காளி சாதம் வாங்கியாச்சா?'' என்று கேட்டார்.

 பொட்டலத்தைக் கொடுத்தபடி, ''20 ரூபாய் ஆயிற்று,'' என்றேன்.

பாபு பேசாமல் வாங்கிக்கொண்டு சென்றார்.

திரும்பவும் பாபு சாப்பிட்டுவிட்டு வந்தவுடன், ''என்ன சாப்பாடு நன்றாக இருந்ததா?'' என்று கேட்டேன்.

''நன்றாக இருந்தது.... கீரை வடை இருக்குமென்று நினைத்தேன்.'' என்றார்.

''கீரை வடை இல்லை...இதற்கே ரூ.20 ஆச்சு..,'' என்றேன்.

பாபு கண்டுகொள்ளவில்லை. எனக்குப் பதட்டம் ஆகிவிட்டது. எப்படி இவரிடமிருந்து ரூ20 வாங்கப் போகிறேன் என்ற கவலை வந்து விட்டது. கடைஊழியர் நாதமுனி என் பரபரப்பை உணர்ந்து,

''கவலைப் படாதீர்கள்..நீங்கள் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்க முடியாது,''என்றான் சிரித்துக்கொண்டே. பாபுவிடமிருந்து எப்படி 20 ரூபாய் வாங்குவது என்ற என் கவலையை மீனுவிடம் தெரிவித்தேன்.

''நீங்கள் வாங்கிக் கொடுத்ததாக எடுத்துக்கொள்ளுங்களேன்..'' என்றாள் மீனு.

''இல்லை..என்னிடம் கடன் என்று பத்து ரூபாய் கேட்டால்கூட அதைத் திரும்பவும் வாங்கும் வரை தூக்கம் வராது,''என்றேன்.

அன்று அப்படித்தான். பாபு பரபரப்பாக காரைக்காலிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் நுழைந்தவுடன், ''ஒரு பத்து ரூபாய் கொடுங்கள்,'' என்று என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அலுவலக வாசலுக்குச் சென்றார். அன்று முழுவதும் ஒரு பத்து ரூபாய் வாங்கிய நினைப்பே இல்லை அவருக்கு.

பாபுவிடம் எது கொடுத்தாலும் திரும்ப வராது என்று நன்றாகத் தெரியும். ஆனால் முகத்தில் அடித்தாற்போல் எப்படிச் சொல்வது. என் சங்கடம் இது. பாபுவிடமிருந்து இந்த 20 ரூபாயை எப்படியும் இன்றைக்குள் வாங்கிவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

அலுவலகப் பரபரப்பில் பாபுவிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.வங்கி அலுவல் முடிந்து அலுவலர்களைத் தவிர எல்லோரும் போய்விட்டார்கள். எப்படியும் பாபுவிடமிருந்து வாங்கி விட வேண்டுமென்று முடிவு செய்து, பாபு இருக்குமிடம் சென்றேன்.

''சாட்லைட் கிளையில் என்ன கூட்டமா?'' என்று கேட்டேன் பாபுவைப் பார்த்து.

''எப்போதும் இருப்பதுபோல்தான். எப்படியும் அதிகமாக எல்லோரையும் பணம் போடச் சொல்ல வேண்டும்,'' என்றார் பாபு.

''இன்னிக்கு தக்காளி சாதம் ரொம்ப நல்லா இருந்தது...''என்றேன்.

அதைக் கேட்டு பாபுவும் தலை ஆட்டியபடி, ''நன்றாக இருந்தது,'' என்றார். நான் வாயைத் திறந்து

20 ரூபாய் கேட்க நினைத்தேன். அதற்குள் பாபுவை கிளை மேலாளர் கூப்பிட நகர்ந்து விட்டார். என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். இனிமேல் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்கின மாதிரிதான் என்று நினைத்துக் கொண்டேன். நாளைக்குக் கேட்டால், அப்படியா என்றாலும் என்பார். நிச்சயம் வாங்க முடியாது.

வீட்டிற்குக் கிளம்ப வேண்டிய நேரம் வந்து, இதோ பாபு கிளம்பிவிட்டார். அவர் காரைக்கால் போக வேண்டும். நான் அலுவலகத்தில் உள்ள எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டுத்தான் கிளம்ப வேண்டும். கிளம்புவதற்குமுன் மேலாளர், ஏபிஎம் கேசவன் என்று எல்லோரையும் கிளப்ப வேண்டும். இதோ பாபு போய்விட்டார். நாளைக்குத்தான் கேட்கவேண்டும். எங்கே கிடைக்கப் போகிறது? ஆறின கஞ்சி பழம் கஞ்சிதான்.

எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு வந்தேன். இரவு 8 ஆகிவிட்டது. நான் மயிலாடுதுறைக்குப் புறப்படும் நேரம் வந்து விட்டது. கம்ப்யூட்டர்களை அணைத்துவிட்டு வாசல் கதவைச் சாத்த வந்தேன். பாபு அவசரம் அவசரமாக அலுவலகத்தில் நுழைந்தார். ''என்ன பாபு?'' என்றேன். ''செல்லை வைத்துவிட்டுப் போய்விட்டேன்,''என்றார்.

நல்ல சந்தர்ப்பம் 20 ரூபாய் கேட்டுவிடலாமென்று நினைத்தேன். பின் பாபு செல்லை எடுத்துக்கொண்டு எங்களுடன் கிளம்பினார்.

வழக்கம்போல் மயிலாடுதுறை பஸ் நிற்குமிடத்தில்தான் காரைக்கால் பஸ்ஸும் நிற்கும். மேலும் பாபு வங்கிக் கதவுகளைச் சாத்தும்போது எந்த உதவியும் செய்ய மாட்டார். அவரை நான் மாப்பிள்ளை என்று என் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொள்வேன்.

எப்படியும் கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, பாபுவைப் பார்த்து, ''நீங்கள் 20 ரூபாய் கொடுக்க மறந்து விட்டீர்கள்...தக்காளி சாதம் வாங்கியதற்கு..'' என்றேன் துணிச்சலுடன்.

''நான் அப்பவே கொடுக்க வேண்டுமென்று, 100 ரூபாய்க்குச் சில்லறை மாற்றி வைத்துக்கொண்டிருந்தேன். இந்தாருங்கள்..'' என்று நீட்டினார்.

நான் அவரிடமிருந்து 20 ரூபாயைப் பறித்துக்கொண்டு மேலும் கீழுமாக அவரைப் பார்த்தேன்.

18.7.11

பானகம்.

வாசலுக்குக்கோலம் போட வந்த  ஜனகா   அந்தக்காலைப்பொழுதில்  தெருவில்  கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்த தன் மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக  இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும்  இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு.  வேறெந்த செல்வம் இருக்கிறதோ இல்லையோ ஏழைகளுக்கு புத்திர செல்வத்திற்கு மட்டும் தடையில்லை’ என்று  அவளே அடிக்கடி அலுத்துக்கொள்வாள்.

"ஆம்பிளை சிங்கமா ரெண்டுபேரும்  அழகுக்கிளியா  ஒர் பொண்ணும் நமக்கு  இருக்குன்னு பெருமைப்படறதவிட்டு அலுத்துக்கிறயே  ஜனகா...” என்பான் அவள் கணவன் பத்ரி பெருமையாக. வறட்டுப்பெருமை பேசுவதும் சீட்டு ஆடுவதும் வெட்டியாக வீட்டில் அமர்ந்து மனைவியின் சமையல் வேலைவருமானத்தில் வாழ்வதும் பத்ரிக்கு திகட்டாத விஷயங்கள்.

’நீ போய்ட்டுவா  ..நான் குழந்தைகளைப்  பார்த்துக்கொள்கிறேன்’  என்று வீட்டில் உட்கார்ந்துகொண்டு சகாககள் நாலைந்து  பேரோடு சீட்டுவிளையாடுவான். கல்யாணம் ஆனபுதிதில் சாயிராம் காட்ரிங் சர்வீசில்  சமையல்பணி செய்துகொண்டிருந்தான். பெரிய பிள்ளை  ஜனகாவின் வயிற்றில்  இருக்கும்போதே அங்கே மேலிடத்தில் சண்டை போட்டு வேலையை அடியோடுவிட்டு விட்டான் ..வேறேங்கும் வேலை தேடிப்போகவுமில்லை. உடனே ஜனகா வாயும் வயிறுமாய்  சமையல்வேலை  தேடிப்போனபோது பெசண்ட் நகரில் வக்கீல் திருமலைவீட்டில் ஆள் தேடுவதாய் காதில்விழவும் போய்க்கெஞ்சி மன்றாடியதில்,  வக்கீல்மாமி மனம் கனிந்து வேலை போட்டுக்கொடுத்தாள்..ஜனகாவின் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது. இதில் சீட்டாட்டத்தில் விட்டதைப்  பிடிக்கிறேன் என்று  இருநூறும் ஐநூறுமாய்  பத்ரி சுருட்டிக்கொண்டுவிடுவான்.

 “டேய் பசங்களா என்னடா  இந்த நேரத்துல கோலிவிளையாட்டு? பல் தேய்ச்சீங்களா இல்லையா?”ஜனகா  கோலப்பொடியில்குனிந்து தரையில் நாலு இழு இழுத்தபடி கேட்டாள்.

“அம்மா! நான்  தெருக்கோடி பைப்புல எழுந்ததும் போய் பல்தேச்சிக் குளிச்சும் ஆச்சு. ராத்திரியெல்லாம்  நம்ம வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்  வழியா ஒரேடியா வெய்யில் அனலா தாக்கிடுத்து.  திரும்ப ஆத்துல வந்து பார்த்தா நீ பின் கட்டுல பாத்ரூம்ல குளிச்சிண்டு இருந்தே அதான் தம்பியும் நானும் விளையாட இங்க வந்துட்டோம்.  தங்கப்பாப்பா தூங்கறா..” என்றான் பெரியவன் பிரஹலாதன்.

ஜனகா கோலமாவுக்கிண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவள் மணி ஏழாகியும்  வேஷ்டி நழுவினது தெரியாமல் பாயில் தூங்கிக் கொண்டிருந்த பத்ரியை எழுப்பினாள்.

”எழுந்திருங்க நான்  வக்கீல் மாமியாத்துக்கு   சீக்கிரமா கிளம்பணும். நரசிம்மஜயந்தியாம் ராத்ரி ஆயிடும் இன்னிக்கு திரும்பி வர்ரதுக்கு. ஐம்பதுபேருக்கு சமையல் செய்யணும்.  அந்திப்பொழுதுலதான்  நரசிம்ம அவதாரம் நடந்ததாலே சாயந்திரமா நரசிம்மருக்கு  பூஜை இருக்கு   நிறையவேலைஇருக்குன்னு வக்கீல்மாமிசொல்லி இருக்கா.  லேட் ஆச்சுன்னா மாமி என்னை உண்டுஇல்லைன்னு பண்ணிடுவா”

...”யாரு அந்த பெண் சிங்கம்  தானே?  ’பெசண்ட்நகர்பேய்’ன்னு  எங்க வட்டாரத்துல அந்த மாமிக்கு பேரு வச்சிருக்கோம்..சீமாச்சு ஒருதடவை அவாத்துக்கு  ஏதோ ஃபங்ஷனுக்கு   காட்ரிங் பண்ணப்போனப்போ ஏற்பட்ட அனுபவத்துல  வச்சபேருதான்..ஹ்ம்ம்..  நீ என்னமாத்தான் ஆறுவருஷமா அவகிட்ட வேலைபாக்றியோ ஜனகா? ஆஆஆவ்வ்வ்...”  என நீளமாய்க் கொட்டாவிவிட்டபடி எழுந்த பத்ரி,” இன்னிக்கு சீட்டுவிளையாட்ற ப்ரண்ட் ரங்கமணி லஞ்ச் ட்ரீட் தரேன்னு சொல்லி இருக்கான்.. நங்கநல்லூர்ல அவன் மச்சினன்  புது மெஸ் திறந்திருக்கானாம் அதுக்கு வரசொல்லி இருக்கான்  நான்  சின்னவன் துருவனையும்  குட்டி கோதையையும் சைக்கிள்ல வச்சி அழைச்சிண்டு போறேன்.. மூணுபேரை சைக்கிள்ல கூட்டிண்டு போறது க‌ஷ்டம்..அதனால பெரியவனை நீ உன்கூட இன்னிக்குக் கூட்டிண்டு போ... அவனும் நரசிம்ம  ஜயந்தி வைபவத்துல கலந்துக்கட்டுமே”

” வக்கீல் மாமி என்ன சொல்வாளோ தெரியல ஆனா   யார் யாரோ வருவா  வருஷா வருஷம்  பாத்துருக்கேனே.... சரிடா ப்ரஹா  வரியா என்கூட?”

”வரேனே...பெரிய பங்களான்னு நீ சொல்வியேம்மா  ! தோட்டம்லாம் இருக்குமா? மரம் செடில்லாம்  இருக்குமா? ஊஞ்சல் போட்ருப்பாளா நான் அதுல ஆடலாமா?” 

"சமத்தா இருக்கணும்.. ஏதும் விஷமம் பண்ணினா  அந்த வக்கீல்மாமிவேதவல்லி உன்னை மிரட்டுவா..,,,பொல்லாதமாமி  அவாத்துல  மாமாவே மாமிகிட்ட பயப்படுவார். என்னவோ போ அப்பப்போ கொஞ்சம் அரிசியும் பருப்பும் தூக்கித்தரா  ...மிச்சம் மீதி சாப்பாடு தரா...மாமியோட பொண்ணு  அமெரிக்காலேந்து வந்தா இரக்கப்பட்டு   நமக்கு துணி மணில்லாம் வாங்கித்தரா.அதான்  நானும் பல்லைக் கடிச்சிண்டு அங்கபோய்ட்டுவரேன்  உங்கப்பா மட்டும் பொறுப்பா  இருந்தா எனக்கு இந்த  நிலைவருமா  ப்ரஹா?”

தன்னைச் சுட்டிக்காட்டிப்பேசுவதைக் கேட்ட  பத்ரி பாயைவிட்டு துள்ளி எழுந்தான்.”என்னடி  குழந்தைகிடட் வாய் நீள்றது ?நாந்தான்  உன் இடத்துல இங்க தினமும் பசங்களைப் பாத்துக்கறேனே? குளிப்பாட்டி  யுனிஃபார்ம் உடுத்தி பழையதைப்போட்டு   பள்ளிக்கூடம் அனுப்பறேன்.  சின்னது கோதை நடுக்கூடத்துல ஆய் போனா அள்ளிக்கூட போட்றேன்.பகல்  ஒருமணீக்கு நீ திரும்பிவரவரைக்கும் எல்லாத்தியும் பாத்துண்டு வீட்ல சீட்டு ஆடி சம்பாதிக்கவும்  செய்றேன்  இன்னும் என்னடி பொறுப்பு வேணும் உனக்கு?”.

பத்ரி கூச்சல் போட ஆரம்பித்துவிட்டால் ஓயமாட்டான் தன்மேல்தவறு இருப்பவர்களுக்கே  உரிய அதிகப்படி பேச்சு பத்ரியிடம் உண்டு. 

 பதில் பேசாமல் மௌனமாய் ஜனகா  வெளியேறினாள்.  கூடவே அரைட்ராயரை  இழுத்துப்பிடித்துக்கொண்டு  நடந்து வந்த ப்ரஹ்லாதன்,” அம்மா! எனக்கு சரியான பேர்தான் வச்சிருக்கே!அதான்  அப்பா இரண்யனாட்டம் அரக்கனா இருக்காரோ?’என்றான்.


” உஷ் அப்பாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.... உனக்கு நான் பேரு வைக்கலடா..  வக்கீல் மாமியாத்துல  நீ என் வயத்துல இருக்கறப்போ வேலைல சேர்ந்தேன். மாமி    நரசிம்மபெருமாள்பக்தை.  பையன் பொறந்தா பிரஹலாதன்னு வைடீ ஜனகா  ன்னு சொல்லிட்டா!”

“அப்போ மாமிதான்   ஹிரண்யா!” கைகொட்டி சிரித்தான் பிரஹலாதன்.

 ”உஷ் அங்கவந்து இப்டில்லாம் சிரிக்கப்டாது ...மாமி கோச்சிபபா...சமத்தா இரு என்ன?’

”சரிம்மா. ”

  பழைய மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் வாசல் பஸ் ஸ்டாப்பில் இருவரும்   சில நிமிஷங்கள் காத்திருக்கும்போதே பஸ் வந்துவிட்டது.

பஸ்ஸில்  ஏறியதும்  கண்டக்டரிடம்,” பெஸன்ட்நகர் கலாஷேத்ரா காலனி” என்று  சொல்லி  பத்துரூபாயைக்கொடுத்தாள்.  

பஸ்ஸில் நிற்கக்கூட இடமில்லை..

”ஏன்மா தினம் இப்டித்தான் நெருசல்ல  போய்ட்டு வரியா பாவம்மா நீ”

“தினம் இவ்ளொ கூட்டம் இருக்காது,இன்னிக்கு தான் இப்படி .சரி நீ என் பக்கமாவே இரு....காணாமபோய்டாதே”

கலாஷேத்ரா காலனி வந்ததும் ஜனகா மகனுடன் கீழே இறங்கினாள்.  இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

“பக்கத்துலதான் வீடு ப்ரஹா...அஞ்சு நிமிஷத்துல போய்டலாம்”

“வக்கீல் வீட்ல நாய் இருக்காம்மா?’

’மாமிதான் ’ என்று சொல்லவந்த ஜனகா  லேசான சிரிப்புடன்  ” இப்போ இல்லை...நீ குழந்தையா இருக்கறப்போ  ஒண்ணு இருந்தது  அது பேரு நரசிமமா” என்றாள்.

”என்னது நாய்பேரு நரசிம்மனா?”

” ஆமாம்   வக்கீல் மாமி  பயங்கரமான நரசிம்ம சுவாமிபக்தை! வீட்டுக்கு பேரு ஜெய்நரசிம்மா!

மாமியோட பையன் பேரு லஷ்மிநரசிம்மன்.  மாமியாத்ல குலதெய்வம் நரசிம்மராம் அதனால் நாய்க்கும் அதே பேரை வச்சாளாம் அந்தநாய்  ஒருநாள் செத்துபோனதும் மாமிக்கு ஒருமாசம் சாப்பாடு இறங்கல...பாவம்..அந்த சோகத்துல  இதுவரைக்கும் வேற  நாயே வாங்கல..”

” ஏன்மா நம்மவீடல் நாய் வாங்கிவளக்கலாமா?  கிரிக்கட்  தோனி  பேரை  வைக்லாம் எனக்கு அவரை ரொம்பபிடிக்கும்.”

”ஆமாண்டா   ந்ம்ம  பொழைப்பெ நாய் பொழப்பா இருக்கு இதுல நாய் ஒண்ணுதான்  குறைச்சல்..சரிசரி...வக்கீல் வீடு வந்துடுத்து  நான் சொன்னது நினைவிருக்கோல்லியோ?’

”அம்மா! நீ  எழுந்ததும்  நீராகாரம் தருவே   இன்னிக்கு தரவே இல்ல.பசிக்கறதும்மா  இப்போவே...”

”அவசரத்துல மறந்துட்டேன் ப்ரஹா...  மாமியாத்துல  பாலோ மோரோ      போனதும் தரேன்ப்பா”

”சரிம்மா”

வீட்டு வெளிவாசலில்   செம்மண் நிரப்பி பெரிய படிக்கோலம்போடப்பட்டிருந்தது,

காம்பவுண்ட் சுவரில் க்ரானைட்டில்  பதித்திருந்த  சிறிய  நரசிம்மர் சிலைக்கு  சாமந்திமாலை அணிவித்திருக்க போர்ட்டிகோ தாண்டி நிலைப்படிக்கு வரும்போது மேலே மாவிலைக்கொத்து தொங்கியது. திறந்த கதவிற்கு அருகே நின்று ‘மாமி...”என்று குரல்கொடுத்தபடியே  உள்ளே  நுழைந்தாள் ஜனகா.

“மணி எட்டாறது   இவ்ளோ லேட்டா வரயே?   ஏழரைக்கே வரசொன்னேனே,  இன்னிக்கு ந்ருசிம்ம ஜயந்தி  நினைவிருக்காடி  ஜனகா? ” உரத்த குரலில் அதட்டலாய்க்   கேட்டபடியே வந்த உருவத்தைப்  பார்த்தான் ப்ரஹலாதன்.

 பழுத்த  மாம்பழ நிறத்தில்  பெரியவிழிகளும் அதை இன்னும் பெரிதாக்கிய காட்டிய  மூக்குக்கண்ணாடியும் விடைத்தநாசியும் தடித்த உதடுமாக   வேதவல்லியைப் பார்க்கும்போது  அம்புலிமாமா  புத்தகத்தில்  அசோகவன சீதை அருகே அமர்ந்திருந்த ஒருராட்சசியின் படம்  ப்ரஹலாதனுக்கு  நினைவுக்கு வந்தது..மாமியும் அவனை ஏறெடுத்துப்பார்த்தாள்.
”யாருடி இந்த வாண்டு ? பெரியவனா சின்னவனா?”
”பெ.. பெரியவன்  ப்ரஹா..”
”என்னடி ப்ரஹா? ப்ரஹலாதன்னு வாய் நெறயக் கூப்டாம? நான்   வச்ச  பேராச்சே    ஏண்டா அம்பி என்ன படிக்கறே?’

”ரண்டாம் க்ளாஸ், மாம்பலம் அரசுப்பள்ளில”

”ஒழுங்காப்படிக்கப்போறியா இல்ல  உங்கப்பனாட்டம் சீட்டு ஊருசுத்தறதுன்னு திரியப்போறியா?  இன்னிக்கு எதுக்குடி இவனை  இங்க அழைச்சிண்டு வந்தே  ஜனகா?’

”அவர் எங்கயோ போகணூமாம்...  சைக்கிள்ள  இவனையும் கூட்டிண்டு போகமுடியாது ஆத்துல  தனியா விடவும் முடியாது ரெண்டுங்கெட்டான்  ..ஸ்கூல் வேற  லீவ் விட்டாச்சு. அழைச்சிண்டுபோன்னு அவர் ஆர்டர் போட்டுட்டார்”

”நீயும் அழைச்சிண்டு வந்துட்டியாக்கும்? இந்தகாலத்துலயும் இப்படி ஒரு பதி பக்தியான பொண்ணை நான் இப்பத்தான் பாக்கறேன்  “என்றாள் மாமி கிண்டலாக..

ஜனகா தலை குனிந்தாள்
 ..
”சீக்கிரமா தளிகை  முடிச்சிட்டு  ஜோடுதவலை  நிறைய பானகம் பண்ணிடு.  பதினஞ்சிகிலோ வெல்லம் உடைச்சி சுக்கு ஏலம் தட்டிப்போட்டு பண்ணு.. அம்பதுபேராவதுவருவா   ஆமா, எங்க இந்த மனுஷன் போய்த்தொலைஞ்சார்?  காலங்கார்த்தால  பேப்பர்ல தலைசாய்ச்சா எழுந்து வர்ரதே கெடயாது..... ஏன்னா.... ஏன்னா  எங்கபோய்த்தொலைஞ்சேள்?”

மாமி கணவரைத் திட்டிகொண்டே தேடும்போது  வக்கீல் திருமலை தனது மெலிந்த உடலைக்குறுக்கிக்கொண்டு பயந்தபடி எதிரே ஓடி வந்தார்.

“எங்க ஒழிஞ்சங்கோ  இவ்ளோ நாழி? கொல்லைலபோயி பவழமல்லி பொறுக்க சொன்னேனே? வெய்யில் வந்தா எல்லாம் வாடிப்போயிடும்.தோட்டக்கார கடங்காரன் இன்னிக்குப்பாத்து லீவ் போட்டுட்டான்.”

”ஹிஹி  .....போன் வந்தது  நம்ம  லஷ்மிநரசிம்மன்   அமெரிக்காலேந்துபேசினான்.  பொழுதுபோனதே தெரில்லடி வேதம்”என்று அசடு வழிந்தார்.

”  அவன் நறுக்குனு நாலு வார்த்தைதான்  பேசுவான் நீங்கதான்  வளவளனு கோர்ட்கேஸ் கதைலாம் அவன்கிட்ட அளப்பங்கோ...சரி,  இன்னும் காபி  குடிக்கலதானே?”

”இல்லையே ஜனகா வந்து வழக்கம்போல  கலந்துதருவான்னு காத்துண்ட்ருக்கேன்”

”இன்னிக்கு காபி சாப்பிடக்கூடாது”

“இதென்ன புதுசா இருக்கு?”

”ஆமாம்  புதுசா கேள்விப்பட்டேன் அன்னிக்கு டிவில  உபந்நியாசகர் சொனனர் ந்ருசிம்ம ஜெயந்தி அன்னிக்கு சாயந்திரம் அவர் பிரத்யட்சமான அந்திpபொழுதுவரை  வாய்ல பச்சத்தண்ணி குத்திக்கக் கூடாதாம் அப்றோமா அவருக்கு அம்சை பண்ணின பானகத்தை முதல்ல சாப்பிடணுமாம்  நாம பாட்டுக்கு இத்தனை வருஷமா காலமெருந்து  நாலு காபி ஒரு பாக்கெட் பிஸ்கட்டுன்னு   தள்ளிண்டு இருந்திருக்கோம். அறுவயசு பக்கம் நெருங்கிண்ட்ருக்கோம் இனிமேலாவது இந்த அல்ப ஆசைலாம் விடணும் அதுவும் நாள் கிழமைல புரிஞ்சுதா?”

 அதட்டிவிட்டு மாடிக்குஏறினாள் மாமி.அவள் போனதும்,ஜனகாவிடம் தயங்கித்தயங்கி  நெருங்கி வந்த  வக்கீல்திருமலை,”அம்மாடி ஜனகா! ஒருவாய் காபி சக்கரை போடாம வழக்கம்போலக் கொடுத்துடுடிம்மா. எனக்கு டயபடீஸ்னு தெரிஞ்சும் மாமி இப்படி கண்டிஷன் போடறா பாரு?”என்றார் கெஞ்சுதலான குரலில்

”மாமா!    மாமிக்குத்தெரிஞ்சா.....?”

”தெரிஞ்சாதானே? ஆமா இதுயார் உன் பிள்ளையா ஜனகா?”

“ஆமாம் மாமா  பேருபிரஹலாதன்”

“இவன் கைல ஒரு லோட்டா காபி கொடுத்து தோட்டம் பக்கம் அனுப்பிடு அங்க பவழமல்லி மரத்துகிட்ட நான் இருக்கேன்...”

“சரி மாமா”

திருமலை நகர்ந்ததும்  பிரஹலாதன் சிணுங்கினான்.

 ”அம்மா  பசிக்கறது எனக்கும்  ஏதாவது கொடு”

”முதல்ல மாமாக்கு காபி கொண்டு கொடுத்துட்டுவாடா..”

ப்ரஹலாதன்  கொண்டுவந்து கொடுத்த  காபியை சாப்பிட்டதும்  திருமலை” தாங்க்ஸ்டா குழந்தை! ஆமா நீ காபி சாப்ட்டியோ?”என்று அன்பாகக்கேட்டார்.

”இல்ல மாமா  காபில்லாம்  ஆத்லபோடறதில்ல ... ஆனா  கார்த்தால் நீராகாரம் சாப்டுவேன் இன்னிக்கு கிளம்பற அவசரத்துல அம்மாவும் தரல நானும்  அப்படியே வந்துட்டேன்...  பானகம் பண்னப்போறாளாமே மாமா? எனக்கு.பானகம் ரொம்பப் பிடிக்கும்  ”

 ”அது பூஜைமுடிஞ்சி   சாய்ந்திரமாத்தான் உன் வாய்க்குக்கிடைக்கும்டா..அதுவரை பட்டினி கிடக்கமுடியுமா உன்னால? அம்மாகிட்ட கேட்டு  ஃப்ரிட்ஜ்ல ஜூஸோ பழமோ எடுத்து சாப்பிடுப்பா”

பிரஹலாதன் காபிலோட்டாவுடன் சிட்டாய்ப்பறந்தான்.

ஜனகா வெல்லத்தை  கொல்லைப்புறம் கொண்டுவந்து அங்கிருந்த பாறாங்கல் திண்ணைமீது வைத்து சிறு கல் உலக்கையால் நங்நங்கென்று  தட்டினாள்.

கூடவே வந்த பிரஹ்லாதன்,”அம்மா! எனக்கு துளி வெல்லம் தரியா?” என்று கேட்டான் ,கேட்கும்போதே நாவில் நீர் சுரந்துவிட்டது.

“இல்லடா  உம்மாச்சிக்கு பண்றது இதை முதல்ல நாம சாப்டக்கூடாது”

இதைக்கேட்டுக்கொண்டே அங்கே வந்த திருமலை” குழந்தைக்கு சின்ன வில்லை கொடு ஜனகா  ஆசைப்படறான் பாவம்”
என்றார்.

ஜனகா  யோசித்தபடி  ஒரு வில்லையை  எடுத்து  மாமாவிடம் கொடுத்து,:நீங்களே கொடுங்கோ மாமா..எனக்கென்னவோ பயமா இருக்கு” என்றாள்.

எதேச்சையாய் அங்கே வந்த வேதவல்லி   திருமலையின் கையில் வெல்ல வில்லையைப்பார்த்து   ருத்ரதாண்டவம் ஆடினாள்.

” என்ன நினைச்சிண்டு இருக்கேள் மனசுல? பெருமாளுக்கு அதுவும் உக்ரநரசிம்மருக்குபண்ற பிரசாதத்தை  மனுஷா முதல்ல சாப்பிடறதா? எனன் அக்கிரமம் இது? வயசுக்கு ஏத்த விவேகமே இல்லை உங்ககிட்ட..  இந்தப்பொடியனுக்காகவோ இல்ல நீங்க  முழுங்கவோ  எப்ப்டி எடுத்தாலும் அது மகா தப்புதான்.. டேய் பொடியா போடா  அந்தப்பக்கம்.....கூடத்துமூலைல உக்காந்துக்கோ  அம்மாபுடவைத் தலைப்பைப் பிடிச்சிண்டு வந்தே  கொன்னுடுவேன் உன்னை.பூஜைமுடிஞ்சதும்  எல்லாம் நீயும்  கொட்டிக்கோ யார் வேண்டாஙக்றா? முன்னாடி சாப்ட்டா  நரசிம்மர் யார்மேலயாவது ஆவேசம் வந்து அவாமூலம் தன் கோபதைக்காட்டமாட்டாரோ? சுவாமி உக்ரம் தெரியாதா என்ன? அதைத் தணிக்கத்தானே பானகம் பண்றோம்?  என்னிக்கோ ஒருநாளாவது சாயந்திரம் வரைக்கும் உபவாசம் இருக்க துப்பு இல்லாத ஜன்மம் எடுத்து  என்ன பிரயோஜனமோ  நரசிம்மா இவாளுக்கு நீதான் புத்தி புகட்டணும்”முணுமுணுத்தபடி மாமி அகன்றாள்.

பிரஹலாதன் பயந்துபோய்  கூடத்துமூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.டிவியில்  நரசிம்மர்கோயில் ஒன்றின் அபிஷேக ஆராதனைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

மணி பகல் 12 ஆனது.

திருமலை திருதிருவென விழித்தபடி  பிரஹலாதன் அருகில் வந்தவர்,”குழந்தே பசிக்கறதாடா?” என்று கேட்டார்.

“ஆமாம் மாமா  அம்மாவும் பயப்படறா ஒண்ணும் தரமாட்டேங்கிறா..”

“நான் கொஞ்சம் பழம் கொண்டுவந்து தரட்டுமா வேஷ்டில மறைச்சி எடுத்துண்டு வரேனே?”

“வேண்டாம் மாமா  ..மாமி உங்கள ரொம்ப திட்றா பாவம் நீங்க..”

”அவ அப்படித்தான்..ஆனா மாமி ஃப்ரண்ட்ஸெல்லாம்  வந்தா  அவாளே உரிமையா ஃபிரிட்ஜைத்  திறந்து ஜூசும் கூல்ட்ரிங்கும் குடிச்சிட்டுத்தான்  பூஜைக்கு உக்காருவா பாரேன்.மாமியும் அவாளை  ஒண்ணும் சொல்லமாட்டா...எல்லாம் பணம் பண்றவேலைடா”

எரிச்சலுடன் முணுமுணுத்தபடி  மாடிக்குப்போனவர் மறுபடி மூன்றுமணிக்குக் கீழே வந்தபோது கூடத்தில் அப்படியே கைகட்டிக்கொண்டு முகம் வாடிய நிலையில் அமர்ந்திருந்த பிரஹலாதனைப்பார்த்து வேதனையுடன்  ‘ச்சூள்’ கொட்டினார்.

 வேதவல்லி ஹாலில்  கீழே  ரத்னகம்பளத்தை விரிக்கச்சொல்லி பணியாட்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தாள். 

இதுதான் நலல் சமயம் உள்ளபோய் ஒரு லோட்டா பானகத்தை கொண்டுவந்துடலாம்..குழந்தையும் தெய்வமும் ஒண்ணூதான்..இந்தக்குழந்தை சாப்பிட்டால் பகவான் ஒண்ணும் கோவிச்சிக்கமாட்டார்.அதுவும் நரசிம்மனின் அபிமான பக்தனின் பேரை வச்சிண்டு இருக்கான் குழந்தை. வாய் மூடி தேமேன்னு  உக்காந்திருக்கு...இன்னும் மூணுமணிநேரத்துக்கு மேல ஆகும் பிரசாதம்  கிடைக்கறதுக்கு . அதுவரை  பையன் தாங்குவானா? எங்காவது மயக்கம் போட்டு விழுந்துட்டா...?  இந்த ஜனகாவும் எனக்கு மேல பயந்துசாகறா..

இப்படி நினைத்தபடிதிருமலை மெல்ல சமையலறைக்குப்புகுந்தார்.

ஜனகா அப்பளம் பொறித்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்குத்தெரியாமல்  ஓரமாய் தாம்பாளம் போட்டு மூடிவைத்திருந்த ஜோடுதவலையை நெருங்கினார். மெல்ல அந்த தாம்பாளத்தை  கையில் எடுக்கும்போது அது கைதவறி ஜிலீங் என்று  சப்தப்படுத்திக்கொண்டு கீழே விழுந்தது.தூக்கிவாரிப்போட  ஜனகா திரும்பினாள்.

“என்னாச்சு என்ன சத்தம் அங்க?வாசல்ல  எல்லாரும் கார்ல  வந்துட்டா...நீங்க கிச்சன்ல என்ன பண்றங்கோ? வாசல்லப்போய் எல்லாரையும் வரவேற்கிற வழியைப்பாருங்கோ..ம்ம்?”

வேதவல்லி போட்ட கூச்சலில் சப்தநாடியும் ஒடுங்க  திருமலை வாசலுக்குப்போய்விட்டார்.

வந்தவர்கள் “ஸ் அப்பா என்ன வெய்யில்.... ஜூஸ் கொண்டாங்க சமையக்கார மாமி “ என்று  நுழைந்ததும் உத்தரவிட்டனர்.

ஜனகா கொண்டுபோய்கொடுக்கும்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த மகனையும் ஒரு கண் பார்த்துவந்தாள்.

திருமலைக்கு  கோபமாய்வந்தது கூடத்தில்  மூலையில் உட்கார்ந்திருக்கிற  குழந்தைக்கு ஒருவாய் நீராவது யாராவது  கொடுத்துத்  தொலைத்தால் என்ன? பெத்தவளுக்கே விசாரமில்லை..

அவன் அருகில்போய்,”சர்பத் கொண்டுவரட்டுமாப்பா?” என்றுகேட்டார்.

”வேண்டாம் மாமா அதெல்லாம் பழக்கமில்ல..  எனக்கு  பானகம்பிடிக்கும் பூஜை ஆனதும்அதே  சாப்பிட்றேனே?” என்றான் பிரஹலாதன் .

“அதுக்கு இப்போதான் மணி அஞ்சாறது அஞ்சரைக்கு ஆரம்பிச்சி ஆறரைக்குதான் பூஜை முடிப்பா அப்புறம்தான்ப்பா பானக விநியோகம் நடக்கும்”

 ”பரவால்ல மாமா..தோட்டத்துப்பைப்ல  தண்ணி  குடிச்சிட்டேன் ..”

திருமலை  வேதனையுடன்  வந்தபோது கையில்  ஜூஸ் டம்ளருடன் வந்த லேடீஸ்க்ளப் தலைவி மாலதி ஜகன்னாதன்,” வேதா ஈஸ் ஆல்வேஸ் க்ரேட்!  நரசிம்ம ஜயந்தி வைபவத்தை அவள் வீட்டில் கொண்டாடறவிதமே தனி” என்று யாரிடமோ புகழ்ந்து கொண்டிருந்தாள்.

“எல்லாம் சிரத்தையாய் செய்யணும் மாலதி, இல்லேன்னா  நரசிம்மர் யார்மேலாவது ஆவேசமாய் வந்துடுவார்.” என்றாள் வேதவல்லி பெருமையும் பயத்துடனுடனும்.

பூஜை ஆரம்பித்தது. திருமலை முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் சட்டென பின்வரிசையைப்பார்த்தார் அங்கே பிரஹலாதன்  சுவரோடு சுவராய் சாய்ந்து கண்ணைமூடிக்கொண்டிருந்தான்.

‘ஐயோ அவனுக்கு மயக்கம் கியக்கம் வந்துருக்குமோ?’

விளக்கேற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லத்தொடங்கினர். பஜனைபாடல்கள் என்று தொடர்ந்தது. இரண்டுமணிநேரமானதும்,


’எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
  வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
  அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
  பந்தனை தீரப்  பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே’

பல்லாண்டு கூறிவிட்டு ஒருவழியாய்கற்பூர ஹாரத்தி காண்பித்து மங்கள சுலோகம் சொல்லிமுடித்தனர்.. பானக நைவேத்யமும் முடிந்தது

வேதவல்லி மடிசார் புடவை தடுக்கத்தடுக்க வேகமாய்  பானக ஜோடுதவலைப்பாத்திரத்தை திறந்தாள்..டம்ளரில்  பானகத்தை  ஊற்றி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள்.

திருமலை ஓடிப்போய்,”ஒரு டம்ளர் இங்க..” என்றார்.

“அடடா  உங்களுக்கு என்ன அவசரம்? வெளிமனுஷாளை கவனிங்கோ முதல்ல போங்கோ அந்தப்பக்கம்”  விரட்டிய மனைவியை விரக்தியாய் பார்த்தபடி  ஒரு மூலையில்போய் நின்றுகொண்டார் திருமலை.

ஓரிரு நிமிடங்கள்தான்.....


 திடீரென  ஹ்ஹ்ஹ்ஹூஉம்ம் என்று  தலைமயிரை சிலுப்பிக்கொண்டு உடம்பை  முறுக்கிக்கொண்டு நடுக்கூடத்தில் தொம் என கைகாலை அகட்டியபடி குதித்தார் திருமலை.

”வக்கீல் சாருக்கு எனனச்சு? முழியை உருட்றாரே? ஐய்யோ பயமா இருக்கே?”

“மாமா மாமா!”

“நான் நரசிம்மம் வந்துருக்கேன்..”  திருமலை  உக்ரமாய் வார்த்தைகளை உமிழ்ந்தார்.

”ஆ பெருமாளே! நரசிம்மா ! நான் சொன்னெனே  சிரத்தையா பூஜை பண்ணினா பெருமாள் யார்மேலாவது வந்துடுவார்னு. என் பாக்கியம்  பெருமாள் இங்க .ஹோ பெருமாளே ஏஏஏ..” வேதம் பெருமையாய் சொன்னபடி நாலுதடவை  கீழேவிழுந்து சேவித்தாள்.

”உன் பூஜைல குத்தம் இருக்கு் வேதா”

“கு..குத்தமா? இல்லையே நேமமா செய்தேனே சுவாமீ?” கைநடுங்க  குரல் நடுங்க சொன்னாள் வேதவல்லி/

“ஹ.. அநியாயமா செய்துட்டு  என்ன பேச்சு பேசறே நீ?”

“அநியாயாமா? அபசாரம் மன்னிச்சிடுங்கோ பெருமாளே என்ன குத்தமாச்சு?”

”என் பக்தனை பட்டினி போட்டுட்டு நீங்கள்ளாம்  பானகம் சாப்பிடறங்கோ...இது மகா அநியாயம்”

“பக்தனா?   எல்லாரும் உங்க பக்தா பெருமாளே.. யாரைசொல்றேள்?யாரு?”

“பிரஹலாதன் என் அபிமான பக்தன் தெரியாதா?  ஹூஹூ,ம்ம்ம்ம்”

“ப்ரஹலாதன் உங்க அருமைபக்தன் அறிவேனே ஹரி ஹரி”

“அந்தபிரஹலாதன் இல்லை...இங்க இருக்கும் பிரஹலாதன்”

“பிரஹ்...ஓ  சமையக்காரி பையனா?...” புரிந்தவளாய் வேதம் “அபச்சாரம் பண்ணிட்டேன் “ என்று மறுபடி விழுந்து சேவித்தாள் பருத்த உடல் மூச்சிறைக்க கூடத்துமூலையில் மயக்கமாகிக் கிடந்த பிரஹலாதனை நெருங்கினாள்..

“சீக்கிரமா   பெருமாள் மலையேறதுக்குள்ள  பெருமாள் உத்தரவை  செய்துமுடி வேதா” யாரோ வயதான பெண்மணி  உரத்தகுரலில்  சொன்னாள்.

 பிரஹலாதனின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை மடியில் அமரவைத்து பானகத்தை சொம்பில் கொண்டுவரச்சொல்லி அதனை மெல்ல அவன் வாயில் ஊற்ற ஆரம்பித்தாள்.’நரசிம்மப்பெருமாளே என்னை மன்னிச்சிடு உன் பக்தனை நான் கவனிக்காதது தப்புதான்’ வாய்விட்டு அரற்றினாள்.

மடக் மடக் என   பானகத்தை முழுங்கிய பிரஹலாதனுக்கு உயிரே திரும்பிவந்தமாதிரி இருந்தது. மெல்ல ஆசுவாசமாய் கண்ணைத்திறந்தான்.. அனைவரும்  தன்னை கீழே விழுந்து நமஸ்கரித்துக்கொண்டிருக்க, அங்கே  நின்றுகொண்டிருந்த திருமலை  மட்டும் பிரஹலாதனைப்பார்த்துக் குறும்பாய் கண் சிமிட்டினார்.