30.3.10

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20
ஆறுதல்

விடுமுறையில்
குழந்தைகளுடன் மனைவி
ஊருக்குச் சென்றுவிட்டாள்
குழந்தையின் பூனைக்கத்தல்,
அவனின் சிரிப்பு,
குறும்பு, குதூகலங்களின்
பின்னணியில்
மிக்ஸியின் காட்டுப் பிளிறல்
சமையலறையில்
பாத்திரங்கள் உருள்கிற
விழுகிற
பின்வாசலில்
வாளிகள் மோதுகிற
சப்தம் எதுவுமின்றி
குக்கர் விசில்,
குழாயில் தண்ணீர்
விழும் சப்தம், என
ஏதுமின்றி ஒரே நிசப்தம்.
தனிமையில் அவன்.
உயிர்களற்ற உலகில்
அவன் மட்டும்
தனிமையில்
உலவுவது போல்
ஒரு உணர்வு அவனுள்.
என்னவோ போல்
இருந்தது.
சமையலறையில் திடீரென
பாத்திரங்கள்
உருளும் சப்தம்.
அதிர்ச்சியில் அங்கே
சென்று பார்த்தான்
ஒரே ஆறுதல்.
சமையலறையில்
பதுங்கி வந்தன
எதிர் வீட்டுப் பூனை
அதன் குட்டிகளுடன்.

28.3.10

மொழிபெயர்ப்புக் கவிதை

சந்தேகம்

நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பனியூறும் இரவில்

தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம்

நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும்

இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக் கூடும்

இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில்

கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும்

பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத

எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும்

அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய

பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும்

இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக்

கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில்

துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும்

எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும்

சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல


25.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதிமூன்று கவிதைகள்முட்டி முட்டிப்

பால் குடிக்கின்றன


நீலக் குழல் விளக்கில்


விட்டில் பூச்சிகள்உள்ளேமழைக்குப் பயந்து


அறைக்குள் ஆட்டம்


போட்டன துவைத்த துணிகள்விடலைகள்துள்ளித் துவண்டு


தென்றல் கடக்க


விஸில் அடித்தன


மூங்கில் மரங்கள்- பாலகுமாரன்பின் குறிப்பு : கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அவர் கையில் வைத்திருந்த சில புத்தகங்களைக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் புள்ளி என்ற இப் புத்தகம். கைக்கு அடக்கமான இப் புத்தகத்தைப் போல் ஒன்றை தயாரித்து எல்லோருக்கும் இலவசமாக வழங்க வேண்டுமென்பது என் அவா. எப்படி இந்தச் சிறிய புத்தகத்தில் நவீன ஓவியர்களின் படங்களுடன் புத்தகம் கொண்டு வர முடிந்தது? ஆச்சரியமாக உள்ளது.
- அழகியசிங்கர்

கவிதை !

எங்கேயோ

யாருக்கோ

இப்பொழுதே

தோன்றிவிடுமே

என்ற அவசரத்தில்

24.3.10

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

ஞாபகங்கள் இல்லாது

போகுமொரு நாளில்


நிறைய தொலைபேசி அழைப்புகள்

நீங்கள் யாரென்னும் கேள்வியோடு

நிராகரிக்கப்படலாம்

நிலுவையில் இருக்கும்நிறைய வழக்குகள்

தள்ளுபடி செய்யப்படலாம்

நாளைய நம்பிக்கைககளின்

வேர்கள்

நடுக்கம் காணலாம்.

உறவுகளுக்குள்ளான

உறுதிமொழிகள்

உடனுக்குடன்

ஆவணப்படுத்தப்படலாம்.

பிறந்த நாள்

பிரிந்த நாள் உபசாரங்களெல்லாம்

ஒடுங்கியோ அல்லது

ஓய்ந்தோ போகலாம்.

அந்தந்த கணங்களில்

வாழ

அநேகம் பேர்

ஆயத்தமாகலாம்

நிகழ் கணங்களை

உடனுக்குடன்

பதிவு செய்ய வேண்டிய

கட்டாயம்

கவிதைகளுக்கு நேரலாம்

ஞாபகங்கள் இல்லாது

போகுமொரு நாளில்

நிறைய துரோகங்கள்

மன்னிக்கப்படலாம் அல்லது
மறக்கப்படலாம்

அப்பா என்கிற ஸ்தானம்

அவனுடைய மனைவியின்
முதல் பிரசவத்துக்கு குறிக்கப்பட்ட
அந்த நன்னாள் நெருங்கிக் கொண்டே வந்தது
பணியாற்றும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
பிறக்கப்போகும் ஒரு உயிருக்காக
பிரார்த்தனை செய்தபடியே
அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது
அந்த நகரத்தின்
சாலையோரக் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த
சின்னஞ்சிறு குழந்தைகளின் படங்களும்
‘கற்பூரமுல்லை ஒன்று.... ’ -என எதேச்சையாக
அருகாமையில் ஒலித்த இனிய கானமும்
அவன் மனதைப் பிசைந்தன.
அன்றைய மாலைப் பொழுதில
அடுக்குமாடி வணிக வளாகமொன்றில்
‘டாடி’ என்றழைத்தபடி
ஓடிவந்த குழந்தையொன்று
தவறுதலாக அவன் கால்களைக்
கட்டிக் கொண்டது
சில வினாடிகள் கழித்து
அண்ணாந்து முகம் பார்த்து
தனது தந்தையல்ல என்றுணர்ந்த பின்னர்
அந்நியர் ஸ்பரிசத்தை தொட்டுவிட்ட
சங்கோஜத்தில் விலகிச் சென்றது
நிமித்தங்கள் அவன் தந்தையானதை
இந்நிகழ்வினால் உறுதிப்படுத்த
‘நான் அப்பாவாகிவிட்டேன்’ என்ற எண்ணம்
அவன் உள்ளத்தில் உதித்த அக்கணத்தில்
வாயில் கைப்பிடி சர்க்கரை போடாமலேயே
உடலில் ஓடும் உதிரம் கூட
அவனுக்கு இனித்தது.

23.3.10

எதையாவது சொல்லட்டுமா....18

எதையாவது சொல்லட்டுமா....18
போன சனிக்கிழமை (13.03.2010) எழுதியிருக்க வேண்டும். இந்தச் சனிக்கிழமைதான் எழுதுகிறேன். சனிக்கிழமை எப்போதும் நான் சென்னையை நோக்கிக் கிளம்பி விடுவேன். பின் ஞாயிறு கிளம்பி இங்கு வந்துவிடுவேன். வழக்கம்போல் 13ஆம் தேதி மதியம் சீகாழி கிளையிலிருந்து வாசலில் வந்து நின்றேன். எனக்குப்பிடித்தமான வசீகரமான பெண் பெயரில் ஓடும் பஸ் வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்தப் பஸ்ஸில் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆன் லைனின் பதிவு செய்யவேண்டும். ஏசி வண்டி. விலை அதிகம். தேர் மாதிரி தெரு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த வண்டி வந்து கொண்டிருந்தது. கை காட்டினேன். நிற்காமல் போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். டிரைவர் நிறுத்தினான்.
'சீட் இருக்கிறதா?' என்று கேட்டேன். 'இருக்கிறது,' என்றான். நான் இன்று சென்னை போகப்போகிறோம் என்ற நினைப்பில் ஒரு பை நிறைய நவீன விருட்சம் 75 - 76 இதழ் பிரதிகளை அடுக்கிக் கொண்டேன். அதைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சீகாழியில் மேற்குறிப்பிட்ட பஸ்ஸில் ஏறினேன். இப்படி அதிகமாக மீந்துபோகும் இதழ்களை ஒன்றாக்கி ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது என் வழக்கம். மேலும் விருட்சம் இதழிற்கும் இந்தப் பஸ்ஸில் ஏறி வருவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதை இனிமேல்தான் சொல்லப் போகிறேன். பஸ்ஸில் எப்போதும் 2 டிரைவர்கள் இருப்பார்கள். வசீகரமான பெண்ணின் பெயரைக் கொண்ட இந்தப் பஸ்ஸில் சென்னை வர ரூ350 தரவேண்டும். ஏசி. பயணிகளுக்கு ஒரு சின்ன பாட்டிலில் தண்ணீர் கொடுப்பார்கள். ஆனால் இன்னொருமுறை கேட்டால் கொடுக்க மாட்டார்கள். எண்ணி வாங்கியிருப்பதாக சொல்வார்கள். சிதம்பரம் போனபிறகுதான் என்னிடம் டிக்கட் பணம் வாங்கினான். ஆனால் டிக்கட் கொடுக்கவில்லை. வேகம் என்றால் வேகம் அப்படி ஒரு வேகத்தில் வண்டி பறந்து கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய வண்டியில் வேகத்துடன் வண்டியில் போக முடிகிறதே என்ற சந்தோஷம் என்னிடமிருந்தது. சன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்போது, கடைகள், வீடுகள் பறந்து கொண்டிருந்தன. ஒரு டிரைவர் போய் இன்னொரு டிரைவர் வண்டியை எடுத்து ஓட்டிக்கொண்டிருந்தான். வேகம். வண்டி ஒரு சிற்றுண்டி சாலையில் நின்றது. டீ பிஸ்கட் கொறித்தேன். பின் வண்டி கிளம்பிற்று. வண்டி திரும்பவும் வேளாங்கண்ணிக்கு சென்னையிலிருந்து வரவேண்டும். சீக்கிரம் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்தவர்கள் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். நான் வைத்திருக்கும் விருட்சம் பை வண்டி திரும்பினால் இப்படி சாயும், அப்படித் திரும்பினால் அப்படி சாயும். அதைச் சரிசெய்தால் 75 - 76 இதழ் என்னைப் பார்த்து இளிக்கும். வண்டி மகாபலிபுரம் நோக்கி வந்துவிட்டது. அப்போதுதான் டிரைவர் பெரிய பிரேக் போட்டான். வண்டியில் உள்ள பெண்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய விருட்சம் அடங்கிய பை டிரைவர் இருக்குமிடத்திற்கு போய் விழுந்து, அதில் உள்ள விருட்சம் இதழ் பிரதிகள் சிதறி விழுந்தன. வண்டிக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. டிரைவர் சமாளித்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தான். கிளீனர் ஐயோ என்றான். பின்னால் படுத்துக்கொண்டிருந்த இன்னொரு டிரைவர் எழுந்து வந்து விட்டான். என்ன ஆயிற்று என்று கேட்டேன். யாரும் சரியாக பதில் சொல்ல வில்லை. வண்டி எதன் மீதோ மோதி விட்டது. கிளீனரிடம் கேட்டபோது அவன் சரியாய் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் முகம் பீதியில் வெளிறியிருந்தது. நான் விருட்சம் இதழ் பிரதிகளைப் பொறுக்கிக் கொண்டு என் இடத்திற்கு வந்தேன். ''வண்டி மாடுமேல் மோதி விட்டிருக்கும்,'' என்றார் பக்கத்தில் இருந்தவர். பின் இருக்கை அருகில் வைத்திருநந்த விருட்சம் சாக்குப்பையை டிரைவர் பக்கத்தில் கொண்டு போயிற்று என்றால் என்ன ஆயிருக்கும். டிரைவர் அழுத்தமானவன். வண்டியை எங்கும் நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். மகாபலிபுரம் அருகிலுள்ள செக்போஸ்டில் வண்டியை போலீஸ்காரர்கள் நிறுத்தினார்கள். டிரைவரை தனியாக இறங்கச்சொல்லி கழுத்தில் கையைப் போட்டு அழைத்துப்போனார்கள். வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். நாங்களும் கீழே இறங்கினோம். பின்தான் தெரிந்தது வண்டி யாரோ பெண் மீது இடித்து விட்டது. அந்தப் பெண் அந்த இடத்திலேயே இறந்து விட்டாள். சிவராத்திரி அன்று அந்தப் பெண்ணிற்கு இப்படி ஒரு கொடூரமான மரணம் நிகழ்ந்து விட்டது. அங்குள்ள ஊர்க்காரர்கள் சுமோ வண்டியில் எங்கள் வண்டியைப் பிடிக்க வந்தார்களாம். வண்டி மட்டும் அங்கு இருந்தால் வண்டியை உடைத்திருப்பார்கள். டிரைவரை அடித்துக் கொன்றிருப்பார்கள் என்று சொன்னார்கள். இந்த விபத்து குறித்து செய்தி எந்த செய்தித் தாளிலும் வரவில்லை.வழக்கம்போல் போகும் பெரியார் பஸ்ஸில் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.இந்த விபத்து குறித்து நான் இன்னும் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். - சில தினங்களுக்குமுன் வசீகரமான பெண்பெயர் கொண்ட அந்த நிறுவன பஸ் ஒன்று வைதீஸ்வரன் பாதை ஓரத்தில் உடைந்து ஓரமாகக்கிடந்தது. -அதிகமாக பிரதிகள் மீந்துபோன நவீன விருட்சம் இதழை மாயவரத்திலிருந்து சென்னைக்கு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு போனேன். அந்த இதழ் 75-76. ஜøலை மாதம் 2007ல் வெளிவந்த இதழ். அதில் இப்படி எழுதியிருக்கிறேன். சென்னையிலிருந்து கும்பகோணம் வரை ஒரு பாசஞ்சர் வண்டி வந்து கொண்டிருந்தது. பிராட்கேஜ் வருவதால் அது நின்று விட்டது. அதன் விளைவு பஸ்ûஸ நம்ப வேண்டி உள்ளது. பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் ஏகப்பட்ட பஸ்கள் விடுவார்கள் பொங்கல் அன்று மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு வரும் சொகுசு செமி டீலக்ஸ் பஸ் ஒன்றில் பயணம் செய்து வந்த என் பெண், அவள் கணவர், பேத்தி என்று எல்லோரும் பெரிய விபத்திலிருந்து தப்பினார்கள். அதை நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாகத் தோன்றுகிறது. முதலைப் பண்ணை என்ற இடத்திற்குப் பஸ் வந்தபோது, டிரைவர் கண் அசந்ததால் பஸ் நிலை தடுமாறி அங்குள்ள மின்சாரக் கம்பத்தில் இடித்து (நல்லகாலம் மின்சாரம் கட் ஆகிவிட்டது) தலைக்குப்புற கவிழ்ந்தது. பாண்டிச்சேரியில் ஏறிய ஒரு இன்ஜினியர் இறந்து விட்டார். கிளீனருக்கு கால்கள் இரண்டும் துண்டித்துவிட்டன. இது குறித்து சில கேள்விகள் : - விபத்து ஒரு சுழற்சி மாதிரி. உலகம் முழுக்க அது நடந்துதான் தீரும். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி சொல்வது சரியா? - பெரிய வண்டிகள் நம்முடைய சாலையில் ஓட்டிச் செல்லும்போது வேகமாக ஓட்டக் கூடாது. அதனுடைய ஸ்பீடை கட்டுப்படுத்த வேண்டுமா? - வண்டி ஓட்டும் டிரைவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவரா? - வண்டியில் பயணம் செய்யும் பயணிகளிடமும் இன்சுரன்ஸ் வசூல் செய்தால் (மிகக் குறைவான தொகை), இது மாதிரியான விபத்து சமயத்தில் பயணிகளுக்கு மருத்துவ செலவிற்குப் பயன்படும். - டிரைவர் சிலசமயம் க்ளீனரிடம் கொடுத்து வண்டியை ஓட்டிச் சொல்கிறாரா? - டிரைவருக்கு போதிய அளவு ரெஸ்ட் கொடுக்கப்படுகிறதா? - இதுமாதிரி விபத்துக்களை ஏன் பேப்பரில் விளம்பரப் படுத்தக்கூடாது? - நான் வந்த வண்டி தெருவில் வரும்போது தெருவை முழுவதும் எடுத்துக்கொண்டு விடுகிறது. பாதசாரிகளுக்கு நடக்கக்கூட இடமில்லை. - அவசரம் அவசரம் என்றதால்தான் என் வண்டி மோதியது. அவ்வளவு அவசரம் தேவையா?

22.3.10

அழுகையும் அவனின் நகைச்சுவையும்
நான் இழந்து விட்டேன்.

எல்லாவற்றையும் இனி

இழப்பதற்கு எதுவுமில்லை என

அழுதான் அவன்.

அவனைச் சுற்றிலும்

கல் நெஞ்சைக் காட்டி

கனத்துயர்ந்த மலைகள்.

பூமித் தாய்க்காய்

நீரில் நெய்த

வெள்ளிச் சேலையாய்

வளைந்தோடும் அருவிகள்.

இடைவிடாது காற்றை வீசி

ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும்

மரங்கள்.

இளமைத் துடிப்புடன்

அவனோடு

இடறி விளையாடும்

இளந் தாவரங்கள்.

வனப்பான நட்சத்திரங்களுடன்

வளைந்து விரிந்த

வானம்.

அவன் மனதை

விரித்து உலர்த்த

விரிந்த மயானம்.

மனதை ஈரப்படுத்திக்

கொண்டே இருக்கும்

பதமான நீர் துளிகள்.

சுற்றி இருக்கும்

இவை எல்லாவற்றையும்

பார்த்து அழுதான்.

கதறி கதறி

அழுதான்.

'' நான் இழ்ந்து விட்டேன்

எல்லாவற்றையும்.......

இனி இழப்பதற்கு

எதுவுமில்லை '' எனப்

புலம்பி அழுதான்.

சுற்றி இருக்கும் அனைத்தும்

அவனைப் பார்த்து

சிரித்தன.

அந்த சிரிப்பொலி மட்டும்

அவனுக்குக் கேட்கவே

இல்லை.


20.3.10

பத்மநாபன் எதையோ தேடுகிறார்
பத்மநாபன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து சுரம், தலைவலி என்று எதுவும் வந்ததில்லை. அடிக்கடி வயிறு வலிக்கும். அதுவும் அஜீரணத்தினால். ஆனால் ஒருமுறை சுரம் வந்துவிட்டது. அவரால் நம்ப முடியவில்லை. அவர் பள்ளிக்கூடம் படித்த நாட்களில்தான் ஒவ்வொரு வருடமும் அவருக்கு மே மாதத்தில் சுரம் வந்துவிட்டுப் போகும். அதன்பின் அவருக்கு சுரம் அடித்ததே இல்லை. வயிற்றைக் கட்டுப்படுத்தாத அஜீரண தொந்தரவுதான் அடிக்கடி அவருக்கு இருக்கும். அன்று சுரம் வந்தவுடன், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ஊரில் அவர் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. டாக்டர் என்று யாரையும் பார்த்ததில்லை. சென்னையிலும் பெரும்பாலும் அவர் டாக்டரைப் பார்ப்பதில்லை.


அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிவாதான். இருவரும் இலக்கியம் பேசும் நண்பர்கள். சிவாக்கும் அவருக்கும் பலமடங்கு வயது வித்தியாசம். ஆனால் இலக்கியம் பேசும்போது வயது வித்தியாசம் தெரியாது. பார்ப்பதற்கு இளம் வயதுக்காரராக இருந்தாலும், சிவா எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவரைத்தான் பத்மநாபன் போனில் கூப்பிட்டார். சுரம் என்றார். சிவா பத்மநாபனைப் பார்க்க வரும்போது ரசக் கரைசலை எடுத்துக்கொண்டு வந்தார். பத்மநாபன் நெகிழ்ந்து விட்டார்.


தனியாக ஒருவர் இருக்கும்போது, இது மாதிரியான உதவிகள் நிச்சயமாக தேவையாக இருக்கும்.


"என்ன சார், என்னமோ மாதிரி ஆகிவிட்டீர்கள்," என்றார் சிவா..


"நீங்கதான் எதாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டும்,"என்றார் பத்மநாபன்.


அந்த ஊரில் நெடுக பல மருத்துவமனைகள் உண்டு. அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு சிவாவுடன் கிளம்ப ஆயுத்தமானார் பத்மநாபன்.


சிவா மகாதான தெருவில் உள்ள ஒரு இருதய நோய் சம்பந்தமான மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். சாதாரண சுரத்திற்கு ஏன் இங்கு அழைத்துப் போகிறார் என்று யோசித்தார் பத்மநாபன்.


அந்த மருத்துவ மனையில் ஒரே கூட்டம். டோக்கனை வாங்கி வைத்துக்கொண்டு பத்மநாபன் அமர்ந்திருந்தார் கூட்டம் நகர்வதாகத் தெரியவில்லை. பொறுமை எல்லை மீறிப் போய்விட்டது.


"சிவா போய்விடலாமா" என்று கேட்டார் பத்மநாபன்.


"வேண்டாம், சார்," என்றார் சிவா.


இருவரும் இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். கூட்டமோ வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் இதய நோயாளிக்காரர்கள். சாதாரண சுரத்திற்கு இங்கு ஏன் வந்தோம்?


டாக்டரைப் பார்க்க அனுப்பினான் அங்குள்ள ஊழியர். உள்ளே நுழைந்து டாக்டர் எதிரில் அமர்ந்தாலும், டாக்டர் பத்மநாபனைப் பார்க்கவில்லை. போன் மேலே போன். பேசிக்கொண்டே இருந்தார். சுரம் வேகத்தோடு பத்மநாபன் டாக்டரை கடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவா மேலும் கோபம். ஏன் இங்கே அழைத்துக்கொண்டு வந்தார்?


அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. உள்ளே அவசரமாக டாக்டரைப் பார்க்க கணவன் மனைவி இருவர் வந்தார்கள். ரொம்ப அவசரம். கணவன் மார்பைப் பிடித்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தான். "டாக்டர் தாங்க முடியலை டாக்டர். வலி தாங்க முடியலை," என்று மார்பைப் பிடித்துக் கொண்டிருந்தான்.


எல்லோரும் பதட்டமாகியிருந்தோம். டாக்டர் அவனைப் பார்த்து, "சட்டையைக் கழட்டுங்க.." என்றார். அவனால் சட்டையைக் கூட கழட்ட முடியவில்லை. "டாக்டர் வலி அதிகமாக இருக்கிறது," என்று அவன் இன்னும் கத்தினான்.


பத்மநாபனுக்கும், சிவாவிற்கும் தர்மசங்கடமாக இருந்தது. சிறிது நேரத்தில் கத்தினவன் கீழே விழுந்துவிட்டான். உடனே பரபரப்பு கூடி விட்டது.


இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் பத்மநாபனும், சிவாவும் அந்த இடத்தைவிட்டு வாசலுக்கு ஓடி விட்டார்கள். சிவா அந்தக் காட்சியைப் பார்த்ததால் வாந்தி எடுத்தார். "என்ன சிவா, வாந்தி எடுக்கிறீங்க?" என்று பத்மநாபன் கேட்டார்.


"என்னால தாங்க முடியாது சார்," என்றார் சிவா.


"வேற ஆஸ்பத்ரிக்குப் போகலாம்...ரொம்ப காலியா இருக்கிற ஆஸ்பத்ரியா பாருங்க...சாதாரண சுரத்திற்குப் பார்க்கிற டாக்டராகப் பாருங்க..."


"அந்த ஆளுக்கு என்ன ஆயிருக்குமோ...உயிரோடு இருப்பாரா...செத்துப் போயிருப்பாரா..."


"சிவா..அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு எதுக்கு...மேலும் அவர் இறந்தாலும் நாம் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம்.."என்றார் பத்மநாபன்.


பின் அங்கிருந்து ஒரு சாதாரண டாக்டரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு பத்மநாபனைக் கொண்டு வந்துவிட்டுப் போய்விட்டார் சிவா.


கொஞ்சம் நேரம் கழித்து சிவாவிடமிருந்து போன் வந்தது. "சார், அந்த ஆள் போயிட்டான்.." என்றார் சிவா.


கேட்டவுடன் சொரேரென்றிருந்தது பத்மநாபனுக்கு. அவர் கண் முன்னால ஒரு 40 அல்லது 42 வயதுக்குட்பட்ட ஒருவர் மார்பு துடித்து இறந்தும் விட்டார். அப்போது அந்த மனிதன் துடித்தத் துடிப்பு. கத்திய கத்தல் அவர் காதில் இப்போதும் ரிங்காரம் இட்டுக்கொண்டிருந்தது.


காலையில் நடந்த சம்பவமே பத்மநாபன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தனியாக இருப்பதால்தான் இதுமாதிரியான பிரச்சினை. குடும்பத்தோடு இல்லாமலிருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று அவருக்குத் தோன்றியது. சுரம் வேகம் தணிந்து விட்டதா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.


பின் கடைக்குச் சென்று ஒரு தர்மாமீட்டரை வாங்கிக்கொண்டு வந்தார். தர்மாமீட்டரை எடுத்து வாயில் இடுக்கிக்கொண்டு சுரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுரம் சாதாரணமாகத்தன் இருந்தது. இந்தத் தர்மாமீட்டரெல்லாம் பயன்படுத்தி பல ஆண்டுகளாயிற்று. பத்மநாபன் தன்னையே கேட்டுக்கொண்டார். 'நான் என்ன பயந்தாங்கொள்ளியா?' என்று.


'ஆமாம்.' என்றும் தனக்குள் பதிலும் சொல்லிக்கொண்டார். எந்த மனிதன்தான் பயம் இல்லாமல் இருக்க முடியும்?


கடந்த 4 ஆண்டுகளாக அவர் தனியாக இங்கு இருக்கிறார். குடும்பம் சென்னையில். அப்பாவிற்கு 85 வயது. மனைவி இன்னொரு வங்கியில் பணிபுரிகிறாள். அவளால் அவருடன் அவர் இருக்குமிடத்திற்கு வந்திருக்க முடியாது.


முதலில் இந்தத் தனிமை வாசம் அவருக்கு வேடிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தனியாக இருந்ததில்லை. தனிமை என்றால் என்ன என்பதைக் கூட அவர் யோசித்ததில்லை. இந்த ஊருக்கு வந்தபிறகு தனியாக ஒரு வாழ்க்கை நடத்த வேண்டியதை நினைத்து அவருக்கு வருத்தமாக இருந்தது. அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாக ஓடி திரும்பவும் வீட்டிற்கு வந்தவுடன் பொழுது போய்விடும். அவர் தனியாக வீடு மாதிரி எடுத்துத் தங்கியிருந்தார்.


இரவு படுத்துக்கொள்ளும்போது முதன் முதலாக அவருக்குப் பயமாக இருந்தது. இதுவும் வேடிக்கையாக இருந்தது. 50 வயதில் தனக்குப் பயமா? அவர் இருக்குமிடம் கோயில் இருக்கும் தெருவில். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அந்தப் பயம் போய்விட்டது.


எப்போதும் சனிக்கிழமை சென்னைக்கு ஓடிவிடுவார். திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி இந்த ஊருக்கு வந்துவிடுவார். பெரும்பாலும் அவருக்குப் பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது. ஆனால் என்ன நேரம் இருப்பதில்லை. அவரைச் சுற்றிலும் யாரும் புத்தகம் படிப்பவர்கள் இல்லை. ஏன் அலுவலகத்தில் யாரும் பேப்பரைக் கூடப் படிப்பதில்லை. அவரால் ஒரு நிமிஷம்கூட புத்தகம் அல்லது பேப்பர் படிக்காமல் இருக்க முடியாது. இது ஒரு வியாதியா என்று கூட யோசிப்பார்.


இந்தத் தருணத்தில்தான் சிவாவின் நட்பு கிடைத்தது. சிவா ஒரு சிவில் இன்ஜினியர். தனியாக வீடு கட்டிக்கொடுக்கும் பணி. எப்போதும் அவர் சுலபமாக இருப்பதுபோல் பத்மநாபனுக்குப் படும். புத்தகம் படிப்பதுதான் சிவாவிற்கு வேலை. தடித்தடியாய் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பார். பின் அதைப் பற்றி பேச பத்மநாபனை நாடி வருவார்.


காலையில் மரணம் அடைந்தவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார் பத்மநாபன். பொழுது இருட்டத்தொடங்கிவிட்டது. அப்போதுதான் காலையில் நடந்த சம்பவம் அவரை தூங்கவிடாமல் பண்ணிக்கொண்டிருந்தது. இறந்து போனவரின் முகம் அவர் ஞாபகத்தில் வந்துகொண்டிருந்தது. அவர் மனைவியைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு அவர் போட்ட சத்தம் அவர் மனதில் அலறிக் கொண்டிருப்பதாகப் பட்டது.


பத்மநாபன் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பலவிதமாக முடிச்சுப் போட்டுக்கொண்டிருப்பார். இப்படி முடிச்சுப் போடுவது ஆபத்து என்று உணர்ந்திருந்தார். என்ன படித்திருந்தால் என்ன? மரண பயம் எளிதில் போவதில்லை..50 வயது..தனிமை.


பத்மநாபன் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தார். சம்பத் என்ற எழுத்தாளர் எழுதிய இடைவெளி என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது. அவர் புத்தகம் அச்சாகி வருவதற்குமுன் இறந்துவிட்டார். அந்தப் புத்தகம் முழுவதும் மரணத்தைப் பற்றியே சம்பத் எழுதியிருப்பார். அவருடைய மரணம் கூட ஒரு நாடகம் மாதிரி எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. காலையில் கூட மரணம் ஒரு நாடகம் நடத்திவிட்டுச் சென்றதாக தோன்றியது. எச்சரிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறதோ என்று கூட யோசிக்க ஆரம்பித்தார். காலையில் நடந்த நிகழ்ச்சி மரணத்தைப் பற்றிய ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சியாக தோன்றியது. ஜாக்கிரதை என்று மரணம் மிரட்டிவிட்டுச் சென்று விட்டதா? பத்மநாபனுக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.


பொதுவாக தூங்கும்போது விளக்கெல்லாம் அணைத்துவிட்டு தூங்குவார். ஆனால் அன்று அவர் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு தூங்க முயற்சி செய்தார். எப்படியோ தூங்கி விட்டார். அடுத்தநாள் அவருக்கு சுரம் அளவு குறைந்துவிட்டது. அலுவலகத்தை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டார். அன்று சனிக்கிழமை.


எப்போதும் அவருக்கு சனிக்கிழமை என்றால் மகிழ்ச்சியான நாள். அன்றுதான் அவர் சென்னைக்கு ஓடும் நாள். ஓடிவிட்டார் சென்னைக்கு. திரும்பவும் திங்கள் வந்தபோது அவருக்கு மரணத்தைப் பற்றிய காட்சி மறந்துவிட்டது. சிவா அவரைப் பார்க்க வந்தபோது அப்போது நடந்த நிகழ்ச்சியை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். சிவா ஓடிவந்து வாந்தி எடுத்ததைக் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தார். அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பம் அங்கிருந்தது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.


"உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அப்படி ஆகிவிடுகிறது. அன்று என்னால் தாங்க முடியவில்லை,"என்றார் சிவா.


"மரணம் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது,"என்றார் பத்மநாபன்.


இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் ஓடிவிட்டன. பத்மநாபன் மறந்து விட்டார். அவர் அலுவலகத்தில் மகாதேவன் என்று ஒருவர் இருக்கிறார். பார்ப்பதற்கு நீலு என்ற நடிகர் மாதிரியான தோற்றத்தில் இருப்பார். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார். அவருடைய சில செய்கைகள் பத்மநாபனுக்கும் எரிச்சலாக இருக்கும்.


அலுவலகத்தில் அவருக்கு கெட்ட பெயர். அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். அவருக்கு 2 பெண். ஒரு பையன். ஒரு பெண் இன்ஜினியரிங் காலேஜ்ஜில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பாட்டும் பாடுவாள். கர்நாடக சங்கீதத்தில் ஒரு திறமை உண்டு. அந்தப் பெண்ணிற்கு கும்பகோணத்தில் ஒரு பாட்டுக் கச்சேரி நடத்த வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் விருப்பம். அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்தப் பெண் கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியரைப் பேச ஏற்பாடு செய்தார். பெண்ணிற்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த ஆசிரியையைப் பேசக் கூப்பிட்டார். 90 வயதான ஒரு மிருதங்க வித்வானையும் பேசக் கூப்பிட்டார்.


பின் ஒரு பத்திரிகை அடித்து எல்லோருக்கும் வினியோகம் செய்தார்.


"பத்மநாபன் வந்திடுங்க..சாப்பாடெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன்," என்றார் மகாதேவன் ஒருநாள் பத்மநாபனைப் பார்த்து.


அந்த நாள் வந்தது. பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் 30 கிலோமீட்டர் தூரம். பஸ்ஸில் 1 மணிநேரம் பயணம். அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டது. 7.30 மணியிருக்கும். பஸ்ûஸப் பிடித்துக்கொண்டு கும்பகோணம் போய்ச் சேருவதற்குள் நேரம் அதிகமாகிவிட்டது.


கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றார். மகாதேவன் பெண் பாடிக்கொண்டிருந்தாள். மகாதேவன் இவரைப் பார்த்வுடன், வேகமாக ஓடி வந்தார்.


"என்ன ரொம்ப நேரம் ஆகிவிட்டதே?" என்று விஜாரித்தார்.


"டிபனெல்லாம் தீர்ந்து விட்டது...காப்பி சாப்பிடுங்க...ராத்திரி சாப்பாடெல்லாம் ரெடியாய் இருக்கும்..சாப்பிட்டுவிட்டுப் போங்க," என்றார் மகாதேவன்.


பாட்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்தப் பெண் தம் கட்டிக்கொண்டு பாடுவதாக தோன்றியது. பின் ஒரு இடைவேளை. மேடையை எல்லோரும் பேசுவதற்காக திருத்தம் செய்தார்கள்.


ஒவ்வொருவராக மேடையில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணின் பாட்டுத் திறமையை மெச்சிப் பேசினார்கள். பேராசிரியர் பேசும்போது, 'வித்யா பாட்டில் மட்டுமல்ல...படிப்பிலும் நெம்பர் ஒன்..'என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். 90 வயது மிருதங்க வித்வான் தள்ளாடி தள்ளாடி மேடையில் வாழ்த்தினார்.


மேலும் மிருதங்க வித்வான் பென்சன் வாங்கிக்கொண்டு கும்பகோணத்தில் அந்த வயதிலும் தனிமையில் இருப்பதைப் பற்றியும் சொன்னார். ஒருவழியாக எல்லோரும் பேசி முடித்தப்பின், திரும்பவும் வித்யா பாட ஆரம்பித்தாள். மேடையில் இருந்தவர்கள் எல்லோரும் கீழே வந்து அமர்ந்தார்கள்.


வித்யா துக்கடாக்கள் பாட ஆரம்பித்தாள். சம்போ...சிவ சம்போ...என்ற பாட்டை உருக்கமாக பாட ஆரம்பித்தாள். அந்தப் பாட்டு எமனை அழைக்கும் பாட்டு என்று பத்மநாபனுக்குத் தோன்றியது.


திடீரென்று ஒரு சத்தம். வித்யாவின் கல்லூரி பேராசிரியர் நாற்காலியிலிருந்த கீழே சாய்ந்து விட்டார். வித்யா இதைப் பார்த்துவிட்டு பாடுவதை நிறுத்திவிட்டாள். மகாதேவன் அவசரம் அவசரமாக ஓடிவந்து பேராசிரியரைப் பிடித்துக் கொண்டார். பேராசியர் மயங்கியே விழுந்துவிட்டார். பாட்டு முழுவதும் நின்றுவிட்டது.


பின் ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பேராசிரியரைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். மகாதேவனுக்குத் துணையாக பத்மநாபனும் சென்றார். அவசரம் அவசரமாக ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருத்துவ மனையில் அவசரப் பிரிவில் பேராசிரியரை அழைத்துக்கொண்டு போனார்கள்.


சிறிது நேரத்தில் பேராசிரியரைப் பரிசோதித்த டாக்டர், "அவர் எப்போதோ இறந்து விட்டார்,"என்று சொன்னார். எல்லோருக்கும் அதிர்ச்சி. பத்மநாபனுக்கு திகைப்பாக இருந்தது. இருப்பு கொள்ளவில்லை. மகாதேவனிடம் சொல்லிக்கொண்டு அவசரம் அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றார். பின் அங்கிருந்து ஒரு பஸ்ûஸப் பிடித்து அவர் ஊருக்குப் பயணமானார். வீடு போய்ச் சேர இரவு 11 ஆகிவிட்டது.


வீட்டிற்கு வந்தவுடன் பத்மநாபனுக்கு படபடவென்றிருந்தது. ஒரு பாட்டுக் கச்சேரி நடக்கும்போது இது மாதிரி மரணம் அவர் எதிர்பார்த்ததில்லை. அந்தப் பெண்ணைப் புகழ்ந்து பேசிய பேராசிரியர் முகம் அவர் முன்னால் மிதந்துகொண்டிருப்பது போல் தோன்றியது. பத்மநாபனுக்கு ஒரு கேள்வி உள்ளுக்குள் எழுந்து கொண்டிருந்தது. ஏன் இதுமாதிரியான நிகழ்ச்சி நடக்க வேண்டும். அதுவும் அவர் முன்னிலையில்.. மரணம் திரும்பவும் ஒரு நாடகத்தை நடத்துகிறதா? அல்லது அவரை எச்சிரிக்கை செய்கிறதா? பத்மநாபன் உறுதியாக இதெற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று நினைத்தார். ஆனாலும் தூக்கம் வரவில்லை.


பேராசியர் பற்றிய எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தார். ஏன் நாம் இந்தக் கச்சேரிக்குப் போனோம் என்று யோசித்தார் பத்மநாபன். அன்று மானேஜர் அந்தக் கச்சேரிக்கு வரவில்லை. அன்று இரவும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. சென்னைக்கு இப்போதே ஓடவேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்குப் போக வேண்டாமென்றும் பட்டது.


மரணம்தான் முக்கியம். என்ன பெரிய வேலை என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார். 50 வயதில் இதெல்லாம் எதற்கு? பதவி உயர்வுப் பெற்று எதற்கு இதுமாதிரி அவதிப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எல்லாம் தனக்குள். தனக்குள். அன்று இரவும் லைட்டெல்லாம் போட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருந்தார்.


அடுத்தநாள் அவர் அலுவலகத்திற்குப் போகும்போது அவர் முகமே சரியில்லை. மகாதேவனும் வந்திருந்தார். அவர் சாதாரணமாக இருந்தார். "யாரும் சாப்பிடவில்லை. எல்லா சாப்பாடும் வீணாகப் போய்விட்டது.."என்றார்.


என்ன மனிதர் இவர். சாப்பாடு வீணாகிப் போனதைப் பற்றி பேசுகிறார். ஒரு மரணம் அவர் முன்னால் நடந்ததைப் பற்றி சந்றுக்கூட கவலைப் படாத மாதிரி இருக்கிறாரே.. அந்தப் பெண் வித்யாவிற்கு எப்படி இருந்திருக்கும்.. தன் முதல் கச்சேரி அரங்கேறும்போதே இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்றெல்லாம் யோசித்திருக்குமோ? அன்றும் சனிக்கிழமை. அந்த முறை சென்னை போனால், ஒரு வாரமாவது அங்கிருக்க வேண்டுமென்று தோன்றியது. மரணத்தின் நாடகத்தை தன்னால் மறக்க முடியாது போல் இருந்தது.


மகாதேவனைப் பார்த்து, இளங்கோ என்ற கடைநிலை ஊழியர் கேட்டான் : "என்ன மகாதேவன், சார்.. உங்கப் பெண் கச்சேரியில ஒரு பேராசிரியரை நிரந்தரமா ஊருக்கு அனுப்பிட்டீங்க போலிருக்கு.."என்று இடிஇடியென்று சிரித்தபடி கேட்டான்.


மகாதேவன் அதைக் கேட்டு சிரித்தார். பத்மநாபனுக்கோ ஒருவாரம் லீவு எடுத்துக்கொண்டு போகவேண்டும்போல் தோன்றியது. சிறிது நேரத்தில் வட்டார அலுவலகத்திலிருந்து மேலாளருக்குப் போன் வந்தது. "ஒருவாரம் பத்மநாபனுக்கு சென்னையில் டிரெயினிங்,"என்று. ஆச்சரியமாக இருந்தது பத்மநாபனுக்கு.

19.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

பூக்கள்

வெட்கமின்றி சிரித்தது

கொட்டும் மழையில்

குளிக்கும் ரோஜாப்பூ


சூரியன் மறைவில்

கூம்பிய மலர்கள்

மூடிப்பிடித்தவை அப்

பாவி வண்டுகள்


பனிபூக்க முகம் பூக்கும்

நான் வளர்க்கும்

ரோஜாப்பூ


மனிதரோடு மாடுகள்

போகும் ஊரோர

தார்ச்சாலை மரங்கள்

இறைந்திருக்கும்

மலர்கள்


இரவில் ஊரார் கால்

கழுவ

போகுமிடம் பெருமாள்

குளம்

புண்ணாய் நீரெல்லாம்

ஊதாப்பூ


வேலைக்குப் போகும்

மகளிராய்

பஸ் ஸ்டாண்டில்

கூடைப்பூ


அருகழைத்து பின்

விரதமென்று புறந்

தள்ளும் பவழ மல்லி.


- பதி

16.3.10

வருந்துகிறேன்

காலையில் வண்டியில் திருவள்ளூர் பக்கம் போய்க் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தச் செய்தியை sms மூலம் பாரதிமணி அனுப்பியிருந்தார். வெங்கட்சாமிநாதன் மனைவி மரணம் அடைந்த செய்தியை. வெங்கட்சாமிநாதன் வீட்டிற்குச் செல்லும் ஒவ்வொருமுறையும், வரவேற்று உபசரிப்பவர் அவர் மனைவியும் கூட. சமீபத்தில் கீழே விழுந்து, அடிப்பட்டுக் கொண்டார் வெங்கட்சாமிநாதன். அந்தத் துயரத்தை வெ சாவின் மனைவியும் வெளிப்படுத்தினார். அந்தச் சமயத்தில் இருவரையும் போய் பார்த்ததுதான். சென்னையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது அவ்வளவு சுலபம் இல்லை. அது ஒருவிதமான நரகம். திருவள்ளூர் போய்விட்டு மாலைதான் திரும்பினேன். வெ சா வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. மனைவியை இழந்து நிற்கும் அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மனைவியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.


- அழகியசிங்கர்
புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத்

விதி


அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் குஞ்சுக்காய்
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை

- கலாப்ரியா

12.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

திட்டமற்ற......


வானம் கட்டுப் பாடற்று

பெற்றுத் திரியவிட்ட

மேகங்கள்

பொல்லா வாண்டுகள்

நினைத்த இடத்தில்

கவலையற்று

நின்று தலையில் பெய்துவிட்டு

மூலைக்கொன்றாய்

மறையுதுகள்

வெள்ளை வால்கள்

- எஸ் வைதீஸ்வரன்

11.3.10

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி


இது என் பேப்பர்

ரெயிலில் செல்கையில்

அடுத்தவர் தோள்மேல்

அரை மேய்ந்ததில்லை

விரைந்து விழுங்கும்

இரவல் ஷீட் அல்ல

கைக்குள் வைத்து

மடித்துப் படிப்பேன்

மேஜைமேல் போட்டு

விரித்துப் பார்ப்பேன்

பகலிலும் படிப்பேன்

இரவிலும் படிப்பேன்

படிக்காமல் கூட

தூக்கிஎறிவேன்

இது என் பேப்பர்(புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதியை இலக்கியச் சங்க வெளியீடு டிசம்பர் 1972 ஆம் ஆண்டு. அப்போது அதன் விலை 30 பைசா. அதில் வெளியான கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் - அழகியசிங்கர்)


முக்காட்டு தேவதைகள்

தீயெரித்த வனமொன்றின்
தனித்த பறவையென
வரண்டு வெடித்த நிலமொன்றின்
ஒற்றைச் செடியென
சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து
உயிர் பிழைத்தவள்
நிறைகாதலோடு காத்திருக்கிறாள்
அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள்
சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க்
கண்ணீர் தூவி நிறைத்து
பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து
எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள்
பிரவாகங்கள் சுமந்துவரும் வலிய கற்களும்
ஒலிச் சலனத்தோடு நகர்கையில்
தொன்ம விடியலொன்றில் நதியோடு மிதந்த
இலையொன்றின் பாடல்கள் குறித்துக்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை
அவளது தூய காதல் குறித்தும்
அவளைத் தவிர்த்துக்
குறிப்புகளேதுமற்றவளானவளிடம்
ஏதும் கேட்டால்
வெட்கம் பூசிய வதனத்தை
திரையை இழுத்து மூடிக் கொள்கிறாள்
நிரம்பி வழியத் தொடங்கும் கண்களையும்
அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து
ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி
துரோகங்களால் போர்த்திவிட்டு
அவனும் போய்விட்டிருந்தான்
அதைப் போல எவரும் போய்விடலாம்
தூய தேவதைகள் மட்டும்
என்றோ போனவனை எண்ணிக்
காத்திருப்பார்கள் என்றென்றும்

8.3.10

அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்குஒரு திறந்த கடிதம்விளக்கு பரிசு பெற்ற பிறகு நீங்கள் அளித்த பேட்டியை (அம்ருதா பிப்ரவரி 2010) படிக்க நேர்ந்தது. பரிசுகளிலும் விருதுகளிலும் நம்பிக்கை உள்ளவர் நீங்கள் என்ற போதிலும் பரிசுகளுக்கு எந்த மரியாதையையும் தராதவன் என்ற போதிலும் முதலில் என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.


“நாங்கள் கண்ணதாசனின் பேரப்பிள்ளைகள்” என்ற அறிவிப்பைச் செய்து நவீன தமிழ் இலக்கியவாதிகளையும் இலக்கிய இயக்கங்களையும், அவர்களின் யத்தனங்களையும் மிக எளிமையாக சினிமாக்காரர்களின் வியாபரங்களுக்கு கீழ்மையானவையாக ஆக்கியிருக்கும் உங்கள் கவித்துவத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.


மேலும் உங்களின் “நாங்கள்” என்ற அறிவிப்பில் என்னைப் போன்றவர்களைச் சேர்த்து எழுத உங்களுக்கு யார் அனுமதியோ அல்லது உரிமையோ அளித்தது? தயை கூர்ந்து பதில் அளிப்பீர்களாக. வேண்டுமானால் நீங்களும் கலாப்ரியாவும் எந்த சினிமாப் பாடாலாசிரியருக்கு வேண்டுமானால் என்ன உறவாகவும் இருந்துவிட்டுப் போங்கள். உங்கள் விசுவாசிகளை மாத்திரமே அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


மேலும் ஒரு சந்தேகத்தை நீங்கள் நிவர்த்திக்க வேண்டும். உங்கள் பட்டியலில் பிச்சமூர்த்தி, சுரா, அரூப் சிவராம்(பிரமிள்) ஞானக்கூத்தன் போன்றோர்கள் இடம் பெற்றுள்ளனர். உங்களுடைய உறவுமுறையை சிவராமுவும் சுராவும் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். பாவம் ஞானக்கூத்தன்.


எண்ணிப் பார்ப்பது மிக ரஸமாக இருக்கிறது. சினிமாவுக்குப் பாட்டெழுதுபவரின் பேரப்பிள்ளைகள் எப்படி இத்தனை சிறுபத்திரிகையாளர்களைச் சுரண்டி வாழ்ந்திருக்க முடிந்திருக்கிறது?


அடுத்த கேள்வி மேலும் ரஸமானது. நீங்களும் கலாப்ரியாவும் பாடாலாசிரியர் வைரமுத்துவை மிகவும் சிலாகிப்பவர்கள். வைரமுத்துவிடம் பரிசு பெற்று ஜென்ம சாபல்யம் அடைந்தவர் கலாப்ரியா. மேலும் தமிழ்நாடு அரசாங்கம் எழுத்தாளர்களுக்கு அளித்த அனைத்து சலுகைகளையும் நேர்மையுடன் அனுபத்தவர் கலாப்ரியா.


நீங்களோ உங்கள் “கல் தூங்கும் நேரம்” தொகுதியை வைரமுத்துவுக்கு சமர்ப்பணம் செய்தவர். அப்படியானால் பாடாலாசிரியர் வைரமுத்துவுக்கும் நீங்கள் சிலாகிக்கும் சிறுபத்திரிகைக் கவிஞர்களுக்கும் என்ன உறவு முறை என்பதை வாசக உலகத்திற்கு அறிவித்து உபகாரம் செய்ய வேண்டும்- உங்களின் “நாங்களில்” நான் இல்லை என்ற போதிலும் கூட.


கண்ணதாசனோ கவியரசு, ஆனால் வைரமுத்துவோ அதற்கு மேலே ஏதோ ஒன்று சொல்கிறார்களே? நீங்கள் வைரமுத்துவுக்குப் பின்னால் எங்கே இருக்கிறீர்கள்-உறவு முறையிலும் கவித்திறனிலும்-என்பதை அடையாளப்படுத்துவதும் சிலாக்கியமாக இருக்கும். நீங்கள் மேற்காட்டுகிற பழைய இலக்கியங்களுக்கும் இன்றைய சினிமாப் பாடல்களுக்கும் என்ன தொடர்பினைக் கண்டீர்கள் என்பதைத் தெளிவிக்கும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது.


திராவிட இயக்கங்களும் இலக்கியமும் தொடர்பான கேள்விக்கு நீங்கள் தந்திருக்கும் சரித்திரபூர்வமான தரவுகள் அலாதியானவை. எந்தெந்த கட்சித் தலைவருக்கு என்ன முன்னொட்டு அல்லது பட்டம் என்பதையெல்லாம் வரிக்கு வரி எழுதி பரவசப் பட்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட கட்சியின் தொண்டனால் கூட செய்ய இயலாத துல்லியத்திற்கு வரிக்கு வரி மறக்காமல் அடைமொழிகள் வாரியிரைத்து திராவிட கட்சித் தலைவர்களை சந்தேஷப்படுத்தியிருப்பதும் உங்களுடைய அடுத்த வெற்றியை நோக்கிய நகர்வாக இருக்க வேண்டும்.


சினிமாத்துறைக்காரர்களுக்கு செய்ததில் ஆயிரத்தில் ஒரு மடங்கு தமிழக முதலமைச்சர் நவீன படைப்பாளர்களுக்கு செய்திருப்பார் என்று நீங்கள் நம்பக் கூடிய ஆளா? மன்னிக்கவும் இலக்கியவாதியா?


எல்லோருக்கும் பட்டம் தந்திருக்கிறீர்கள். பாவம் காந்திக்கு மட்டும் மறுத்திருப்பது என்ன காரணமோ தெரியவில்லை. சி.மணியின் “மஹ்ஹான்” கவிதையை என் பொருட்டு நினைவு கூர்வீர்களாக. சினிமாக்காரர்களாலும் அரசியல்வாதிகளாலும் பட்டங்கள் இல்லாமல் ஒரு வினாடி கூட உயிர் தரித்து இருக்க முடியாது.


உங்களின் தெளிவு நோக்கிய சிந்தனை பேட்டியில் பிரகாசமடைகிறது. அதாவது அரிஸ்டாடில் சிந்தனையாளர் அல்லர். மாறாக ஒரு திராவிட கட்சியின் மேடைப் பேச்சாளர் சிந்தனையாளராய் ஆகிறார் உங்கள் பேட்டியில்.


சிந்தனையாளன் என்பவன் யார் என்பது பற்றிய குழப்ப இருளைப் போக்க வந்த பகலவன் தாங்களே என்பது இப்போதுதான் நிச்சயப்படுகிறது. பண்டித ஜவர்ஹர்லால் நேரு பற்றிய தங்களின் அவதானிப்பு மிக அபாரமானது. இந்தியா தொழில்மயமாதலைக் கண்டிக்கிறீர்களா அல்லது இந்தியா நவீனமானதைக் கண்டிக்கிறீர்களா?


இரண்டு அம்சங்களும் வேறு வேறு போலத் தோன்றினாலும் அவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று ஒன்று பிணைந்தவை. நவீனமாதல், நவீனத்தன்மை, நவீனத்துவம் இவை மூன்றும் குறைந்தபட்ச வேறுபாடுகளுடன் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை என்பதை தங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டதே என்பதற்கு வருந்துகிறேன்.


உங்களுக்கு ஸ்வாதீனமில்லாத எல்லையில் பிரவேசிக்கையில் நீங்கள் நிலைதடுமாறுவது வெட்டவெளிச்சமாகிறது. இந்திய தேசீயப் பிரச்னைகளையும் தென்னிந்திய வரலாற்றில் திராவிட கட்சிகளின் பங்கினையும் எங்களைப் போன்றோர் மூக்கில் விரலை வைக்கிற மாதிரி விவரித்துச் சொன்ன நீங்கள் அரிஸ்டாடில் விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டதும் எனக்கு வியப்புதான்.


ஏனென்றால் அத்தகைய விஷயங்களையும் கூட நீங்கள் திராவிட கட்சி ஏடுகளில் இருந்த படித்தறிந்திருக்க இயலும். கவிஞர்களைத் தனது லட்சிய அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று சொன்னவர் கவிஞர் பிளாட்டோ. அவர் அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோவின் முக்கிய விவாதப் புள்ளிகளை அவரது “ரிபப்ளிக்” என்ற நூலில் தாங்கள் காணலாம் என்பதைத் தாழ்மையுடன் உங்கள் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன்.


சலித்துக் கொண்டே 13 பக்கத்திற்கு மேலான ஒரு பேட்டியை அளித்திருக்கிறீர்கள். சலிப்பற்ற நல்ல மனோநிலையில் உங்களால் விஸ்தாரமான ஒரு பேட்டியை அளிக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.


கடைசியாக ஒரு சந்தேகத்தை நீங்கள் நிவர்த்தி செய்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். விளக்கு பரிசை உங்களுக்கு அளித்தவர்கள் திராவிடக் கட்சியினரா அல்லது . . . ? தவிரவும் உங்கள் பேட்டியை தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அல்லது அவரது கண்ணில் பட வைத்தால் உங்களுக்கும் அதன் பின்விளைவாக நவீன தமிழ் இலக்கியத்திற்கும் ஏதாவது கிடைக்கக் கூடும் என்று எண்ணுகிறீர்களா?


மேலும் சிறந்த பரிசுகள் (சாகித்ய அகாடெமி மட்டும் போதாது.) உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இத் திறந்த கடிதத்தை ஒரு முடிவுக்குக் கொணர்கிறேன்.


7.3.10

எதையாவது சொல்லட்டுமா....17

கொஞ்ச நாட்களாய் இதைப் பற்றி எழுத வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். வழக்கம்போல் நேரத்துடன் என்னுடைய போராட்டம் நின்று விடவில்லை.

பவித்திரா மெஸ்ஸில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் செய்தியைக் கேள்விபட்டேன். சன் செய்தியில் திரும்ப திரும்ப அந்த சிடி ஓடிக்கொண்டிருப்பதாக. நித்யானந்தா பற்றிய சிடிதான் அது. அதைப் பார்த்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சி எதுவுமில்லை. விகடனில் நித்தியானந்தா எழுதுவதை நான் படிக்கவே மாட்டேன். விகடனே தொடர்ந்து வாங்க மாட்டேன். எதாவது விகடன் இதழில் இதைப் பார்க்கும்போது என்ன அப்படி எழுதுகிறார் என்று யோசித்துக் கொண்டும் இருப்பேன்.

என் அலுவலகத்தில் வெங்கட்ராமன் ஒருவருக்கு நித்தியானந்தர் குரு. அவர் பதவி உயர்வுப் பெற்று பொறுப்பேற்கக் கூட நித்தியானந்தரிடம் அனுமதிப் பெற்றுதான் சேர்ந்தார். அவரைப் பற்றி உயர்வாக என்னிடம் சொல்வார். அப்ப கூட நித்தியானந்தரைப் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லை. அதேபோல் எனக்கு தப்பாகக் கூட எதுவும் தோன்றாது. அவரைப் பற்றி சாருநிவேதிதா எழுதியபோது எனக்கு நித்தியானந்தரைப் பற்றி சாருநிவேதிதா எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது தவிர, நித்தியானந்தரைப் பற்றி எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவர் எழுதுகிற புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவில்லை. அவர் பிரசங்கங்களைப் போய்க் கேட்க வேண்டுமென்றும் எண்ணம் ஏற்படவில்லை.

சில ஆண்டுகளுக்குமுன் ஈஷா யோகாவைப் பற்றி கேள்விபட்டேன். என் அலுவலக நண்பர் ஒருவருக்கு அலுவலகத்தில் அவரிடம் பணிபுரியும் பெண்ணிடம் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அந்தப் பெண் என்ன காரணத்தினாலோ அவரிடம் பேசுவதை விட்டுவிட்டது. அது என் அலுவலக நண்பருக்கு தாங்க முடியாத பிரச்சினை ஆகிவிட்டது. அவர் உடனே ஈஷா யோகாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின் எங்களிடமெல்லாம் ஈஷா யோகாவைப் பற்றி பிரமாதமாக சொல்வார். அப்போது என்ன இது போய்ப் பார்க்கலாமென்று போய்ப் பார்த்தேன். ஒரு வாரம் இருந்துவிட்டு வந்தபிறகு நான் பழையபடியேதான் இருந்தேன். என்னுடைய பிபி, சுகர் எதுவும் குறையவில்லை. அதுவும் நான் இருப்பதுபோல் என்னிடம் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது. ஈஷா யோகாவில் சொல்லிக் கொடுத்ததுபோல் மதியம் ஒரு தியானம் செய்ய அலுவலகத்தில் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். முழுவதும் மௌனம். யாருடைய எண்ணமும் என்னுள் நுழையக்கூடாது என்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் அலுவலகத்தில் உள்ள கடைநிலை சிம்பந்தி, "சார் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார், பார்," என்றவுடன், என் கவனமெல்லாம் சிதறி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று போய்விடும்.

சில நாட்களில் அதுவும் நின்றுவிட்டது. ஜக்கி வாசுதேவ் சொல்கிற விஷயமெல்லாம் ஜே.கே சொல்வதுபோல் எனக்குத் தோன்றும். அவருடைய நீண்ட வெண்ணிற தாடி எனக்கு ரஜீனிஷை ஞாபகப்படுத்தும். அவர் இளம் வயதில் பாம்பெல்லாம் பிடிப்பார் என்று கேள்விபட்டிருக்கிறேன். நானோ பாம்பைப் பார்த்து பயந்து ஓடுபவன். பந்தநல்லூரில் இருக்கும்போது நழுவி நழுவிப் போகும் பல பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். சிலசமயம் தெரியாமல் என் வண்டி பாம்பு மேல் ஏறி இறங்கும்.

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இவர்களுடன் சேரும் பணமும், புகழும்தான். அளவுக்கு மீறி சேரும் இந்த பணமும் புகழால் ஆபத்துதான்.

ஆன்மிக குருக்கள் இதிலிருந்தெல்லாம் தப்பித்ததே இல்லை. நித்தியானந்தரும் இதிலிருந்து தப்பித்ததில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி அவருடைய புத்தக உரிமைக்காக ராஜகோபால் என்பவருடன் கோர்ட்டில் வழக்குப் போட்டு சண்டைப் போட்டிருக்கிறார். ஜே கிருஷ்ணமூர்த்தி மரணமடைந்தபிறகு அவரைப் பற்றி ராஜகோபால் பெண் கிருஷ்ணமூர்த்தியின் செக்ஸ் அனுபவங்களைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதிவிட்டார். கிருஷ்ணமூர்த்தியின் கீர்த்தி அதனால் குறைந்துவிடவில்லை. யார் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்டாலும் சில நிமிஷங்களில் கேட்பவர்கள் மெய்மறந்து போய்விடுவார்கள். அவரைச் சுற்றி பெண்கள் தானாகவே வசப்பட்டு விடுவார்கள். இதில் செக்ஸ் என்பது சாதாரண விஷயம். ஆனால் அவர் காவி உடை போடாத ஆன்மிகவாதி. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பம் என்று எதுவுமில்லை.

செக்ஸ் பற்றி அவரிடம் கேள்வி கேட்டபோது, பெண்ணுடைய ஸ்பரிசமே அந்த உணர்வைத் தூண்டிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஒரு பேச்சில். கிருஷ்ணமூர்த்தி மரணம் அடைவது உறுதியானபோது, சென்னையில் நடந்த கடைசிக் கூட்டத்தில் வயதான அழகான யூவதிகள் பலர் அவர் பிரிவை நினைத்து அழுததை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி வெளிப்படையானவர். பெண்களிடம் தொடர்பு கொண்டதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். திருமணமானவர். குடும்ப வாழ்க்கை வெறுத்துப் போய் தனியாகப் பிரிந்து விட்டார். பின் அவரைவிட் வயதான பெண்மணியுடன் சேர்ந்தே எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறார். யோகி ராம்சுரத்குமார் கூட குடும்பஸ்தர். வடநாட்டில் தன் குடும்பத்தை விட்டுவிட்டுத்தான் துறவியாக வந்துவிட்டார். அவர் குடும்பம் இன்னும் கூட இருக்கிறது. குடும்பத்துடன் ஆன்மிகம் பயற்சியைக் கொடுக்கும் பலரைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். தியானதாரா என்ற புத்தகத்தில் பிரமிள் அப்பாதுரை என்பவரைப்பற்றி எழுதியிருக்கிறார். அவர் குடும்பஸ்தர். இன்று பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஆன்மிகமும் ஒன்று என்று ஆகிவிட்டது.

எல்லாரிடமும் தீராதப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆன்மிக வாதிகளை எல்லோரும் நாடிப் போகிறார்கள். அவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அதேபோல் இந்த ஆன்மிகவாதிகளைச் சுற்றி சில அதிசயங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றன. வள்ளலார் விளக்கை எரிக்க தண்ணீரைப் பயன்படுத்தினார் என்று அவருடைய வரலாறில் குறிப்பிடுகிறார்கள். அதேபோல் ஷ்ரீடி சாய்பாபா வரலாறிலும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லப்படுகிற சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் வள்ளலார் கோர்ட்டுக்கு இழுத்தவர் ஆறுமுகநாவலர். வள்ளலார் கோர்ட்டுக்கு வந்தபோது, எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஏன்? தீர்ப்பு சொல்ல வேண்டிய judgeம் எழுந்து நின்றுவிட்டார். வழக்கு வள்ளலார் பக்கம் திரும்பி விட்டது.

பொதுவாக Public Sphere ல் நடப்பதை நான் எழுதுவதில்லை.Private Sphere ல் நடப்பதைத்தான் எழுதிக்கொண்டு போவேன். அப்படி நடப்பதை Public Sphere ஆக மாற்றுவதைத்தான் விரும்புவேன். இந்த முறைதான் மாற்றி எழுதியிருக்கிறேன்.